Published:Updated:

பூச்சிக் கட்டுப்பாடும் பனை மரங்களும்! - நம்மாழ்வார் சொல்லிய ஒப்பீடு!

நம்மாழ்வார்
பிரீமியம் ஸ்டோரி
நம்மாழ்வார்

நினைவு

பூச்சிக் கட்டுப்பாடும் பனை மரங்களும்! - நம்மாழ்வார் சொல்லிய ஒப்பீடு!

நினைவு

Published:Updated:
நம்மாழ்வார்
பிரீமியம் ஸ்டோரி
நம்மாழ்வார்
ம்மாழ்வார் கருத்துகள் காலத்தால் தவிர்க்க முடியாதவை என்பதை அரசு அதிகாரிகள் பலரும் உணர்ந்து இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் பொதுப்பணித்துறையிலிருந்து ஓய்வுபெற்ற இளங்கோவன். நம்மாழ்வாரைக் அழைத்துவந்து, பொதுப்பணித்துறை சார்பாகக் கூட்டங்கள் நடத்தி அதன் மூலம் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறார்.

நம்மாழ்வார் சிறப்பிதழுக்காகப் பொதுப்பணித்துறையின் ஓய்வுபெற்ற சிறப்புத் தலைமைப் பொறியாளரும், தற்போதைய தமிழ்நாடு நீராதார வளர்ச்சி குழுமத் துணைத் தலைவருமான இளங்கோவனிடம் பேசினோம். “பொதுப்பணித்துறையில் சுற்றுச்சுழல் கோட்டம் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு வடிநிலத்திலும் பெய்யும் மழையின் அளவு, விவசாயம், தொழிற்சாலை, நகரங்களுக்குக் குடிநீர் அளவு எனத் தனித்தனியாக ஆய்வு செய்து, அதில் உள்ள சூற்றுச்சூழல் பிரச்னைகளைக் கண்டறிவதுதான் அதன் நோக்கம். நதி தொடங்கும் பகுதியிலிருந்து, அது கடலில் கலப்பது வரை பல பயன்பாடுகள் இருக்கின்றன. பயன்பாட்டுக்குப் பிறகு வரும் கழிவுநீரைச் சரியாக மேலாண்மை செய்யாவிட்டால் அந்த நீர்நிலை மாசடையும். தொழிற்சாலை கழிவுநீருக்கு இணையாக விவசாயத்திலும் ரசாயன கழிவுகள் கலப்பதை உணர்ந்தோம்.

இதற்கான மாற்றை யோசித்துக் கொண்டிருந்தபோதுதான், நம்மாழ்வார் மாற்று விவசாயம் குறித்துப் பரப்புரை செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்தோம். அப்போது அவர், ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார். அங்கு சென்று நாங்களும் கூட்டத்தில் கலந்துகொண்டு அவரது கருத்துகளைக் கேட்கத் தொடங்கினோம். அவரது கருத்துகள் எங்களைக் கவர்ந்தது. தொடர்ந்து அவரது கருத்துகளை நாங்களும் மக்களிடம் கொண்டு செல்ல முயற்சி எடுத்தோம்.

2004-ம் ஆண்டுச் சத்தியமங்கலம் பகுதியில், இயற்கை வேளாண்மை குறித்து, துறை சார்பாக நாங்கள் நடத்திய விழிப்புணர்வு கூட்டத்தில், நம்மாழ்வார் கலந்துகொண்டார். அதிலிருந்து 2012-ம் ஆண்டுவரை, ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் நடத்திய கூட்டங்களுக்கு அவர் தேதி கொடுத்தார். அவர் தலைமையில் 80 கூட்டங்களை நடத்தியிருக்கிறோம். அப்போது, எந்த அரசுத்துறையும் அவரை அழைக்காது. காரணம், ‘அரசுதான் பசுமைப் புரட்சியைக் கொண்டு வந்தது’ என்று அவர் கடுமையாகச் சாடுவார். ஆனால், நாங்கள் கவனித்தவரை சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு, அவர் சொல்லும் கருத்துகள் சரியாக இருந்தன. கருத்துகள் கடுமையாக இருந்தாலும், பிரச்னைகளை மறைத்துக் கொண்டிருக்க முடியாது என்பதால் அவரை அழைத்துக் கூட்டம் நடத்தினோம். இதைத் தொடர்ந்து அவரது சிஷ்யர்கள், இயற்கை வேளாண்மை முன்னோடிகளை வைத்தும் நிறைய கூட்டங்களை நடத்தியுள்ளோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அசைவ பூச்சிகள் அவசியம்

