Published:Updated:

7 நாள்களில் பாலின் தரம் கூடும்!

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை - புறா பாண்டி

‘‘கூட்டுறவு சொசைட்டியில் பால் ஊற்றுகிறோம். பாலில் சத்து குறைவாக உள்ளது என்று சொல்கிறார்கள். இதனால், பாலுக்குச் சரியான விலை கிடைப்பதில்லை. இதைச் சரி செய்ய வழி சொல்லுங்கள்?’’

எஸ்.உமாதேவி, தொப்பம்பட்டி.

மூத்த கால்நடை விஞ்ஞானி முனைவர் ஆ.துரைசாமி பதில் சொல்கிறார்.

புறா பாண்டி
புறா பாண்டி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“‘பால் கறக்கும்போது நுரை வருகிறதா’ என்று கவனியுங்கள். நுரை வந்தால்தான் புரதச்சத்து நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். நுரையில்லாமல், தண்ணீர்போல இருந்தால் புரதச்சத்துப் பற்றாக்குறையே காரணம் என்று புரிந்துகொள்ள லாம். தீவன மேலாண்மையில் குறைபாடு இருந்தால், இதுபோன்ற பிரச்னைகள் உருவாகும். புண்ணாக்கு, பருத்திக்கொட்டை... போன்ற வற்றைத் தீவனமாகக் கொடுத்து இதைச் சரி செய்ய முடியும். தவிர டானின் (சுருங்கிய வடிவில் உள்ள புரதம்) அதிகமாக உள்ள சவுண்டல் (சூபாபுல்), கிளரிசீடியா, வாதநாராயணன்... போன்ற மரங்களின் இலைகளையும் தீவனமாகக் கொடுக்க வேண்டும். இவற்றைப் ‘புறவழிப் புரதங்கள்’ (Bypass protein) என்று சொல்வோம். இவை மாட்டின் இரைப்பையிலுள்ள நான்காம் அறையில் தங்கிச் செரிமானம் ஆகும். இதனால்தான் பாலில் புரதம் கூடுகிறது.

பாலில் (SNF) எஸ்.என்.எஃப் என்று சொல்லப்படும் கொழுப்பு தவிர, பிற சத்து களின் அளவு குறைவாக இருந்தால், தாது உப்புக் கலவையைக் கொடுக்க வேண்டும். சிலர் வேலை முடிந்தது என்று, இதைத் தீவனத்தொட்டியில் மேலாகக் கொட்டி விடுகிறார்கள். அது தவறு. அப்படிச் செய்யும்போது, தொட்டியின் அடியில் சென்று தங்கிவிடுவதால், மாடுகளுக்குக் கிடைக்க வேண்டிய சத்துகள் கிடைக்காது.

இதைத் தவிர்க்க தீவனத்துடன் தாது உப்புகளை நன்றாகப் பிசைந்து, அதனுடன் 50 கிராம் சமையல் சோடா உப்பையும் கலந்து கொடுக்க வேண்டும். இந்தத் தீவனத்தைத் தொடர்ந்து கொடுக்கும்போது ஏழு நாள்களிலேயே பாலில் மாற்றம் தெரியும். எனவே, இந்த நுட்பங்களைக் கவனமாகக் கடைப்பிடிக்கவும். லாபகரமாகப் பால் பண்ணை நடத்துவதற்கு, இது போன்ற நுட்பங்களைக் கற்றுக்கொள்வது அவசிய மாகும். இதைத்தான் பால் பண்ணை மேலாண்மை என்று சொல்கிறோம்.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘பால் பண்ணை தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். இதில் கிடைக்கும் பாலை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய விரும்புகிறோம். இதற்கான பயிற்சி எங்கு கிடைக்கும்?’’

கே.திருச்சிற்றம்பலம், கடலூர்.

‘‘தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த அலமாதி - கொடுவேளி எனும் பகுதியில் உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி என்ற பெயரில் இயங்கி வருகிறது.

பால்
பால்

செயல்வழிக் கற்றலுக்காகப் பால் பதப்படுத்தும் நிலையம், பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்தும் நிலையம், இறைச்சிப் பதப்படுத்தும் நிலையம் மற்றும் சாக்லேட் தயாரிக்கும் தொழில் மையம் உள்ளிட்ட பல மையங்கள் இருக்கின்றன.

பால் பதப்படுத்தும் நிலையத்தில் பாலைப் பதப்படுத்துவதோடு மட்டும் இல்லாமல், பாலேடு, வெண்ணெய், நெய், ஐஸ்க்ரீம், குல்ஃபி, பன்னீர், பால்கோவா போன்ற பால் பொருள்கள் செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. இறைச்சிப் பதப்படுத்தும் தொழில்நுட்பக்கூடத்தில் இறைச்சியின் தன்மையை அறிவதற்கான சோதனைக்கூடம் உள்ளது. இறைச்சியை மதிப்புக்கூட்டும் முறைகளும் பயிற்றுவிக்கப் படுகின்றன. இத்துறைகளில் அனுபவம்மிக்கப் பேராசிரியர்களைக் கொண்டு பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு செய்யப்படும் ஆராய்ச்சியின் விளைவாக உருவாகும் தொழில்நுட்பங்கள் சிறு, குறு தொழில் செய்வோருக்குப் பயிற்சிகள் மூலம் சென்றடைய வழிவகைகள் செய்யப் பட்டுள்ளன. மத்திய அரசுத் திட்டங்களின் மூலம் உணவுத் தொழில்நுட்பத்துறையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்திய அரசின் பாரத அபிவிருத்தித் திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்குப் பாலில் உள்ள கொழுப்புச் சத்து மற்றும் கொழுப்பு இல்லா மற்ற திடப்பொருள்கள் போன்ற வற்றைக் கண்டறிவது குறித்த விழிப்புணர்வுப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

மாடு
மாடு

தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தொழில் முனைவோர் மேம்பாட்டு வாரியம் சார்பாக... புதுமையான உணவுத் தொழில் நுட்பங்களை உட்புகுத்துதல் மூலம், உணவு பதப்படுத்தும் தொழிற்கூடங்கள் அமைப் பதற்கான இலவசப்பயிற்சி இங்கு வழங்கப் படுகிறது. மூன்று நாள்கள் நடத்தப்படும் இப்பயிற்சியின் மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் மூலம் பால் புரதம் மற்றும் நார்ச்சத்துச் செறிவூட்டப்பட்ட நூடுல்ஸ், ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும் சாக்லேட்கள், சிறுதானிய ஐஸ் க்ரீம்கள், யோகர்ட்... போன்றவை தயாரிப் பதற்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இங்குள்ள உணவுப் பதப்படுத்தும் நிலையங்களை ‘உணவுப் பெட்டக மையம்’ என்ற திட்டத்தின் மூலம் சிறு தொழில் முனைவோர், பயன்படுத்திக் கொள்வதற்கும் வசதி உண்டு.

உணவுத் தொழில் புரிய விருப்பம் உள்ள இளைஞர்களுக்கு ‘உணவு மற்றும் பால்வள ஆலோசனை மையம்’ மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, பால் பொருள்கள் தயாரிப்பில் வெற்றி பெற வாழ்த்துகள்.”

தொடர்புக்கு:

முதல்வர்,

உணவு மற்றும் பால்வளத்

தொழில்நுட்பக் கல்லூரி,

அலமாதி - கொடுவேளி,

சென்னை-600052.

தொலைபேசி: 044 27680214/15 .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

7 நாள்களில் பாலின் தரம் கூடும்!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.