Published:Updated:

`லட்சக்கணக்கில் செலவு; கொரோனா நிலைகுலைய வைச்சுருச்சு!’ - கலங்கும் பெரம்பலூர் பூசணி விவசாயிகள்

கண்ணீர் வடிக்கும் பூசனி விவசாயிகள்
கண்ணீர் வடிக்கும் பூசனி விவசாயிகள்

தண்ணீர் விலைக்கு வாங்கி விவசாயம் செய்துவந்த காரணத்தால் அதற்கான கடனையும் செலுத்த முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நாங்கள் வாழ வழி சொல்லுங்கள்.

கொரோனா ஊரடங்கால் உற்பத்தி செய்த பூசனியை விற்பனை செய்ய முடியாமல் வயலிலேயே அழுகு சூழலில் இருப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள் விவசாயிகள். `ஒவ்வொரு முறையும் வறட்சி மற்றும் மழை எங்களைக் கடுமையாகப் பாதிக்கும். இந்த முறை கொரானோவால் நாங்கள் நிலைகுலைந்து நிற்கிறோம். எங்களுக்கு வழிசொல்லுங்கள்’ என்று வேதனைப்படுகிறார்கள் பெரம்பலூர் விவசாயிகள்.

விவசாயி
விவசாயி

பெரம்பலூர் மாவட்டம் மிகவும் வறட்சியான பகுதி. இப்பகுதியில் பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம், சிறு தானிய வகைகள், பூசணிக்காய்கள் உள்ளிட்ட பல பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் அறுவடை செய்யப்படும் பூசணிக்காய்களின் விற்பனையை நம்பி இங்கு நூற்றுக்கணக்கான விவசாயிகளும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும் உள்ளனர். ஆனால், தற்போது சென்னை கோயம்பேடு சந்தை, மதுரை சந்தை போன்ற முக்கியமான சந்தைகள் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளதாலும், போக்குவரத்து வசதியில்லாததாலும், விற்பனை முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதனால் அறுவடை செய்யப்படும் பூசணிக்காய்கள் தேக்கமடைந்துள்ளன.

மறுபுறம், வெட்டப்படாமல் செடியிலேயே இருப்பதால் அரைகுறையாய் பழுத்து, அழுகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் விற்பனைக்கும் பயனற்றதாகியுள்ளது.

இதுகுறித்து விவசாயி நடேசனிடம் பேசினோம், ``எனக்குச் சொந்தமான 3 ஏக்கரில் வெள்ளை பூசணிக்காய் பயிர் செய்தேன். மாற்றுப் பயிரிட விரும்பி ஏரி மண்ணை விலைக்கு வாங்கி நிலத்தில் நிரப்பி, இரண்டரை லட்சம் ரூபாய் செலவு செய்து, சாகுபடி செய்த பூசணிக்காய்கள் தேக்கமடைந்துள்ளன.

கண்ணீர் வடிக்கும் பூசனி விவசாயிகள்
கண்ணீர் வடிக்கும் பூசனி விவசாயிகள்

சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரம் மட்டுமல்லாது, உள்ளூர் வியாபாரமும் முற்றிலும் முடங்கியுள்ளது.

வறட்சி மிகுந்த பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்வதற்காக விலை கொடுத்து, தண்ணீர் விலைக்கு வாங்கி விவசாயம் செய்துவந்த காரணத்தால் அதற்கான கடனையும் செலுத்த முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளேன். கொரோனா ஊரடங்கால் விற்பனை செய்ய முடியாமல் வயலிலேயே என் கண்ணெதிரிலேயே அழுகி வீணாகி நஷ்டம் ஏற்பட்டுள்ளது" என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

மற்றொரு விவசாயி சாமிநாதன் பேசுகையில், ``கொரானோ வைரஸ் ஊரடங்கு காரணமாகத் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் எளிமையாக நடத்தப்படுவதாலும், கோயம்பேடு சந்தை உள்ளிட்ட சந்தைகள் மூடப்பட்டுள்ள காரணத்தினாலும் வியாபாரிகள் பூசணிக்காய்களைக் கொள்முதல் செய்ய அஞ்சுகின்றனர். இதனால் என்னிடம் மட்டும் இந்த 30 டன் பூசணிக்காய்கள் தேக்கமடைந்துள்ளன.

பூசணிக்காய்
பூசணிக்காய்

பூசணிக்காய் தேக்கமடைந்த காரணத்தினால், சுமார் ஐந்து லட்ச ரூபாய் முதல் ஆறு லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு கத்தரி, தக்காளி, பூசணிக்காய் நல்ல விளைச்சல் காணப்பட்டது. ஊரடங்கு உத்தரவால் ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தும் பூசணிக்காய்கள் விற்பனை முடங்கியது. இதனால் செடிகளில் பறிக்கப்பட்ட பூசணிக்காய்கள் விற்பனையின்றி அழுகியும், வெயிலில் வெடித்தும் வீணாகிறது. விவசாயப் பணிகளுக்குச் செலவு செய்த காசை கூட எடுக்க முடியாத பரிதாப நிலையில் விவசாயிகள் உள்ளனர். யாரு யாருக்கோ இந்த அரசு உதவி செய்கிறது எங்களுக்கு உதவிக்கரம் நீட்டினால் நல்லது” என்று கோரிக்கை விடுத்தார்.

அடுத்த கட்டுரைக்கு