Published:Updated:

கண்மாய்க்குள் காடு வளர்க்கும் பேராவூரணி இளைஞர்கள்..! #MyVikatan

இடுப்பளவு தண்ணீருக்குள் இறங்கி, தோள்களில் மரக்கன்றுகள் சுமந்து கண்மாய்க்குள் காடு வளர்க்கும் பணியில் களமிறங்கி அசத்தி வருகிறார்கள் பேராவூரணி இளைஞர்கள்.

பேராவூரணி இளைஞர்கள்
பேராவூரணி இளைஞர்கள்

புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கடைமடைப் பாசனப்பகுதியின் விவசாயக் குடும்ப இளைஞர்களால் உருவாக்கப்பட்ட கைபா அமைப்பு பேராவூரணியின் 564 ஏக்கர் பரப்பளவிலான பெரியகுளத்தைச் சொந்தமாகவே நிதி திரட்டி தூர்வாரி, கரைகளைச் சிறப்பாகச் செப்பனிட்டுச் செய்து முடித்து மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. அமைப்பாக திரண்டு இதைச் செய்து முடித்த இளைஞர்களின் இப்பணிகளை நேரில் பார்வையிட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர்கள் பாராட்டிவருகின்றனர்.

பேராவூரணி இளைஞர்கள்
பேராவூரணி இளைஞர்கள்

தூர்வாரப்பட்ட குளத்தின் கரைகளில் மரக்கன்றுகள் நட்டும், கரைகளின் அரிமானத்தை தடுக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் வெட்டிவேர் நடவுசெய்தும் வருகின்றனர். பேராவூரணி பெரியகுளத்தை தூர்வார ஆரம்பிக்கும்போதே கூடுதலாக திட்டமிட்டு சில சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகளையும் வடிவமைத்தனர். அவற்றில் ஒன்றுதான் பெரியகுளத்துக்குள் மூன்று இடங்களில் குருங்காடுகள் அமைப்பது. அதன்படி குளத்தை தூர்வாரும்போதே குளத்தின் நடுப்பகுதியில் மணல் திட்டுகள் அமைத்தனர். அவ்வாறு அமைக்கப்பட்ட மணல் திட்டுகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும்விதமாக மரங்களை நட முடிவு செய்தனர்.

விவசாயத்திலும் மாத வருமானம்! - புதியபாதை காட்டும் 'பல்பயன் வேளாண் காடு'!

ஆனால், குருங்காடு அமைப்பதற்கான மரக்கன்றுகளை மணல் திட்டுகளில் நடுவதற்கு முன்பே, தூர்வாரப்பட்ட பெரியகுளம் பாதிக்குமேல் தண்ணீரால் நிரம்பிவருகிறது. ஒரு காலத்தில் தூர்வாரப்படாமல் மணல் மேடாக காட்சியளித்த பேராவூரணி பெரியகுளம் தற்போது மிகப்பெரிய நீர்நிலையாக காட்சி அளிக்கிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். பெரியகுளத்தின் நீர் நிறைந்த காட்சி கைபா இளைஞர்களுக்கும் அப்பகுதி விவசாயிகளுக்கும் புது உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

இச்சூழலில், கண்மாயின் மூன்று இடங்களில் குருங்காடுகள் உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மணல் திட்டுகளில் மரக்கன்றுகள் நடும் பணியில் கைபா இளைஞர்கள் தற்போது ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

பேராவூரணி இளைஞர்கள்
பேராவூரணி இளைஞர்கள்

பேராவூரணி பெரியகுளம் கண்மாய் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், கண்மாயின் நடுப்பகுதியில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் மூன்று இடங்களில் குருங்காடுகள் அமைப்பது என முடிவு செய்து, அதற்கான முயற்சியில் சில மாதங்களாக ஈடுபட்டு வந்தனர். தூர்வாரப்பட்ட மண்ணைக்கொண்டு அங்கேயே மூன்று இடங்களில் மணல் திட்டுகள் உருவாக்கியுள்ளனர்.

குருங்காடுகளினால் இங்கு வளரும் மரங்களில் ஏராளமான பறவைகள் வந்து வசிக்கும். இதனால் சுற்றுச்சூழல் மேம்பாடு அடையும். பல்லுயிர்ப் பெருக்கம் ஏற்படும். மழை மேகங்களை ஈர்க்கக்கூடிய இலுப்பை, புங்கை, வாகை, வேம்பு போன்ற மரங்களை இங்கு நட்டு வருகிறோம். இந்த மரங்கள் மழை மேகங்களை ஈர்க்கும். அதனால் இப்பகுதியில் கூடுதல் மழை கிடைக்கும்.

இங்கு வரும் பறவைகள் உண்பதற்காக மா, பலா, கொய்யா, சீதா, மாதுளை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளையும் நடவு செய்து வருகின்றனர். பழங்களைத் தின்று எச்சமிடும் பறவைகளால் மரக்கன்றுகள் பல இடங்களில் முளைக்கும். இதனால் உணவுச் சங்கிலியில் தடை ஏற்படாது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் பெரியகுளத்தின் நடுவே குருங்காடுகள் வளர்க்கும் முயற்சியை மேற்கொண்டனர்.

பேராவூரணி இளைஞர்கள்
பேராவூரணி இளைஞர்கள்

பெரியகுளம் தற்போது பாதிக்குமேல் தண்ணீரால் நிரம்பி வருகிறது. மணல் திட்டுகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி தண்ணீர் இடுப்புக்கு மேல் உள்ளது. இருந்தும் கைபா உறுப்பினர்களும், விளையாட்டுகளில் பங்கேற்கும் இளைஞர்களும், பள்ளி மாணவர்களும் இப்பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் 25 பேர் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்னும் ஒருவார காலத்துக்குள் இப்பணிகள் நிறைவடையும்.

இடுப்பளவு தண்ணீரைப் பற்றிக் கவலைப்படாமல் இளைஞர்கள் ஆர்வமுடன் மரக்கன்றுகளை தோளில் சுமந்து கொண்டுபோய் நட்டு வருகின்றனர். சுற்றுச்சூழல் நலனை பாதுகாத்தால் மட்டுமே இந்த மனித சமூகத்தைக் காப்பாற்ற முடியும். அதற்கான அனைத்துப் பணிகளையும் தன்னார்வலர்களும் மக்களும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

-பழ.அசோக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/