உணவுச்சங்கிலி எப்படி இயற்கையைச் சார்ந்திருக்கிறது என்பதை அழகாகச் சொல்வார். பூச்சிகளைக் கொல்வதற்காக, பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துகிறோம். நமக்கு எதிரி சைவப் பூச்சிகள்தான். அவைதான் இலைதழை, பழங்களைச் சாப்பிடும். அசைவப் பூச்சிகள் இருந்தால், இயற்கையிலேயே அவை சைவப் பூச்சிகளைச் சாப்பிட்டுவிடும். ஆனால், பூச்சிக்கொல்லிகளால் அசைவப் பூச்சிகள் அழிந்துவிடுகின்றன என்பதை அவர்தான் எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் பேசும் இளங்கோவன்
கூட்டத்தில் பேசும் இளங்கோவன்

பனைமரத்தில் பறவைகள் கூடுகட்டும்போது, அவற்றுக்கான இரை வயற்காட்டில் இருக்கின்றன என்று சொல்லிப் பூச்சிக்கட்டுப்பாடு முறையைக் கூறினார். அதன்பிறகுதான், பனைமரங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று நாங்கள் தீவிரமாக இறங்கினோம். அதன் தொடர்ச்சியாகப் பழனி அருகே ஏரிகளைப் புனரமைப்பதற்காக 5,000 பனைமரங்கள் வெட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தினோம்.

முதலில் ஈரோடு மாவட்டத்தில்தான் இயற்கை வேளாண்மை அதிகம் செய்து வந்தனர். ஐயாவை வைத்து, நாங்கள் கூட்டங்கள் நடத்திய பிறகு திருப்பூரில் நிறைய பேர் இயற்கை வேளாண்மைக்கு மாறிவிட்டனர். மேலும், பொள்ளாச்சி சுற்றுவட்டாரங்களிலும் இயற்கை வேளாண்மை அதிகரித்து வருகிறது. இயற்கை வேளாண்மையில் தமிழகத்துக்கு வழிகாட்டும் விதமாகக் கொங்கு மண்டலம் இருக்கிறது. இவையெல்லாம், நம்மாழ்வாரின் கருத்துகளால் ஏற்பட்ட மாற்றங்கள்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இயற்கை மட்டுமல்ல...

இலக்கிய அறிவும் அதிகம்

உயர்ந்த கருத்துகளை, சாமானியர்களுக்கும் புரியும்படி எளிமையாகப் பேசுவார். ஒருவர் உணர்ச்சிவசப்படுவதுபோல் பேசுவது எளிது. ஆனால், சிந்திக்க வைப்பதுபோலப் பேசுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அவர் 4 மணிநேரம் பேசினால்கூட, கூட்டத்திலிருந்து ஒருவர்கூட எழுந்து செல்லமாட்டார்கள். இலக்கிய அறிவும் அவருக்கு அதிகம். தொல்காப்பியம், புறநானூறு, திருக்குறள் ஆகியவற்றை மேற்கோள்காட்டி, வரலாற்றுச் சிறப்புமிக்கத் தமிழர்கள் இப்படிச் சீரழிந்திருக்கிறோம் என்பதைக் கூறுவார். தமிழில் எவ்வளவு அழகாகப் பேசுகிறாரோ, அதேபோல அழகான சொற்களைப் பயன்படுத்தி ஆங்கிலத்திலும் சரளமாகக் கருத்துகளை வெளிப்படுத்துவார்” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“நான் பார்த்தவரை, மார்க்சியம், பெரியாரிஸம், அம்பேத்கரிஸசம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் கருத்துகள் இருந்தன. ‘பகுத்தறிவோடு செயல்பட வேண்டும், அறிவியல் பார்வையோடு அணுக வேண்டும், மரபணு மாற்று விதைகள், கொடுமையான நஞ்சு ஆகிய பிரச்னைகளுக்குச் சட்டங்கள்மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்’ என்று சொல்வார்.

நம்மாழ்வார்
நம்மாழ்வார்

நண்பர்களுடன் இணைந்து வந்தவாசியில் இயற்கை வேளாண்மை செய்து வருகிறேன். அவரிடம் பெற்ற அறிவினால்தான் வேளாண்மை செய்கிறோம். 2007-ம் ஆண்டு நான் வேலையை விட்டுவிட்டு, அவருடன் சென்றுவிடலாம் என்று முடிவெடுத்துவிட்டேன். அதற்கு அவர், ‘பொறியாளர் ஐயா வாங்க.. தயவு செய்து வேலையை விட்டு விடாதீர்கள். எங்களை மாதிரி வேலை பார்க்க நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், அரசு நிர்வாகத்திடம் இதைக் கொண்டு செல்வதற்கு உங்களைப் போன்றவர்கள் அங்கிருக்க வேண்டும்’ என்று எடுத்துரைத்தார். இதையடுத்து, எனது முடிவை மாற்றிக்கொண்டு இன்னும் தீவிரமாகப் பணியாற்றினேன்.

ஐயா வருகிறார் என்றாலே, அந்தக் கூட்டத்தில் குடும்பத்துடன் கலந்து கொள்வோம். 2008-ம் ஆண்டு ஒரு கூட்டத்துக்கு வந்திருந்தபோது ஐயா எங்கள் வீட்டுக்கு வந்தார். அது பொங்கல் திருநாள். அப்போது, அவரது கையால் வாழை மரத்தை நட்டு, குடும்பத்துடன் அவரிடம் ஆசீர்வாதம் பெற்றோம். அந்த வாழைமரம் வளர்ந்து தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு, 10 குலைகளைப் போட்டது. அதை என்னால் மறக்கவே முடியாது. நான் கட்டடப் பொறியியலைப் படித்திருந்தாலும், என்னுடைய முனைவர் பட்டத்திற்கு நான் சுற்றுச்சூழலைத்தான் கருவாக வைத்தேன். அதற்கு அடிப்படை ஐயாவின் தொடர்புதான்.

கருத்துகள் வடிவில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

அவர் மறைவுக்குப் பிறகு, இயற்கை வேளாண்மை பல ஆயிரம் மடங்கு அதிகரித்துவிட்டது. அதற்கு முன்பு, இயற்கை வேளாண்மை குறித்துப் பேசினாலே ஒரு மாதிரி யோசித்தனர். இப்போது, ஊடகங்கள், யூட்யூப், சமூகவலைதளங்களில் அவரது கருத்துகள் வேகமாகப் பரவி வருகின்றன.

அரசை எதிர்த்தாலும், அவர் இறந்தபோது அரசு, அவருக்கு மரியாதை செலுத்தியது. அவருடைய வழிமுறைகளை மறுத்தாலும், அவருடைய கருத்துகளை யாரும் மறுக்க முடியாது. அரசுடன் அவர் சற்று நெருங்கிய பிறகு, எங்கள் முதன்மைத் தலைமைப் பொறியாளர், தலைமைப் பொறியாளர் தலைமையில் நடந்த கூட்டங்களில் ஐயா கலந்துகொண்டார். அவர் உயிருடன் இருந்திருந்தால் அரசுக்கு ஆலோசகராகக் கூட வருவதற்கு வாய்ப்பிருந்தது. இப்போதும், அவருடைய கருத்துகள் எல்லா இடங்களிலும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. என்னுடைய ஆசான், குரு, தந்தை, நண்பர் எல்லாம் அவர்தான். என்னைப் பொறுத்தவரை அவர் இன்னும் மறையவில்லை. எங்கள் குடும்பத்தில் அவர் இப்போதும் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்” என்றார் அழுத்தமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism