Published:Updated:

மூன்று விதமான பலன் தரும் ஆல்-ரவுண்டர் தென்னை!

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை - புறா பாண்டி

“தென்னைச் சாகுபடி செய்ய விரும்புகிறேன். எந்த ரகம் சிறந்தது. எங்கு கிடைக்கும்?

@ராதாகிருஷ்ணன், திருவண்ணாமலை.

“நெட்டைக் x குட்டை வீரிய ஒட்டு ரக கன்றுகளை 25 அடிக்கு 25 அடி இடைவெளியில்... ஏக்கருக்கு 80 கன்றுகள் வீதம் நடவு செய்யலாம். நடவு செய்த 4-ம் ஆண்டு முதல் காய்ப்புக்கு வரும். 40 அடி முதல் 60 அடி உயரம் வரை வளரும். இதன் ஆயுள் காலம் 40 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள். ஒவ்வொரு மரத்திலிருந்தும், ஆண்டுக்கு 120 காய்கள் முதல் 200 காய்கள் வரை கிடைக்கும். மண்வளம் மற்றும் முறையான பராமரிப்பு இருந்தால்... ஆண்டுக்குச் சுமார் 300 காய்கள் வரையிலும் கிடைக்கும். இந்த ரகக் காய்களை இளநீருக்கு, சமையலுக்கு, கொப்பரைக்கு... என அனைத்துத் தேவைகளுக்கும் பயன்படுத்தலாம். அதனால்தான் இதை ‘ஆல்-ரவுண்டர்’ தென்னை என்று அழைக்கிறார்கள். இளநீராகப் பயன்படுத்தும்போது ஒரு காயில், 350 மி.லி முதல் 450 மி.லி வரை இளநீர் இருக்கும்.

தென்னை
தென்னை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ராணிப்பேட்டை மாவட்டம், நவ்லாக் அரசுப் பண்ணையில் இந்த ரகத் தென்னங் கன்றுகள் கிடைக்கும். ஆற்காடு நவாப்புக்கு சொந்தமான இப்பகுதி முழுக்க 9 லட்சம் தென்னை மரங்கள் இருந்ததால், அதைக் குறிக்கும் வகையில் இந்தப் பகுதிக்கு ‘நவ்லாக்’ என்று பெயர் வந்துள்ளது. 1974-ம் ஆண்டு, 207 ஏக்கரில் தமிழக அரசால் இந்தப் பண்ணை தொடங்கப்பட்டது. நாற்று உற்பத்திக்காக நெட்டை, குட்டை, குட்டை x நெட்டை ரகங்களில் 9,000 தென்னை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 25 ஆண்டுகளுக்கு மேலான தாய் மரங்களிலிருந்து தரமான நெற்றுகளைத் தேர்வு செய்து முளைக்க வைக்கிறார்கள்.

மேலும், நெட்ட x குட்டை, குட்டை x நெட்டை வீரியஒட்டுரக கன்றுகள், ‘வெஸ்ட் கோஸ்ட் டால்’என்று சொல்லப்படும் நெட்டை ரகம், ‘சௌகாட் ஆரஞ்ச் டூவார்ப்’ என்ற குட்டை ரக நாற்றுகளையும் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார்கள். இங்கு உற்பத்திச் செய்யப்படும் நாற்றுகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பண்ணைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘இயற்கை முறையில் வாழைச் சாகுபடி செய்ய விரும்புகிறோம். இதற்கு நிலத்தைத் தயார் செய்வது எப்படி?’’

@பாலாஜி, தூத்துக்குடி

“எந்த வகை நிலமாக இருந்தாலும், வடிகால் வசதி இருக்க வேண்டும். வழக்கமாக, ஏழேகால் அடிக்கு ஏழேகால் அடி இடைவெளியில், முக்கால் அடி ஆழத்துக்குக் குழி எடுத்துக் கிழங்குகளை நடவு செய்ய வேண்டும். பிறகு, ஏக்கருக்கு 25 கிலோ பலதானிய விதைகளை விதைக்க வேண்டும். இரண்டு வாழைக் கன்றுக்கு இடையில் முக்கால் அடி அகலத்தில், ஒன்றரை அடி ஆழத்தில் கிடங்கு வெட்ட வேண்டும். இதன் மூலம் நிலத்தில் தண்ணீர் தேங்காது. பல தானியங்கள் நிலத்தில் வளருவதால், களைகள் குறைவாக இருக்கும். இந்த முறையில் நடவு செய்யும்போது, ஏக்கருக்கு 1,000 வாழைக்கன்றுகள் வரை நடவு செய்யலாம். பூவன் வாழை ரகமாக இருந்தால், ஆறு அடிக்கு ஆறரை அடி இடைவெளி கொடுத்தால் போதுமானது. இந்த முறையில் 1,100 வாழைக்கன்றுகளை நடவு செய்யலாம்.

வாழை
வாழை

பல தானியங்கள் முளைத்து வளர்ந்து பூ வைத்ததும், செடிகளை வேருடன் பிடுங்கிப் போடாமல் வேர்ப் பகுதியை நிலத்தில் விட்டு, செடிகளை மட்டும் அறுத்து வாழைக்கன்றுகளைச் சுற்றி மூடாக்காக இடவேண்டும். பலதானிய விதைப்பு எப்படி என்று பார்ப்போம்.

அதிக சத்துகள் தேவைப்படும் வாழைக்குப் பல தானிய விதைப்பு அவசியம்.

இயற்கை விவசாயத்திற்கு முதல் அடி எடுத்து வைக்கும் விவசாயிகள் முதலில் பல தானிய விதைப்பு முறையைப் பின்பற்ற வேண்டும். பல தானியச் செடிகள் காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து நிலத்தில் சேமித்து வைக்கும். இதுவரை ரசாயன உரங்களின் பயன்பாட்டால் வளமிழந்து போன நிலத்தை கூட 6 மாதங்களில் வளம் மிக்க நிலமாக மாற்றலாம்.

புறா பாண்டி
புறா பாண்டி

பின்வருபவை ஒரு ஏக்கருக்குத் தேவையான விதை அளவு ஆகும். தானிய வகைச் சோளம் - 1 கிலோ, கம்பு - அரைக்கிலோ, தினை - கால் கிலோ, சாமை - கால் கிலோ, பயறு வகை உளுந்து - 1 கிலோ, பாசிப்பயறு - 1 கிலோ, தட்டப்பயறு - 1 கிலோ, கொண்டைக்கடலை -1 கிலோ, எண்ணெய் வித்துக்கள் எள்ளு - 500 கிராம், நிலக்கடலை - 2 கிலோ, சூரியகாந்திவிதை - 2 கிலோ, ஆமணக்கு - 2 கிலோ, பசுந்தாள் பயிர்கள் தக்கைப்பூண்டு - 2 கிலோ, சணப்பு - 2 கிலோ, நரிப்பயறு - அரைக்கிலோ, கொள்ளு 1 கிலோ, கடுகு - அரைக்கிலோ, நறுமணப் பயிர்கள் வெந்தயம் - கால் கிலோ, சீரகம் - கால் கிலோ, கொத்தமல்லி - 1 கிலோ. மேற்கூறிய விதைகளை எல்லாம் கலந்து ஒரு ஏக்கருக்கு 25 கிலோ வரை விதைக்கலாம். ஒவ்வொரு முறை வாழை அறுவடை முடிந்த பின்பும் இப்படிப் பலதானிய விதைப்பு செய்தால், நிலம் வளமுடன் நல்ல விளைச்சலைக் கொடுக்கும். இப்படி இயற்கை முறையில் சாகுபடி செய்யும் நிலத்தில் விளையும் வாழைப் பழத்தின் சுவையும் அருமையாக இருக்கும்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூன்று விதமான பலன் தரும் ஆல்-ரவுண்டர் தென்னை!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.