பிரீமியம் ஸ்டோரி

‘‘மீன் பண்ணை அமைக்க விரும்புகிறோம். இதற்கு மானியம் உண்டா, யாரைத் தொடர்புகொள்வது?’’

ஆர்.மேரி, தையூர்.

‘‘கால்நடை வளர்ப்பைக் காட்டிலும் மீன் வளர்ப்புக்கு, மத்திய, மாநில அரசுகள் ஏராளமான மானியங்களைக் கொடுத்து வருகின்றன. விவசாயத்துடன் மீன் வளர்ப்பையும் இணைத்துச் செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையின் மூலம் உள்நாட்டு நீர்நிலைகளில் மிதவைக் கூண்டுகளில் மீன் வளர்த்தல், மீன் விதை வங்கிகள் உருவாக்குதல், பாசனக் குளங்களில் தீவிர மீன் வளர்ப்பை மேற்கொள்ளுதல், பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பு ஆகிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மீன் வளர்ப்போர் மற்றும் மீன் வளர்ப்புச் சார்ந்த தொழில் செய்பவர்களுக்குப் பல்வேறு மானிய உதவிகளையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டம், 2020-21-ன் கீழ் ரூ.5.21 கோடி மதிப்பில் நீர்ப்பாசன குளங்களில் மிதவைக் கூண்டுகளில் மீன் வளர்த்தல், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறைக்குச் சொந்தமான குளங்களில் மீன் விரலிகள் இருப்பு செய்தல் மற்றும் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு உள்ளட்டு மானியம் வழங்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.

மீன் வளர்ப்பு
மீன் வளர்ப்பு

தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம், 2020-21-ன் கீழ் ரூ.12.42 கோடி மதிப்பில் பாசனக் குளங்களில் மீன் விரலிகள் இருப்புச் செய்தல், பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பு, மிதவைக் கூண்டுகளில் மீன் வளர்த்தல், மீன் வளர்ப்புப் பண்ணை அமைத்தல், நவீன மீன் விற்பனை அங்காடி அமைத்தல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன.

மத்திய அரசு பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பட யோஜனா 2020-21 திட்டத்தின் கீழ் உள்நாட்டு மீனவர்களுக்குப் புதிய மீன் வளர்ப்புப் பண்ணை அமைத்தல், மீன்குஞ்சு பொரிப்பகங்கள் அமைத்தல், மீன் குஞ்சு வளர்த்தெடுக்கும் பண்ணைகள் அமைத்தல், உள்ளட்டு மானியம், மீன் விதைப் பண்ணை அமைத்தல், நீரை மறுசுழற்சி முறையில் மீன் வளர்ப்பு மற்றும் உயிர் கூழ்மம் முறையில் மீன் வளர்ப்பு ஆகிய தொழில்நுட்பத்துடன் அதிக வருமானம் ஈட்டக்கூடிய மீன் வளர்ப்புத் திட்டங்களை அறிவித்துள்ளன.

இத்திட்டங்களின் கீழ் மீன் வளர்ப்பு மேற்கொள்ளப் பொதுப் பிரிவினருக்கு 40 சதவிகிதம் மற்றும் மகளிர், ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவினருக்கு 60 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். இந்தத் திட்டங்களில் சேர விரும்பும் மீன் வளர்ப்போர், அந்தந்த மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்புகொண்டு பயன்பெறலாம்.’’

‘‘பஞ்சகவ்யா பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். எங்கள் பகுதி விவசாயிகளுக்காக அதன் தயாரிப்பு முறைகளைச் சொல்லுங்கள்?’’

ஜெ.நடராஜன், குத்தாலம், மயிலாடுதுறை மாவட்டம்

‘‘பஞ்சகவ்யா 2,000 ஆண்டுகளாக இந்தியாவில் மக்கள் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. தேவாரப் பாடல், ஆழ்வார் திருவாய்மொழிகளிலும் இதுபற்றிய செய்தி காணப்படுகிறது. வேளாளப் புராணத்திலும் கந்தசாமி கவிராயர் பஞ்சகவ்யா பற்றிக் குறிப்பிடுகிறார். ஆனால், பஞ்சகவ்யாவை உழவர்க்கு ஏற்ற முறையில் வடிவமைத்தவர் கொடுமுடி மருத்துவர் நடராசன் அவர்களே.

புறா பாண்டி
புறா பாண்டி

பல மாநிலங்களில் பஞ்சகவ்யா பயிற்சி வகுப்புகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் பயனடைந்து வருவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போனால் போகிறது என்று கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் கூடப் பஞ்சகவ்யா தயாரிப்பதில் பயிற்சி அளிக்கிறது.’’

இப்படிப் பஞ்சகவ்யா பற்றி ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார், பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கிறார்.

இனி பஞ்சகவ்யா தயாரிப்பு பற்றிப் பார்ப்போம்.

முதல் நாள் 5 கிலோ பசுமாட்டு சாணத்துடன் 500 கிராம் நெய்யைக் கலந்து நன்றாகப் பிசைந்து உருண்டையாக்கி 30-50 லிட்டர் அளவு கொண்ட பீப்பாய்க்குள் வைத்து மூட வேண்டும். தொடர்ந்து 3 நாள்கள் சாணம் நெய் கலவை பீப்பாய்க்குள் இருக்கும். நான்காவது நாள் மூடியைத் திறந்து பால், தயிர், இளநீர், பசுமாட்டுச் சிறுநீர், பிசைந்த வாழைப்பழம் ஆகிய பொருள்களைச் சாணம், நெய் கலவையினுள் சேர்த்துக் கலக்க வேண்டும்.

3 லிட்டர் தண்ணீரில் நாட்டுச்சர்க்கரையைக் கரைத்து பீப்பாய்க்குள் ஊற்ற வேண்டும். நாட்டு சர்க்கரையை நேரடியாகச் சேர்க்கக் கூடாது. தொடர்ந்து 10 நாள்கள் வரை தினமும் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகள் பீப்பாய்க்குள் இருக்கும் கரைசலைத் திறந்து கலக்கிவிட வேண்டும். கலக்கிய பின் மூடிவைக்க வேண்டியது முக்கியம்.

11-வது நாளில் கள்ளை பீப்பாய் கரைசலுக்குள் ஊற்றி, தொடர்ந்து 7 நாள்கள் இருவேளை கலக்கி வர வேண்டும். 19-வது நாளில் பஞ்சகவ்யா தயார். இதைப் பயிர்களுக்குப் பயன்படுத்தலாம். பஞ்சகவ்யா கரைசலை 6 மாதங்கள் வரை வைத்திருக்கலாம், வெப்பத்தின் காரணமாக நீர் ஆவியாகிப் பாகு தன்மை ஏற்படும்பட்சத்தில் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை கரைசலைப் பஞ்சகவ்யா கரைசலுக்குள் ஊற்றினால் மீண்டும் திரவ நிலைக்கு வந்துவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பயன்படுத்தும் முறை

  • தெளிப்பு மற்றும் பாசன வழி உரமாக எல்லா வகைப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

  • 1 லிட்டர் தண்ணீருக்கு 30 மி.லி பஞ்சகவ்யா என்பது பல பயிர்களுக்குப் பலமுறை சோதனை செய்து உறுதி செய்யப்பட்ட அளவீடு. இதைக் கூட்டவோ குறைக்கவோ கூடாது.

  • 15 நாள்களுக்கு ஒருமுறை அதிகாலை அல்லது இளம் மாலை வேளைகளில் பயிருக்குத் தெளிக்க வேண்டும்.

  • தெளிக்கப் பயன்படுத்தும்போது கண்டிப்பாகக் கரைசலை வடிகட்டிய பிறகுதான், தெளிக்க வேண்டும்.

  • விதை மற்றும் நாற்று நேர்த்தி செய்யவும் பஞ்சகவ்யா பயன்படுகிறது.

  • முதலில் சொன்ன அளவீட்டில் விதை அல்லது நாற்றுகளை நனைத்து நிழலில் உலர வைத்து நடவு செய்ய வேண்டும்,

  • இப்படிச் செய்வதால் விதைகளில் முளைப்புத்திறன் அதிகரிக்கும். நாற்றுகளில் வேர் சம்பந்தமான நோய் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

  • இந்தப் பஞ்சகவ்யா, தழை, மணி, சாம்பல் சத்துகளைப் பயிர்களுக்குக் கொடுப்பதுடன், வளர்ச்சி ஊக்கியாகவும், நுண்ணூட்டச் சத்துகளை வேர்களுக்கு அள்ளிக்கொடுத்து வருகிறது.

  • பஞ்சகவ்யா பயன்படுத்துவது குறித்துக் கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், தயங்காமல் டாக்டர் நடராஜன் அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள்.’’

தொடர்புக்கு, செல்போன்: 94433 58379.

20 லிட்டர் பஞ்சகவ்யா தயாரிப்புக்கானது!

தேவையான மூலப்பொருள்கள்

மீன் வளர்ப்புக்கு 60 சதவிகிதம் மானியம்!

(தென்னங்கள் கிடைக்காதவர்கள் வேறு ஒரு எளிய வழி மூலம் கள் தயாரிக்கலாம். 2 லிட்டர் இளநீரை காற்றுப் புகாமல் பாட்டில் அல்லது கேனில் ஊற்றி மூடி வைத்து பிறகு, ஒருவாரம் கழித்துத் திறந்து பார்த்தால் அது நொதித்து, கள்ளாக மாறியிருக்கும். அதைப் பஞ்சகவ்யா கரைசல் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.)

மீன் வளர்ப்புக்கு 60 சதவிகிதம் மானியம்!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு