Published:Updated:

பக்குவமான வருமானம் தரும் பாக்குச் சாகுபடி!

பாக்குத் தோட்டத்தில் ஜெகதீசன்...
பிரீமியம் ஸ்டோரி
பாக்குத் தோட்டத்தில் ஜெகதீசன்...

3 ஏக்கர், ஆண்டுக்கு ரூ. 11 லட்சம்...

பக்குவமான வருமானம் தரும் பாக்குச் சாகுபடி!

3 ஏக்கர், ஆண்டுக்கு ரூ. 11 லட்சம்...

Published:Updated:
பாக்குத் தோட்டத்தில் ஜெகதீசன்...
பிரீமியம் ஸ்டோரி
பாக்குத் தோட்டத்தில் ஜெகதீசன்...

மகசூல்

“ரசாயன விவசாயம் செஞ்சிட்டு வந்த நான் பசுமை விகடன் படிச்ச பிறகு, சுபாஷ் பாலேக்கரோட இயற்கை வழி விவசாயத்துக்கு மாறினேன். பல பயிர்களைச் சாகுபடி செஞ்சிட்டு இருந்தபோதுதான், பராமரிப்பு குறைவாகவும் அதேசமயம் நல்ல லாபம் கொடுக்கக்கூடிய பயிராகவும் இருக்கும் பாக்கைத் தேர்ந்தெடுத்தேன்.

சுபாஷ் பாலேக்கரோட மூடாக்கு மந்திரம் மூலமா இன்னைக்கு 3 ஏக்கர்ல வருஷத்துக்கு 11 லட்சம் ரூபாய், எந்தப் பாடும் இல்லாம வருமானமா கிடைச்சிட்டு இருக்கு. இயற்கைக்கு என்னுடைய பாதையை மாற்றிய பசுமை விகடனுக்கு நன்றி” என்று உற்சாகமாகப் பேசுகிறார் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீசன்.

பக்குவமான வருமானம் தரும் பாக்குச் சாகுபடி!

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அடுத்த டேனிஷ்பேட்டையில் இருக்கிறது ஜெகதீசனின் வீடும் தோட்டமும். ஏற்காடு மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் இவருடைய தோட்டத்தில் தென்மேற்குப் பருவமழையின் உபயத்தால் பச்சைபசேல் என்று காட்சியளித்தது. நம்மைக் கண்டதும் உற்சாகமாக வரவேற்றுப் பேசிய ஜெகதீசன். “எனக்குப் பூர்வீகம் ஆட்டையாம்பட்டி, எங்கப்பா காலத்திலேயே இந்தப் பகுதில நிலம் வாங்கிக் குடியேறிட்டோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஏற்காடு மலையிலிருந்து வரும் தண்ணி, என்னோட தோட்டத்துக்குச் சற்று தொலைவுல சரபங்கா ஆறாகத் தொடங்குது. அதனால, வருஷம் முழுக்கச் செழிப்பாகவே இருக்கும். போன வருஷம்தான் சரிவர மழை கிடைக்காம கொஞ்சம் வறட்சியா இருந்தது. நான் சமூகவியல் முதுகலைப் பட்டப்படிப்பு படிச்சிருக்கேன். எங்கப்பா விவசாயச் சங்கங்கள்ல தீவிர ஈடுபாடு உள்ளவரு. அதனால, விவசாயத்த இழிவா பாக்குறத விரும்பமாட்டாரு. ‘படிப்பங்கறது அறிவுக்காகத்தான், படிச்சதுக்கு வேலை தேடாம, வந்து விவசாயத்த பாரு’னு அழைச்சாரு. அப்படியே படிச்சு முடிச்சதும் விவசாயத்துக்கு வந்துட்டேன். வந்து 33 வருஷத்துக்கு மேலாச்சு.

தண்ணீர்த் தொட்டி...
தண்ணீர்த் தொட்டி...

ஆரம்பத்துல கேழ்வரகு, சாமை, நிலக்கடலைனு சாகுபடி செஞ்சோம். அப்புறம் நெல், மஞ்சள், மரவள்ளினு பணப்பயிர்களுக்கு மாறினேன். அதுலேயும் மஞ்சள் நல்ல வருமானம் கொடுக்ககூடியதா இருந்துச்சு. ஆனா, அறுவடைக்குப் பிறகு அதிக வேலை வாங்குறதால, வேறெந்த பயிருக்கு மாறலாம்னு யோசிச்சிட்டு இருக்கிற சமயத்துலதான் 2007-ம் ஆண்டுப் பசுமை விகடன் அறிமுகமாச்சு. அதுல ஈரோட்டுல சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயப் பயிற்சி கொடுக்கிறதா தகவல் இருந்துச்சு. சில காரணங்களால அதுல கலந்துக்க முடியல.

2008-ம் வருஷம் ஓமலூர் நடராஜன் செட்டியார் திருமண மண்டபத்தில் 4 நாள்கள் நடந்த சுபாஷ் பாலேக்கரோட ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புல கலந்துகிட்டேன். பராமரிப்பு, அறுவடை வேலைகள் சுலபமா இருக்கணும், அதேசமயம் நல்ல லாபம் கிடைக்கக்கூடிய பயிராகவும் இருக்கணும்னு பக்கத்துத் தோட்டத்துக்காரர் கணேசனும் நானும் யோசிச்சு தேர்ந்தெடுத்த பயிர்தான் பாக்கு. சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கு ஏற்ற சரியான பயிர் இது” என்று முன்கதை சொன்னவர் தொடர்ந்தார்.

“எனக்கு மொத்தம் 10 ஏக்கர் நிலம் இருக்கு. இதுல 2008-ம் வருஷம் 3 ஏக்கர்ல பாக்கு விதைச்சேன். அதுலதான் இப்போ மகசூல் எடுத்துட்டு இருக்கேன். மத்ததுல மூணு வருஷத்துக்கு முன்னதான் பாக்கும் வாழையும் போட்டேன். அது இன்னும் நாலு வருஷத்துல அறுவடைக்கு வந்துடும். மேட்டுப்பாளையம் லோக்கல்ங்கற நாட்டு ரகப் பாக்கைத்தான் போட்டிருக்கிறேன். பாக்கை நடவுபோட்ட ஐந்தாவது வருஷத்திலிருந்து அறுவடை செய்யலாம்.

தொடர்ந்து 30 வருஷங்களுக்கு மேல மகசூல் கொடுக்கும். எல்லா மரங்களுக்கும் சொட்டுநீர்ப் பாசன குழாய்கள் வழியாகத்தான் தண்ணீர்ப் பாய்ச்சுறேன். அதன்வழியாகவே ஜீவாமிர்தத்தையும் கொடுத்திட்டு வர்றேன். நான் ஏழரை அடி இடைவெளியில் நட்டுருக்கேன். இந்த இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு 830 மரங்கள் பிடிக்கும். 6 அடி இடைவெளி என்றால் 1,200 கன்றுகளை நடலாம். ஆரம்பத்துல மூணு வருஷத்துக்கு ஜி.9 ங்கிற வாழையை ஊடுபயிராகப் போட்டு அறுவடை செய்தேன். அதன்மூலமாக வருஷத்துக்கு 2 லட்சம் ரூபாய் வருமானம் கிடைச்சது. அது பாக்கு நடவுக்கான ஆரம்பக்கட்ட செலவுகளுக்குச் சரியாபோச்சு. அதன்பிறகு பாக்கு மரங்கள் வளரணுங்கறதால, ஊடுபயிர் சாகுபடி செய்யல” என்றவர் வருமானம் குறித்துப் பேசினார்.

மூடாக்கு மந்திரம்...
மூடாக்கு மந்திரம்...

“இந்திய பாக்கு உற்பத்தியில் கர்நாடக மாநிலத்தோட பங்கு 70 சதவிகிதம். அதற்குப் பிறகு கேரளா, தமிழ்நாடு, அஸ்ஸாம் இருக்கு. பாக்குக்கான விலையை நிர்ணயம் செய்வதே கர்நாடகத்துலதான். பாக்கு அறுவடை ஜூலை மாசம் தொடங்கி ஜனவரி மாசம் வரை இருக்கும். நான் தோட்டத்தை மொத்தமா குத்தகைக்கு விட்டுடுறேன். வியாபாரிங்களே வந்து அறுவடை செய்து, ஏத்திட்டுப் போயிடுவாங்க. போன வருஷம் 3 ஏக்கர் பாக்குத் தோட்டத்த 11 லட்சத்துக்குக் குத்தகைக்குப் போட்டேன். இதுல பராமரிப்பு, இடுபொருள்னு இரண்டரை லட்சத்திலிருந்து 3 லட்சம் வரை செலவாச்சு. அதுபோக 8 லட்சம் நிகர லாபமாக நின்னது. இந்த முறையும் இந்த வருமானம் கிடைக்கும்னு எதிர்ப்பார்க்கிறேன்.

ஏக்கருக்குன்னு கணக்குப்போட்டா 3,60,000 ரூபாய்க்கு மேல வருமானம் கிடைக்கும். இதுல செலவு ஒரு லட்சம் போக 2,60,000 ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கும்.

ஊடுபயிராக வாழை...
ஊடுபயிராக வாழை...

பிளாஸ்டிக் தடைக்குப் பிறகு பாக்கு மட்டைகளுக்கு ஏக கிராக்கி. நன்கு வளர்ந்த ஒரு பாக்குமரத்திலிருந்து ஒரு வருஷத்துல 20 மட்டைகள் விழும். ஒரு மட்டை 2 ரூபாய் என்ற கணக்கில், ஏக்கருக்கு 20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆனா, நான் மட்டைகள மட்கவெச்சு உரமாக்கிடுறேன்” என்றவர் நிறைவாக,

“பாக்குச் சாகுபடிக்குத் தண்ணீர் வசதி மிகவும் அவசியம். கோடைக்காலத்துல ஒரு மரத்துக்கு ஒருநாளைக்கு 50 லிட்டர் தண்ணீர் கொடுக்கிறேன். ஒரு ஏக்கருக்கு 1,000 மரங்கள் என்றால், 50,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

அதேபோல மழை, குளிர் காலங்கள்ல 3 நாள்களுக்கு ஒருமுறை இந்தளவுல தண்ணீர் கொடுக்கணும். தோட்டத்தில் எப்போதும் ஈரப்பதம் இருந்துகிட்டே இருக்கணும். அதுக்குச் சுபாஷ் பாலேக்கரேட மூடாக்கு மந்திரம் கைகொடுக்குது. தண்ணீர் வசதி இருங்குங்கற விவசாயிகளுக்கு ஏற்ற லாபகரமான பயிர் பாக்கு” என்று புன்முறுவலோடு விடைகொடுத்தார் ஜெகதீசன்.

தொடர்புக்கு: ஜெகதீசன், செல்போன்: 94432 58573.

ஜீவாமிர்தம் எளிய தயாரிப்பு

“சொட்டுநீர்ப் பாசனம் மூலமாக ஜீவாமிர்தம் கொடுக்கும்போது, அதிலுள்ள கசடுகள் குழாயில் அடைச்சிக்குது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க சாணம், கோமியம், துவரம்பருப்பு மாவு, வெல்லம் கலந்து இரண்டு நாள் காலை, மாலை நேரங்களில் கலக்கிவிடலாம். இரண்டு நாள் முடிந்து, மூன்றாவது நாள் கலக்காமல்விட்டால் தெளிந்த நீர் மேலே தேங்கும்.

அந்தத் தண்ணீரைப் பாசன நீரோடு கலந்து பாய்ச்சலாம். 200 லிட்டர் டிரம்மில் கிட்டத்தட்ட 90 சதவிகித தெளிந்த ஜீவாமிர்தம் கிடைக்கும். டிரம்மின் அடியில் தங்கும் கசடை மீண்டும் ஜீவாமிர்தம் தயாரிக்கப் பயன்படுத்தலாம். சுபாஷ் பாலேக்கர் நாட்டு மாட்டுச் சாணம்தான் ஏற்றது என்பார். என்னிடம் நாட்டு+கலப்பினம் கலந்த மாடுகள்தான் இருக்குது. அதேமாதிரி அருகிலுள்ள ரைஸ்மில்களில் பருப்பைவிடக் குறைந்த விலைக்கு நொய் கிடைக்குது. அதை வாங்கி மாவாக்கிப் பயன்படுத்தலாம்” என்கிறார் ஜெகதீசன்.

தண்ணீர் வசதி அவசியம்

“களிமண், செம்மண், வண்டல் மண் உள்ளிட்ட அனைத்து வகையான மண் வகைகளிலும் பாக்கு மரங்கள் வளரும். முன்பெல்லாம் மலைப்பாங்கான பகுதிகளில்தான் சாகுபடி செஞ்சாங்க.

இப்போ சமவெளிப் பகுதிகள்லயும் அதிகமா சாகுபடி செய்றாங்க. பட்டுக்கோட்டை, கருமந்துறை, மேட்டுப்பாளையம் பகுதியிலெல்லாம்கூட அதிகமா சாகுபடி செய்றாங்க. பாக்குச் சாகுபடிக்கு தண்ணீர் வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும். தண்ணீர் வசதி இல்லாமல், பாக்குச் சாகுபடியில் இறங்க வேண்டாம்” என்கிறார் ஜெகதீசன்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்

ரு ஏக்கர் நிலத்தில் பாக்குச் சாகுபடி செய்வது குறித்து ஜெகதீசன் சொல்லிய தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

பாக்குச் சாகுபடிக்கு நன்கு தண்ணீர் வசதியுள்ள நடுத்தர மற்றும் வளமான நிலங்கள் ஏற்றவை. தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் டிராக்டரில் 2 சால் உழவு ஓட்டி, பொக்லைன் இயந்திரம் கொண்டு நிலம் முழுவதும் மண்ணை இரண்டரை ஆழத்துக்குத் தளர்த்திவிட வேண்டும். பிறகு 6-க்கு 7 அடி இடைவெளியில் 1 அடி ஆழத்துக்கு மண்வெட்டியால் குழிகள் எடுக்க வேண்டும். இந்த இடைவெளியில் சுமார் 1,000 குழிகள் எடுக்கலாம். ஒரு கிலோ மண்புழு உரம், ஒரு கிலோ ஜீவாமிர்தத்தில் செறிவூட்டப்பட்ட தொழுவுரம், 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கைக் குழியில் போட்டு பாக்கு கன்றுகளை மழைக்காலத்தில் நடவு செய்யவேண்டும். பாக்குக் கன்றுகளுக்கிடையில் இதே இடைவெளியில் வாழைக் கன்றுகளை நடவு செய்து சொட்டுநீர்க் குழாய்களைப் பதித்துத் தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும்.

நடவு செய்த 10-ம் நாளில் 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். தொடர்ந்து 10 நாள்களுக்கு ஒருமுறை வாழை அறுவடை வரை கொடுத்து வரவேண்டும். 20-ம் நாள் நன்கு மட்கிய தொழுவுரத்தில் ஜீவாமிர்தத்தைக் கலந்து மண்ணில் நன்கு ஈரப்பதம் இருக்கும்போது, செடிக்கு அரைக்கிலோ என்று கொடுக்க வேண்டும். பூச்சித் தாக்குதலைத் தவிர்க்க ஜீவாமிர்தத்தை டேங்குக்கு 1 லிட்டர் என்ற கணக்கில் தெளிக்கலாம். 11 மாதத்தில் வாழை அறுவடை முடிந்துவிடும். வாழையின் பக்கக் கன்றுகளை வளரவிட்டு, தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு வாழை அறுவடை செய்து வரலாம். மூன்றாண்டுகளுக்குப் பிறகு பாக்கு மரங்கள் வாழைக்கு இணையாக வளர்ந்து விடுவதால், வாழையின் வளர்ச்சி பாதிக்கப்படும். அதனால், வாழை மட்டைகளை உரித்து அப்படியே நிலத்திற்கு மூடாக்காக இட்டுவிட வேண்டும்.

பிறகு ஐந்தாவது ஆண்டிலிருந்து பாக்கு மரத்தில் மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும். ஏழாவது ஆண்டிலிருந்து நல்ல மகசூல் கிடைக்கும். தொடர்ந்து 30 ஆண்டுகள் வரை மகசூல் எடுக்கலாம். தென்னைக்குக் காண்டமிருக வண்டுபோல, பாக்குக்கு மூக்கு வண்டு ஒரு பெரிய பிரச்னை. இந்தத் தாக்குதல் கண்டால் ஒரு மரத்துக்கு 200 கிராம் வேப்பம் பிண்ணாக்கை வைத்துக் கட்டுப்படுத்தலாம். அதேபோன்று பாளை போடுவதற்கு முன் வேப்பம் பிண்ணாக்கு, ஆமணக்கு பிண்ணாக்கு, தொழுவுரம், எள்ளுப் பிண்ணாக்கு ஆகியவற்றைச் சரிவிகிதத்தில் கலந்து, மரத்துக்குப் பக்கத்தில் அரைக்கிலோ குழிதோண்டி வைத்தால் நல்ல மகசூல் கிடைக்கும்.