Published:Updated:

ஏக்கருக்கு 40 மூட்டை கதிரி 1812 நிலக்கடலை குறைகளும் நிறைகளும்...

கதிரி 1812 நிலக்கடலை
பிரீமியம் ஸ்டோரி
கதிரி 1812 நிலக்கடலை

சர்ச்சை

ஏக்கருக்கு 40 மூட்டை கதிரி 1812 நிலக்கடலை குறைகளும் நிறைகளும்...

சர்ச்சை

Published:Updated:
கதிரி 1812 நிலக்கடலை
பிரீமியம் ஸ்டோரி
கதிரி 1812 நிலக்கடலை

கதிரி லேபாக்‌ஷி 1812 நிலக்கடலை ரகத்தில் அதிக எண்ணெய் சத்து இருக்கிறது என்கிறார்கள் தமிழக விவசாயிகள்.

கதிரி லேபாக்‌ஷி 1812 என்ற புதிய ரக நிலக் கடலையைத் தமிழக விவசாயிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். ஆந்திர மாநிலம், கதிரி நகரிலிருக்கும் ஆச்சார்யா என்.ஜி.ரங்கா விவசாயப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் வேளாண் விஞ்ஞானி முனைவர் கே.எஸ்.எஸ்.நாயக் என்பவர் இந்த ரகத்தை உருவாக்கி, 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தினார். இவர், வேளாண்மைத் துறையில் 23 ஆண்டுகள் அனுபவமுடையவர்.

கதிரி 1812 நிலக்கடலை
கதிரி 1812 நிலக்கடலை

கதிரி லேபாக்‌ஷி 1812 ரக நிலக்கடலையில் அப்படி என்ன சிறப்பம்சம் இருக்கிறது? என்பது பற்றித் தமிழகத்தில் அந்த ரக நிலக்கடலை விதை விற்பனை செய்பவர்களில் ஒருவரான சேகர் என்பவரிடம் பேசினோம்.

‘‘கதிரி ரக நிலக்கடலை அதிகநோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. அதிக மகசூல் தரக்கூடியது. எந்தவிதமான பூச்சிக்கொல்லியும் உபயோகப்படுத்த தேவையில்லை. இலைப் புள்ளி நோய் தாக்கவே தாக்காது. மொட்டு அழுகல் நோயும் வராது. இந்த நிலக்கடலையில் 50 சதவிகிதம் நல்லத்தரமான எண்ணெய் கிடைக்கும். நிறைவுற்ற கொழுப்பு அமிலம் 20 சதவிகிதம் குறைவாக இருப்பதால், இதயநோய் வராது. மேலும், உடல் நலத்துக்குத் தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகமிருக்கிறது’’ என்றவர், நடவு முதல் அறுவடை வரையிலான தொழில்நுட்பங்களையும் விளக்கினார்.

கதிரி 1812 நிலக்கடலை
கதிரி 1812 நிலக்கடலை

‘‘விதைக்கும்போது, வரிசைக்கு வரிசை 1 அடியும், செடிக்குச் செடி 3/4 அடி அல்லது 1/2 அடி அளவுக்கு இடைவெளி விட்டு விதைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 45 முதல் 50 கிலோ விதைகள் தேவைப்படும். நடவு செய்த 40-ம் நாளிலிருந்து செடியில் பூ பூக்க ஆரம்பித்து, 55-ம் நாள்வரை பூ பூக்கும். 60-ம் நாளிலிருந்து வேர் விட ஆரம்பிக்கும். வேர்கள் விட ஆரம்பிக்கும்போது, உரமிட வேண்டும்.

கதிரி 1812 நிலக்கடலை
கதிரி 1812 நிலக்கடலை

காய் பிடிப்புத்திறன் அதிகரிக்கவும், நிலத்தில் செடிகள் படர்வதற்கு ஏதுவாகவும் நீர் பாய்ச்சிய மறுநாள் 5 அடி உயரமுள்ள இரும்பு டிரம்மில் (200 லிட்டர் பேரல்) ஒரு மூட்டை மணலை நிரப்பி அதைக் கொண்டு செடிகளின் மேல் மெதுவாக உருட்ட வேண்டும். ஒரு செடியில் 30-லிருந்து 45 கிளைகள்வரை வளரும். ஒவ்வொரு கிளைக்கும் 1 முதல் 3 காய்கள் உருவாகும். அதன் அடிப்படையில், ஒரு செடிக்கு 50 முதல் 150 காய்கள் உருவாக வாய்ப்புள்ளன. ஒரு ஏக்கருக்குச் சராசரியாக 40 மூட்டை முதல் 60 மூட்டை வரை மகசூல் எடுக்க முடியும். வறட்சிக் காலங்களில் குறைந்தது 25 முதல் 30 மூட்டை அளவுக்கு மகசூல் எடுக்கலாம்.

கதிரி 1812 நிலக்கடலை
கதிரி 1812 நிலக்கடலை

அறுவடை செய்த பிறகு, ஒரு ஏக்கருக்கு 2 முதல் 3 டிராக்டர் அளவுக்கு நிலக்கடலை கொடிகள் கிடைக்கும். இந்தக் கொடிகளைக் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன் படுத்திக்கொள்ளலாம். அறுவடை செய்த நாள் வரையிலும் இதன் இலைக் கொட்டாமல் பச்சையாக இருப்பதால் கால்நடைகளுக்கு நல்ல தீவனமாகவும் பயன்படுகிறது. மற்ற ரக நிலக்கடலை செடிகளை 115 நாள்களில் பிடுங்காமல் விட்டால் முளைப்பு விடும். ஆனால், கதிரி லேபாக்‌ஷி 1812 நிலக்கடலை செடியை 130 நாள்கள் கழித்துக்கூட பிடுங்கலாம். முளைப்பு விடாது.

சுபாஷ்
சுபாஷ்

அதுமட்டுமன்றி, இந்த ரகத்தில் நான்கு விதமான நன்மைகளும் அடங்கியிருக் கின்றன. சரியாக மழை பெய்யவில்லை என்றாலும், மற்ற ரகங்களைவிட 15-லிருந்து 20 மூட்டைகள் கிடைக்கும். பூச்சிக்கொல்லி வாங்க, மருந்துக்கடை பக்கம் போக வேண்டிய அவசியமே இல்லை. இதன் பருப்பு ரோஸ் நிறத்தில் சிறிதாகவும், நுனி கூர்மையாகவும் இருக்கும். அனைத்து பட்டத்திலும், அனைத்து நிலங்களிலும் விதைக்கலாம். பருப்பாக விற்பனை செய்வதைவிட எண்ணெயாக ஆட்டி விற்றால் நல்ல லாபம் எடுக்கலாம். அதிகமான வெப்பம், அதிகமான குளிர் காலங்களில் மட்டும் மகசூல் கொஞ்சம் குறையும்.

கதிரி 1812 நிலக்கடலை
கதிரி 1812 நிலக்கடலை

இந்திய அளவில் குஜராத் ஜி.ஜே-32 என்ற ரகம்தான் அதிக மகசூல் தரும் ரகமாக இருக்கிறது. அந்த ரகம் 35 மூட்டைகள் மகசூல் தரும். கதிரி ரகம் அதைவிட இரு மடங்கு லாபத்தைத் தருகிறது. ஒரு ஏக்கருக்கு உரிக்காத கடலை 90 கிலோ தேவைப்படும். ஒரு கிலோ 100 ரூபாய் என 9,000 ரூபாய்க்கு உரிக்காத கடலையைத் தருகிறோம்’’ என்றார்.

இந்த நிலையில், கதிரி லேபாக்‌ஷி 1812 என்ற புதிய ரக நிலக்கடலையில் கசப்புத் தன்மை அதிகம் இருப்பதாகவும், விலையைக் கூட்டியிருப்பதாகவும் தமிழக விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள். இது தொடர்பாக, நம்மிடம் பேசிய தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில இளைஞரணித் தலைவர் சுபாஷ், ‘‘கதிரி ரகத்தில் கசப்புத் தன்மை அதிகம் இருக்கிறது. வெறும் பருப்பாகச் சாப்பிடவும், சட்னிக்கும் பயன் படுத்த முடியவில்லை. வயலில் ஒரு செடியைப் பிடுங்கி ஆசையாகச் சாப்பிடலாம் என்று நினைத்தாலும், ஒரு பருப்பைக்கூட முழுமை யாக மென்று சாப்பிட முடியாது.

எண்ணெய் நன்றாக இருக்கிறது. மற்ற ரகங்களைச் செக்கில் ஆட்டும்போது 4 கிலோ எண்ணெய்தான் கிடைக்கும். இந்த ரகம் 5 கிலோ கிடைக்கிறது. எண்ணெய்யாகச் சமையலுக்குப் பயன்படுத்தினால் நன்றாக இருக்கிறது. நல்ல விளைச்சல் தருகிறது. அடர்க்கொத்தாகக் காய்க்கிறது. தற்போது, விதையில் மாற்றம் செய்திருக்கிறார்கள். அறிமுகப்படுத்தியதைப்போல இல்லை. ஆரம்பத்தில் ஒரு ஏக்கருக்கு 32 கிலோ விதை போதுமானது என்றார்கள். தற்போது, 45 முதல் 50 கிலோ வாங்கினால்தான் ஒரு ஏக்கருக்கு விதைக்க முடியும் என்று சொல் கிறார்கள். விலையும் அதிகமாகியிருக்கிறது. எண்ணெய்யாக ஆட்டி விற்பனை செய்தால் மட்டுமே விவசாயி லாபம் எடுக்க முடியும். பருப்பாக விற்பனை செய்தால் விதையை வாங்கிய அளவுக்குக்கூட லாபம் எடுக்க முடியாது’’ என்றார்.

சேகர்
சேகர்


இந்தக் குற்றச்சாட்டு குறித்து விற்பனையாளர் சேகரிடம் கேட்டோம். ‘‘விவசாயிகளின் லாபநோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட ரகம் இது. யாரும் பயப்படத் தேவையில்லை. எள்ளும் கசப்புத்தன்மைதான். ஆனால், அதில் கிடைக்கின்ற எண்ணெய் உடலுக்குக் கெடுதல் செய்வதில்லை. அதைபோலத்தான் கதிரி ரகம். சாப்பிடத் தகுந்ததல்ல என்று சொல்லிவிட முடியாது. உப்புபோட்டு அவித்துச் சாப்பிட்டால் நன்றாகத்தான் இருக்கிறது. 50 சதவிகிதம் எண்ணெய்த் தன்மை கிடைப்பதால் விவசாயிகளுக்கு லாபமே. ரகத்தில் புதிய மாற்றம் செய்திருக் கிறார்கள். அதனால்தான் ஒரு ஏக்கருக்குக் கூடுதலாகப் பத்து கிலோ விதையை அதிகம் நடவு செய்ய வேண்டியுள்ளது’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism