Published:Updated:

ப்ரூஃப் கேட்கும் அதிகாரிகள்; தைல மரங்களை அகற்றிய விவசாயிகள்!- பிரசாரம் கொடுத்த மாற்றம் #MyVikatan

விழிப்புணர்வு பிரசாரம்
விழிப்புணர்வு பிரசாரம்

``வாழ்வில் வலி சுமக்கும் விவசாயப் பெருமக்கள் எங்கள் பிரசாரத்தை கூர்ந்து கவனிக்கிறார்கள்.’’

இயற்கைக்கும், விவசாயத்துக்கும் எதிரான வில்லன்கள் இங்கே ஏராளம். அவற்றில் முன்னணியாக முளைத்து நிற்கின்றன தைல மரம் எனும் யூகலிப்டஸ் மரங்களும், வேலிக் கருவைகளும்..! அவற்றை முற்றிலும் துடைத்தொழிப்பதை முதன்மையாகக் கொண்டு இத்துடன் இன்னும் பல்வேறு இயற்கை நலம் காக்கும் பிரசாரப் பணியில் தீவிரமாய்க் களம் இறங்கி இருக்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

புதுக்கோட்டையில் விழிப்புணர்வு பிரசாரம்
புதுக்கோட்டையில் விழிப்புணர்வு பிரசாரம்

கடந்த ஜூலை 2-ம் தேதி முதல் இந்த அமைப்பினர் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கிராமம் கிராமாகச் சென்று கலைக் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சிகளுடன் இயற்கையைக் காக்கும் பணியில் தொடர்ந்து தீவிரப் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்தப் பிரசாரக் குழுவுக்கு தலைமை தாங்கி நடத்திக்கொண்டிருப்பவர் இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ஜி.எஸ்.தனபதி. அவரிடம் இது குறித்துப் பேசினேன்.

``புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காப்புக் காடுகளின் மொத்தப் பரப்பளவு 75,000 ஏக்கர். அந்தக் காப்புக் காடுகளினால்தான் புதுக்கோட்டையில் இயற்கை வளம் பாதுகாக்கப்பட்டு வந்தது. அந்தக் காடுகள்தான் விவசாயிகளின் வாழ்க்கைக்கான கொடை. ஆனால், 1974-ல் தமிழக அரசு அந்தக் காடுகளை எல்லாம் தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்துக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுத்துவிட்டது. இதையடுத்து காப்புக்காடுகளை எல்லாம் அழித்துவிட்டு யூகலிப்டஸ் எனும் தைல மரக்காடுகளை மாநில அரசின் வனத் தோட்டக் கழகம் உருவாக்கிவிட்டது. காகித ஆலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களை உருவாக்குவதற்கு இந்த மரங்கள் பயன்படுகின்றன. அந்த வியாபார நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதுதான் தைல மரக் காடுகள். அவ்வாறான தைல மரக்காடுகளில் ஒவ்வொரு மர வரிசைகளுக்கும் இடையில் கிடங்குகள் வெட்டி, காடுகளைச் சுற்றி பெரிய அளவிலான வரப்புகள் அமைத்து இக்காடுகளில் பெய்யும் மழை நீரை இங்குள்ள நீர்நிலைகளுக்கு வரவிடாமல் தடுத்துள்ளனர்.

ஜி.எஸ்.தனபதி
ஜி.எஸ்.தனபதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் பெரிய கண்மாய், ஏரி, குளம், ஊரணி போன்ற 6003 நீர்நிலைகள் உள்ளன. இவற்றுள் பொதுப்பணித் துறையின்கீழ் 884 கண்மாய்களும், ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் 5028 நீர்நிலைகளும் இந்த மாவட்டத்தில் உள்ளன. இதற்கான முக்கிய நீர்வரத்து இந்த 75,000 ஏக்கர் காப்புக் காடுகளில் பெய்கின்ற மழைதான். அந்த மழைநீர் நீர்நிலைகளை நோக்கி வரமுடியாத அளவுக்கு இப்போது தமிழக வனத்தோட்டக் கழகம் தைல மரக்காடுகளில் வரப்புகளை உயர்த்திக் கட்டி உள்ளன.

