Published:Updated:

ரூ.10 லட்சம்... பாரம்பர்ய நெல் சாகுபடி கொடுக்கும் பெருமைமிகு லாபம்!

பாரம்பர்ய நெல் வயலின் அருகே டாக்டர் தினேஷ்பாபு
பிரீமியம் ஸ்டோரி
News
பாரம்பர்ய நெல் வயலின் அருகே டாக்டர் தினேஷ்பாபு

படிச்சோம் விதைச்சோம்

“பசுமை விகடனில் வரும் இடுபொருள் குறித்த தகவல்கள்தான் நாங்கள் இயற்கை விவசாயம் செய்ய பேருதவியா இருக்கு. பசுமை விகடன் உதவியால இன்னைக்கு 30 ஏக்கர்ல இயற்கை விவசாயம் செஞ்சுட்டு வர்றோம். அதுவும் பாரம்பர்ய நெல் ரகங்கள பயிர் செஞ்சிட்டு வர்றோம். ரசாயன விவசாயம் செஞ்சிட்டு வந்த நாங்க கடந்த 7 வருஷமா முழுக்க இயற்கை விவசாயம் செஞ்சிட்டு வர்றோம்” பேருவகையோடு பேசுகிறார் மருத்துவர் தினேஷ்பாபு.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, கந்தன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இவர், வசிப்பது சென்னை மாநகரில். வார விடுமுறை நாள்கள், பண்டிகைக் கால விடுமுறை நாள்களில் விவசாயம் பார்க்கிறார். அப்படியொரு விடுமுறை நாளில் பாரம்பர்ய நெல் ரகங்களை அறுவடை செய்து களத்தில் காய வைத்துக்கொண்டிருந்தவரை சந்தித்துப் பேசினோம். தேநீர் கொடுத்து வரவேற்றபடியே பேசத் தொடங்கினார். ``நம்முடைய நாட்டு ரக அரிசிகள்ல இரும்புச் சத்து அதிகமா இருக்குது. இதைச் சாப்பிடும்போது உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கும். உடலிலுள்ள சத்துகளின் அளவையும் சமநிலையில் வைக்கும்.

பாரம்பர்ய நெல் வயலின் அருகே டாக்டர் தினேஷ்பாபு
பாரம்பர்ய நெல் வயலின் அருகே டாக்டர் தினேஷ்பாபு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இயற்கையாக மரபியல் மாற்றமடைந்த தாவர இனங்கள் (Epigenetics) உடல் நலத்துக்கு நல்லது. நம்முடைய பாரம்பர்ய நெல் ரகங்கள் இயற்கையாக மாற்றமடைந்ததால் உடல் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் உகந்ததாக உள்ளது. ஆனா, செயற்கையாக உருவாக்கப்பட்ட வீரிய ஒட்டு ரகங்கள் உடலுக்கும் மண்ணுக்கும் தீங்கைத்தான் விளைவிக்கும். நம்ம ஊர்ல நீரிழிவு நோய்க்குக் காரணம் அரிசிதான் என்று எதிர்க்கிறார்கள். நம் முன்னோர்கள் இதே அரிசியைத்தானே பயன்படுத்தி வந்தார்கள். ஆனால், இந்தப் பிரச்னை அப்போது இல்லை. இப்போது பரவலாகச் சாகுபடி செய்யப்படும் வீரிய ஒட்டு ரக நெல்லிலிருந்து கிடைக்கும் அரிசியும், அதைப் பாலீஷ் செய்து சாப்பிடுவதும்தான் நீரிழிவு நோய்க்கு முக்கியக் காரணமாக இருக்கு. பாரம்பர்ய நெல் சாகுபடியை மேம்படுத்தும் பொருட்டுதான் ஆராய்ச்சி பூர்வமாக விவசாயம் செய்திட்டு வர்றேன். அதுவும் கரிம விவசாய முறையில செஞ்சிட்டு வர்றேன்” என்று பாரம்பர்ய நெல்லுக்குக் கட்டியம் கூறியவர் தொடர்ந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``எங்களுடையது பாரம்பர்யமா விவசாயக் குடும்பம். நான் 1995-ம் வருஷம் எம்.பி.பி.எஸ் படிப்பு முடிச்சுட்டு, மருத்துவத் துறைக்கு வந்தேன். சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுல உறுப்பு மாற்றுச் சிகிச்சை மற்றும் மயக்கவியல் நிபுணராகப் பணியாற்றிட்டு வர்றேன். என் மனைவி கண் மருத்துவரா இருக்காங்க. அவங்களுக்கும் விவசாயத்துல ஈடுபாடு அதிகம். எங்களுக்கு 30 ஏக்கர் பூர்வீக நிலம் இருக்கு. அதுல நெல், நிலக்கடலை, பச்சைப்பயறு, உளுந்து, மிளகாய் போடுவோம்.

நெல் காய வைக்கும் பணியில்
நெல் காய வைக்கும் பணியில்

பல வருஷமா ரசாயன விவசாயம் தான் செஞ்சுட்டு வந்தோம். கடந்த 7 வருஷமாத்தான் முழுக்கவே இயற்கை விவசாயம் செஞ்சுட்டு வர்றோம். கரிம விவசாயத்துக்கு மாறுறதுக்கு முதல் 3 வருஷம் ஆகிடுச்சு. அதுக்குப் பிறகுதான் கரிம விவசாயத்துக்கு நிலம், நல்லா தயார் ஆச்சு. இந்த மண் களி கலந்த மணல்சாரி. முன்னெல்லாம் பொன்னி ரகத்திலிருந்து உருவாக்கப்பட்ட ஒட்டு ரகமான `பாபட்லா’ ரகத்தைத்தான் சாகுபடி செஞ்சிட்டு வந்தோம். வர்த்தக ரீதியாக அதுதான் நல்லாப் போகும். பாரம்பர்ய நெல் ரகங்களோட அருமையை உணர்ந்த பிறகு, இப்போ அதை மட்டும்தான் சாகுபடி செஞ்சிட்டு வர்றோம். இந்த முறை சீரகச் சம்பா, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, சொர்ணமசூரி, மாப்பிள்ளைச் சம்பா, மணிப்பூர் மாநில ரகமான சக்காவோ ரகங்களைச் சாகுபடி செஞ்சு அறுவடையும் செஞ்சுட்டேன். மாப்பிள்ளைச் சம்பா மட்டும் இன்னும் அரை ஏக்கர்ல அறுவடை செய்யாம இருக்கு” என்றவர், அறுவடை செய்த நெல்லைக் களத்தில் காய வைத்துக்கொண்டிருந்ததைக் காட்டினார். பிறகு தொடர்ந்து பேசியவர்,

மாடுகளுடன்
மாடுகளுடன்

``எங்ககிட்ட ஓங்கோல், காங்கிரஜ், சிவப்பு சிந்தி, சாகிவால் ரகங்கள்ல 9 மாடுகள் இருக்கு. ஊருக்கு வந்துட்டா நாட்டு மாட்டுப் பால்தான் குடிப்போம். நம் நாட்டு மாட்டுப் பால்ல (ஏ2 பால்) புரோலின் (Proline) என்ற அமினோ அமிலம் கலப்பின மாட்டுப் பால்ல (ஏ1 பால்) இருக்குறதைவிட அதிகமா இருக்குது. நாட்டு மாட்டுப் பால்ல இருக்கிற சத்துகள் உடலோடு எளிதில் கலந்துடும். ஆனா, ஏ1 பால்ல இருக்கிற சில அமினே அமிலங்கள் எளிதில் ஜீரணமாகாது. அதனால அது நீரிழிவு, இதயம் சம்பந்தமான பிரச்னைகள் உண்டாவதற்குக் காரணமா இருக்குது. அதனால நாட்டு மாட்டுப் பால்தான் நல்லது. ‘2 மாடுகள வெச்சு 30 ஏக்கர் நிலத்துல விவசாயம் செய்யலாம்’னு சொல்வாங்க. ஆனா, நான் 9 மாடுகள வெச்சுருக்கேன். அதுங்க நிலத்துல மேயுறதால தாராளமாவே நிலத்துக்குச் சாணம் கிடைச்சிடுது. சாணம் பயிர்களுக்கு முக்கிய உரமா இருக்குது.

ரூ.10 லட்சம்... பாரம்பர்ய நெல் சாகுபடி கொடுக்கும் பெருமைமிகு லாபம்!

மருத்துவத்துல வியாதினு வர்றவங்க கிட்ட முதல்ல ‘ஆன்டிபயாடிக்’ மாத்திரை கொடுப்போம். ஆனா, அந்த ‘ஆன்டிபயாட்டிக்’ மாத்திரை சரிவர வேலையே செய்றதில்ல. ஏன்னா, இப்போ பெரும்பான்மையானோர் ரசாயனங்கள் கொட்டி விளைவிக்கிற உணவுப் பொருள்கள அதிகம் சாப்பிடுறதால ‘ஆன்டி பயாடிக்’ வேலை செய்ய மாட்டேங்குது. அதனாலதான் ‘இயற்கை விவசாயத்தில விளைவிக்கிற உணவுப் பொருளா சாப்பிடுங்க’னு நோயாளிகளிடம் அறிவுறுத்துறோம். ‘பயிர்களுக்கும் ரசாயன உரத்த கொடுக்காதீங்க’னு சொல்றோம். ரசாயன உரங்களுக்குப் மாற்றா நுண்ணுயிர் உரங்கள பயன்படுத்தலாம். நாங்க அதைத்தான் அதிகம் பயன்படுத்துறோம். வேரில் பூஞ்சணத் தாக்குதலைக் கட்டுப்படுத்த சூடோமோனஸ் கொடுக்கிறோம். வேரோட சத்துக்கும், காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்துக் கொடுக்கிறதுக்கும் அசோஸ்பைரில்லம் பயன்படுத்தறோம். பாஸ்பரஸ் சத்தைப் பயிர்கள் எடுத்துக்கொள்ளும் வகையில் கிரகித்துக் கொடுக்க பாஸ்போ பாக்டீரியா கொடுப்போம். பயிர்கள்ல பூச்சிவிரட்டுறதுக்குப் பவேரியா பேசியானா, பேசில்லஸ் துரிஞ்சியன்ஸை தண்ணியில கலந்து இரண்டு முறை தெளிச்சு விட்டுடுவோம். 1 லிட்டருக்கு 40 மி.லி போதுமானது” என்றவர் வருமானம் குறித்துப் பேசினார்.

பிள்ளைகளுக்கும் விவசாயப் பாடம்
பிள்ளைகளுக்கும் விவசாயப் பாடம்

``நாங்க பெரும்பாலும் அரிசியாக்கித்தான் விற்பனை செய்றோம். தெரிஞ்சவங்க, நண்பர்கள்கிட்டே விற்பனை செஞ்சிடுறோம். ஒரு ஏக்கருக்கு 20 முதல் 22 மூட்டை மகசூல் கிடைக்குது. ஒரு மூட்டை (76 கிலோ) நெல்லை அப்படியே வித்தா 2,000 ரூபாய். அரிசியாக்கினா 3,500 ரூபாய் கிடைக்குது. ஒரு ஏக்கருக்கு 20 மூட்டை கணக்கு வெச்சுக்கிட்டாலும் நெல்லாக விற்றால் 40,000 ரூபாய், அரிசியாக விற்றால் 70,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. செலவுனு பார்த்தா ஒரு ஏக்கருக்கு 15,000 முதல் 18,000 ரூபாய் ஆகுது. 17,000 ரூபாய்னே வெச்சுகிட்டாலும் நெல்லாக விற்கும்போது ஏக்கருக்கு 23,000 ரூபாய் லாபம். அரிசியாக விற்றால் (அரிசியாக்கும் செலவு போக) ஏக்கருக்கு 51,000 ரூபாய் லாபம் கிடைக்குது. நாங்க பெரும்பான்மையான நெல்லை அரிசியாக்கித்தான் விக்கிறோம். இதுமூலமா 30 ஏக்கருக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல லாபமா நிக்குது. இது ஒரு போகத்துக்கான லாபம். அடுத்து பயறு வகைகள், நிலக்கடலை மூலம் கிடைக்கும் வருமானம் தனி” என்றவர் நிறைவாக,

``நிறைய பேர்கிட்ட பாரம்பர்ய அரிசிக்கு மாறுங்கனு வலியுறுத்திட்டு வர்றேன். மருத்துவர்கள்தாம் இத முன்னின்று செய்யணும். ஏன்னா, அவங்களுக்குத்தான் நோய்க்கான காரணம் முதல்ல தெரிய வரும். என்னோட மருத்துவப் படிப்பு இயற்கை விவசாயம் செய்றதுக்கு எளிதா இருக்குது. இந்த உலகத்துல எல்லாத் தொழிலையும் எல்லோராலயும் செய்ய முடியாது. ஆனா, விவசாயத்தை எந்தத் தொழில் செய்றவங்களும் செய்ய முடியும். அதற்கு நானே உதாரணம்” என்று விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,

டாக்டர் தினேஷ்பாபு,

செல்போன்: 98842 55573.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நெல் சாகுபடி குறிப்புகள்

நெல் சாகுபடி குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்ட தினேஷ்பாபு, “தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் சணப்பை, தக்கைப் பூண்டு ஆகிய பசுந்தாள் விதைகளை 8-10 கிலோ கலந்து விதைத்து முளைத்து வந்தபிறகு மடக்கி உழலாம். இது நிலத்தை இயற்கை விவசாயத்துக்கு மாற்றும்போது செய்யலாம். இப்போது எங்கள் நிலம் நன்றாக இயற்கை விவசாயத்துக்கு மாறிவிட்டதால் சிறு பச்சைப் பயறை ஏக்கருக்கு 8-10 கிலோ விதைத்து 45-வது நாளிலிருந்து 60 நாள்கள் வரை அதிலேயே மாடுகளை நன்றாக மேய விட்டுவிடுகிறோம். மாடுகள் இடும் சாணம் நிலத்துக்கு உரமாகிவிடுது. பயறின் வேர் முடிச்சுகள் நிலத்தில் நைட்ரஜன் சத்தை நிலைநிறுத்துது. இந்த நிலத்தை அப்படியே உழவு ஓட்டி விட வேண்டும். நடவுக்கு மூன்று நாள்களுக்கு முன்பு சேற்றுழவு செய்ய வேண்டும். பிறகு ஏக்கருக்கு அரை டன் முதல் ஒரு டன் எருவை தூவி விட வேண்டும். சேற்றுழவு தொடங்குவதற்கு முன்பே 2 முதல் 4 கிலோ விதைநெல்லை நாற்று விட்டு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பிறகு, நாற்று நடும் இயந்திரம் மூலம் நடவு செய்து, மூன்று நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். 10-ம் நாள் தலா 2 கிலோ சூடோமோனஸ், அசோஸ் ஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியாவை 20 கிலோ எருவில் கலந்து ஒரு நாள் முழுக்க வைத்திருந்து நெல் வயலில் தூவி விட வேண்டும். 15 முதல் 25 நாள்களுக்கு ஒருமுறை தலா ஒரு லிட்டர் பஞ்சகவ்யா, மோர்க்கரைசல், அமுதக் கரைசலை தனித்தனியாக 50 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பயிரில் கதிர் பிடிக்கும்போது 16 லிட்டர் தண்ணீருக்கு 2 லிட்டர் மோர்க்கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும். பூச்சிகளைக் கட்டுப்படுத்த தலா 50 மி.லி பவேரியா பேஸியானா, பேஸில்லஸ் துரிஞ்சியன்ஸை 1 லிட்டர் பஞ்சகவ்யாவில் கலந்துகொள்ள வேண்டும். பிறகு, இதை 16 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். விதைக்காக என்றால் கை அறுவடையும், வழக்கமான அறுவடை என்றால் இயந்திர அறுவடையும் மேற்கொள்ளலாம்” என்றார்.