Published:Updated:

`தூர்வாரும் குளத்தில் முதல் பிறந்தநாள் விழா!' - புதுக்கோட்டை இளைஞர்களை நெகிழ வைத்த பெற்றோர்

மணிமாறன்.இரா
Vengadesh R

புதுக்கோட்டை கொத்தமங்கலத்தைச் சேர்ந்த பெற்றோர் தன் குழந்தையின் பிறந்தநாளை நீர்நிலைகளைத் தூர்வாரும், இளைஞர்களுடன் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தனர். கூடவே, தூர்வாரும் பணிக்காக ரொக்கப் பணத்தையும் கொடுத்து அசத்தியுள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாட்டம்
பிறந்தநாள் கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தன்னெழுச்சியுடன் தங்கள் சொந்த செலவில் நீர் நிலைகளைத் தூர்வாரும் பணியைக் கடந்த 100 நாள்களுக்கு முன்பு தொடங்கினர். இளைஞர்கள், தன்னார்வலர்கள், வெளிநாடுவாழ் நண்பர்கள், பொதுமக்கள் என அனைவரின் ஒத்துழைப்பாலும் 100 நாள்களைக் கடந்தும் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

தூர்வாரும் பணி
தூர்வாரும் பணி

குளம், ஏரி, வாய்க்கால்கள் என அனைத்தும் தூர்வாரப்பட்டுள்ளது. புதுக்கோட்டை இளைஞர்களின் இந்தச் செயலைப் பார்த்து தற்போது அருகருகே உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் நீர்நிலைகளைத் தூர்வாரும் பணியைத் தொடங்கிவிட்டனர். நீர் நிலைகளைப் பழையநிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொத்தமங்கலம் பகுதி மக்களுக்கு வந்ததன் பலனாக இது சாத்தியமாகியிருக்கிறது.

தூர்வாரும் பணி தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதற்காக, கொத்தமங்கலத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தன் சேமிப்பு பணத்தை வழங்கினார். பள்ளி மாணவர்கள் உண்டியல் பணத்தை வழங்கினர். திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதிகள் தங்களால் முடிந்த ரொக்கப் பணத்தை தூர்வாரும் இளைஞர்களிடம் கொடுத்தனர். இப்படிக் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற நிதியை ஏதோ ஒரு வகையில் இளைஞர்களிடம் கொடுத்து தூர்வாரும் பணிக்குப் பக்கபலமாக இருந்து வருகின்றனர்.

பிறந்தநாள் கொண்டாட்டம்
பிறந்தநாள் கொண்டாட்டம்

இதன் தொடர்ச்சியாக, கொத்தமங்கலத்தைச் சேர்ந்த தாமஸ் என்பவர், தன்னுடைய குழந்தை துருவனின் முதல் பிறந்த நாளைத் தூர்வாரும் பணியில் ஈடுபடும் இளைஞர்களுடன் சேர்ந்து குளத்தில் கொண்டாட முடிவு செய்தார். அதன்படி, எந்தவித ஆடம்பர நிகழ்வுகளுமின்றி, குளத்தில் பொங்கல் வைத்து, மரக்கன்றுகள் நட்டு பிறந்தளைக் கொண்டாடினர். ரூ.5,000 ரொக்கப் பணத்தை துருவன், தூர்வாரும் இளைஞர்களிடம்  நிதியாகக் கொடுத்து அவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தான். உறவினர்கள், நண்பர்கள், இளைஞர்கள் எனப் பலரும் குழந்தையை வாழ்த்தினர்.

இதுபற்றி, தாமஸ் கூறும்போது,  ``பிறந்தநாள் விழாக்களை மண்டபத்தில் நடத்துவதற்கு எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கு 2 பெண் பிள்ளைகள், ஒரு பையன். பெண் பிள்ளைகள் பிறந்தநாள் விழாவையும் எளிமையாக ஏதாவது ஒரு ஆசிரமத்தில் வைத்து நடத்தி வருகிறோம்.

தாமஸ்
தாமஸ்

அதேபோல், மகனின் பிறந்தநாளை குளத்துல கொண்டாடி நம்மூர் இளைஞர்களுக்கு உதவி  செய்யலாம்னு நெனச்சேன். வீட்டில் உள்ளவங்களும் இதுக்கு சம்மதம் தெரிவிச்சாங்க. மிகுந்த உற்சாகத்தோடு பிறந்தநாளைக் கொண்டாடி முடித்தோம்" என்றார் நெகிழ்ச்சியுடன்.