புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே உள்ள நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, வானக்கன்காடு, கருக்காகுறிச்சி கருவடதெரு, வடகாடு, கறம்பக்குடி உள்ளிட்ட 7 இடங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் கடந்த 1996 - 2006 வரையிலான காலகட்டத்தில் விவசாய நிலங்களில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 12,000 அடி ஆழத்திற்கு ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துப் பரிசோதனைகள் செய்தது. இங்குள்ள அனைத்து இடங்களிலும் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய ஒப்பந்த தொகையை ஓ.என்.ஜி.சி நிறுவனம் வழங்கி வருகிறது.
இதற்கிடையேதான் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் இங்குள்ள பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பை வெளியிட நெடுவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் போராட்டம் வெடித்தது. சுமார் 200 நாட்கள் வரையிலும் இங்குள்ள பகுதிகளில் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் விளைவாக, இந்தத் திட்டம் அப்போது கைவிடப்பட்டது.

மக்களை நேரடியாகச் சந்தித்த அப்போதைய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ், 9 மாதங்களுக்குள் அனைத்து எண்ணெய்க் கிணறுகளையும் மூடுவதாக எழுத்துப் பூர்வமாகக் கடிதம் கொடுத்துவிட்டுச் சென்றார். ஆனாலும், 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை நடவடிக்கை இல்லை. இந்நிலையில், வானக்கன்காடு கிராமத்தில் உள்ள எண்ணெய்க் கிணற்றில் கசிவு ஏற்பட்டு தீ பற்றி பெரும் பரபரப்பை ஏற்பட்டது. ஒ.என்.ஜி.சி அதிகாரிகள் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டு தற்காலிகமாக மூடிச்சென்றனர். இதற்கிடையே, ஒவ்வொரு வருடமும் அதிகாரிகள் கசிவு ஏதும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து விட்டுச் சென்று கொண்டிருந்தனர். ஆனாலும், இவற்றை நிரந்தரமாக மூடக்கோரிய மக்களின் பல நாள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
கடந்த 2017 அக்டோபரில் தற்காலிகமாக மூடப்பட்ட ஒ.என்.ஜி.சி கிணற்றை காரைக்காலிலிருந்து ஓ.என்.ஜி.சி பொது மேலாளர் சந்தானகுமார் தலைமையிலான ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் குழு தற்போது பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில், விரைவில் இந்த எண்ணெய்க் கிணறுகள் மூடப்பட்டு விவசாயிகளிடம் நிலங்கள் ஒப்படைக்கப்படும் என்று கூறியுள்ளதால், விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆய்வு செய்த அதிகாரிகள், ``ஏற்கெனவே இங்குள்ள 4 எண்ணெய்க் கிணறுகளை வெவ்வேறு அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பியிருக்கின்றனர். இங்குள்ள எண்ணெய்க் கிணறுகள் கைவிடப்பட்ட நிலையில், ஆய்வுக்குட்படுத்தித் தகுந்த பாதுகாப்புடன்தான் அகற்ற வேண்டும். இங்குள்ள கிணற்றைப் பாதுகாப்பாக அகற்றுவது குறித்தான ஆய்வைதான் நாங்கள் செய்திருக்கிறோம். இந்த அறிக்கையை டெல்லிக்கு அனுப்ப உள்ளோம். இங்குள்ள எண்ணெய்க் கிணறுகள் படிப்படியாக அகற்றப்பட உள்ளது" என்றனர்.

இதுபற்றி விவசாயி தங்கக்கண்ணன் கூறுகையில், ``ஹைட்ரோ கார்பன் எண்ணெய்க் கிணறுகளை மூடுவதற்கான ஆய்வினை அதிகாரிகள் நடத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கசிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுத்தும் கிணறுகள் மற்றும் பயனளிக்காத சில எண்ணெய்க் கிணறுகளை மட்டுமே மூட இருப்பதாகத் தகவல் வருகிறது. இங்குள்ள அனைத்து எண்ணெய்க் கிணறுகளையும் மூடினால்தான் எங்களுக்கு மகிழ்ச்சி. கடந்த கிராம சபைக் கூட்டம், தற்போதைய கூட்டம் என எல்லா கூட்டங்களிலும் இங்குள்ள மக்களின் முக்கியத் தீர்மானம் ஒன்றுதான். அது இங்குள்ள எண்ணெய் கிணறுகள் அனைத்தையும் மூடுவதுதான். எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் இந்த ஆண்டுக்குள்ளேயே மூட நடவடிக்கை வேண்டும்" என்றார்.