Published:Updated:

நல்ல வருமானம் தரும் பொங்கல் மஞ்சள்! - 25 சென்ட்... ரூ.42,000 லாபம்!

மஞ்சள் வயலில் தங்கப்பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
மஞ்சள் வயலில் தங்கப்பாண்டி

மகசூல்

நல்ல வருமானம் தரும் பொங்கல் மஞ்சள்! - 25 சென்ட்... ரூ.42,000 லாபம்!

மகசூல்

Published:Updated:
மஞ்சள் வயலில் தங்கப்பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
மஞ்சள் வயலில் தங்கப்பாண்டி

பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு, பனங்கிழங்கு, மஞ்சள் குலை, காய்கறிகள் ஆகியவைதான் நினைவுக்கு வரும். சூரிய வழிபாட்டில் வணங்குதலுக்குரிய மங்கலப் பொருள்களில் இலைகளுடன்கூடிய மஞ்சள் கொத்து முக்கியமானது. 20 ஆண்டு களாக மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த தங்கப்பாண்டி.

தமிழகத்தின் பல பகுதிகளில் மஞ்சள் சாகுபடி நடந்தாலும், தூத்துக்குடி மாவட்டத்தில் செம்மண் நிறைந்த சாயர்புரம், செபத்தையாபுரம் தங்கம்மாள்புரம், சேர்வைக்காரன்மடம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் மஞ்சள், நல்ல நிறத்துடன் இருக்கும். அதற்குக் காரணம் செம்மண்தான். தூத்துக் குடி மாவட்டம் சாயர்புரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது சேர்வைக்காரன்மடம் கிராமம். இங்குதான் உள்ளது தங்கப் பாண்டியின் மஞ்சள் தோட்டம். சாரல் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன மஞ்சள் இலைகள். தோட்டத்தில் தண்ணீர்ப் பாய்ச்சிக் கொண்டிருந்த தங்கப்பாண்டியைச் சந்தித்தோம். உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார்.

மஞ்சள் குலைகளோட தூர்ல இருக்க வேர்களைச் செதுக்கி அனுப்பாம, மஞ்சளோட செம்மண் ஒட்டியிருக்கிற மாதிரிதான் விற்பனைக்கு அனுப்புணும்.

“விவசாயம்தான் என்னோட பூர்வீகத் தொழில். 9-ம் வகுப்பு வரைதான் படிச்சேன். அதுக்கப்புறம் அப்பாவுக்கு உதவியா விவசாய வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சேன். நெல், வாழை, மஞ்சள்தான் முக்கியப் பயிர்கள். இப்போ வாழையும் மஞ்சளும்தான் சாகுபடி செஞ்சிட்டு இருக்கேன். இந்தப் பகுதி முழுவதுமே செம்மண் பூமி. ஒரு மழை பெய்ஞ்சாக்கூட மண்வாசனை காத்துல கலந்து வீசும். இதோடு மஞ்சள் குலையின் வாசமும் சேர்ந்து கூடுதல் வாசனையை உருவாக்கும். எங்க சுத்துவட்டாரத்துல 1,000 ஏக்கர்ல நடந்துவந்த மஞ்சள் சாகுபடி, இப்போ 300 ஏக்கராகக் குறைஞ்சிடுச்சு. உவர்த்தன்மை இல்லாத இந்தச் செம்மண்ணுல விளையுற மஞ்சள், மினுமினுப்பா நல்ல நிறத்தோடவும் மணமாவும் இருக்கும். ரெண்டு ஏக்கர்ல நாடன், ஏந்தன் ரக வாழைச் சாகுபடி செய்துட்டு வர்றேன்.

25 சென்ட்ல மஞ்சள் குலைகள் அறுவடை நிலையில இருக்கு. கறி (உணவு) மஞ்சளா இல்லாம, பொங்கல் பண்டிகைக்காக மட்டும் சாகுபடி செய்யுறதுனால குறைவான பரப்பளவுலதான் மஞ்சளைச் சாகுபடி செய்றேன். அதிகபட்சமா ஒரு ஏக்கர் வரை தான் ஒவ்வொரு விவசாயியும் சாகுபடி செய்வாங்க.

மஞ்சள் வயல்
மஞ்சள் வயல்

பொங்கல் பண்டிகை நாள்ல, புதுப்பானையில மஞ்சள்கிழங்குக் குலையைச் சுற்றிக்கட்டி, அடுப்புல வெச்சுப் பொங்கல் வெக்குறது வழக்கம். அந்த மஞ்சளைப் பத்திரப்படுத்தி மறுநாள் காலையில பெரியவங்க, அந்த மஞ்சளைக் கீறி குடும்பத்துல இருக்கவங்க நெத்தியில பூசி ஆசி வழங்குவாங்க. இது ‘மஞ்சள் கீறுதல்’னு சொல்ற மங்கலச் சடங்கா பல பகுதிகள்ல கடைப் பிடிக்கப்பட்டு வருது” என்றவர் இரண்டு மஞ்சள் குலைகளைப் பறித்துக் காட்டினார்.

தொடர்ந்து வருமானம் குறித்துப் பேசியவர், ‘‘செம்மண்ல விளைஞ்ச எங்கப் பகுதி மஞ்சள் தூத்துக்குடி மட்டுமல்லாம திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட் டங்கள்லயும் டெல்லி, மும்பை, கர்நாடகா மாநிலங்கள்ல தமிழர்கள் அதிகம் வசிக்குற பகுதிகளுக்கும் அனுப்புறோம். புதுசா கல்யாணம் முடிச்சவங்களுக்குத் தலைப் பொங்கல் சீர் வரிசையில முதல்ல வாங்குற பொருள் மஞ்சள் குலை தான். சீர் வரிசை கொடுக்குறவங்க நேரடியா தோட்டத்துக்கே வந்திடுவாங்க. தூர்ப்பகுதியில அதிக மஞ்சள் பிடிச்சிருக்குற குலைகளைத் தேர்ந்தெடுத்து வாங்கிட்டுப் போவாங்க.

மஞ்சள் கொத்து
மஞ்சள் கொத்து

மஞ்சள் குலைகளோட தூர்ல இருக்க வேர்களைச் செதுக்கி அனுப்பாம, மஞ்சளோட செம்மண் ஒட்டியிருக்கிற மாதிரி தான் விற்பனைக்கு அனுப்புறோம். அதனால, 3 நாள்கள் வரைக்கும் குலை வாடாம இருக்கும். போன வருஷமும் இதே 25 சென்டுல தான் மஞ்சள் சாகுபடி செஞ்சேன். 8,000 குலைகள் வரை வளர்ந்துச்சு. அதுல, வளர்ச்சி யில்லாத குலைகள், சேதாரமான குலைகள்னு 500 குலைகள் வரை கழிஞ்சிடுச்சு. மஞ்சள் குலைகள்ல கிழங்கோட வளர்ச்சி சீரா இருக்காது. அதனால, ஒரு குலை குறைஞ்ச பட்சம் 10 ரூபாய்ல இருந்து அதிகபட்சம் 15 ரூபாய் வரைக்கும் விலை போச்சு. 75,000 ரூபாய் வருமானம் கிடைச்சுது.

நல்ல வருமானம் தரும் பொங்கல் மஞ்சள்! - 25 சென்ட்... ரூ.42,000 லாபம்!

இதுல உழவு, தொழுவுரம், விதைக்கிழங்கு, நடவு, இடுபொருள், பராமரிப்பு, அறுவடைனு மொத்தம் 32,700 ரூபாய் செலவு போக, 42,300 லாபமாக் கிடைச்சுது. இதே மஞ்சள் குலைகளை வியாபாரிகள்கிட்ட விற்பனை செய்யாம நேரடியா விற்பனை செஞ்சா ரெண்டு மடங்கு லாபம் கிடைக்கும். இதுல, விதைக்காக ரெண்டு மூணு சென்ட் நிலத்துல இருக்க மஞ்சளைக் கூடுதலா ரெண்டு மாசம் வரை வளர்த்து விதைக்கிழங்கைச் சேகரிச்சும் வெச்சுக்கலாம். நாமளே சேகரிக்குற விதைக் கிழங்குல அதிக சேதாரம் இருக்காது. இதனால, ஒவ்வொரு வருஷமும் விதைக்காகத் தனியா செலவு செய்ய வேண்டிய அவசியமில்ல’’ என்றவர் நிறைவாக, ‘‘என்னைப் பொறுத்த வரைக்கும் குறைவான பராமரிப்புல நிறைவான வருமானம் தரும் பயிர்கள்ல மஞ்சளும் ஒண்ணு” என்றார்.

தொடர்புக்கு, தங்கப்பாண்டி,

செல்போன்: 94428 35971.

மஞ்சள் வயல்
மஞ்சள் வயல்

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

25 சென்ட் நிலத்தில் மஞ்சள் சாகுபடி செய்வது குறித்துத் தங்கப் பாண்டிகூறிய தகவல்கள் பாடமாக இங்கே...

மஞ்சள் சாகுபடிக்குக் களி மண்ணைத் தவிர மற்ற எல்லா வகை மண்ணிலும் விளையும். வண்டல் மண், செம்மண்ணில் கூடுதல் மகசூல் கிடைக்கும். கறி மஞ்சளுக்காக அறுவடை செய்வதாக இருந்தால் வைகாசிப் பட்டம் ஏற்றது. பொங்கல் பண்டிகையின்போது அறுவடை செய்வதாக இருந்தால் ஆடிப்பட்டம் ஏற்றது. 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். இரண்டாவது உழவின்போது, 2 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி (25 சென்ட்) பரவலாகத் தூவிவிட்டு உழவு செய்ய வேண்டும்.

பிறகு, பாத்தி எடுக்க வேண்டும். நடவு செய்வதற்கு முன்னர், விதை மஞ்சளுடன் உமி, மணல் கலந்து தண்ணீர் தெளித்து ஒருநாள் முழுவதும் நிழலான இடத்தில் வைத்திருக்க வேண்டும். இதனால், விதை மஞ்சளில் வேர்கள் வெளிப்படும். நடவுக்கு முன்னர் பஞ்சகவ்யா, டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றில் விதை நேர்த்தி செய்து நடவு செய்வது நல்லது. இதனால், மஞ்சளை அதிகம் தாக்கும் வேர் அழுகல் நோயிலிருந்து பாதுகாக்கலாம்.

செடிக்குச் செடி முக்கல் அடி மற்றும் வரிசைக்கு வரிசை முக்கால் அடி என்ற இடைவெளியில் மஞ்சள் விதையின் முளைப்புப் பகுதி மேல்நோக்கி இருக்கும்படி நடவு செய்து தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும். 20 நாள்களுக்குப் பிறகு, மஞ்சள் இலைகள் வந்துவிடும். 30 முதல் 35-ம் நாளில் களை எடுக்க வேண்டும். பிறகு, களைகள் தென்படுவதைப் பொறுத்து மாதம் ஒருமுறைகூட களை எடுக்கலாம். மாதம் ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து தெளிக்கலாம். இலைப்புள்ளி நோய், பச்சைப்புழு, வாடல், வேர் அழுகல் ஆகியவைதான் மஞ்சளைத் தாக்கும் முக்கிய நோய்கள்.

செம்மண்ணில் சாகுபடி செய்யும்போது இலைப்புள்ளி நோயைத் தவிர, வேறெதுவும் அவ்வளவாகத் தாக்குவதில்லை. 45-ம் நாளிலிருந்து 20 நாள்களுக்கு ஒருமுறை வேப்பங்கொட்டைக் கரைசலைத் (10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி) தெளிக்கலாம். வேம்பு அஸ்திரம், இயற்கை அங்காடிகளில் கிடைக்கும் நீம் பூச்சிவிரட்டியையும் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். மழைக்காலங்களில் பாத்திகளில் அதிகம் தண்ணீர்த் தேங்காமல் அவ்வப்போது வடித்து வந்தாலே வேர் அழுகலை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும்.

பொங்கல் பண்டிகைக்காக 6-ம் மாதத்தில் அறுவடை செய்யலாம். அறுவடைக்கு முன்பாகத் தண்ணீர்ப் பாய்ச்சிவிட்டு, மண்வெட்டியால் வெட்டிக், குலைகளை அறுவடை செய்யலாம். ஆனால், கறி மஞ்சளுக்கான அறுவடையை 10-ம் மாதத்தில்தான் செய்ய வேண்டும். 10-ம் மாதத்தில், தாள்களில் உள்ள பச்சையம் குறைந்து வெளுத்து, நெல் கதிர்களைப்போலத் தலைசாய்த்து மடியத் தொடங்கும். அந்த நேரத்தில், மஞ்சள் கிழங்குகளைத் தோண்டி எடுக்கலாம். தண்டுகளை அகற்றிய பிறகு, கிழங்குகளைத் தோண்டுவது நல்லது. கிழங்குகளைக் குவியலாக்கி, வேக வைத்து, இயந்திரத்தின் மூலம் பாலீஷ் செய்து மஞ்சளைச் சேகரிக்கிறார்கள். பக்குவமாகச் சேமித்தால், எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் இருப்பு வைத்து விற்பனை செய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism