Published:Updated:

கரூர்: `விலை 40 ரூபாய்; வாங்கலேன்னா மண்ணுக்கு உரம்!' - அரசுப் பள்ளி ஆசிரியரின் காய்கறி சபதம்

கத்தரி சாகுபடி
கத்தரி சாகுபடி

`என்னிடம் காய்கறிகள் வாங்கவில்லையென்றால், நாங்கள் உணவு சமைத்து சாப்பிட்டது போக, மீதிக் காய்கறிகளை மண்ணுக்கே திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்' என்கிறார் ஆசிரியர் பொன்னுசாமி.

"என் தோட்டத்தில் இயற்கை முறையில் விளையும் காய்கறிகளுக்கு, கிலோ 40 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்திருக்கிறேன். காய்கறிகளின் விலை எவ்வளவு ஏறினாலும் சரி, எவ்வளவு குறைந்தாலும் சரி, இந்த விலையில் எந்த மாற்றமும் இருக்காது" என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார், பொன்னுசாமி.

நிலக்கடலை சாகுபடி
நிலக்கடலை சாகுபடி

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கும் தாசிரெட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. அதே ஒன்றியத்தில் உள்ள தே.இடையப்பட்டியில் இயங்கி வரும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

அதோடு நம்மாழ்வார் மீது அதீத பற்றுக் கொண்டதால், இயற்கை விவசாயம், நாட்டுக்கோழிகள் வளர்ப்பு என்று தற்சார்பு வாழ்வியலுக்குள்ளும் அடிஎடுத்து வைத்திருக்கிறார்.

முருங்கை சாகுபடி
முருங்கை சாகுபடி

நம்மாழ்வார் உருவாக்கிய வானகம் இதே கடவூர் ஒன்றியத்தில்தான் உள்ளது. நம்மாழ்வாரின் ஒவ்வொரு பிறந்த நாள், நினைவுநாளின் போதும், தனது பள்ளி மாணவர்களை வானகத்துக்கு அழைத்துப்போய், அங்கு நடைபெறும் நிகழ்வுகளை பார்வையிட வைத்து, மாணவர்களையும் இயற்கைக் காதலர்களாக மாற்றிவருகிறார்.

கரூர்: `சாதாரணமா ஆரம்பிச்சேன்.. அமர்க்களமா போகுது!' -ஆசிரியையின் `30 நாள் சேலஞ்ச்’

இந்தநிலையில், தனது ஊரில் உள்ள முக்கால் ஏக்கர் நிலத்தில் மழைநீர் சேமிப்பு அமைப்பு, காய்கறிகள், கடலை, பப்பாளி, முருங்கை கீரை செடிகள் என்று இயற்கை முறையில் விவசாயம் செய்திருக்கிறார். அவற்றை அமைத்ததோடு, 'என் தோட்டத்தில் விளையும் காய்கறிகள் அனைத்தும் கிலோ 40 ரூபாய்க்கு விற்பேன். அந்த விலை எந்தச் சூழலிலும் மாறாது.

சொட்டுநீர் பாசனம்
சொட்டுநீர் பாசனம்

என்னிடம் யாரும் காய்கறிகள் வாங்க தயங்குனா, அதை மண்ணுக்கு உரமாக கொடுத்துவிடுவேன்' என்று அதிரடியாக அறிவித்து, இயற்கை ஆர்வலர்களை ஆச்சர்யத்தோடு திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

பொன்னுசாமியிடம் பேசினோம்.

"என்னுடைய இந்த இயற்கை முறையிலான காய்கறித் தோட்டத்தில், தக்காளி, வெண்டை, கத்தரி, சின்ன வெங்காயம், சின்ன வெங்காயத்தில் ஒட்டுரகம், கொத்தவரை, மிளகாய், வாழை, தட்டைப்பயிறு, துமட்டிக்கா என்று போட்டுள்ளேன். தவிர, பப்பாளி, முருங்கை, நிலக்கடலை, ஆமணக்கு பயிர் செஞ்சுருக்கிறேன். 100 சதவிகிதம் இயற்கை முறையில், இந்த வெள்ளாமையை செய்றேன். மேட்டுப்பாத்தி முறையிலான சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சுகிறேன். எல்லா வெள்ளாமைக்கும் உயிர்மூடாக்குப் போட நரிப்பயிர் வளர்க்கிறேன்.

பொன்னுசாமி
பொன்னுசாமி

எனது இந்த இயற்கை காய்கறி உற்பத்தி தோட்டத்துக்கு, 'செஞ்சோலை இயற்கைவழி உழவாண்மை' என்று பெயர் வைத்துள்ளேன். இன்னும் 20 நாள்களில் எல்லா காய்கறிகளும் விளைச்சலுக்கு வந்துவிடும். எல்லா காய்கறிகளுக்கும் கிலோ 40 ரூபாய் மட்டுமே விலை நிர்ணயம் பண்ணியிருக்கிறேன். காய்கறியில் எவ்வளவு விலையேற்றம் இருந்ததாலும், என்னோட ஒரு கிலோ காய்கறி விலை 40 தான்.

இயற்கை வேளாண்மை : 9 - நல்ல மகசூலுக்கு உதவும் உயிர் உரங்கள்!

அதேபோல், காய்கறிகளின் விலை குறைந்தாலும், என்னோட விலை நிர்ணயம் 40 ரூபாய்தான். இதில் கண்டிப்பாக மாற்றம் இல்லை. இந்த 40 ரூபாய் விலை எல்லா கஸ்டமர்களுக்கும் கிடையாது. தினசரி என்னிடம் காய்கறிகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அந்த விலை பொருந்தும். யாரும் இந்த விலைக்கு என்னிடம் காய்கறிகள் வாங்கவில்லையென்றால், நாங்கள் உணவுசமைத்துச் சாப்பிட்டது போக, மீதி காய்கறிகளை கொடுத்தவனுக்கே (மண்ணுக்கே) திருப்பி கொடுத்துவிடுவதாக முடிவெடுத்துள்ளேன். செயற்கை விவசாயம் மூலம், உரங்களை கணக்கு வழக்கில்லாமல் அள்ளி தெளிச்சு விளைவிக்கப்பட்ட காய்கறிகளை சொன்ன ரேட்டுக்கு வாங்கிச் சாப்பிடுகிறோம்.

அறுவடை செய்யப்பட்ட கத்தரி
அறுவடை செய்யப்பட்ட கத்தரி

அதனால், பல நோய்களை இலவசமாகப் பெறுகிறோம். ஆனால், இயற்கை விவசாயம் முறையில், உடலுக்கு நன்மை தரக்கூடிய வகையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை சொன்ன விலைக்கு வாங்க பலரும் தயங்குவார்கள். நான் நிர்ணயித்திருப்பது மிகவும் குறைவான விலை மதிப்புதான். இதை வாங்கி ஊக்கப்படுத்தினால், எனக்கு இயற்கை விவசாயத்தை தொடர்ந்து செய்ய ஊக்கம் கிடைக்கும்" என்றார் இயல்பான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு