Published:Updated:

`எங்க ஊரை நகராட்சியாக தரம் உயர்த்தாதீங்க!' - அரசின் முடிவை எதிர்க்கும் பொன்னேரி மக்கள்; ஏன்?

நகராட்சியாகத் தரம் உயர்த்த மக்கள் எதிர்ப்பு!
நகராட்சியாகத் தரம் உயர்த்த மக்கள் எதிர்ப்பு!

`பொன்னேரியுடன் மீஞ்சூரின் சில கிராமங்களை இணைத்து நகராட்சியாகத் தரம் உயர்த்தினால் 100 வேலைத் திட்டம் இல்லாமல் விவசாய தொழில் முற்றிலுமாக முடங்கி மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும்' - பொன்னேரி மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 24-ம் தேதி நடைபெற்ற நகராட்சி நிர்வாக துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி மற்றும் திருநின்றவூர் பேரூராட்சிகள் நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அரசு அதிகாரிகள் பொன்னேரி மற்றும் திருநின்றவூர் பேரூராட்சிகளை நகராட்சிகளாகத் தரம் உயர்த்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் படி, பொன்னேரி தேர்வு நிலை பேரூராட்சியுடன் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடூர் மற்றும் தடபெரும்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாகத் தரம் உயர்த்த தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பகுதி பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் ஆகியோருடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

பொன்னேரியில் தனியார் மண்டபம் ஒன்றில் ஆட்சியர் தலைமையில் நேற்று நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கண்ணன், பொன்னேரி வருவாய்க் கோட்டாட்சியர் செல்வம் மற்றும் துறை சார் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

கருத்துக் கேட்புக் கூட்டம்
கருத்துக் கேட்புக் கூட்டம்
`18 கிராமத்தில் விவசாயம் அழிந்துபோகும்!' - 6 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்

பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதி மக்களிடம் அரசின் இந்த கருத்துக் கேட்புக் கூட்டம் தொடர்பாக அரசு அதிகாரிகள் முறையாக அறிவிக்காததால் நலச் சங்க நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சியினர் குறைவான அளவிலேயே கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக அரசின் இந்த திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் முன்மொழிந்து அங்கிருந்தவர்களிடம் கருத்துகளைக் கேட்டார். அப்போது குறுக்கிட்டு பேசிய பொன்னேரி பொதுமக்கள், ``பொன்னேரி தற்போது தேர்வு நிலை பேரூராட்சி என்ற அந்தஸ்துடன் இருக்கிறது. ஆனால், பேர் மட்டும்தான் பேரூராட்சி என்று இருக்கிறது. மொத்தம் 18 வார்டுகளை கொண்ட இந்த பேரூராட்சியில் 40,000-க்கும் குறைவானவர்களே வசித்து வரும் நிலையில், இங்கு பாதாளச் சாக்கடை திட்டம், சாலை வசதி, குடிநீர் என அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட எதுவும் இதுவரையிலும் செய்து தரப்படாமலே இருந்து வருகிறது.

பேரூராட்சிக்கே தகுதியில்லாத பொன்னேரியை நகராட்சியாகத் தரம் உயர்த்தினால் மக்கள் வரி செலுத்தும் தொகை பல மடங்கு அதிகரிக்கும். முதலில் பேரூராட்சி தரத்திற்கு பொன்னேரியை மேம்படுத்தி விட்டு, அதன் பின்னர் நகராட்சியாகத் தரம் உயர்த்துவது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும். தற்போது பொன்னேரியை தரம் உயர்த்துவதில் எந்த பயனும் இல்லை" என்று ஆட்சியரிடம் நேரடியாகத் தெரிவித்து விட்டு கூட்டத்திலிருந்து வெளியேறினார்கள்.

அதைத் தொடர்ந்து ஆட்சியரிடம் கருத்து தெரிவித்த பொன்னேரி விவசாயிகள், ``விவசாயமே பிரதான தொழிலாக இருக்கும் பொன்னேரியில் பெரும்பாலான மக்கள் அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தை நம்பியே வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அப்படியிருக்கும் போது, அரசு பொன்னேரி மற்றும் மீஞ்சூரின் சில ஊராட்சி கிராமங்களை இணைத்து நகராட்சியாகத் தரம் உயர்த்தினால் விவசாய தொழில் முற்றிலுமாக அழிந்து மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். அதே போல், அரசின் பசுமை வீடுகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நகராட்சியாக மாறிவிட்டால் மக்களுக்குக் கிடைக்காமல் போய்விடும். மக்கள் பொருளாதார ரீதியாக மேம்பட்டிருந்தால் அரசின் இந்த நடவடிக்கைக்கு நாங்கள் நிச்சயம் ஒத்துழைப்பு நல்குவோம். ஆனால், இங்கு பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ்தான் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனவே, நகராட்சியாகத் தரம் உயர்த்தும் இந்த திட்டத்தை அரசு கை விடவேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.

கூட்டத்தில் பொதுமக்கள்
கூட்டத்தில் பொதுமக்கள்
``பருவமழைக்கு முன்பாவது தடுப்பணையை சீரமைத்து கொடுங்கள்!" - கொதிக்கும் விவசாயிகள்

அதே போல், மீஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட தடபெரும்பாக்கம் மற்றும் கொடூர் கிராம மக்கள், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தங்கள் கிராமங்களை பொன்னேரி பேரூராட்சியுடன் இணைத்து நகராட்சியாகத் தரம் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதனால் கருத்துக்கேட்பு கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.

கூட்டத்தில் ஒரு சிலரைத் தவிர்த்து அனைவருமே திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கூட்டத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், ``பொன்னேரி பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயர்த்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் கருத்துக்கள் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். இன்னும் 2 கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு பொன்னேரியை நகராட்சியாகத் தரம் உயர்த்துவது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு