Election bannerElection banner
Published:Updated:

Fact Check: `நீல நிறத்தில் வாழைப்பழமா?' - வைரல் புகைப்படம்... உண்மை என்ன?

Viral Photo
Viral Photo

நீல நிறத்தில் வாழைப்பழம் இருப்பதாகவும், இது வெண்ணிலா ஐஸ்க்ரீம் சுவையில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாகத் தகவல்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. அதேசமயம் இப்படி ஒரு வாழை ரகம் இருக்க வாய்ப்புள்ளதா எனச் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். உண்மை என்ன?

வாழைப்பழம் என்று சொன்னாலே நம் அனைவருக்கும் மஞ்சள் நிறம்தான் நம் கண் முன்னே தோன்றும். உலக அளவில் அதிகமாகப் புழக்கத்தில் உள்ள பூவன், மொந்தன், ரஸ்தாலி, கற்பூரவள்ளி உள்ளிட்ட பெரும்பாலான வாழைப்பழ ரகங்கள் மஞ்சள் நிறத்தில்தான் உள்ளன. இதற்கு விதிவிலக்காக, செவ்வாழையின் தோல் கருஞ்சிவப்பு நிறத்திலும், பச்சை வாழைப்பழத்தின் தோல் பச்சை நிறத்திலும் பார்த்திருக்கிறோம். இந்நிலையில்தான் நீல நிறத்தில் வாழைப்பழம் இருப்பதாகவும், இது வெண்ணிலா ஐஸ்க்ரீம் சுவையில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாகத் தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதைப் பார்த்து பலரும் ஆச்சர்யத்துடன் வாய்பிளந்து வருகிறார்கள். அதேசமயம் இப்படி ஒரு வாழை ரகம் இருக்க வாய்ப்புள்ளதா எனச் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். உண்மைதான் என்ன?

நீல நிற வாழை (Fake)
நீல நிற வாழை (Fake)

நீல நிற ஜாவா வாழைப்பழங்கள் என்ற பெயரில் வசீகரமான புகைப்படத்துடன், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இப்படி ஒரு தகவல் வந்துகொண்டிருக்கிறது.

``தோல் மட்டுமல்ல பழம் முழுவதுமே நீல நிறத்தில் இருக்கும் இது கிரீம் போன்ற சுவையுடன் மிருதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இவை வெண்ணிலா ஐஸ்க்ரீம் போன்ற சுவையுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவற்றைக் கொண்டு டெசர்ட் செய்து சாப்பிட்டால் மிகவும் அற்புதமாக இருக்கும். இருப்பினும், இந்த வாழைப்பழங்கள் மிகவும் அரிதானவை. இவை எல்லா இடங்களிலும் காணப்படுவதில்லை.

இந்த வகை வாழைப்பழங்கள் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் வளர்க்கப்படுகின்றன. அதேபோல இவை ஹவாயிலும் நன்கு வளரக்கூடியவை ஆகும். இந்தப் பழங்கள் மூசா பால்பிசியானா மற்றும் மூசா அக்யூமினாட்டா ஆகிய இரண்டு வகையான வாழைப்பழங்களின் கலப்பினமாகும். சுவாரஸ்யமாக, இந்த வாழைப்பழங்கள் அதிக குளிர்ச்சியைத் தாங்குவதால் உறைபனிக்குக் கீழே உள்ள வெப்பநிலையில்கூட வளரக்கூடியவை" என இன்னும் விதவிதமான தகவல்களுடன் அதன் படம் உலா வருகிறது. உண்மையில் நீல நிறத்தில் வாழைப்பழம் உள்ளதா?

நெய் மன்னன் வாழை
நெய் மன்னன் வாழை

திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் உமாவிடம் பேசினோம். ``ஜாவா நீலநிற வாழை என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வந்துகொண்டிருக்கும் புகைப்படத்தையும் அது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவல்களை நானும் பார்த்தேன். இந்தளவுக்கு நீல நிறத்தில் உள்ள வாழை ரகம் உலகத்தில் எங்குமே கிடையாது. இது பொய்யான, ஏமாற்று தகவல். அதன் தோலை உரித்தால், உள்ளே இருக்கும் சதை நில நிறத்தில் இருப்பதாகச் சொல்வதும் கட்டுக்கதை.

எந்த ஒரு வாழை ரகமாக இருந்தாலும், அப்பழத்தின் சதை வெளிர் மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். தமிழ்நாட்டில் `நெய் மன்னன்' என்றும் இலங்கையில் அலுக்கேல் (alukhel) என்றும் அழைக்கப்படக்கூடிய ஒரு வாழை ரகம் உள்ளது. இது, வழக்கமான வாழை ரகங்களில் இருந்து சற்று வித்தியாசமான நிறத்தில் இருக்கும். பச்சை நிறத் தோலில், நீல நிறத்தில் லேசாக முலாம் பூசப்பட்டது போல் இருக்கும். ஆனால் அதுவும் கூட, சமூக வலைதளங்களில் ஜாவா நீல நிற வாழை என்ற பெயரில் பொய்யாக வலம் வந்து கொண்டிருக்கும் வாழைப்பழத்தின் தோல்போல் இருக்காது.

வாழை
வாழை

நெய் மன்னன் வாழைப்பழத்தின் சதைப் பகுதியும் நீல நிறத்தில் இருக்காது. வெளிர் மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். இது சமையலுக்கு ஏற்ற ரகம். இந்த ரகம் இந்தியா, இலங்கை, மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிகவும் குறைந்த அளவிலேயே விளைவிக்கப்படுகிறது. ஜாவா நீல நிறத்தில் வாழைப்பழம் இருப்பதாகச் சொல்லப்படுவது பொய்யான தகவல்’’ என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு