Published:Updated:

பொங்கல் கரும்பு கொள்முதல்... அறிவிச்சது 33 ரூபாய்... வாங்குறது 17 ரூபாய்!

பொங்கல் கரும்பு
News
பொங்கல் கரும்பு

முதல்வரின் அறிவிப்பு விவசாயிகளை நிம்மதி அடைய செய்தது. அவர் சொன்னது போலவே பொங்கல் கரும்பு கொள்முதல் தற்போது நேர்மையாக நடைபெறுகிறதா? விவசாயிகளுக்கு ஒரு கரும்புக்கு 33 ரூபாய் கிடைக்கிறதா? விவசாயிகளிடம் பேசினோம்.

பொங்கல் கரும்பு கொள்முதல்... அறிவிச்சது 33 ரூபாய்... வாங்குறது 17 ரூபாய்!

முதல்வரின் அறிவிப்பு விவசாயிகளை நிம்மதி அடைய செய்தது. அவர் சொன்னது போலவே பொங்கல் கரும்பு கொள்முதல் தற்போது நேர்மையாக நடைபெறுகிறதா? விவசாயிகளுக்கு ஒரு கரும்புக்கு 33 ரூபாய் கிடைக்கிறதா? விவசாயிகளிடம் பேசினோம்.

Published:Updated:
பொங்கல் கரும்பு
News
பொங்கல் கரும்பு

தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக விவசாயிகளிடமிருந்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் நேரடியாகக் கரும்பு கொள்முதல் செய்வார்கள் எனவும், ஒரு கரும்புக்கு கொள்முதல் விலையாக 33 ரூபாய் வழங்கப்படும் எனவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

கடந்த ஆண்டு பொங்கல் கரும்பு கொள்முதலில் நடைபெற்ற முறைகேடுகள் விவசாயிகளைப் பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியது. கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும்... டெல்டா மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளிலும் பொங்கல் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தார்கள்.

ஒரு கரும்புக்கு 33 ரூபாய் கொள்முதல் விலை வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்த போதிலும்கூட, விவசாயிகளிடமிருந்து கூட்டுறவுத்துறை நேரடியாகக் கரும்பு கொள்முதல் செய்யாமல் இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்ததால், ஒரு கரும்புக்கு 13 - 15 ரூபாய்தான் விலை கிடைத்தது.

இந்நிலையில்தான் இந்த ஆண்டு எந்தவித முறைகேடுகளும் இல்லாமல், கரும்பு கொள்முதல் நேர்மையாக நடைபெறும் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பு விவசாயிகளை நிம்மதி அடையச் செய்தது. அவர் சொன்னது போலவே பொங்கல் கரும்பு கொள்முதல் தற்போது நேர்மையாக நடைபெறுகிறதா? விவசாயிகளுக்கு 33 ரூபாய் விலை கிடைக்கிறதா? என விவசாயிகளிடம் பேசினோம்.

கரும்பு அறுவடை
கரும்பு அறுவடை

தஞ்சை மாவட்டம் நடுப்படுகையைச் சேர்ந்த கரும்பு விவசாயி ஒருவர், தன்னுடைய பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்ற வேண்டுகோளோடு நம்மிடம் பேசினார். ``நான் ஒரு ஏக்கர்ல பொங்கல் கரும்பு சாகுபடி செஞ்சிருக்கேன். இப்பதான் அறுவடை பண்ணி, கூட்டுறவுறத்துறை அதிகாரிகள் மூலம் அனுப்பிக்கிட்டு இருக்கேன். என்னோட பெயரை வெளிட்டா, மீதி கரும்பை கொள்முதல் செய்யாம போட்டுடு வாங்க. அறுவடை செஞ்சு அனுப்பின கரும்புக்கும் பணம் வந்து சேராது’’ எனத் தன்னுடைய இக்கட்டான சூழ்நிலையைத் தெரிவித்தவர், ``இந்தத் தடவை, இடைத்தரகர்களோ, வியாபாரிகளோ எங்களை அணுகல. கூட்டுறவுத்துறை அதிகாரிகளே நேரடியா வந்து எங்களை அணுகினாங்க.

ஆனாலும்கூட இந்த தடவையும் தமிழக அரசு அறிவிச்ச விலை எங்களுக்கு முழுமையா கிடைக்கல. என்னை சந்திச்ச கூட்டுறவுத்துறை அதிகாரிகள், ஒரு கரும்புக்கு 17 ரூபாய் விலை கொடுப்போம். உங்களுக்கு விருப்பம் இருந்தா கொடுங்க... இல்லைனா வேண்டாம்னு சொல்லிட்டாங்க. ஆனா, எனக்கு வேற வழியில்லாததுனால, அந்த விலைக்கே என்னோட கரும்பை விற்பனை செய்ய ஒப்புக்கிட்டேன். இதுக்கு நான் சம்மதிக்காமல் இருந்து, வெளியில வியாபாரிகள்கிட்ட விற்பனை செய்யலாம்னு நினைச்சா அது நடக்காத காரியம். கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஒரு கரும்புக்கு 17 ரூபாய்தான் விலை கொடுக்குறாங்க என்ற விஷயம் வியாபாரிகளுக்கும் இடைத்தரர்களுக்கும் நல்லாவே தெரியும். இன்னும் சொல்லப்போனா, கூட்டுறவுத்துறை அதிகாரிகளோடு அவங்க மறைமுகமா கூட்டு சேர்ந்திருக்காங்க. அவங்க இன்னும் குறைவான விலைதான் கொடுப்பாங்க. இந்த முறைகேட்டால, என்னை மாதிரி நிறைய விவசாயிங்க பாதிக்கப்பட்டுருக்காங்க. எனக்கு கூட பரவாயில்லை... ஒரு கரும்புக்கு 17 ரூபாயாவது கிடைச்சது. ஆனா, எங்க பகுதியில சில விவசாயிகளுக்கு ஒரு கரும்புக்கு 15 ரூபாய்தான் கொடுத்திருக்காங்க.

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன்
கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன்

`தமிழக அரசு ஒரு கரும்புக்கு 33 ரூபாய் விலை வழங்கப்படும்னு அறிவிச்சிருக்கேனு கூட்டுறவுத்துறை அதிகாரிகள்கிட்ட நான் கேட்டதுக்கு...போக்குவரத்துக்கு நிறைய செலவாகுறதுனால, முழு விலை கொடுக்க முடியலைனு சொல்றாங்க. இது அப்பட்டமான பொய். ஒரு கரும்புக்கு அதிகபட்சம் 2 ரூபாய்தான் போக்குவரத்துக்கு செலவாகும். கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஒரு கரும்புக்கு அதிகபட்சம் 8 ரூபாய் கமிஷன் எடுத்துக்கிட்டு, குறைந்தபட்சம் 25 ரூபாயாவது கொடுப்பாங்கனு ரொம்ப எதிர்பார்ப்போடு இருந்தோம். ஆனா 15 - 17 ரூபாய்தான் விலை கொடுத்துக்கிட்டு இருக்காங்க. இது மிகப்பெரிய அநியாயம். வெட்டுக்கூலி, ஏற்றுக்கூலி போக, ஒரு கரும்புக்கு 10 ரூபாய்கூட எங்களுக்கு விலை கிடைக்கல’’ என வேதனையோடு தெரிவித்தார். விவசாயிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பனிடம் விளக்கம் பெற முயன்று வருகிறோம்.

விவசாயிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.

``தஞ்சாவூர்ல என்ன நடந்துகிட்டு இருக்குங்கறது, சென்னையில இருக்குற எனக்கு தெரியாது. எந்த தவறுமே நடக்கலைனும் சொல்லிட முடியாது... இது சம்பந்தமா தஞ்சாவூர் கலெக்டர்கிட்ட பேசுறேன்... நீங்களும் பேசுங்க. விவசாயிகளுக்கு நல்லது செய்யணும்ங்கற நல்லெண்ணத்துல, தமிழக அரசு ஒரு கரும்புக்கு 33 ரூபாய் கொள்முதல் விலை அறிவிச்சிருக்கு" என்றார்.