Published:Updated:

மேக்கேதாட்டூ விவகாரம்: ``தமிழக அரசு கேரளாவின் ஆதரவையும் கோர வேண்டும்!" - பி.ஆர்.பாண்டியன்

காவிரி நீர்
காவிரி நீர்

மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த கேரள அரசின் ஆதரவை, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோர வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூ வனப்பகுதியில் அணை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக, தகவல் பரவியதால், இதற்கு தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் இயக்கங்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள், தொடர்ச்சியாக பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த கேரள அரசின் ஆதரவை, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோர வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

மேக்கேதாட்டூ
மேக்கேதாட்டூ

மேக்கேதாட்டூவில் அணை கட்டியே தீருவோம்... இது கர்நாடகவின் மிக முக்கியமான திட்டம். இதனை கைவிடும் பேச்சுக்கே இடமில்லையென என சூளுரைக்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, வெறும் பேச்சோடு நின்றுவிடாமல், 9,000 கோடி ரூபாய் திட்டமதிப்பீட்டில் இதற்கன கட்டுமானப் பணியை தொடங்கிவிட்டதாக, தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. மேக்கேதாட்டூ அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு காவிரி தண்ணீர் கூட வராது. கர்நாடகாவில் வெள்ளமே வந்தாலும் கூட, உபரிநீர், தமிழ்நாட்டிற்கு வர வாய்ப்பில்லை. தமிழகத்தில் 24 மாவட்டங்களில் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் முற்றிலும் பறிபோகும்.

25 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாலைவனமாக மாறி, உணவு உற்பத்தி அடியோடு அழிந்து போகும் என தமிழக விவசாயிகள் அவலக்குரல் எழுப்புகிறார்கள். இத்திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு இடையே கடித யுத்தமும் நடைபெற்றது.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

தமிழக சட்டமன்றக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி, இத்திட்டத்திற்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் டெல்லி சென்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, இத்திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தினார்கள்.

இதுதொடர்பாக, தொடர்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள பி.ஆர்.பாண்டியன், ``காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதற்காக ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையை ஒப்புதல் கேட்டு, மத்திய அரசின் ஜல்சக்தி துறைக்கு கர்நாடகா அரசு அனுப்பி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த அறிக்கையை ஜல்சக்தி துறை அமைச்சகம், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த திட்ட அறிக்கையை சட்டவிரோதம் என அறிவித்து நிராகரிக்க வேண்டும் என தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பதற்கு முன்பாக, மேக்கேதாட்டூவில் அணை கட்டப்படுவதால் தமிழகத்துக்கு ஏற்பட இருக்கும் பேராபத்தை கேரள அரசிடம் எடுத்துக் கூறி, ஆணையம் மூலம் திட்ட அறிக்கையை நிராகரிக்க தமிழகத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என கேரள முதல்வரிடம், தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேக்கேதாட்டூ அணை: `மத்திய அரசை நம்பி மட்டும் தமிழகம் இருந்துவிடக்கூடாது!' - எச்சரிக்கும் விவசாயிகள்

கேரளாவில் ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாட்டில் திமுக-வுடன் கூட்டணியில் உள்ளது. மேலும் கர்நாடகாவில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எப்போதும் எதிரெதிர் திசையில் பயணிக்கக்கூடியவை. எனவே மேக்கேதாட்டூ பிரச்னையில் கேரள அரசின் ஆதரவை தமிழக அரசு கோருவது, நிச்சயம் பயன் அளிக்கும் என விவசாயிகள் கருதுகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு