Published:Updated:

`மண்ணைக் காக்க கொடி ஏற்றக் கூட உரிமை இல்லையா?’ - ஹைட்ரோகார்பனுக்கு எதிராகக் கொதிக்கும் மக்கள்

ஒரத்தநாடு அருகே ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கறுப்புக் கொடி ஒன்றை அறிமுகம் செய்ததுடன், அதை ஊர் முழுவதும் ஏற்றி புதிய வடிவிலான போராட்டத்தை மக்கள் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்றப்பட்ட கொடி
ஏற்றப்பட்ட கொடி ( ம.அரவிந்த் )

ஒரத்தநாடு அருகே ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதற்கென தனி கொடியை அறிமுகம்செய்து, அதை ஊர் முழுக்க ஏற்றி புதிய வடிவிலான போராட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள் அப்பகுதி மக்கள். இதற்காக, பலர்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையிலும் இது போன்ற போராட்டங்கள் தொடரும் என அந்த ஊரைச் சேர்ந்த மக்கள் கூறிவருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொடியுடன் ஊர் மக்கள்
கொடியுடன் ஊர் மக்கள்

ஒரத்தநாடு அருகே உள்ளது ஆம்பலாப்பட்டு கிராமம். விவசாயிகளும் விவசாய நிலங்களும் நிறைந்த பகுதி. எப்போதும் பசுமைபோர்த்திய பூமியாகக் காட்சியளிக்கும் இந்த ஊரில், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விவசாயத்தை ஊயிர் மூச்சாகக்கொண்டு வாழ்ந்துவருகின்றனர். கடந்த ஆண்டு வீசிய கஜா புயல், இந்தப் பகுதியில் இருந்த தென்னை மரங்களை அழித்துவிட்டுச் சென்றது. எப்படியாவது கரைசேர்ந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் இந்த ஊரைச் சேர்ந்த ஒவ்வொரு விவசாயியும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆம்பலாப்பட்டு மக்கள், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'ஹைட்ரோ கார்பனை எதிர்த்து என் மண்ணைக் காப்பேன்' என்ற வாசகங்கள் அடங்கிய கறுப்புக் கொடியை அறிமுகம்செய்தனர். மேலும், அந்த கொடியை ஊர் முழுக்க பல இடங்களில் ஏற்றிவைத்தனர். இதை அறிந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், ஆம்பலாபட்டுக்கு படையெடுத்தது, கொடி ஏற்றியது தவறு என வாதிட்டனர். எங்கள் மண்ணைக் காக்க, கொடி ஏற்றக்கூட எங்களுக்கு உரிமை இல்லையா என மக்கள் கொதித்தனர்.

கொடி ஏற்றும் மக்கள்
கொடி ஏற்றும் மக்கள்

இதைக் கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் அங்கிருந்து சென்றதுடன், உடனே 25 பேர் மீது அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இதனையடுத்து பெரும் பதற்றம் சூழ்ந்து கொண்டது அந்த கிராமத்தில். உடனே இந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும் எனப் பலர் குரல்கொடுத்துவருகின்றனர். பின்னர் நேற்று நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில், 'மண்ணையும் விவசாயத்தையும் பாதிக்கின்ற எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம்' என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இதுகுறித்து ஆம்பலாப்பட்டை சேர்ந்த சிலரிடம் பேசினோம், ``எங்களுக்கு இந்த மண்ணும் எங்க தொழிலான விவசாயமும் தான் முக்கியம். எங்க ஊரைச் சேர்ந்தவர்கள் வெளி நாட்டிற்கு சென்று வேலை பார்த்தால்கூட சில ஆண்டுகள் கழித்து வந்து விவசாயம் செய்கிறார்கள். ஏன் என்றால், விவசாயம் என்பது எங்கள் தொழில் அல்ல வாழ்கை. இப்படிப்பட்ட சூழலில், எங்கள் மண்ணையும் மக்களையும் ஹைட்ரோ கார்பன் திட்டம் அச்சப்படுத்திவருகிறது. மேலும், மண்ணையும் மக்களையும் அழித்துவிடுமோ என்று பெரும் கவலைகொள்ளச்செய்கிறது.

ஏற்றப்பட்ட கொடி
ஏற்றப்பட்ட கொடி

பேரழிவை உண்டாக்கும் இந்த திட்டத்திற்கு, நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதுடன், தற்போது புதிய கொடியை அறிமுகப் படுத்தியிருக்கிறோம். அதில், ஹைட்ரோ கார்பனை எதிர்த்து 'என் மண்ணைக் காப்பேன்' என உறுதிமொழி ஏற்கின்ற வகையில் வாசகம் அச்சடிக்கப்பட்டு, கொடியின் கீழ்ப் பகுதியில் பெண்கள் நடவுப் பணிகள் செய்துகொண்டிருப்பது போலவும், ஹைட்ரோகார்பன் எடுக்க குழாய்கள் பதித்து அதைக் கொண்டு செல்ல இருப்பதால், விவசாய நிலங்கள் பாலைவனமாக மாறுவதையும், மக்கள் எலும்புக்கூடாக மாறி கையேந்துகிற நிலை உருவாகும் என்பதை உணர்த்தும் வகையில் இரு பக்கமும் எச்சரிக்கை செய்வதுபோல் மண்டை ஓட்டுடன்கூடிய படங்களுடன் இந்த கொடியை அறிமுகம்செய்தோம்.

இதனை ஊர் முழுக்க ஏற்றிவைத்தோம். மேலும், இதை ஸ்டிக்கராக ரெடி செய்து, அனைவரது வாகனங்களிலும் ஒட்டியிருக்கிறோம். இதற்கு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அனுமதி பெறாமல் கொடி ஏற்றியது தவறு என பலபேர்மீது வழக்கு பதிந்துள்ளனர்.

கொடி
கொடி

எங்க மண்ணை, மக்களைக் காப்பதற்காக யாரையும் எந்த தொந்தரவும் செய்யாத வகையில் அமைதியான முறையில் கொடி ஏற்றினோம். சுதந்திர நாட்டில் கொடி ஏற்றுவதுகூட தவறு என ஆளும் அரசு எங்களை அச்சுறுத்துகிறது. டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். எங்க மண்ணில் மட்டுமல்ல இனி எங்கும் இதுபோன்ற பேரழிவை உண்டாக்குகின்ற திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று தொடர்ந்து போராடுவோம்” என்று கூறினர்.