Published:Updated:

`பார்த்துப்பார்த்து வளர்த்த மரம்; வெட்ட மனமில்லை!' - வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நட்ட விவசாயி

புதுக்கோட்டை அருகே கொத்தமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வீட்டை விரிவுபடுத்த, முகப்பில் இருந்த சாத்துக்குடி மரத்தை வெட்ட வேண்டும் என்ற நிர்பந்தம் வந்தபோது, மரத்தை வெட்ட மனமில்லாமல் வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நட்டுப் பராமரித்து வருகிறார்.

Tree
Tree

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் விவசாயி வீரமணி. இவர் சில தினங்களுக்கு முன்பு தனது ஓட்டு வீட்டைச் சற்றே விரிவுபடுத்த திட்டமிட்டார். இதற்காக, வீட்டின் முகப்புப் பகுதியில் நின்ற சாத்துக்குடி மரத்தை வெட்டியே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், மரத்தை வெட்ட மனமில்லாத வீரமணி, இளைஞர்கள், நண்பர்கள் உதவியுடன் ஜாக்கிகள் போட்டு மரத்தை வேர்ப் பகுதி சேதமடையாமல், வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நட்டு அசத்தியுள்ளார். மரம் தற்போது வாடிப் போகாமல் பசுமையுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.

Tree
Tree

இதுபற்றி விவசாயி வீரமணியிடம் பேசினோம்,  `` இப்போ குடியிருக்க வீட்டைச் கொஞ்சம் சரிசெஞ்சு, விரிவுபடுத்தணும்னு  எனக்கு ஆசை இருந்துச்சு. அந்த ஆசை ரொம்ப நாளாகவே தள்ளிக்கிட்டே போயிட்டு இருந்துச்சு. அதுக்கு, முகப்பு பகுதியில இருந்த சாத்துக்குடி மரமும் ஒரு காரணம். இன்ஜினீயரைக் கூட்டிட்டு வந்து பிளான் கேட்டேன். அப்போ, அவரு ``சாதாரண சாத்துக்குடி மரம்தானே அத வெட்டிப் போட்டுருங்க. அந்த இடத்தில பில்லர் போட்டுக்குவோம்"னு சொன்னாரு. அது அம்மா வச்ச மரம். அந்த மரத்தை வெட்டிட்டு வீட்டை விரிவுபடுத்த எனக்கு விரும்பமில்லை. அப்படியே, ரொம்ப நாள் தள்ளிக்கிட்டு போயிட்டு இருந்துச்சு. வீட்டையும் விரிவுபடுத்தணும், மரத்தையும் வெட்டக் கூடாது.

அதுக்கு என்ன வழி என்று யோசித்தபோதுதான்,  மரத்தை வேரோடு பிடுங்கி வேற இடத்தில் நடுவதுதான் ஒரே வழி. மரத்தை அங்க இருந்து பிடுங்கி வச்சா திரும்பவும் வளராதுன்னு சிலர் சொன்னாங்க. அதப்பத்தியெல்லாம் நான் கவலைப்படல. ஜேசிபி இயந்திரத்தைக் கூப்பிட்டேன். `ஒரு மரத்துக்காக வர முடியாது'ன்னு சொல்லிட்டாங்க. மரத்தைச் சுற்றிலும் குழி வெட்டி மண்ணை அள்ளிவிட்டு, அதில், தண்ணீரை ஊற்றிக்கிட்டே இருந்தேன். குறுக்கே மரக்கம்புகளைக் கட்டி இருபுறமும் ஜாக்கி வைத்து, மெல்ல மெல்ல நண்பர்களின் உதவியுடன் எந்தவித பாதிப்பும் இல்லாமல் மரத்தை வேரோடு பிடுங்கி அருகிலேயே குழி வெட்டி அங்கு நட்டுவிட்டேன்.

ஒரு மரத்தை வெட்டி வீசுவதற்கு சில நிமிடங்களே போதும். ஆனால், அதே மரத்தை வளர்க்க பல வருடங்கள் ஆகும்.
விவசாயி வீரமணி
Tree
Tree

இப்போ, மரத்தில் பூவெல்லாம் பூத்திருக்கு. இதுக்கு 2 நாள் உழைப்பு, ரூ.2,000 வரையிலும் செலவானுச்சு. செலவ பத்தியெல்லாம் எனக்குக் கவலையில்லை. ஆனால், மரத்தைப் படாமல் காப்பாத்திட்டேன். இருந்தாலும், கொஞ்ச நாள் கூடுதல் கவனம் எடுத்து அந்த மரத்தைப் பாதுகாக்கணும்" என்கிறார். ஏற்கெனவே விவசாயி வீரமணி, தன் வீட்டில் தூர்ந்து கிடந்த கிணற்றை சீரமைத்து, வீட்டின் மேற்கூரையில் மழைநீர் சேகரிப்பு முறையை ஏற்படுத்தி, வீட்டின் மேற்கூரையில் விழும் துளி மழை நீரைக் கூட வீணாக்காமல், வீட்டு உபயோகத்துக்காக பயன்படுத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.