Published:Updated:

வேளாண் சட்டங்கள்: `மத்திய அரசு இதைச் செய்தால்தான் போரட்டத்தைக் கைவிடுவோம்!' - விவசாயிகள் திட்டவட்டம்

``இந்தப் போராட்டம் உலகம் முழுக்க கவனிக்கப்பட்டதால், மூன்று வேளாண் சட்டங்கள்லயும் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முன் வந்துச்சு. ஆனா, இந்தச் சட்டங்களை முழுமையா வாபஸ் வாங்கணும்ங்கறதுல போராட்டக்குழு உறுதியா இருந்துச்சு."

நவம்பர் 19... இந்திய விவசாயிகளின் வரலாற்றில் மறக்க முடியாத ஓர் நெகிழ்ச்சியான நாள். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஆர்ப்பரித்தார்கள். காரணம், மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இச்சட்டங்களுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் கடந்த பல மாதங்களாகப் போராடி வரும் லட்சக்கணக்கான விவசாயிகளின் அர்ப்பணிப்புக்கும், 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிர்தியாகத்துக்கும் கிடைத்த வெற்றியாக இது போற்றப்படுகிறது. அதேசமயம், `இந்த மூன்று வேளாண் சட்டங்களும் அடிப்பட்ட பாம்பு... இது மீண்டும் எழுந்து வரக்கூடிய ஆபத்து இருக்கிறது' என விவசாயிகள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi
Jeff J Mitchell/Pool Photo via AP
`இவை அத்தனையையும் மீறித்தான் வென்றார்கள்!' - விவசாயிகளின் போராட்டம் தேசத்துக்கு சொல்வது என்ன?

குறிப்பாக, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் நிர்வாகிகள், `மத்திய பா.ஜ.க அரசை நாங்கள் நம்ப தயாராக இல்லை. இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக, நாடாளுமன்றத்தில் சட்டபூர்வமாகத் தீர்மானம் நிறைவேற்றினால்தான், எங்களது போராட்டத்தைக் கைவிடுவோம் எனத் தெரிவித்துள்ளார்கள்.

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழக விவசாயிகளிடம் பேசினோம். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ஈசன், ``இந்தப் போராட்டம் உலகம் முழுக்க கவனிக்கப்பட்டதால், மூன்று வேளாண் சட்டங்கள்லயும் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முன் வந்துச்சு.

ஆனா, இந்த சட்டங்களை முழுமையா வாபஸ் வாங்கணும்ங்கறதுல போராட்டக்குழு உறுதியா இருந்துச்சு. அதோடு, விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை நீக்கக்கூடிய மின்சார திருத்தச்சட்டத்தை வாபஸ் வாங்கணும், அனைத்து விளைபொருள்களுக்கு குறைந்தப்பட்ச ஆதரவு விலையை அறிவிக்கணும்ங்கற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது.

விவசாயி ஈசன்
விவசாயி ஈசன்

இந்த மூன்று கோரிக்கைகளையும் சட்டபூர்வமாக நிறைவேத்துற வரைக்கும் டெல்லி போராட்டம் தொடர்ந்து நடக்கும். நவம்பர் 29-ம் தேதி நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் தொடங்குது. தமிழ்நாடு சார்பாக இங்கயிருந்து பத்து விவசாயிகள் கலந்துக்குறோம்’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமல்நாதன், ``இந்தப் போராட்டத்துல 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்த்தியாகம் செஞ்சிருக்காங்க. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தரணும். அவங்களோட வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கணும். போராடக்கூடிய விவசாயிகளைத் தேசத்துரோகிகள், புரோக்கர்கள்னு மத்திய ஆட்சியாளர்கள் கொச்சைப்படுத்தினாங்க.

சுந்தர. விமல்நாதன்
சுந்தர. விமல்நாதன்

அதற்கு வருத்தம் தெரிவிக்குறதோடு மட்டுமல்லாமல், இப்போராட்டத்துல பங்கெடுத்த விவசாயிகள், உயிர்த்தியாகம் செய்த விவசாயிகளையும் தியாகிகளாக அறிவிச்சு, சான்றிதழ் வழங்கணும். வட இந்திய விவசாயிகளுக்கு நேரில் நன்றி சொல்றதுக்காகவும், உயிர்த்தியாகம் செஞ்ச விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் நவம்பர் 29-ம் தேதி டெல்லியில் நடக்குற டிராக்டர் பேரணியில் நாங்களும் கலந்துக்குறோம்’’ எனத் தெரிவித்தார்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களில் ஒருவரான, காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன், ``மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் வாங்க மாட்டோம்னு எவ்வளவோ பிடிவாதமாக இருந்த மத்திய அரசு, இப்ப இந்தளவுக்கு இறங்கி வந்திருக்கு.

இளங்கிரன்
இளங்கிரன்

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள்ல தேர்தல் நெருங்குனதுனாலதான் மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்துச்சுனு, இதை ஒரு ஒரே வரியில சுருக்கி பார்க்கக் கூடாது.

லட்சக்கணக்கான விவசாயிகள், டெல்லியில் கடந்த பல மாதங்களாக இந்தப் போராட்டத்தை நடத்தி இப்ப வரைக்கும் தொடர்றதுனாலதான், இது தேர்தல்ல எதிரொலிக்குமேனு பயம் வந்துருக்கு. இதுவே விவசாயிகளுக்கு கிடைச்ச முதல் வெற்றிதான். இப்போராட்டத்துல உயிர்த்தியாகம் செஞ்ச, 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு தலைநகர் டெல்லியின் முக்கிய பகுதியில, நினைவு மண்டபம் அமைக்கணும்.

வேளாண் சட்டங்கள்: ``மோடி கூறிய புதிய ஆய்வுக்குழுவில்தான் சூட்சுமம் உள்ளது!" - எச்சரிக்கும் மணியரசன்

இப்ப கிடைச்சிருக்குற முதல்கட்ட வெற்றியை அந்தத் தியாகிகளுக்கு காணிக்கையாக்குறோம்’’ என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு