Published:Updated:

கஜா புயலில் சாய்ந்த செம்மரங்கள்..! - விற்க முடியாமல் புலம்பும் புதுக்கோட்டை விவசாயிகள் #MyVikatan

செம்மரக் கட்டைகள்
செம்மரக் கட்டைகள்

மரங்களில் விலை உயர்ந்த ரகமான செம்மரங்கள், இப்பகுதி விவசாயிகள் சிலரால் அவர்களின் சொந்த நிலங்களில் வளர்க்கப்பட்டுவந்தன.

கஜா புயல் தாக்குதல் நிகழ்ந்து ஓராண்டு முடியப்போகிறது. இதில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பல்லாயிரக்கணக்கான மரங்கள் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் அடியோடு சாய்ந்தன. குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவைச் சேர்ந்த கொத்தமங்கலம், சேந்தன்குடி, மாங்காடு, குலமங்களம், வடகாடு, அணவயல், கீரமங்கலம் இப்படி ஏராளமான கிராமங்கள் மரங்களை மட்டுமே நம்பியுள்ளன. அங்கிருந்த தென்னை, மா, பலா, வேம்பு, தேக்கு, சவுக்கு, செம்மரங்கள் உட்பட, அனைத்து மரங்களும் கஜா புயலின் கோரத் தாக்குதலுக்குத் தப்பவில்லை.

குறிப்பாக, மரங்களில் விலையுயர்ந்த ரகமான செம்மரங்கள், இப்பகுதி விவசாயிகள் சிலரால் அவர்களின் சொந்த நிலங்களில் வளர்க்கப்பட்டுவந்தன. இந்த மரங்கள் ஒவ்வொன்றின் வயதும் 25 முதல் 30 வருடங்களுக்கு மேலானவை. இந்த செம்மரங்களை பெரும் எதிர்காலக் கனவுடன் வளர்த்துவந்தனர். ஆனால், அவர்களின் வண்ணமயமான கனவுகளை எல்லாம் கஜா புயல் ஒரே இரவில் கபளீகரம் செய்துவிட்டது. கஜா புயலால் அனைத்தையும் இழந்து நிற்கும் இப்பகுதி விவசாயிகள், வேருடன் சாய்ந்த மரங்களைக்கூட வாங்கிச்செல்ல ஆள் இல்லாமல் அடிமாட்டு விலைக்கு விற்றனர்.

செம்மரக் கட்டைகள்
செம்மரக் கட்டைகள்

அப்படி புயலால் விழுந்த மரங்களில், செம்மரங்களை மட்டும் விவசாயிகளால் இன்னும் விற்பனை செய்ய முடியவில்லை. காரணம், செம்மரங்களை விற்பனை செய்வதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. வனத்துறை தலைவரிடமிருந்து இதற்குரிய ‘சர்டிஃபிகேட் ஆஃப் ஆரிஜின்’ என்று சொல்லக்கூடிய பூர்வீகச் சான்றிதழைப் பெற்றால் மட்டுமே, இந்த மரங்களுக்கு சொத்துடைமைக் குறி பெற்று, இருப்பு வைத்து விற்க முடியும். அப்படி சொத்துரிமைக் குறி பெற்றிருந்தால் மட்டுமே அவற்றை வாகனங்களில் எடுத்துச்செல்ல முடியுமாம்.

கஜா புயலால் ஆலங்குடி தாலுகாவில் மட்டும் 100 முதல் 150 டன் செம்மரங்கள் வேருடன் சாய்ந்துவிட்டன. தங்கள் சொந்த நிலத்தில் வளர்த்த இந்தச் செம்மரங்களை விவசாயிகள் துண்டுகளாக்கி, வீடுகளில் பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர்.

வேருடன் விழுந்த மற்றும் முறிந்துபோன செம்மரங்களை விற்பனை செய்வதற்கான சான்றிதழ் பெற இப்பகுதி விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்ட வனத்துறையினரிடம் பல முறை விண்ணப்பம் செய்துள்ளனர். ஆனால், ஓராண்டாகியும் இதுநாள் வரை சான்றிதழ் பெற முடியவில்லை. மேலும், இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் உட்பட, பலருக்கும் இப்பகுதி விவசாயிகள் மனு மேல் மனு அளித்தும் இன்னும் சான்றிதழ் பெற முடியவில்லையாம்.

செம்மரக் கட்டைகள்
செம்மரக் கட்டைகள்

இதனால், செம்மரங்களை விற்பனை செய்ய முடியாமல் இப்பகுதி விவசாயிகள் தவித்துவருகின்றனர். இதற்காகப் பல முறை புதுக்கோட்டை மாவட்ட வனத்துறையினருக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், வியாபாரிகளை நாங்கள் நேரடியாக அழைத்துவந்தால் மட்டுமே இந்தச் சான்றிதழ் வழங்க முடியும் என அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். கஜா புயலால் அனைத்தும் இழந்து நிற்கும் இம்மக்களுக்கு செம்மரங்களை விற்பனைசெய்தால், வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

-பழ.அசோக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு