Published:Updated:

சந்தைப்புலனாய்வு செய்தால் ஏற்றுமதியில் வெற்றி நிச்சயம்!

பயிற்சியில் கலந்து கொண்டோர்...
பிரீமியம் ஸ்டோரி
News
பயிற்சியில் கலந்து கொண்டோர்...

பயிற்சி

டந்த ஜூலை 14-ம் தேதி, ‘நாணயம் விகடன்’ மற்றும் ‘பசுமை விகடன்’ சார்பில்… கோயம்புத்தூரில் ‘லாபம் தரும் வேளாண் ஏற்றுமதி’ என்ற பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஆர்வத்துடன் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து பயிற்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், ஏற்றுமதி குறித்து வழிகாட்டிவரும் பயிற்றுநர் கே.எஸ்.கமாலுதீன் பேசும்போது, “வேளாண் விளைபொருள்கள் ஏற்றுமதிக்கான வாய்ப்பு நமக்கு அதிகம் உள்ளது. எந்த நாட்டுக்கு எந்தப் பொருள் தேவை என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொண்ட பிறகு, ஏற்றுமதிக்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

கமாலுதீன்
கமாலுதீன்

ஏற்றுமதிக்கான நிறுவனத்தைப் பதிவு செய்வது, அங்கீகாரம் பெறுவது உள்ளிட்ட நடைமுறைகள் அனைத்தையும் அதிகபட்சம் மூன்று நாள்களில் ஆன்லைன் மூலமாகவே முடித்துவிட முடியும். நாம் அதிக அளவில் ஏற்றுமதி செய்வது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குத்தான் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை ஏற்றுமதி செய்வதில் பெரிய கட்டுப்பாடுகள் இல்லை. நம் நாட்டினர் நடத்தும் உணவகங்கள் மற்றும் அங்காடிகளில் சிறுதானியங்களுக்குத் தேவை அதிகம் இருக்கிறது. அதேபோல், நாட்டுச்சர்க்கரை, மரச்செக்கு எண்ணெய், பனை வெல்லம், சின்ன வெங்காயம் போன்ற உணவுப் பொருள்களுக்கும் தேவை அதிகம் உள்ளது. எப்போதும் முதல் தரமான பொருள்களைத்தான் ஏற்றுமதி செய்ய வேண்டும்” என்றார் கமாலுதீன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கோயம்புத்தூர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தலைமை அலுவலகத்தின் முதன்மை மேலாளர் மோகன்ராஜா, “விவசாய விளைபொருள்களை ஏற்றுமதி செய்யும் தொழிலைத் தொடங்க அதிக முதலீடு தேவைப்படும் என்று நினைத்துப் பலர் இத்தொழிலில் இறங்கத் தயங்குகிறார்கள். ஏற்றுமதிக்குத் தேவையான பண உதவிகளை எந்தப் பிணையும் இல்லாமலேயே வங்கிகளில் பெற முடியும். அதற்கான திட்டம் (ஸ்கீம்) வங்கிகளில் உள்ளது. முறைப்படி வங்கிகளை அணுகினால் 5,00,000 ரூபாய் முதல் 2 கோடி ரூபாய்வரை கடன் பெற முடியும்” என்று நம்பிக்கையூட்டினார்.

மோகன்ராஜா,  ரவீந்திரன்
மோகன்ராஜா, ரவீந்திரன்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் ஏற்றுமதி மற்றும் சந்தைப் புலனாய்வுத்துறையின் முன்னாள் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ரவீந்திரன், “வேளாண் விளைபொருள்கள் மற்றும் மதிப்புக்கூட்டல் பொருள்களை ஏற்றுமதி செய்ய விரும்புபவர்கள்… பொருள், இடம், விலை, சந்தைப்படுத்தும் நுட்பம் ஆகிய நான்கு விஷயங்களை முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். எந்தப்பொருள் எங்கு குறைவான விலையில் கிடைக்கும், எந்த ஊருக்கு எந்தப் பொருள் தேவை என்கிற சந்தைப்புலனாய்வு மிக மிக அவசியம். அதேபோல் நாம் வெளிநாடுகளுக்கு அனுப்பும் பொருள்கள், எப்போது விலையேறும், எப்போது விலை இறங்கும் என்பதையும் கணிக்க வேண்டும். உலகளவில் ஏற்றுமதி வணிகத்தில் 80 சதவிகித இடத்தைப் பிடித்துள்ள விளைபொருள், வற்றல் மிளகாய்.

முறைப்படி வங்கிகளை அணுகினால் 5,00,000 ரூபாய் முதல் 2 கோடி ரூபாய்வரை கடன் பெற முடியும்.பொருள், இடம், விலை, சந்தைப்படுத்தும் நுட்பம் ஆகிய நான்கு விஷயங்களை முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விலை தகவல் புலனாய்வு, வற்றல் மிளகாய் வணிகத்தில் எப்படி தாக்கம் விளைவிக்கிறது என்பதைப் பார்ப்போம். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மார்ச் மாதத்தில், 1 கிலோ வற்றல் மிளகாய் 75 முதல் 80 ரூபாய் என்கிற அளவில் கொள்முதல் விலையாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் ஆந்திர வற்றல் மிளகாய் வரத்து துவங்கி, அடுத்தடுத்த மாதங்களில் வரத்து அதிகரித்து, 1 கிலோ வற்றல் மிளகாயின் விலை 25 ரூபாய்க்குக் கீழே இறங்கிவிட்டது. இதை முன்பே கணித்திருந்தால் இருப்பு வைத்திருப்பவர்கள் மார்ச் மாதமே நல்ல விலைக்கு விற்பனை செய்திருக்க முடியும். அதேபோல ஏற்றுமதியாளர்கள் மே, ஜூன் மாதங்களில் வற்றல் மிளகாயை வாங்கி இருப்பு வைக்க முடியும். இதுதான் சந்தைப்புலனாய்வு.

பயிற்சியில் கலந்து கொண்டோர்...
பயிற்சியில் கலந்து கொண்டோர்...

ஒரு குறிப்பிட்ட விளைபொருள் எந்த மாநிலத்தில் அதிகம் விளைகிறது, எந்த ஊரில் எந்த மாதம் நடவு செய்யப்படுகிறது, எப்போது அறுவடையாகிறது போன்ற தகவல்களைத் தெரிந்து வைத்திருந்தால் கொள்முதல் செய்வது எளிதாகிவிடும். ஏற்றுமதியிலும் கூடுதல் லாபம் பார்க்க முடியும். இதேபோல் மற்ற நாடுகளிலிருந்து ஏற்றுமதியாகும் விளைபொருள்களின் பருவம் மற்றும் விலை விவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். நிலக்கடலையை எடுத்துக் கொள்வோம்.

இந்தியாவில், குஜராத், ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் அதிக அளவில் விளைவிக்கப் படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நிலக்கடலை உற்பத்தி குறைந்து வருகிறது. நன்கு முதிர்ந்த உடைசல் இல்லாத நீளமான, ஊக்கமான நிலக்கடலைப் பருப்பு நமது நாட்டிலிருந்து… இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, உக்ரைன், ரஷ்யா, நேபாளம், ஈரான் ஆகிய நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 5.25 லட்சம் டன் நிலக்கடலை ஏற்றுமதியாகிறது.அர்ஜென்டினா நாட்டிலிருந்து 5.70 லட்சம் டன், அமெரிக்காவிலிருந்து 4.50 லட்சம் டன் என்று பல நாடுகளிலிருந்து கிட்டத்தட்ட 29 லட்சம் டன் நிலக்கடலை, உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பாமாயில் உற்பத்தியின் அளவைப் பொறுத்துதான் இந்தியாவில் கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகளின் விலை நிர்ணயம் செய்யப்படும்.

இந்தியா, ஆண்டுக்கு 1.4 கோடி டன் உணவு எண்ணெயை இறக்குமதி செய்கிறது. அதன் மதிப்பு 77,000 கோடி ரூபாய். நமது தேவையில், 70 சதவிகித அளவு உணவு எண்ணெய் இறக்குமதிதான் செய்யப்படுகிறது. இறக்குமதி ஆகும் எண்ணெய் வகைகளில் 75 சதவிகிதம் இடம்பிடித்திருப்பது, பாமாயில்தான். நமது நாட்டில் நியாயவிலைக் கடைகளில் அதிக அளவு விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றில் கலப்படம் செய்யவும், வனஸ்பதி தயாரிப்புக்காகவும் பாமாயில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பாமாயில் இறக்குமதி குறைந்தால் தேவை அதிகமாகி, இந்தியாவில் மற்ற எண்ணெய் வகைகளின் விலை உயரும். கடலை எண்ணெய் விலை அதிகரிக்கும்போது அதற்கு மூலப்பொருளான நிலக்கடலையின் விலையும் அதிகரிக்கும். இதுதான் நமது நாட்டில் விளையும் நிலக்கடலைக்கும் மலேசியாவில் விளையும் எண்ணெய்ப் பனைக்கும் உள்ள சம்பந்தம். இதுபோன்ற விஷயங்களைச் சரியாகத் தெரிந்துகொண்டால் ஏற்றுமதியில் கலக்கலாம்” என்ற ரவீந்திரன்,

“ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல்வாதிகள் சிலர், காய்கறி அதிகம் விளையும் இடங்களில் குளிர்பதனச் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கிறார்கள். இதோடு, ‘தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகள் அதிகம் உற்பத்தியாகும்போது குளிர்பதனக் கிடங்கில் சேமித்து வைத்து விலை ஏறும் சமயங்களில் விற்பனை செய்து லாபம் பார்க்கலாம்’ என்று விளக்கம் சொல்கிறார்கள். நான் வெளிப்படையாகக் கூறுகிறேன். காய்கறிகளுக்கான குளிர்பதனச் சேமிப்பு கிடங்கு என்பது தொழில்நுட்ப அடிப்படையில் சாத்தியம் இல்லாத ஒன்று” என்றார் தெளிவாக.

வேளாண் ஏற்றுமதியில் வெற்றி பெற்றது எப்படி?

பொள்ளாச்சியைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் ஏ.கே.ரத்தினம், “ஒரு காலத்தில் தென்னைநார்க் கழிவுகளைச் சாலையோரத்தில் கொட்டி தீ வைத்து அழிப்பார்கள் விவசாயிகள். பாலைவன நாடுகளில் மண்ணில்லா விவசாய முறை அறிமுகமான பிறகு, சாலையோரம் கொட்டப்பட்டு வந்த தென்னைநார்க் கழிவுகளுக்கு மவுசு அதிகரித்துவிட்டது. தற்போது தென்னை நார்க்கழிவு, எந்திரங்கள் மூலம் கட்டிகளாக மாற்றப்பட்டு ஏற்றுமதியாகிறது. தென்னைச் சாகுபடி அதிகம் உள்ள பொள்ளாச்சிப் பகுதியில் ‘காயர்பித்’ தயாரிப்பு முக்கியத் தொழிலாக உருவெடுத்திருக்கிறது.

 ஏ.கே.ரத்தினம்,  ராஜேந்திரன்
ஏ.கே.ரத்தினம், ராஜேந்திரன்

சீனா, இஸ்ரேல், கொரியா, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் தென்னை நார்க் கட்டிகளில் உயிர் உரங்கள் கலந்து செறிவூட்டம் செய்து, தாவரங்களை வளர்க்கப் பயன்படுத்தப்படுகிறது. மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைப்பவர்களும் தென்னைநார்க் கட்டிகளைப் பயன்படுத்துகிறார்கள். ஏற்றுமதியில் ஆர்வம் உள்ளவர்கள், எங்களைப் போன்ற மொத்த உற்பத்தியாளர்களிடமிருந்து தரமான தென்னை நார்க்கட்டிகளை கொள்முதல் செய்து, சிறிய அளவில் ஏற்றுமதியைத் தொடங்கலாம். கொச்சியில் இயங்கிவரும் மத்தியத் தென்னை வளர்ச்சி வாரியம் ஏற்றுமதிக்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

தென்னையிலிருந்து கிடைக்கும் கருப்பட்டி, தென்னஞ்சர்க்கரை, தேங்காய்ப்பால், பதப்படுத்தப்பட்ட தேங்காய்த் தண்ணீர், உலர் தேங்காய்த் துருவல், தென்னங்கீற்று விளக்குமாறு உள்ளிட்ட தென்னை சார்ந்த பொருள்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகம் இருக்கிறது. வெளிநாடு வாழ் கேரள மக்களின் தேவைக்காக இங்கிருந்து தேங்காய் எண்ணெய் அதிக அளவு ஏற்றுமதியாகிறது. குறிப்பாக சல்பர் கலக்காத தேங்காய்களிலிருந்து பிழியப்படும் மரச்செக்கு எண்ணெய்க்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. தென்னையிலிருந்து இறக்கப்படும் நீரா பானத்துக்கும் அமோக வரவேற்பு இருக்கிறது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் இணைந்து புட்டியில் அடைக்கப்பட்ட நீரா பானத்தை ஏற்றுமதி செய்யலாம்” என்றார் நம்பிக்கையுடன்.

நெல்லிக்கனிகளை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்துவரும் விவசாயி ‘நிவி’ ராஜேந்திரன், “ஆரம்பத்தில், 15 ஏக்கர் பரப்பில் நெல்லி பயிரிட்டேன். விளைந்த நெல்லிக்கனிகளை நேரடியாக விற்பனை செய்யாமல், அதில் ஒரு பகுதியை மதிப்புக்கூட்டி நெல்லிச்சாறு தயாரித்து விற்பனை செய்தேன். கடந்த 15 ஆண்டுகளில் மதிப்புக்கூட்டலில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு இன்று 150 ஏக்கர் பரப்பில் நெல்லிச் சாகுபடி செய்து வருகிறேன். முழுக்க முழுக்க இயற்கை விவசாயம்தான். நான் உற்பத்தி செய்யும் நெல்லிக்கனிச்சாறு தற்போது மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது” என்றார் மகிழ்ச்சி பொங்க.

சாதாரண மனிதரையும் சாதனையாளராக்கும்!

யிற்சியில் கலந்துகொண்டவர்களின் கருத்துகள் இங்கே…

ஷேக் அப்துல்லா: “இந்தப் பயிற்சிக் கருத்தரங்கு, ஏற்றுமதி குறித்து நான் நினைத்து வைத்திருந்த பிம்பத்தை உடைத்துவிட்டது. 5,00,000 ரூபாய் முதலீட்டில் ஏற்றுமதி செய்தால்கூட மாதம் 50,000 ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும் என்பதைத் தெரிந்துகொண்டேன். ஏற்றுமதிக்கான அனைத்துத் தகவல்களும் பயனுள்ளவை. இது சாதாரண மனிதனையும் சாதனையாளராக்கும் பயிற்சி. நாணயம் விகடன் மற்றும் பசுமை விகடனுக்கு நன்றிகள்.”

 ஷேக் அப்துல்லா,  கந்தசாமி,  பி.ஆர்.ரங்கசாமி
ஷேக் அப்துல்லா, கந்தசாமி, பி.ஆர்.ரங்கசாமி

கந்தசாமி, கரூர்: “விளைபொருள்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தில் பயிற்சியில் பங்கேற்றேன். பயிற்சியின் முடிவில் 100 சதவிகிதம் முழுமையாகத் தெரிந்துகொண்டேன். சந்தைப்புலனாய்வு, எந்த நாட்டுக்கு என்ன பொருள் தேவை என்கிற தகவல் போன்றவற்றைத் தெரிந்து தொழிலில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம் என்பதை உணரவைத்தது பயிற்சி. விகடனுக்கு நன்றி”.

பி.ஆர்.ரங்கசாமி, மேட்டுப்பாளையம்: “வெளிநாடு வாழ் இந்தியர்கள் விரும்பும் உணவுப்பொருள்களைத் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். குறிப்பாக, கேரள மக்கள் நேந்திரன் வாழைப்பழங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுவார்கள். அந்த மக்கள் லட்சக்கணக்கில் வாழும் குவைத், துபாய் போன்ற நாடுகளுக்கு வாழைப்பழம் ஏற்றுமதி செய்யும்போது நேந்திரன் பழங்களை மட்டுமே அனுப்ப வேண்டும் என்கிற சூட்சமம் தெரிந்துகொண்டேன். வல்லுநர்கள் கமாலுதீன், ரவீந்திரன், மோகன்ராஜா ஆகியோரின் வழிகாட்டுதல்கள் மிகச்சிறப்பு’’