Published:Updated:

`அம்பானி, அதானிக்காகத்தான் விவசாய மசோதாவை அரசு அவசரப்படுத்தியது!' - விளாசும் பெ.மணியரசன்

வேளாண் சட்ட நகல் எரிப்பு
வேளாண் சட்ட நகல் எரிப்பு

விவசாயிகளின் நலன்களுக்காகத்தான் இச்சட்டங்களைக் கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி சொல்கிறார். விவசாயிகளின் நலனில் இவருக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால், எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை ஏன் இதில் குறிப்பிடவில்லை.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களின் தூண்டுதலால்தான் இச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இதனால் விவசாயிகளும் பொது மக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் எனவும் காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணப்பாளரும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவருமான பெ.மணியரசன் கொந்தளிக்கிறார். இச்சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி செப்டம்பர் 24-ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

விவசாயிகள்
விவசாயிகள்

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வணிகம் ஊக்குவிப்புச் சட்டம், ஒப்பந்த பண்ணைய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களைத் தற்போது மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இச்சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய உணவு பதனீட்டுத்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, விவசாயிகள் மத்தியில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில்தான் இச்சட்டங்களை ரத்து செய்யக்கோரி நேற்று காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தஞ்சாவூரில் நகல் எரிப்புப் போராட்டம் நடத்தினார்கள். செப்டம்பர் 24-ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடத்தப்படும் என இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரிடம் நாம் பேசியபோது, ``அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் தற்போது உணவு பதனீட்டுத் தொழில்களில் இறங்கியுள்ளன. இவர்கள் அவசரப்படுத்தியதால்தான், இச்சட்டங்களைக் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி இந்தளவுக்கு அவசரம் காட்டியுள்ளார். ஆனால், விவசாயிகளின் நலன்களுக்காகத்தான் இச்சட்டங்களைக் கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி சொல்கிறார். விவசாயிகளின் நலனில் இவருக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால், எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவினுடைய பரிந்துரையின்படி, விவசாய விளைபொருள்களுக்கு உற்பத்தி செலவோடு சேர்த்து, கூடுதலாக 50 சதவிகிதம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என இச்சட்டங்களில் ஏன் குறிப்பிடவில்லை.

பெ.மணியரசன்
பெ.மணியரசன்

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது தொடரும் என ஏன் குறிப்பிடப்படவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள், விவசாயிகளை, தங்கு தடையின்றி சட்ட பாதுகாப்போடு, சுரண்டிக் கொழிப்பதற்காகத்தான் இச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருந்து, நெல், கோதுமை உள்ளிட்ட பொருள்கள் நீக்கப்பட்டுள்ளதால், இவற்றுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படுவது விரைவில் நிறுத்தப்படும். விளைபொருள்களைக் கொள்முதல் செய்யும் கடமையில் இருந்தும் மத்திய மாநில அரசுகள் விலகிக்கொள்ளும். ரேஷன் கடைகளும் படிபடியாக மூடப்படும். இவை அனைத்துமே கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைகளுக்கு உறுதுணையாக இருக்கும். இதற்காகத்தான் இச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன” எனக் கடுமையாகச் சாடினார்.

அடுத்த கட்டுரைக்கு