Published:Updated:

ஹைட்ரோபோனிக்ஸ் தோட்டம்... ரூ.15,000 மானியம்! வீட்டுத்தோட்டம் கருத்தரங்கில் குவிந்த மக்கள்!

பசுமை விகடன் கருத்தரங்கு

நகரங்களில் ஹைட்ரோபோனிக்ஸ் திட்டம் மூலம் வீட்டுத் தோட்டத்தில் விவசாயம் செய்பவருக்கு ஊக்கத்தொகையாக 15,000 வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தைச் செயல்படுத்த இருக்கிறோம்...

ஹைட்ரோபோனிக்ஸ் தோட்டம்... ரூ.15,000 மானியம்! வீட்டுத்தோட்டம் கருத்தரங்கில் குவிந்த மக்கள்!

நகரங்களில் ஹைட்ரோபோனிக்ஸ் திட்டம் மூலம் வீட்டுத் தோட்டத்தில் விவசாயம் செய்பவருக்கு ஊக்கத்தொகையாக 15,000 வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தைச் செயல்படுத்த இருக்கிறோம்...

Published:Updated:
பசுமை விகடன் கருத்தரங்கு

நகரமயமாக்கப்பட்ட இந்தச் சூழலில் உணவு நஞ்சாகிறது, மருந்து உணவாகியது. ஆரோக்கியமற்ற காலச் சூழலில் நம்முடைய தலைமுறையினரை ஆரோக்கியமாக வளர்த்தெடுப்பது சவாலான காரியமாக உள்ளது. செயற்கை உரங்கள் இல்லாமல் வீட்டில் கிடைக்கும் மக்கும் குப்பைகளைக் கொண்டு நம் வீடுகளிலேயே தோட்டம் அமைப்பதால் ஓரளவு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

பசுமை விகடன் கருத்தரங்கு
பசுமை விகடன் கருத்தரங்கு

இதற்காகவே சென்னை அரும்பாக்கத்திலுள்ள டி.ஜி.வைணவக் கல்லூரியில்; பசுமை விகடன், தமிழக தோட்டக்கலைத் துறை, டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியின் தாவரவியல் துறை இணைந்து, ``வீட்டிலும் செய்யலாம் விவசாயம்” என்ற மாபெரும் கருத்தரங்கை நேற்று (16.10.2022) நடத்தியது. இக்கருத்தரங்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கில் மாநில திட்டக்குழு உறுப்பினரும் மண்புழு விஞ்ஞானியுமான பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், கல்லூரி முதல்வர் சந்தோஷ்பாபு, மாடித்தோட்ட பயிற்றுனர் பிரியா ராஜ்நாராயணன், மாடித்தோட்ட விவசாயி மைத்ரேயன், தோட்டக்கலைத் துறை இயக்குநர் பிருந்தா தேவி, நடிகர் காதல் கண்ணன், நடிகர் படவா கோபி ஆகியோர் நேரில் கலந்துகொண்டு உரையாற்றினர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் திரையின் வாயிலாக...
அமைச்சர் மா.சுப்பிரமணியன் திரையின் வாயிலாக...

வைணவக் கல்லூரியின் தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் முரளிதரன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் சந்தோஷ் பாபு பேசியபோது, ``மாடித்தோட்டம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே பெருகி வருகிறது. இந்தக் கல்லூரி வளாகத்தையே பசுமையாக இருக்கும்படி மாற்றியிருக்கிறோம். தாவரங்கள் உள்ள பசுமைக் கண்ணாடி பாட்டில்களை கிஃப்ட்டாகக் கொடுக்கும் பழக்கம் இளம் தலைமுறை யினரிடையே பெருகி வருகிறது. இந்த உலகத்தைப் பசுமையாக மாற்ற நாம் முன் வர வேண்டும்" என்றார்.

மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், காணொலி வாயிலாக உரையாற்றினர். ``நான் இருக்கும் வீட்டில் அரசாங்கம் செடி கொடிகள், வைத்தாலும் முறையாகப் பராமரிக்காமல் இருந்தால் எல்லாம் வாடிவிடும். தோட்டக்கலையின் மீது நானும், என் வீட்டில் உள்ளவர்களும் வைத்திருக்கும் ஆர்வத்தால்தான் நான் இருக்கும் இடம் பசுமையாக இருக்கிறது.

பசுமை விகடன் கருத்தரங்கு
பசுமை விகடன் கருத்தரங்கு

பெரும்பாலும் வெளியூர் பயணங்களின்போது பேருந்து, தொடர்வண்டியைக் காட்டிலும் காரில்தான் நான் பயணம் மேற்கொள்வேன்; காரணம் காரில் செல்லும்போது இருபுறமும் உள்ள இயற்கைக் காட்சிகளை ரசிப்பது மனதுக்கு மகிழ்வை ஏற்படுத்தும். நான் அசைவ பிரியன். ஆனால், என் வீடுகளில் கிடைக்கும் செயற்கை உரமில்லாத இயற்கையான காய்கறிகளைப் பார்க்கும்போது சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது. இன்று அசைவத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை சைவத்துக்கும் கொடுக்கிறோம். எங்கள் வீட்டில் இருக்கும் எலுமிச்சைப்பழச்சாறைஎங்கள் வீட்டுக்கு வரும் சிறப்பு விருந்தினருக்கு குடிப்பதற்கு வழங்குகிறோம்” என்றார்.

பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் பேசுகையில், ``கிராமங்களில் இருப்பவர்கள் வீட்டுக்குப் பின்பகுதியில் சிறிதாகக் குழி வெட்டி, அந்தக் குழிக்குள் மக்கும் காய்கறிக் குப்பைகளையும், இலை சருகுகளையும் போட வேண்டும். மூன்று, நான்கு நாள்கள் கழித்து அவை ஓரளவு மக்கிவிடும்.

பசுமை விகடன் கருத்தரங்கு
பசுமை விகடன் கருத்தரங்கு

அங்கு செடிகளை நட்டு வைத்தால் நன்றாக வளரும். இடவசதி இல்லாதவர்கள் வீட்டில் கிடைக்கும் தொட்டிகள், டப்பாக்கள் கொண்டு செடி வளர்க்கலாம். மக்கள், மண்வளம் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால், மண்வளம் என்று கூறுவதைவிட `மண்நலம்' என்று கூறுவதே சரியாக இருக்கும். ``என் மீது கருணை கொள்ளாமல் இருப்பதே நீ என் மீது காட்டும் கருணை, என்னை வாழ மட்டும் விடு” என்று மண் நம்மிடம் வேண்டுவதாகக் கூறுகிறார்.

பசுமை விகடன் கருத்தரங்கு
பசுமை விகடன் கருத்தரங்கு

தோட்டக்கலைத் துறை இயக்குநர் பிருந்தா தேவி பேசுகையில், ``மாடித்தோட்ட திட்டத்தில் தமிழக தோட்டக்கலை துறை சார்பாக மாடித்தோட்டம் அமைக்க ரூ.900 மதிப்புள்ள பைகள், விதைகள், நுண்ணிய காரணிகள் ஆகியவற்றை 50 சதவிகித மானியத்தில் ரூ.450-க்கு வழங்கி வருகிறோம். இதை ஆன்லைனில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். தமிழக முதலமைச்சரின் ஊட்டச்சத்து திட்டத்தில் செங்குத்து தோட்டம் மற்றும் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் விவசாயம் செய்பவருக்கு பின்னேற்பு தொகையாக ரூ.15,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. மாணவர்களிடம் செடி வளர்ப்பை ஊக்கப்படுத்த அரசு மாணவியர் விடுதிகளில் ரூ.8,000 மதிப்புள்ள தோட்டத்தை அமைக்க வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். இன்றைய தலைமுறைகள் எல்லாம் எளிதில் கிடைத்துவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால், செடி வைத்து பாதுகாப்பவர்களுக்குதான் உழைப்பின் அருமை தெரியும். அவர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்தத் திட்டம் இருக்கும் என்று நம்புகிறோம்'' என்றார்.

பிரியா ராஜ்நாராயணன் பேசுகையில், ``நம்மிடம் இருக்கும் பொருள்களைக் கொண்டே வீட்டில் விவசாயம் செய்ய தொடங்குங்கள், பெரிதளவு செலவு இருக்காது, நிறைய தவறுகள் ஆரம்பத்தில் வரும், தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு மீண்டும் செயல்படத் தொடங்குங்கள்'' என்றார்.

பிருந்தாதேவி ஐ.ஏ.எஸ் உரையாற்றுகிறார்.
பிருந்தாதேவி ஐ.ஏ.எஸ் உரையாற்றுகிறார்.

நிகழ்வில் கலந்துகொண்ட பெரம்பூரைச் சேர்ந்த கலாவதி பேசுகையில், ``நான் நர்ஸிங் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றுள்ளேன். கடந்த இரண்டு வருடங்களாக வீட்டில் தோட்டம் வைத்திருக்கிறேன். செடிகள், விதைகள் வாங்கலாம் என்றுதான் இந்நிகழ்வில் கலந்துகொண்டேன். ஆனால், நிகழ்ச்சியில் பல்வேறு தகவலை உள்வாங்கினேன். கருத்தரங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது'' என்றார்.

தோட்டக்கலைத் துறையின் சார்பில் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைப்பதற்கான வழி முறைகள் கண்காட்சி அரங்குகளாக அமைக்கப்பட்டிருந்தன. மேலும், தோட்டக்கலைத் துறை மூலம் 900 ரூபாய் மதிப்புள்ள மாடித்தோட்ட தொகுப்பு மானிய விலையில் 450 ரூபாய்க்கு வழங்கப்பட்டன. இதில் மாடித்தோட்டம் அமைப்பதற்கான பைகள், விதைகள், தேங்காய் நார் கட்டி என்று அனைத்து விதமான பொருள்களும் இடம் பெற்றிருந்தன.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் மாடித்தோட்டம் அமைப்பதற்கான நுட்பங்களை அறிந்துகொண்டும், பை, விதைகளை... மானிய விலையில் வாங்கிக்கொண்டும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்கள்.