Published:Updated:

`அந்த வழக்குகளை உடனே திரும்பப் பெறுக!' - விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம்

உண்ணாவிரதப் போராட்டம்
உண்ணாவிரதப் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைமை தாங்கி நடத்தி வருகிறது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பல்வேறு விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இன்று மாலை வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

உண்ணாவிரதப் போராட்டம்
உண்ணாவிரதப் போராட்டம்

இதுகுறித்துப் பேசிய அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழக ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன். "ஆரம்பத்திலிருந்தே வேளாண் சட்டங்கள் வேண்டாம் என்பதே எங்கள் நிலைப்பாடு. அதையும் மீறி சட்டத்தை நிறைவேற்றியது மத்திய அரசு. தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்த விவசாயிகள் மீது காவல்துறையை வைத்து தாக்குதல் நடத்திவிட்டு, இப்போது விவசாயிகளே வன்முறையைத் தூண்டினார்கள் என்று அவதூறு பரப்புகிறார்கள் ஆட்சியாளர்கள்.

விவசாயிகள் நியாயமாகவும் அமைதி வழியிலும் போராடி வருகிறார்கள். ஆனால், அவர்களுடைய போராட்டத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது மத்திய பி.ஜே.பி அரசு.

இது போதாதென்று திருவாரூர் மாவட்டத்தில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீது வழக்குகளைப் போட்டுள்ளது தமிழக அரசு. அவை எல்லாவற்றையும் திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசோடு கூட்டு சேர்ந்துகொண்டு தமிழக அரசும் விவசாயிகள் விரோதபோக்கை கடைப்பிடித்துக்கொண்டு வருகிறது. இதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். திருவாரூரில் ஜனநாயக எதிர்ப்பைக் காட்டிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.

பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்

விவசாயிகள் அறவழியில் போராட உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும். இல்லையேல் எங்களுடைய போராட்டம் தொடரும்" என்றார்.

காந்தி நினைவு நாளில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பல காந்திய ஆதரவாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தனிப்பட்ட முறையில் அங்கங்கே இருந்தபடியே உண்ணா நிலையை மேற்கொண்டு இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு