Published:Updated:

2.5 ஏக்கர்... 1.50 லட்சம் லாபம் நிலக்கடலை... ஊடுபயிர்களாக உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு!

சரண்யா - அழகப்பன் தம்பதியர்
பிரீமியம் ஸ்டோரி
சரண்யா - அழகப்பன் தம்பதியர்

மகசூல்

2.5 ஏக்கர்... 1.50 லட்சம் லாபம் நிலக்கடலை... ஊடுபயிர்களாக உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு!

மகசூல்

Published:Updated:
சரண்யா - அழகப்பன் தம்பதியர்
பிரீமியம் ஸ்டோரி
சரண்யா - அழகப்பன் தம்பதியர்

ஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு சுற்றுவட்டார கிராமங்களான பின்னையூர், கக்கரை, குடிக்காடு, பாலாம்புத்தூர், தெலுங்கன் குடிக்காடு, புதூர் உள்ளிட்ட இன்னும் பல கிராமங்களில் கார்த்திகை-மார்கழி பட்டத்தில் அதிக அளவில் நிலக்கடலை சாகுபடி செய்வது வழக்கம்.

இந்நிலையில்தான் பாலாம்புத்தூரைச் சேர்ந்த சரண்யா - அழகப்பன் தம்பதி கடந்த பத்தாண்டுகளாக இயற்கை முறையில் நிலக்கடலை சாகுபடி செய்து நிறைவான லாபம் எடுத்து வருகிறார்கள். ஊடுபயிர்களான உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு ஆகிய வற்றிலும் நல்ல மகசூல் கிடைத்துள்ளது.

ஒரு பகல் பொழுதில் அவர்களுடைய பண்ணைக்குச் சென்றோம். அறுவடை செய்த நிலக்கடலை, உளுந்து உள்ளிட்ட வற்றைச் சுத்தம் செய்துகொண்டிருந்த சரண்யா - அழகப்பன் தம்பதியர் நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்றனர். முதலில் பேசத் தொடங்கிய சரண்யா, ‘‘தஞ்சை மாவட்டத் துலயே, எங்க பகுதியிலதான் நிலக்கடலை சாகுபடி அதிகம். இங்கவுள்ள மண்வாகு அப்படி. சிறப்பான விளைச்சல் கொடுக்கும். மற்ற பயிர்களோடு ஒப்பிடும்போது, இதுக்குக் குறைவான தண்ணீர் கொடுத்தாலே போதும். வழக்கத்தைவிட கொஞ்சம் கூடுதலா மழை பேஞ்சாலும்கூட, நிலக்கடலையில பெருசா பாதிப்பு ஏற்படாது. பெரும்பாலும் உத்தரவாதமான மகசூல் கிடைச்சிடும். எங்கள் பகுதியைப் பொறுத்தவரைக்கும் இதை விற்பனை செய்றது ரொம்பச் சுலபம். நிலக்கடலை கொள்முதல் செய்ய, இந்தப் பகுதிகள்ல நிறைய வியாபாரிகள் இருக்காங்க. நிலக்கடலையோட ஓட்டை உடைச்சு, பருப்பு எடுத்துத் தரக்கூடிய மில்களும் இங்க அதிகமா இருக்கு. பருப்பா விற்பனை செஞ்சா, பொதுமக்கள் விரும்பி வாங்கிக் கிட்டுப் போயி எண்ணெய் ஆட்டிக்குறாங்க. அதுவும் எங்களோட கடலைப் பருப்புக்கு வியாபாரிகள் கிட்டயும், மக்கள்கிட்டயும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கு. நாங்க இயற்கை முறையில சாகுபடி செய்றதுனால, எங்களோட கடலை நல்லா பார்வையா, பெருசு பெருசா, முழிப்பா இருக்கு. தனிச் சுவையோடும் இருக்கு’’ என்றவர், தங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

சரண்யா - அழகப்பன் தம்பதியர்
சரண்யா - அழகப்பன் தம்பதியர்

‘‘விவசாயக் குடும்பத்துல பிறந்திருந்தாலும் விவசாயத்துல கொஞ்சம்கூட ஆர்வம் இல்லாமல்தான் இருந்தேன். நர்சிங் படிச்சிட்டு மூணு வருசம் கோயம்புத்தூர்ல ஒரு மருத்துவமனையில வேலை பார்த்தேன். 2010-ம் வருஷம் கல்யாணமாகி, என் கணவர் வீட்டுக்கு வந்த பிறகு, விவசாயத்தைக் கவனிச்சிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுச்சு. காரணம், என் கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போயிட்டார். நம்மாழ்வார் ஏற்படுத்தின தாக்கத்துனால, இயற்கை விவசாயம் செய்யணும்னு ஆசைப்பட்டார். இயற்கை விவசாயிகளைப் பத்தின நிறைய செய்திகளையும் வீடியோக்களையும் அங்க யிருந்து எனக்கு அனுப்பிக்கிட்டே இருப்பார். எனக்கும் இயற்கை விவசாயத்துல ஈர்ப்பு ஏற்பட ஆரம்பிச்சது. ரசாயன நச்சுத்தன்மை இல்லாத ஆரோக்கியமான உணவை உற்பத்தி செய்யணுங்கற உணர்வு அதிகமாச்சு. இயற்கை விவசாயம் செய்யப்போறோம்னு எங்க உறவினர்கள், நண்பர்கள்கிட்ட சொன்னப்ப, ‘இதெல்லாம் சரியா வராது... உங்க வீட்டுக்குத் தேவைக்கு மட்டும் இதைச் செய்யுங்க’னு சொன்னாங்க. ஆனால், என்னோட கணவர், மத்தவங்களுக்கும் ஆரோக்கியமான உணவு கொடுக்கணுங்கறதுல உறுதியா இருந்தார். எங்களுக்கு மூன்றரை ஏக்கர் நிலம் இருக்கு. 2012-ம் வருஷத்துல இருந்து, முழுமையா மூன்றரை ஏக்கர்லயும் இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கோம். எங்க கிட்ட 5 மாடுகள் இருக்கு. அதுகளோட கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை இடுபொருள்களைத் தயார் பண்ணி பயன் படுத்திக்குறோம்.

2.5 ஏக்கர் புஞ்சை நிலத்துல, கார்த்திகை-மார்கழி பட்டத்துல நிலக்கடலையும், சித்திரை பட்டத்துல உளுந்து, எள்ளு சாகுபடி செய்வோம். ஒரு ஏக்கர் நஞ்சை நிலத்துல இருபோகம் பாரம்பர்ய நெல் சாகுபடி செய்றோம். மூணு வருஷத்துக்கு முன்னாடி என்னோட கணவர் வெளிநாட்டுல திரும்பி வந்துட்டாரு. இப்ப நிரந்தரமா இருந்து, அவரும் என்னோட சேர்ந்து விவசாயத்தைக் கவனிச்சுகிறார்’’என்றார்.

நிலக்கடலை+உளுந்து
நிலக்கடலை+உளுந்து

அவரைத் தொடர்ந்து பேசிய அழகப்பன், நிலக்கடலை சாகுபடி குறித்த அனுபவங் களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார். ‘‘நிலக்கடலை சாகுபடியைப் பொறுத்த வரைக்கும், வேர்ப்பூச்சி, இலைப்புழு, காய்ப்புழு தாக்குதல் அதிகமா இருக்கும். ஆனால் நாங்க, ரசாயன உரங்களைத் தவிர்க்குறதுனாலயும், ஊடுபயிரா, உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு விதைப்பு செய்றதுனாலயும், பூச்சித்தாக்குதல் ஏற்படுறதில்ல. இதனால மூலிகை பூச்சி விரட்டிகூடத் தேவைப்படுறதில்ல. ஊடு பயிர்கள் சாகுபடி மூலம் உபரி வருமானமும் கிடைக்குது. பயிர் வளர்ச்சி ஊக்கியாக, பஞ்சகவ்யா, மீன் அமிலம், தேமோர் கரைசல் பயன்படுத்துறோம். இதனால் எங்களோட கடலைச் செடிகள் நல்லா ஆரோக்கியமா வளர்ந்து நிறைவான மகசூல் கொடுக்குது. இந்த வருஷம் ரெண்டரை ஏக்கர்ல குஜராத் ரகக் குத்துக்கடலை சாகுபடி செஞ்சோம். நிறைவான மகசூல் கிடைச்சது’’ என்றவர் வருமானம் குறித்துப் பேசினார்.

வருமானம்

நிலக்கடலையை அப்படியே ஓட்டோடு விற்பனை செய்றதைவிட, காய வச்சு, உடைச்சு, பருப்பாக எடுத்து விற்பனை செஞ்சாதான், கூடுதலா லாபம் பார்க்க முடியும். ஓட்டோடுக்கூடிய ஒரு மூட்டை (40 கிலோ) நிலக்கடலைக்கு 2,500 ரூபாய் விலை கிடைக்கும். ஆனால், உடைச்சு, பருப்பாக எடுத்தா, 30 கிலோ பருப்பு கிடைக்கும். ஒரு கிலோ பருப்புக்கு 100 ரூபாய் வீதம் 3,000 ரூபாய் விலை கிடைக்கும். பருப்பு எடுக்க, 40 ரூபாய் கூலி போனால், மீதி 2,960 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதனால் தான் நாங்க பருப்பாக விற்பனை செய்றதை வழக்கமா வச்சிருக்கோம்.

ஆடுகள்
ஆடுகள்

இந்த வருஷம் ஏக்கருக்கு 720 கிலோ வீதம், மொத்தம் ரெண்டரை ஏக்கர்ல, 1,800 கிலோ பருப்பு கிடைச்சிருக்கு. இதுல 1,500 கிலோவை பருப்பாக விற்பனை செய்வோம். கிலோவுக்குக் குறைந்தபட்சம் 100 ரூபாய் வீதம் 1,50,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். 300 கிலோ பருப்பை எண்ணெய் ஆட்டுவோம். 150 லிட்டர் எண்ணெய்யும் 130 கிலோ கடலைப்பிண்ணாக்கும் கிடைக்கும். இயற்கை முறையில் உற்பத்தி செஞ்ச கடலை எண்ணெய்ங்கிறதுனால ஒரு லிட்டருக்கு 250 ரூபாய் வீதம் 150 லிட்டர் எண்ணெய்க்கு, 37,500 ரூபாய் கிடைக்கும். கடலைப் பிண்ணாக்கு கிலோ 50 ரூபாய் வீதம் 130 கிலோவுக்கு, 6,500 ரூபாய் கிடைக்கும். கடலைக்கொடியை வெயில்ல காய வச்சு உலர் தீவனமா பயன்படுத்திக்குவோம். இதோட விலைமதிப்பு ஏக்கருக்கு 2,000 ரூபாய் வீதம் மொத்தம் 5,000 ரூபாய். ஆக மொத்தம் 2.5 ஏக்கர் நிலக்கடலை சாகுபடி மூலம் மொத்தம் 1,99,000 ரூபாய் வருமானம் கிடைக்குது.

ஊடுபயிர் வருமானம்

நிலக்கடலை விதைப்பு செய்றதுக்கு முன்னாடி, ஏக்கருக்கு 3 கிலோ வீதம் நாட்டு உளுந்து நிலம் முழுக்கப் பரவலாகத் தெளிச்சு விடுவோம். இதனால் கடலைச் செடிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. பூச்சித்தாக்குதல் இருக்காது. அதுமட்டுமல்லாம களைகளும் கட்டுப்படும். அதோட உபரி வருமானம் எடுக்கவும் உறுதுணையா இருக்கும். நிலத்தைச் சுத்திலும் நாலு பக்கமும் வரப்பு ஓரத்துல மட்டும் ஏக்கருக்கு தலா அரைக் கிலோ வீதம் பச்சைப்பயறும் தட்டைப்பயறும் கலந்து தெளிப்போம். விதைப்பு செஞ்ச 90 - 95 நாள்ல உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு மூணுமே அறுவடைக்கு வந்துடும். (அடுத்த 10 - 15 நாள்கள்ல நிலக்கடலை அறுவடைக்கு வரும்).

மாடுகளுடன்
மாடுகளுடன்

ரெண்டரை ஏக்கர் நிலக்கடலை சாகுபடியில, ஊடுபயிரான உளுந்துல 375 கிலோ, பச்சைப்பயறுல 50 கிலோ, தட்டைப்பயறுல 50 கிலோ கிடைக்கும். இந்த மூணும் சேர்ந்து 475 கிலோ மகசூல் கிடைக்கும் இந்த மூணுக்கும் சேர்த்துச் சராசரியாகக் கிலோவுக்கு 80 ரூபாய் வீதம், 38,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

ஊடுப்பயிர்களுக்குனு தனியா எந்த ஒரு பராமரிப்பும் செய்றதில்ல. ரெண்டரை ஏக்கர் நிலக்கடலை, ஊடுபயிர்களான உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு மூலம் மொத்தம் 2,37,000 ரூபாய் வருமானம் கிடைக்குது.

இதுல எல்லா செலவும் போக, 1,50,000 ரூபாய் லாபம் கிடைக்கும். ரெண்டரை ஏக்கர்ல 90 முதல் 105 நாள்ல இந்தளவுக்குக் கிடைக்குறது பெரிய விஷயம்’’ என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

தொடர்புக்கு: சரண்யா - அழகப்பன்

செல்போன்: 70941 67293.

நிலக்கடலைச் சாகுபடி!

ஒரு ஏக்கரில் நிலக்கடலையும் ஊடுபயிர்களாக உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு சாகுபடி செய்வதற்கான தொழில்நுட்பம் குறித்து சரண்யா - அழகப்பன் தம்பதி பகிர்ந்து கொண்டவை, இங்கே பாடமாக இடம் பெறுகிறன.

நிலக்கடலை
நிலக்கடலை

விதை நேர்த்தி

வேர்ப்பூச்சி தாக்குதலைத் தடுக்கவும், முளைப்புத்திறனை அதிகப்படுத்தவும் விதை நேர்த்திச் செய்வது மிகவும் அவசியம். ஆனால், இதை மிகுந்த எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும். 1 லிட்டர் தண்ணீரில் 50 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து, 40 கிலோ விதைக்கடலையில் லேசாக ஈரம் ஏற்படுத்தும் அளவுக்கு மட்டும் தெளித்து உடனடியாகக் கைகளால் மெதுவாகக் கிளறி, சிறிது நேரம் நிழலில் உலர்த்திய பிறகு, விதைப்புச் செய்ய வேண்டும். விதைக்கடலையில் தோல் உரிந்து விடாத வகையில் கவனமாகக் கையாள வேண்டும்.

உளுந்து
உளுந்து

சாகுபடி நிலம்

3 சால் புழுதி உழவு ஓட்டி, ஏக்கருக்கு 3 டன் மாட்டு எரு போட்டு, மீண்டும் ஒரு சால் உழவு ஓட்டி, 7 அடி அகலம், 15 அடி நீளத்துக்குப் பாத்தி அமைக்க வேண்டும். நிலக்கடலை விதைப்புச் செய்வதற்கு முன்னதாக, ஊடுபயிர் விதைப்புக்காக, 3 கிலோ விதை உளுந்தை நிலம் முழுக்க, பரவலாகத் தெளிக்க வேண்டும். தலா அரைக் கிலோ பச்சைப்பயறு, தட்டைப்பயறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, வரப்பு ஓரத்தில் தெளிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, பாத்தியில் தலா முக்கால் அடி இடைவெளியில் விதைக்கடலை ஊன்ற வேண்டும். 15-ம் நாள் களையெடுக்க வேண்டும். 20-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். 35 முதல் 40 நாள்களில் மீண்டும் களையெடுத்து மண் அணைக்க வேண்டும். 50 மற்றும் 70-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் தேமோர் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். தேமோர் கரைசல் தெளிப்பதால், காய்கள் நன்கு திரட்சி அடையும். செடிகள் சற்றுச் சுணக்கமாகத் தெரிந்தால் 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். பூச்சிகளின் நடமாட்டம் தெரிந்தால், 100 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் மூலிகை பூச்சிவிரட்டிக் கலந்து தெளிக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism