Published:Updated:

நோய் எதிர்ப்பு... வறட்சியிலும் வலிமை! கொம்பு வெச்ச சிங்கம் புலிக்குளம் மாட்டினம்...!

புலிக்குளம் காளை
பிரீமியம் ஸ்டோரி
News
புலிக்குளம் காளை

பாரம்பர்யம்

மீபகாலமாக இயற்கை விவசாயம், மரபு சார்ந்த விஷயங்கள் மீது விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நாட்டு மாடுகளைப் பாதுகாக்க வேண்டுமென்பதில் இளைய தலைமுறையினர் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை அகற்ற பெரிய அளவில் போராட்டம் நடத்திய பிறகு, தடை விலக்கப்பட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதன் நீட்சியாக நாட்டுமாடு வளர்ப்பில் பலரும் ஈடுபட்டு வருகிறார்கள். நாட்டுப் பசும்பாலுக்குத் தனி வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளை மட்டும் களம் இறக்க வேண்டும், கலப்பின மாடுகளை அனுமதிக்கக் கூடாது என்ற குரலும் வலுத்து வருகிறது. அரசும் அதை ஏற்றுக்கொண்டுள்ளது.

புலிக்குளம் மாடுகள்
புலிக்குளம் மாடுகள்

இது ஒருபக்கமென்றால் பாரம்பர்ய நாட்டு மாட்டினமான புலிக்குளம் மாடுகளை மீட்டெடுத்து வளர்க்கவும், அதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முயற்சி எடுத்துள்ளது தமிழக அரசு. புலிக்குளம் மாடுகள் அதிகம் இருந்த சிவகங்கை மாவட்டத்தில் புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

வலுவான மாடு, ஜல்லிக்கட்டில் சுலபத்தில் பிடிபடாதது எனப் போற்றப்படும் மண் சார்ந்த இனமான இந்த மாட்டினம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள புலிக்குளம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டது. புலியைக்கூடத் தாக்கி வீழ்த்தும் சக்தி கொண்ட மாடுகள் என்பதால் புலிக்குளம் மாடுகள் என்று அழைப்பதாகவும் சொல்கிறார்கள்.

மானைப் போல கூர்மையான கொம்பு களுடன் நடுத்தர உயரம், திடமான திமில், வலிமையான உடலைக் கொண்டவை இக்காளைகள். வெப்பம் அதிகமுள்ள சிவகங்கை பகுதியில் பஞ்சத்தையும் தாங்கி எல்லாவித பருவ காலத்தையும் தாங்கும் தன்மையும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் கொண்ட மாட்டினம்.

புலிக்குளம் காளை
புலிக்குளம் காளை

சிவகங்கை மட்டுமல்ல, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஒரு காலத்தில் அதிகமாக இருந்துள்ளது இந்த இனம். இப்போது அரிதாகிவிட்டது. ஊர் ஊராகச் சென்று கிடை போடும் கீதாரிகளிடமும், மாடு வளர்க்கும் சிலரிடமும் மட்டுமே உள்ள புலிக்குளம் பசுக்களைப் பாலுக்காகவும், காளைகளை ஜல்லிக்கட்டுக்காகவும் வளர்க்க அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

புலிக்குளம் மாட்டினத்தைப் பாதுகாக்க ஆராய்ச்சி நிலையம் தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்த நிலையில் 2018-ல் தமிழக அரசு, கால்நடை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தைத் தொடங்கியது. அரிதாகி வரும் புலிக்குளம் மாட்டினதைப் பாதுகாத்து அதன் இனப்பெருக்கத்தை அதிகரிப்பது, குறைவாக உள்ள பால் கறவையை அதிகரிப்பதுதான் இந்த நிலையத்தின் நோக்கம்.

மானாமதுரையிலிருந்து தாயமங்கலம் செல்லும் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்தில் 44 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையம். ஆராய்ச்சி நிலைய பொறுப்பாளர் மருத்துவர். சீனிவாசனிடம் பேசினோம் . “ ‘நேஷனல் பீரோ ஆஃப் அனிமல் ஜெனிடிக்ஸ் ரிசர்ச்’ என்ற நிறுவனம்தான் நம் நாட்டில் உள்ள நாட்டு மாடுகள் எவை என்பதைப் பதிவு செய்கிறது. அவர்கள் ஆய்வு செய்து, தமிழகத்தில் புலிக்குளம், காங்கேயம், ஆலம்பாடி, பர்கூர் மலைமாடு, உம்பளச்சேரி ஆகிய ஐந்து இனங்களை நாட்டு மாட்டினமாக அறிவித் துள்ளார்கள். இதில் நான்கு வகையான மாட்டினத்துக்கு ஆராய்ச்சி மையம் அந்தந்த மாடுகளின் பூர்வீகப் பகுதியில் உருவாக்கப் பட்டுவிட்டது.

புலிக்குளம் ஆராய்ச்சி மையம்
புலிக்குளம் ஆராய்ச்சி மையம்

அதுபோல் சிவகங்கை மண்ணுக்குச் சொந்தமான புலிக்குளம் மாட்டினதைக் காக்க இந்த ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்பட்டது. இங்கு புலிக்குளம் இனத்தைச் சேர்ந்த பால் மாடுகளையும் காளைகளையும் வளர்க்கிறோம். அதற்குத் தேவையான பசுந்தீவனங்களை இங்கேயே இயற்கை முறையில் வளர்க்கிறோம். இயற்கையாக மேய விடுகிறோம். அதன் வளர்ச்சியைத் தினமும் கண்காணிக்கிறோம். நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறோம். பிறக்கும் கன்றுகளை வளர்க்க விரும்புகிறவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விலைக்கு வழங்குகிறோம். வெளி மாவட்டத்தினரும் வந்து கன்றுகளை வாங்கிச் செல்கிறார்கள்.

இப்பகுதியைச் சேர்ந்த கிடைமாடு வளர்ப்பவர்கள் நாட்டு மாடுகளைத்தான் வைத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாகப் புலிக்குளம் மாடுகளை வளர்த்து அருகில் உள்ள மாவட்டங்களைச் சுற்றி வருவார்கள். அறுவடை முடிந்த நிலங்களில் கிடை போடுவார்கள். அதன் சாணம், சிறுநீர் மூலம் நிலம் வளமாகும். அதற்கு நிலத்துக்காரர்களிடம் கூலி வாங்கிக் கொள்வார்கள். தற்போது நாட்டுமாட்டுப் பால் அதிக விலைக்கு விற்கப் படுகிறது. சிலர் ஜல்லிக்கட்டுக் காளைகளையும் வளர்த்து வருகிறார்கள்.

அடுத்த தலைமுறைக்கும் நம் நாட்டு மாட்டினங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியதால் அரசு இந்த ஆராய்ச்சி நிலையத்தை உருவாக் கியது. இங்கே கிடை மாடுகளைத் தனியாகவும், ஜல்லிக்கட்டு மாடுகளைத் தனியாகவும் பராமரிக்கிறோம். பொலி காளைகளுக்குப் பகலில் பசுவின் வாசனை வரக் கூடாது என்பதால் அவற்றைத் தூரமாக வைத்து வளர்க்கிறோம். தேவையான நேரத்தில் அவிழ்த்து விட்டுப் பசுக்களுடன் இயற்கையான முறையில் இணை சேர விடுகிறோம்.

சீனிவாசன்
சீனிவாசன்

புலிக்குளம் மாட்டின் சிறப்பு அதன் ஆக்ரோஷமும் வலிமையும்தான். அது மட்டுமல்லாமல் உயரம் குறைவாக இருந்தாலும் வேகம் அதிகம். கோபப்பட்டாலே அதன் மூச்சுக் காற்றுச் சத்தமாக வெளிப்படும். வளைந்த கொம்பும், திடமான திமிலும் அதன் சிறப்பு. அதனால் ஜல்லிக்கட்டில் யாருக்கும் அடங்காது. மழை பொழிவு குறைவான பசும் தாவரங்கள் அதிகம் கிடைக்காத வறட்சி பகுதியான இந்த வட்டாரம்தான் இதன் பூர்வீகம் என்பது ஆச்சர்யமாக உள்ளது.

நோயையும், சீதோஷ்ண நிலையையும், தாங்கி வாழும் நம் பாரம்பர்ய புலிக்குளம் மாட்டினம் அபூர்வமானது. இதை விவசாயிகள் ஒவ்வொருவரும் வளர்த்தால் நம் மண்ணுக்கும் விவசாயத்துக்கும், மக்களுக்கும் நன்மை கிடைக்கும். அந்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறோம். அறிவியல் பூர்வமாகவும் ஆய்வு செய்கிறோம். இந்த நிலையம் மூலம் இனப்பெருக்கத்தை அதிகப்படுத்துவது, கலப்பினம் இல்லாமல் தரமான கன்றுகளை உருவாக்குவது, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, கிடை மாடுகளாகவும், ஜல்லிக் கட்டுக்குத் தேவையான காளைகளை உருவாக்குகிறோம்’’ என்றார்.

ஆராய்ச்சி மையத்தின் பரந்து விரிந்த வளாகத்தைப் பார்வையிட்டோம். பச்சைப் பசேல் என்று நிலத்தில் பல்வகையான மரங்கள், செடிகள், கொடிகளுடன் காட்சி அளித்தது. கிடை மாடுகளுக்குச் சுகாதார மான தனியான தொழுவமும், அங்கிருந்து வெகுதூரத்தில் ஜல்லிக்கட்டுக் காளைகளுக்குப் பாதுகாப்பான தொழுவமும் அமைக்கப் பட்டிருந்தது.

மாடுகளை எப்போதும் அடைத்து வைத்திருக்காமல் குறிப்பிட்ட பகுதிகளில் மேய விடுகிறார்கள். ஜல்லிக்கட்டு காளைகளோ ஆக்ரோஷத்துடன் அவ்வப்போது மண்ணைக் குத்தி கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

புலிக்குளம் காளையைக் கொம்புவச்ச சிங்கம் என்று அழைக்கிறார்கள். ஜல்லிக்கட்டில் அதிகம் வெற்றி பெற்ற புலிக்குளம் காளையை வாங்குவதற்கு பலரும் விரும்புகிறார்கள்.