Published:Updated:

வறண்ட போர்வெல்லிலும் வற்றாத நீர்!

 போர்வெல்
பிரீமியம் ஸ்டோரி
News
போர்வெல்

நீங்கள் கேட்டவை

‘‘எங்கள் நிலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு போர்வெல் (ஆழ்துளைக் கிணறு) அமைத்தோம். ஆனால், தண்ணீர் கிடைக்கவில்லை. மீண்டும் போர்வெல் அமைக்கலாமா, சமீபத்தில் ‘வறண்ட போர்வெல்லிலும் நீர் கிடைக்கும்’ என்று வாட்ஸ்அப்பில் படித்தேன். இதன் விவரங்களைச் சொல்லுங்கள்?’’

ரவிச்சந்திரன், விழுப்புரம்.

திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த வேளாண் பொறியாளர் பிரிட்டோ ராஜ் பதில் சொல்கிறார்.

வறண்ட போர்வெல்லிலும் வற்றாத நீர்!

‘‘சில ஆண்டுகளுக்கு முன்பு கோடைக்காலத்தில் கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளைப் பராமரிக்கும் முறைகள் பற்றி பசுமை விகடன் இதழில் விளக்கமாகச் சொல்லியிருந்தேன். நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில்கூட இதைச் சொல்வதுண்டு. இந்த தகவலைப் படித்தவர்களும் கேட்டவர்களும் வறண்ட போர்வெல்லில் நீரை வரவழைத்துள்ளனர். சரி, விஷயத்துக்கு வருவோம். பொதுவாக கோடைக்காலத்தில் போர்வெல் அமைக்கக் கூடாது. நிலத்தடியில் உள்ள பாறை இடுக்குகளுக்குத் தண்ணீர் கொடுக்கும் ஏரி, குளம், குட்டைகள் வறண்டு இருப்பதால், பாறை இடுக்குகளில் கோடைக் காலங்களில் தண்ணீர் இருக்காது. 80 அடி, 150 அடி, 320 அடி, 500 அடி என ஆங்காங்கே கிடைக்கும் ஊற்றுக் கண்களில் ஈரம் இருக்காது என்பதால், தண்ணீரைத் தேடி அதிக ஆழத்துக்கு போர்வெல் அமைக்க வேண்டி வரும். அதிக ஆழத்துக்கு ஊடுருவி, 700, 800 அடி ஆழத்தில் தண்ணீர் வந்தாலும்... போர்வெல் டிரில்லர் சுழலும்போது, கீழே கிடைக்கும் தண்ணீருடன், மேல்பகுதியில் உள்ள மண் கலந்து, சிமென்ட் போல மாறி, மேலே சில நூறு அடிகள் ஆழத்திலேயே உள்ள வறண்ட ஊற்றுக்கண்களின் வாய்ப்பகுதியை அடைத்துவிடும். அதனால், கோடையில் அதிக ஆழத்துக்கு போர்வெல் அமைப்பதைத் தவிர்ப்பது நல்லது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதையும் தாண்டி போர்வெல் அமைப்பவர்கள், ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, ‘பணம் செலவாகும்’ என நினைத்து, கேசிங் பைப்பை அதிக ஆழத்துக்கு இறக்க மாட்டார்கள். ஆனால், பாறை மட்டம் வரை கேசிங் பைப்பு இறக்க வேண்டும். அப்போதுதான் போர் வெல்லுக்குள் மண் சரிவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். இல்லாவிடில், மண் சரிந்து ‘நீர் மூழ்கி மோட்டார்’களைக் குறிப்பிட்ட ஆழத்துக்குக் கீழ் இறக்க முடியாமலோ எடுக்க முடியாமலோ போய்விடும்.

ஆழ்துளைக் கிணறு
ஆழ்துளைக் கிணறு

ஆனால், எவ்வளவு வறண்ட பகுதியானாலும் அப்படிப் புகை வந்த போர்வெல்களிலும், தண்ணீரைக் கொண்டு வந்துவிட முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மழைநீர்ச் சேமிப்பு அமைப்பை உருவாக்குவதுதான். அதற்கு, இதுதான் சரியான நேரம். தென்மேற்குப் பருவ மழைக்காலத்தில் நிச்சயம் மழை கிடைக்கும். அந்த மழைநீரை முழுமையாக அறுவடை செய்து, போர்வெல் குழாயில் செலுத்தி, ‘நீர்ச் செறிவூட்டல்’ செய்தால் தண்ணீர் ஊறிவிடும்.

கிணறு அல்லது போர்வெல்லில் இருந்து மூன்றடி தள்ளி... 6 அடி நீளம், 6 அடி அகலம், 4 அடி ஆழம் என்ற அளவில் குழி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் குழியின் அடிப்பாகத்திலிருந்து அரையடி உயரத்தில் 2 அங்குல பைப்பு ஒன்றைப் பொருத்தி, அதன் இன்னொரு முனையைக் கிணறு அல்லது போர் வெல்லுக்குள் இருக்குமாறு செய்ய வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிறகு, குழியில் 3 அடி உயரத்துக்குக் கூழாங்கற்கள் அல்லது அருகில் கிடைக்கும் சிறிய கற்களை நிரப்பி வைத்தால்... மழைநீர், கற்களில் வடிகட்டப்பட்டு கிணறுகளில் சேகரமாகும். இப்படித் தண்ணீர் போர்வெல்லுக்குள் செல்லும்போது, ஏற்கெனவே ஊற்றுக்கண்களை அடைத்திருக்கும் சிமென்ட் போன்ற பூச்சுகள் கரைந்து, புது ஊற்றுகள் திறந்து... இனி தண்ணீரே கிடைக்காது என நினைத்த... வறண்டுபோன, இறந்துபோன போர்வெல்லிலும் தண்ணீர் கிடைக்கும். மழை கிடைத்த நான்காவது நாளே, உங்கள் போர்வெல் குழாயில் சிறிய கல்லைக் கயிற்றில் கட்டி இறக்கி... தண்ணீர் ஊறி இருப்பதை அனுபவபூர்வமாக உணர முடியும். அதாவது, உங்களின் போர்வெல் அளவு 400 அடியாகவும், ஊரில் உள்ளவர்களின் போர்வெல் 500 அடியாகவும் இருந்தால், மற்ற போர்வெல்லுக்குத் தண்ணீர் கொடுக்கும் அமைப்பாக இது இருக்கும்.

வறண்ட போர்வெல்லிலும் வற்றாத நீர்!

ஒருவேளை உங்கள் போர்வெல் 500 அடியாகவும், ஊரிலுள்ள போர்வெல்கள் 400 அடியாகவும் இருந்தால், உங்கள் போர்வெல் ஊற்று சுரந்து... தண்ணீரைக் கொடுக்கும். எப்படிப்பார்த்தாலும் இந்தச் செயல் மூலம் நிச்சயம் பயன் கிடைக்கும்.

இந்த அமைப்பை உருவாக்க சுமார் 20,000 ரூபாய் செலவாகும். இது செலவல்ல முதலீடு. கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் வறட்சியால் வாடிய தென்னை மரத்தைக் காப்பற்ற, இந்த தொழில் நுட்பத்தைத்தான் பயன்படுத்தினார்கள். இப்போது தண்ணீர்ப் பற்றாக்குறை என்ற பேச்சு, அங்கு குறைவாகவே ஒலிக்கிறது.இந்த அளவுக்குச் செலவு செய்ய முடியாத விவசாயிகள், தங்கள் நிலத்தைச் சுற்றிலும் 3 அடி அளவுக்குச் சமஉயர வரப்பு அமைக்கலாம். இதன் மூலம் உங்கள் நிலத்திலிருந்து ஒரு சொட்டு மழைநீர்கூட வெளியில் செல்லாது.

கூடவே, வளம் நிறைய மேல் மண்ணும் அரித்துச் செல்லாமல் பாதுகாக்கப்படும். எனவேதான் மழைநீர்ச் சேகரிக்கச் சொல்லித் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பூமியில் உள்ள நிலத்தடி நீரைச் சுரண்டி எடுப்பதைவிட, வானத்திலிருந்து விழும் மழைநீரைப் பிடித்து வைத்து, பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

வறண்ட போர்வெல்லிலும் வற்றாத நீர்!

இதைத்தான் நம் முன்னோர்கள் செய்தனர். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். மழைநீர் அறுவடை என்பதுதான் நம் கண்முன் உள்ள வாய்ப்பு. அதைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்வோம்.’’

தொடர்புக்கு,

செல்போன்: 99444 50552

‘‘தேனீ வளர்க்க விரும்புகிறேன். எங்கு பயிற்சி கிடைக்கும்?’’

எம்.சாந்தா, வந்தவாசி.

‘‘தேனீ வளர்ப்பு மூலம் விளைச்சல் அதிகரிக்கும். தேன் மூலமும் லாபம் கிடைக்கும்.

வறண்ட போர்வெல்லிலும் வற்றாத நீர்!

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறையின் மூலம் ஒவ்வொரு மாதமும் 6-ம் தேதி தேனீ வளர்ப்புப் பயிற்சி நடைபெறுகிறது. இப்பயிற்சியில் தேனீ வளர்ப்பு பற்றிய அடிப்படை விஷயங்களைக் கற்றுக் கொடுத்து வருகிறார்கள். ‘பெட்டிகள் எங்கு கிடைக்கும், தேனை எப்படி விற்பனை செய்வது’ போன்ற தகவல்களும் கிடைக்கும். கட்டணம் உண்டு’’

தொடர்புக்கு,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர் - 641003.

தொலைபேசி: 0422 6611214.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.

வறண்ட போர்வெல்லிலும் வற்றாத நீர்!