மேலும், தைல மரக்காடுகள் உருவாக்கப்படுவதற்கு முன் இருந்த காப்புக்காடுகளில் 486 வகையான மூலிகைச் செடிகள் வளர்ந்திருந்தன. அவை எல்லாம் இப்போது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இந்த காப்புக் காடுகள் மான், நரி, முயல், ஓநாய், முள்ளம் பன்றி, முயல்கள் என நூற்றுக்கணக்கான வனவிலங்குகளின் வசிப்பிடமாகவும் பல லட்சக்கணக்கான பறவைகளின் வாழ்விடம் ஆகவும் இருந்தது. அவ்வாறு வசித்த மிருகங்களின் பதப்படுத்தப்பட்ட தலைகளும், உடல்களும் புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் வைத்திருப்பதை இன்றும் நாம் பார்க்க முடியும்.

தைல மரம் ஒட்டகம் மாதிரி. தண்ணீர் கிடைக்கும்போது ஒட்டுமொத்தமாக உறிஞ்சி வைத்துக்கொண்டு அதைச் சிறுகச் சிறுகக் குடிப்பதுபோல இந்த தைலமரங்களும் நீர் ஆதாரத்தை உறிஞ்சிக்கொள்கின்றன.
ஜி.எஸ்.தனபதி

ஆனால், இப்போது உள்ள இந்த தைலமரக்காட்டுக்குள் எந்த வனவிலங்குகளும் இல்லை. குரங்களையும், மயில்களையும் மட்டுமே காண முடிகிறது. அவைகளுக்கும் பசியாற வழி இன்றியும், குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமலும் குடியிருப்பு பகுதிகளை நோக்கி நகரத் தொடங்கிவிட்டன. இவை எல்லாம் இந்த பூமிக்கு தைல மரங்கள் கொடுத்த தண்டனை. ஏராளமான மான்கள் குடிப்பதற்குகூட தண்ணீர் இல்லாமல் தைலமரக் காட்டுக்குள் செத்துக் கிடக்கின்றன.

தைல மரம் காற்றில் உள்ள ஈரப்பதத்தை எல்லாம் உறிஞ்சக்கூடியது. அதாவது தைல மரம் ஒட்டகம் மாதிரி. தண்ணீர் கிடைக்கும்போது ஒட்டுமொத்தமாக உறிஞ்சி வைத்துக்கொண்டு அதைச் சிறுகச் சிறுகக் குடிப்பதுபோல இந்த தைலமரங்களும் நீர் ஆதாரத்தை உறிஞ்சிக்கொள்கின்றன. இந்த தைல மரத்தின் நிழலிலும், சருகுகள் கிடக்கும் இடங்களிலும் ஒரு புல் பூண்டுகூட முளைப்பது இல்லை. அதனால்தான் எந்த வன உயிரினங்களும் அங்கு வசிக்க முடியாமல் காணாமல்போன பட்டியலில் சேர்ந்துவிட்டன. தப்பித் தவறி அங்கு வசிப்பவையும் செத்து மடிகின்றன. ஆனால் இதுபற்றி அரசிடமும், வனத்தோட்டக் கழகத்திடமும் முறையிட்டால் `சயின்ட்டிபிக் ப்ரூப்' இருக்கிறதா? என்று கேட்கிறார்கள். தைல மரங்கள் உள்ள இடங்களில் புல் பூண்டுகள்கூட முளைக்காமல் பாழ்பட்டுப்போய்க் கிடக்கும் நிலங்களை கண்ணால் பார்த்தும்கூட அறிவியல் ஆதாரத்தைக் கேட்கும் அதிகார வர்க்கத்தின் அறிவியல் ஞானத்தை என்ன சொல்வது?

5 ஆண்டுகளுக்கு முன்புவரை மாவட்டத்தின் சராசரி மழையளவு 945 மி.மீ. ஆக இருந்தது. அது பின்னர் படிப்படியாகக் குறைந்து தற்போது 400 மி.மீக்கு வந்துவிட்டது. இதற்கு காரணம் காற்றில் குறைந்துபோன ஈரப்பதமும் அதை உறிஞ்சும் தைல மரங்களும்தான் என்பதை எத்தனை முறை அரசுக்கு எடுத்துச் சொல்லியும் அதுபற்றி எவரும் அக்கறை கொள்வதாக இல்லை.

Representational Image
Representational Image

இதனால்தான் தைல மரங்களை வேருடன் அழிக்க உத்தரவிடக்கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு போட்டிருக்கிறோம். அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இத்துடன் இதுதொடர்பாக மாவட்டத்தில் வசிக்கும் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்தப் பிரசாரத்தை ஜூலை 2-ம் தேதி முதல் எங்கள் அமைப்பினர் நடத்தி வருகிறோம். இதுவரை 25 நாள் பிரசாரம் முடிந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் பல கிராமங்களுக்குச் செல்கிறோம். மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் எங்களுடைய துண்டுப் பிரசுர விநியோகம், சிற்றுரை, பாடல், இசை போன்ற வடிவங்களில் தைல மரம், வேலிக்கருவை ஒழிப்பு, காவிரியில் திறந்து விடும் உபரி நீரைக் கொண்டு மாவட்டத்தில் நீர் மேம்பாடு, இயற்கை வேளாண்மை, நீர் மேலாண்மை, மழை நீர்ச் சேகரிப்பு, நீர் நிலைகளை தூர் வாருதல் போன்றவற்றின் அவசியங்களை இப்பிரசாரத்தில் முன்னிலைப்படுத்துகிறோம்.

வாழ்வில் வலி சுமக்கும் விவசாயப் பெருமக்கள் எங்கள் பிரசாரத்தை கூர்ந்து கவனிக்கிறார்கள். எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இப்பிரசாரத்தை முதலில் 30 நாள்களுக்குதான் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், மக்களின் தன்னெழுச்சியையும் ஆர்வத்தையும் பார்த்துவிட்டு இன்னும் 10 நாள்களுக்கு அதிகமாக பிரசாரம் செய்யலாம் என முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு நாளும் மாலை 3 மணிமுதல் இரவு 10 மணிவரை பிரசாரம் செய்கிறோம். இந்தப் பிரசாரத்தில் இயற்கையின்மீது ஆர்வம் கொண்ட பல்வேறு அமைப்புகளும், இளைஞர்களும், விவசாயிகளும், தன்னார்வலர்களும் எங்களுடன் கரம் கோத்துள்ளனர்.

எங்கள் பிரசாரத்துக்கு கை மேல் பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது. மாவட்டத்தில் சில விவசாயிகளும் தங்கள் சொந்த நிலத்தில் தைல மரங்களை வளர்த்துவருகின்றனர். எங்கள் பிரசாரத்தின் எதிரொலியாக இதுவரை அவ்வாறு தைல மரக்காடுகள் வைத்திருந்த கொத்தமங்கலம் கணேசன் எனும் விவசாயி தன்னுடைய இரண்டரை ஏக்கர் நிலத்தில் உள்ள தைல மரங்களை வேருடன் வெட்டி அப்புறப்படுத்தியுள்ளார். அதேபோல் முக்காணிப்பட்டியைச் சேர்ந்த ஜெயப்பிரகாசம் எனும் விவசாயியும் தன்னுடைய நான்கு ஏக்கர் தைல மரங்களை வெட்டி அழித்துள்ளார். அதேபோல் நெடுவாசல் சுரேஷ் ஆறுமுகம் என்பவரும் தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தில் உள்ள தைல மரங்களை வெட்ட முடிவு செய்துள்ளார். இது எங்களின் பிரசாரத்துக்கு கிடைத்திருக்கும் வெற்றியாகவே பார்க்கிறோம்.

Representational Image
Representational Image

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் பொதுமக்களும், இளைஞர் அமைப்புகளும் தாங்களாகவே நிதி சேகரித்து நீர்நிலைகளை தூர் வாரி வருகின்றனர். கஜா புயலால் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் அவர்கள் அவர்களாகவே தங்களை சுயமாய்க் கட்டமைத்துக்கொள்ளும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதேபோல் இயற்கை நலனுக்கு எதிரான விஷயங்களை துடைத்தொழிப்பதிலும் எம் மாவட்ட மக்கள் கைகோத்து களம் காண்பார்கள் என்ற திடமான நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது" என்கிறார் ஜி.எஸ்.தனபதி.

இந்த இயற்கை விழிப்புணர்வு பிரசாரத்தால் தைல மரக்காடுகளை வெட்டி எறிந்த கொத்தமங்கலம் விவசாயி கணேசன், ``எங்க ஏரியாவில மழை ரொம்ப கம்மியா போச்சு. இதுக்கு முக்கியக் காரணம் ஆர்.எஸ்.பதி மரத்தோட வேர் ஆயிரம் அடிக்கு கீழே உள்ள நிலத்தடி நீரைக்கூட உறிஞ்சிடுதாம். அதேமாதிரி காத்தில இருக்கிற ஈரப்பதத்தையும் இது இழுத்திடுதாம். அதனால்தான் மழை இல்லைனு ஒரு முடிவுக்கு வந்து என்னோட இரண்டரை ஏக்கர் தைல மரத்தை வேரோடு புடுங்கிட்டேன். நான் இப்படி செஞ்சதைப் பார்த்திட்டு இன்னும் நாலு பேரு திருந்தி அவங்க நிலத்துல உள்ள தைல மரங்களையும் வேலிக் கருவைகளையும் புடுங்கி எறியணும். இயற்கையை கெடுக்கிற தண்ணீருக்கு ஆபத்து தர்ற எந்த மரங்களையும் நாம விவசாயமா செய்யக் கூடாது. அதை வேரோடு புடுங்கி எறியணும். அதைத்தான் நான் இப்போ செஞ்சிருக்கேன்" என்று பெருமிதத்துடன் பேசுகிறார் கணேசன்.

கணேசன்
கணேசன்

அதேபோல் மற்றொரு விவசாயி முக்காணிப்பட்டி ஜெயப்பிரகாசம். இவரும் தனது 3 ஏக்கர் தைல மரத் தோட்டத்தை தூரோடு வெட்டி எறிந்திருக்கிறார். தற்போது அதே இடத்தில் இயற்கைக்கு நலம் சேர்க்கும் ஏராளமான மரங்களை நடவு செய்திருக்கிறார். ஒரு பகுதியில் நெல் நாற்றும் நடவு செய்திருக்கிறார்.

``தைல மரக் காடுகள்தான் மழைக்கு ஆபத்து. இயற்கைக்கு மிகப்பெரிய எதிரி. இதனால்தான் நிலத்தடி நீர் மட்டம் அதளபாதளத்துக்குப் போயிடுச்சுனு எங்க கண் முன்னாலே தெரியவருது. அப்படிப்பட்ட தைல மரத்தை நாம இனி வளர்க்க கூடாதுனு முடிவு பண்ணித்தான் அதை எல்லாம் வெட்டி எறிஞ்சிட்டு அதே இடத்தில பலவகையான நன்மை தரக்கூடிய மரக் கன்றுகளை நட்டு இருக்கேன். இந்த மாற்றம் எல்லோர்க்கிட்டேயும் வரணும். வந்தா வறண்டு போய்க்கிடக்கும் நம்ம பகுதி செழிக்கும்" என்கிறார் ஜெயப்பிரகாசம்.

ஜெயப்பிரககாசம்
ஜெயப்பிரககாசம்

நெடுவாசல் சுரேஷ் ஆறுமுகம் என்பவரும் தனது நிலத்தில் உள்ள தைல மரக்காடுகளை வெட்டுவதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளிலும் இறங்கிவிட்டார். இவர் சென்னையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பொதுமேலாளராக பணிபுரிகிறார். சுற்றுச் சூழலில் ஆர்வம் கொண்டவர். வாரந்தோறும் விடுமுறையில் தனது கிராமத்துக்குச் சென்று இதுபோன்ற சுற்றுச் சூழல் மேம்பாட்டுப்பணிகளில் அக்கறை காட்டி வருகிறார்.

``என்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தில் உள்ள தைல மரக்காட்டை அழிக்கப்போறேன். இதுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செஞ்ச்சிட்டேன். இந்த தைல மரம் என்பது சரியாகச் சொன்னால், இது ஒரு சுற்றுச் சூழல் பயங்கரவாதி. தன்னைத் தவிர மற்ற எந்த உயிரினங்களையும் வாழவே விடாத ஒரு நச்சு மரம்.

ஜெயப்பிரகாசம் புதுத் தோட்டம்
ஜெயப்பிரகாசம் புதுத் தோட்டம்

இதனால்தான் இந்த மரத்தை வளர்ப்பதற்கு கர்நாடக மாநில அரசு 2012 , பிப்ரவரி முதல் தடை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த மரத்தில் அமிலத்தன்மை அதிகமிருப்பதால் மண்ணின் பி.எச். தன்மை குறைந்துவிடும். இதனால் இதன் அருகில் முன்னரே வளர்ந்திருக்கும் மரங்கள்கூட பூப்பதில்லை. காய்ப்பதில்லை. இதனால் வேறு எந்த நாட்டு மரங்களும் வளர முடியாத சூழ்நிலையை உருவாக்கிவிடுகிறது. இதை கண்ணெதிரில் பார்த்து வருகிறோம்.

இதனால் பறவைகள், விலங்குகள்கூட வசிக்க வழியின்றி வேறு இடங்கள் தேடிச் சென்றுவிட்டன. மேலும், இதில் உள்ள அமிலத் தன்மை எளிதில் தீப்பற்றும் தன்மை கொண்டது. இதனால் ஒரு பெருங்காட்டையே தீயினால் அழிப்பதற்கான தீமைகள் இந்த மரத்தில் இருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு ஒரு பெரிய எதிர்மறைத் தாக்குதலை இம்மரங்கள் செய்து வருகின்றன.நிலத்தடி நீரை உறிஞ்சுவது மட்டுமில்லாமல் அதைச் சுற்றியிருக்கும் மரங்களின் வாழ்க்கையையே சிதைத்து விடுகிறது.

சுரேஷ்
சுரேஷ்

அப்படி தைல மரங்களால் சிதைக்கப்பட்டதுதான் இதனருகில் இருக்கும் என்னுடைய தென்னை மரங்கள். இவ்வளவு கெடுதல்களுக்குப் பிறகும் இந்த நச்சு மரங்கள் தேவையா?என்பதால்தான் இவற்றை வேருடன் பிடுங்கி அப்புறப்படுத்த முடிவு செய்திருக்கிறேன். இதை வெட்டி எடுத்துக்கொள்வதற்கான பணியை தமிழ்நாடு பேப்பர் மில்லிடம் ஒப்படைத்துவிட்டேன்.

தைல மரங்களை அகற்றிவிட்டு இயற்கை உரங்களால் இந்த மண்னை செழுமை செய்யப்போகிறேன். ஏனெனில் தைல மரங்கள் இருந்த மண்ணின் தன்மை அந்த அளவுக்கு கெட்டுப்போயிருக்கும். எனவே, முதலில் அதைச் சீர் செய்யப்போகிறேன். பின்னர் பல வகையான நாட்டு மரங்களை நடப்போகிறேன். பண்ணைக்குட்டைகள் அமைக்கப்போகிறேன். தைல மரத்தின் தீமைகளை எங்கள் வட்டார மக்கள் நன்றாக உணரத் தொடங்கிவிட்டனர். எங்கள் பகுதி இளைஞர்கள் இதற்கென அமைப்புகளை ஏற்படுத்தி தீவிரமாய் களப்பணி ஆற்றுகின்றனர். என்னுடைய இந்த முடிவைப் பார்த்துவிட்டு என்னுடைய உறவினர் போத்தியப்பனும் அவருடைய நிலத்தில் உள்ள தைல மரங்களை அழிக்க முடிவு செய்துள்ளார்.

தைல மரத்தால் வாடிப்போன சுரேஷ் தோட்ட தென்னைகள்..
தைல மரத்தால் வாடிப்போன சுரேஷ் தோட்ட தென்னைகள்..

சுற்றுச் சூழல் காப்பது, நீர்மேலாண்மை, குறுங்காடுகள் அமைத்தல் இப்படி இதுபோன்ற இயற்கை நலன் காக்கும் பணிகளில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம். இந்தச் சுற்றுவட்டாரத்துக்கு எடுத்துக்காட்டாக எங்கள் பகுதி இளைஞர்களின் பணி இருக்கும். இதைப் பார்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் அடுத்த மாநிலங்களிலும் விழிப்புணர்வு ஏற்படும் அளவுக்கு நாங்கள் செயல்படத் திட்டமிட்டுள்ளோம் …” என்று தீர்க்கமாய்ப் பேசுகிறார் சுரேஷ் ஆறுமுகம்.

மாற்றம் இந்த மண்ணிலிருந்தே முளைக்கட்டும்.

-பழ.அசோக்குமார்

ப்ரூஃப் கேட்கும் அதிகாரிகள்; தைல மரங்களை அகற்றிய விவசாயிகள்!- பிரசாரம் கொடுத்த மாற்றம் #MyVikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு