Published:Updated:

``காவிரியில் சட்டவிரோதமாக வருவாயை ஈட்டவே இந்த திட்டம்!" - கொதிக்கும் பி.ஆர்.பாண்டியன்

ஆய்வு செய்யும் பி.ஆர்.பாண்டியன்
ஆய்வு செய்யும் பி.ஆர்.பாண்டியன்

நாமக்கல் மாவட்டம், சோழசிராமணி பகுதியில் தற்போது 2020-21-ம் ஆண்டில் புதிய ஆழ் கிணறுகள் அமைத்து, கசிவு நீரை இரவை பாசனம் மூலமாக விவசாயத்துக்குப் பயன்படுத்துவதாகக் கூறி, வணிக நோக்கத்தோடு இந்த நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சோழசிராமணி பகுதியில் வழங்கப்பட்டுள்ள புதிய 42 கசிவு நீர் நீரேற்று நிலையங்களுக்கான அனுமதியைத் தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் ஒன்றியத்தில் உள்ள ராஜா வாய்க்கால் பாசன விவசாயிகளை பாதிக்கும் வகையில், சோழசிராமணி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புதிய நீரேற்று நிலையங்களை தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேரில் பார்வையிட்டார்.

ஆய்வு செய்யும் பி.ஆர்.பாண்டியன்
ஆய்வு செய்யும் பி.ஆர்.பாண்டியன்
`தமிழகத்தை முழு இயற்கை வேளாண்மை மாநிலமாக மாற்றுவதில் உறுதி!' - சரியான வழியில் தமிழக அரசு

இந்த ஆய்வின்போது, பரமத்திவேலூர் ராஜவாய்க்கால் விவசாயிகள் சங்கச் செயலாளர் பெரியசாமி, துணைத்தலைவர் குப்புத்துறை, பொத்தனூர் விவசாயிகள் சங்கத் தலைவர் செந்தில்நாதன், நன்செய் இடையார் விவசாயிகள் சங்க செயலாளர் ரவி உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

அதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஆர்.பாண்டியன்,

``காவிரிப் பாசன பகுதியான நாமக்கல் மாவட்டத்தில் துவங்கி, நாகை மாவட்டம் வரையிலும் மிகப்பெரிய பாசன ஆறாக விளங்கும் காவிரி டெல்டாவில் பேரழிவு ஏற்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டம், சோழசிராமணி பகுதியில் தற்போது 2020 -21-ம் ஆண்டில் புதியதாக ஆழ் கிணறுகள் அமைத்து, கசிவு நீரை இறவைப் பாசனம் மூலமாக விவசாயத்திற்கு பயன்படுத்துவதாக கூறி, வணிக நோக்கத்தோடு இந்த நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

இது சட்டவிரோதமானது. இந்த 42 திட்டங்களுக்கும் ஓராண்டில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பரமத்தி வேலூர் பகுதியில் இருக்கும் ராஜா வாய்க்கால் பாசன விவசாயம் அடியோடு அழியும் நிலை ஏற்படும். அதேபோல், டெல்டாவில் கீழ் பாசன விவசாயிகளின் உரிமை அடியோடு பறிபோகும். காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய இறவைப் பாசன திட்டம் என்ற பெயரில் காவிரிக் கரைகளில் புதிதாக கொடுக்கப்பட்டுள்ள 42 அனுமதிகளை அரசு ரத்து செய்ய வேண்டும்.

சுமார் 25,000 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார் மூலம் இந்தத் தண்ணீரை பயன்படுத்துவதற்கு சட்டவிரோதமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோழசிராமணி பகுதியில் உள்ள மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகே இந்த அணையில் தேங்கக் கூடிய தண்ணீரை முழுமையும் இந்த இறவைப் பாசன திட்டத்திற்கு பயன்படுத்தக்கூடிய உள்நோக்கத்தோடு சட்டவிரோதமாக வருவாயை ஈட்டக் கூடிய மிகப்பெரிய வணிகமாக இத்திட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆய்வு செய்யும் பி.ஆர்.பாண்டியன்
ஆய்வு செய்யும் பி.ஆர்.பாண்டியன்
சுற்றுச்சூழல் பாதிக்குமென தெரிந்தும் அணை கட்ட துடிப்பது ஏன்? - மேக்கேதாட்டூ விவகாரம்

தமிழக முதல்வர் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்து, இத்திட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அனுமதியையும் ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு பாசன விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இந்தப் பாசன நீர் தாவா பிரச்னைகளை உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், உயர் நீதிமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்ட ஒரு தனிச் சிறப்பு நீதிமன்றத்தைத் தமிழ்நாட்டில் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.

தமிழக முதல்வர் காவிரி பாசனப் பகுதியைப் பாதுகாக்க வேண்டுமானால், சோழசிராமணி பகுதியில் வழங்கப்பட்ட புதிய 42 கசிவு நீர் நீரேற்று நிலையங்களுக்கான அனுமதியை உடனடியாக ரத்து செய்ய முன் வர வேண்டும். இதை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி திருச்சி பொதுப்பணித்துறை நீர்ப்பாசன தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிடப் போகிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு