
பனை
சில தனிநபர்களின் சுயநலன்களுக்காகவும், அரசின் வளர்ச்சி திட்டங்களுக்காகவும் நாள்தோறும் ஏராளமான பனைமரங்கள் அழிக்கப்படுகின்றன. இவற்றைப் பாதுக்காக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல் எழுப்பியதால், மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி பெறாமல், பனை மரங்களை வெட்டக்கூடாது எனக் கடந்த ஆண்டுத் தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், அதற்கு எந்தப் பலனும் இல்லை.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் என்ற நபர் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘லால்குடி அருகே அபிஷேக புரத்தில் மின் கம்பங்கள் அமைப்பதற்காக, சாலையில் உள்ள பனை மரங்களை மின்சார வாரியம் அகற்ற உள்ளது. அவற்றைப் பாதுகாக்க உத்தரவிட வேண்டும்’’ எனக் குறிப்பிட்டு யிருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘‘தவிர்க்க முடியாத காரணங் களுக்காகப் பனை மரங்களை வெட்டுவதாக இருந்தால், இருமடங்கு பனை மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும்’’ என உத்தரவிட்டது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பனை செயற்பாட்டாளரும், ‘பனை மர சாலை’ என்ற புத்தகத்தை எழுதியவருமான காட்சன் சாமுவேல், “தமிழ்நாட்டின் மாநில மரம், பனை மரம். ஆனால், இதுவரையிலும் தமிழக அரசால் ஒரு முறைகூட, பனை மரங்கள் குறித்த கணக்கெடுப்பு இங்கு நடத்தப் படவே இல்லை. இது தொடர்பான அதிகாரபூர்வ ஆவணங் களும் இல்லை. இலங்கையைச் சேர்ந்த பனை ஆர்வலர் ருபேந்திரன், தமிழ் நாட்டில் பனை மரங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, 1965-ம் ஆண்டு எழுதிய ‘பனை வளம்’ என்ற புத்தகத்தில் தமிழ்நாட்டில் 5 கோடி பனை மரங்கள் இருப்பதாகப் பதிவு செய்துள்ளார். ஆனால், அதற்குப் பிறகு, ஏராளமான பனை மரங்கள் அழிக்கப்பட்ட நிலையில், இப்போதும்கூடத் தமிழ்நாட்டில் 5 கோடி பனை மரங்கள் இருப்பதாகச் சிலர் தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்தெந்த ஊரில் எவ்வளவு மரங்கள் உள்ளன என அரசின் சார்பில் அதிகாரபூர்வ கணக்கெடுப்பு நடத்தப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம்.
மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றுப் பனை மரங்களை வெட்டலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் நெடுஞ்சாலைத் துறை, வீட்டு வசதி வாரியம், பொதுப்பணித் துறை, மின்சார வாரியம் ஆகியவைதான் பனை மரங்களை வெட்டி வீழ்த்திக்கொண் டிருக்கின்றன. வெட்டப்படும் ஒரு மரத்துக்கு, மாற்றாக இரண்டு பனங்கன்றுகள் நடுவதால் மட்டுமே இழப்பை ஈடு செய்துவிட முடியாது. அவை வளர்க்கப்படும் என்பதற்கு உத்தர வாதம் இல்லை. நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு... பனை மரங்கள் வெட்டப்படுவதை மேலும் ஊக்குவிக்கும். நீதிமன்றம் நல்லெண் ணத்துடன் இதைக் கூறியிருந்தாலும், நடைமுறை சிக்கல்கள் வேறு விதமாக உள்ளன.
சில தவிர்க்க முடியாத காரணங் களுக்காக அரசுத் துறைகள் பனை மரங்களை வெட்டுவது தவிர்க்க முடியாதது என்னும் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆகவே, இதை வெட்டுவோருக்கு அனுமதி அளிக்கும் பொறுப்பை பனைத் தொழிலாளர் நல வாரியத்துக்குக் கொடுப்பதுதான் சரியானது. இதற்கு சட்டபூர்வமான விதிமுறைகளை வகுக்க வேண்டும். மரங்களை வெட்டுவதற்கு முன் அந்த இடத்தின் வரைபடத்துடன் மனு அளிக்கப்பட வேண்டும். வெட்டுகின்ற மரங்களுக்கு ஏற்ப, ஒரு மரத்துக்கு ரூ.1,000 வீதம் பனைத் தொழிலாளர் நல வாரியத்துக்குச் செலுத்த வேண்டும்.
அப்பகுதியிலுள்ள அரசு அதிகாரியுடன் இணைந்து நேரில் ஆய்வு செய்து, அனுமதி அளிக்கலாம். ஒருவேளை எவ்வித முறையான அனுமதியும் இன்றி வெட்டினால், ஒரு மரத்துக்கு 1 லட்சம் ரூபாய் வீதம் அபராதம், ஓராண்டு கடுங்காவல் தண்டனை யும் சம்பத்தப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டும்.

மேலும், பனை மரங்களை வெட்டுகிறவர்கள், அதற்கு நிகரான எண்ணிக்கையில் வேறு எங்கு பனை மரங்களை நடுகிறார்கள் என்ற வரைபடத்தை அளிக்க வேண்டும். ஒரு பனை மரத்துக்கு 3 - 5 சதுர மீட்டர் இடம் ஒதுக்க வேண்டும். அந்த இடத்தைச் சட்ட பூர்வமாக உத்தரவாதப்படுத்த வேண்டும். அந்த இடத்தில் 100 ஆண்டுகளுக்கு எவ்வித வளர்ச்சிப் பணிகளும் நடைபெறாது என்கிற உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். மேலும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்குள்ள பனை மரங்களின் வளர்ச்சி குறித்துப் புகைப்பட ஆதாரங்களைத் தமிழக அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நேரில் சென்று ஆய்வு நடத்தி, உண்மைக்குப் புறம்பாக இருக்கும்பட்சத்தில், நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும்.
அரசு துறைகள் பனை மரங்களை வெட்டுவதாக இருந்தால் பாரம்பர்யமாகக் கோடரிகளை வைத்து வெட்டுபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அவர்கள் பனைத் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களாக இருக்க வேண்டும். வெட்டிய மரங்களை, சரியாகப் பிளந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையாக ஒப்படைக்க வேண்டும்.
ஏழை எளிய மக்கள், பனை சார்ந்து வாழ்கின்றவர்கள்... தங்கள் வீடுகளின் கட்டுமான பணிக்குப் பயன்படுத்திக்கொள்ள, இவற்றைக் குறைந்த விலையில் விற்பனை செய்யலாம். அரசு துறையினர், பொதுமக்கள் தன்னிச்சையாகப் பனை மரங்களை வெட்டு வதைக் குறைக்க, இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம்’’ என்று தெரிவித்தார்.