Published:Updated:

`வெட்டவெளில தூக்கி எறிஞ்சாலே போதும்!' - இன்விடேஷனில் விதைப்பந்து வைத்து அசத்திய விவசாயி #MyVikatan

``வெட்டவெளியில் தூக்கி எறிஞ்சாலே போதும். வருஷக் கணக்கிலே மண்ணுக்குள்ளே கிடந்தாலும் மழை பெய்யும்போது அதுவாகவே முளைச்சு வளர்ந்துடும்.''

 விதைப்பந்துகள் சுமந்த அழைப்பிதழ்
விதைப்பந்துகள் சுமந்த அழைப்பிதழ்

நாம் தொலைத்துவிட்ட இயற்கையை மீண்டும் மீட்டெடுக்க இங்கு புதுப்புது உத்திகளும் ஏராளமான ஆலோசனைகளும் விதவிதமாய் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அந்தவகையில் பேராவூரணி அருகே உள்ள நாடியம் நவக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த விவசாய தம்பதியர் தீபன் சக்கரவர்த்தி – தேவி ஆகியோர் தனது பிள்ளைகளுக்கான காதணி விழா அழைப்பிதழுக்குள் ஒரு புதுமையைப் புகுத்தி இயற்கையின் நலனுக்கு இரு கரம் நீட்டி இருக்கின்றனர்.

தீபன் சக்கரவர்த்தி
தீபன் சக்கரவர்த்தி

இவர்களுடைய மகள் சுபாஸ்ரீ மற்றும் மகன் அபினய் சந்திரனுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி பேராவூரணியில் உள்ள தனியார் கல்யாண மண்டபம் ஒன்றில் காதணி விழா நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழைத்தான் தீபன் சக்கரவர்த்தி–தேவி குடும்பத்தினர் இப்படி வித்தியாசமாய் வடிவமைத்து இயற்கை அன்னைக்கு இதம் சேர்த்துள்ளனர்.

அழைப்பிதழை ஒரு சிறு அட்டைப்பெட்டிக் கவர் போல் தயார் செய்துள்ளனர் அதன் முன்பக்கமும், பின்பக்க அட்டையிலும் காதணி விழா குறித்த தகவல்களை அச்சிட்டு உள்ளனர். இது வழக்கமான ஒன்றுதானே எனப் பெட்டியை திறந்து பார்த்தால் இன்னொரு ஆச்சரியம் இதற்குள் ஒளிந்து இருக்கிறது. அதாவது அந்த அட்டைப் பெட்டிக்கு உள்ளே ஆறு விதைப்பந்துகளை வைத்து ஆச்சரியப்படுத்தி இருக்கின்றனர் இந்த இயற்கை நலன் காக்கும் தம்பதியர்.

கவரின் ஒரு புறத்தில் விதைப்பந்துகள் என்றால் என்ன? என்பது பற்றிய ஒரு சிறுவிளக்கமும் கொடுத்துள்ளனர். இந்த விதைப்பந்துகளுக்குள் புங்கன், வேம்பு, வாகை மரங்களின் விதைகள் உள்ளன என்றும், இதனை ஆற்றங்கரை, குளத்தங்கரை, ஓடைகளின் ஓரங்கள், தேசிய-மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்கள், தரிசாய்க் கிடக்கும் நிலங்கள், வனப்பகுதிகள், பயன்பாடற்ற அரசு நிலங்கள் மற்றும் ஈரப்பதம் உள்ள எல்லா இடங்களிலும் இந்த விதைப்பந்துகளை வீசலாம் என்ற குறிப்புக் கொடுத்தும் வழிகாட்டி உள்ளனர். அழைப்பிதழ் அட்டையின் இன்னொரு ஓரத்தில், ``இது இயற்கை அன்னையை காப்பாற்றுவதற்கான எங்களின் சிறுமுயற்சி. இந்த முயற்சியை வெற்றி ஆக்குவதும் மேலும் தொடர்வதும் உங்கள் கைகளில்..” என்ற வேண்டுகோளையும் முன்வைத்துள்ளனர். இத்துடன் இயற்கை தொடர்பான விழிப்புணர்ர்வு வீடியோவை யூ டியூப்பில் காண்பதற்கான க்யூ.ஆர்.சி.ஐயும் இத்துடன் அச்சடித்து அசத்தி உள்ளனர்.

 விதைப்பந்துகள் சுமந்த அழைப்பிதழ்
விதைப்பந்துகள் சுமந்த அழைப்பிதழ்

இந்தப் புது ஐடியா எப்படி வந்தது? என தீபன் சக்கரவர்த்தியை தொடர்புகொண்டு கேட்டேன்.

``ஆறேழு வருஷமா சென்னையில் கம்யூட்டர் என்ஜினியரா வேலை பார்த்துவிட்டு, அப்புறமா இயற்கை விவசாயத்துக்கு திரும்பியவன் நான். எனக்கும் என்னோட குடும்பத்தினருக்கும் எப்போதுமே இயற்கைமீது, இந்த மண்மீது, விவசாயத்தின்மீது மிகப்பெரிய பிரியம். இயற்கை நலனுக்கு ஏதாவது செய்யனும் அப்படிங்கிற ஆர்வம் உள்ளவங்க நாங்க.

எங்க குழந்தைகளோட காதுகுத்து விழாவுக்கு முடிவு செஞ்சோம். இப்போ எல்லாப் பகுதிகளிலேயும் கல்யாணம், காதுகுத்து போன்ற விஷேசங்களில் மரக்கன்றுகள் கொடுக்கிறாங்க. ஆனா அப்படி வாங்கிட்டு போறவங்களில் அதனை வீடு கொண்டு போய்ச் சேர்க்கிறவங்க ரொம்ப கம்மி. அப்படி கொண்டுபோறவங்கள்ல குழி பறிச்சு, செடியை நட்டு, தண்ணீர் ஊற்றி, பாதுகாத்து பராமரிப்பு செய்யுறவங்க அதைவிடக் கம்மி. இன்னும் சொல்லப்போனா இந்த மாதிரி விழாக்களில் கொடுக்கப்படும் மரக்கன்றுகள் 60 சதவீதம் சேதாரம் ஆகிடுது. அதுனால நாம் மரக்கன்று கொடுக்க வேணாம். வேற ஏதாவது முயற்சி பண்ணலாம்னு முடிவு செஞ்சோம்.

ஆறேழு வருஷமா சென்னையில் கம்யூட்டர் என்ஜினியரா வேலை பார்த்திட்டு அப்புறமா இயற்கை விவசாயத்துக்கு திரும்பியவன் நான்.
தீபன் சக்கரவர்த்தி

அப்போதான் விதைப்பந்து கொடுக்கலாம்னு ஒரு முடிவுக்கு வந்தோம். அதை விழாவுக்கு வர்ற இடத்துலே கொடுத்தா ஒழுங்கா கொண்டுப் போய்ச் சேர்ப்பாங்களா? அப்படிங்கிற ஒரு சந்தேகம் இருந்துச்சு. அதனாலே அழைப்பிதழை ஒரு சின்ன கவரா செஞ்சு அதுக்குள்ளே விதைப்பந்துகளை போட்டு அழைக்க வேண்டியவங்க வீடுகளிலேயே நேரடியா கொடுத்திடலாம்னு முடிவு பண்ணினோம்.

இந்த அழைப்பிதழை அழகாய் அச்சடிச்சு 6 எண்ணிக்கை கொண்ட விதைப்பந்துகளுடன் அருமையாய் பேக்கிங் செய்து ஒரு அழைப்பிதழை 20 ரூபாய்க்கு அவினாசியில் உள்ள ஒரு நிறுவனம் விற்பனை செய்யுது. அங்கேதான் நாங்களும் வாங்கினோம். மொத்தம் 250 அழைப்பிதழ்கள். இந்த விதைப்பந்துக்களை எல்லோராலும், எப்போதும், எங்கும், எளிமையாய் அதை உபயோகமாக்கிடலாம். இதுக்கு எந்த சிரமும் படவேண்டியதில்லை. வெட்டவெளியில் தூக்கி எறிஞ்சாலே போதும். வருஷக் கணக்கிலே மண்ணுக்குள்ளே கிடந்தாலும் மழை பெய்யும்போது அதுவாகவே முளைச்சு வளர்ந்துடும்.

இந்த விதைப்பந்துக்குள் வைத்திருக்கும் விதைகளைக்கூட கடும் வறட்சியை தாங்கக்கூடியதும், நல்ல ஆரோக்கியமான காற்றை தரக்கூடியதுமான புங்கை, வாகை, வேம்பு போன்ற மரங்களின் விதைகளைத்தான் தேர்வு செஞ்சு வைச்சிருக்கோம். இந்த மூன்று மரங்களுமே மக்களுக்கும் இயற்கைக்கும் ரொம்ப முக்கியமான ஒன்று.

சுபாஸ்ரீ-அபினய் சந்திரன்
சுபாஸ்ரீ-அபினய் சந்திரன்

அழைப்பிதழ் கொடுக்கும்போது விதைப்பந்துகளைப் பார்த்துட்டு சொந்தக்காரங்க எல்லாம் ஆச்சரியமா கேட்டு, எங்களை பாராட்டுறாங்க. எங்களுக்கும் பெருமையா இருக்கு. இயற்கையை காப்பதற்கு எங்களால் முடிஞ்ச ஒரு சின்ன காரியம் இது. இதுமாதிரி கொஞ்சம் வித்தியாச முயற்சியில் ஈடுபட்டு, ஒவ்வொருவரும் களத்துலே இறங்கினா, வறட்சியும் பஞ்சமும் நம்மை ஒருபோதும் எட்டிப் பார்க்காது. நம்முடைய பூமி எப்போதும் பசுமையாகவே இருக்கும்” என்கிறார் தீபன் சக்கரவர்த்தி.

இயற்கையைக் காப்பதற்கு அழைப்பிதழ் வடிவில் புது முயற்சியில் ஈடுபட்டுள்ள தீபன் சக்கரவர்த்தி-தேவி தம்பதியரை பொதுமக்கள், விவசாயிகள், இயற்கை நலம் விரும்பிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

-பழ.அசோக்குமார்

MyVikatan
MyVikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/