Published:Updated:

கொரோனா கொடுமையிலும் கோதுமை அறுவடையில் சாதித்த பஞ்சாப்!

அறுவடை

பிரீமியம் ஸ்டோரி
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாகக் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகின.

பல இடங்களில் அறுவடைக்கு ஆள் இல்லாமல், இயந்திரம் இல்லாமல் கஷ்டப்பட்டு அறுவடையை முடித்தார்கள். இன்னும் பல இடங்களில் வாழை, மலர்கள், வெங்காயம் ஆகியவற்றை அறுவடை செய்ய முடியாமல், விற்பனை வாய்ப்பு இல்லாமல் மிகப்பெரும் நஷ்டத்தைச் சந்தித்துவருகிறார்கள் தமிழக விவசாயிகள். இந்த நிலையில் அறுவடைக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல், ஒரு குண்டுமணி தானியத்தைக்கூட வீணாக்காமல் தங்கள் மாநிலத்தில் விளைந்த கோதுமையை முழுமையாக அறுவடை செய்திருக்கிறார்கள் பஞ்சாப் அரசு நிர்வாகத்தினர்.

உமேந்திரா தத், சிவா
உமேந்திரா தத், சிவா

இந்த ஊரடங்கு காலத்தில் சத்தம் இல்லாமல் இமாலயச் சாதனையைப் படைத்திருக்கிறது பஞ்சாப். அதிலும் வழக்கத்தைவிட அதிக அளவில், இந்த ஆண்டு கோதுமையை அறுவடை செய்திருக்கிறது. நாட்டின் நலனுக்காக மத்திய அரசும், மாநில அரசும் ஒன்றிணைந்து செய்த பணியால் 10 மாநிலங்களுக்கு உணவுப்பொருள் கிடைத்திருக்கிறது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்தாலும், போர்க்கால அடிப்படையில் செயல்பட்ட மத்திய அரசின் செயல்பாடு, ஒத்துழைப்பு மற்ற மாநிலங்களின் புருவத்தை உயர்த்தச் செய்திருக்கிறது.

கைகோத்த மத்திய, மாநில அரசுகள்

நமக்கு தை அறுவடை மாதம்போல், பஞ்சாப் மாநிலத்துக்கு ஏப்ரல்தான் அறுவடை மாதம். ஆண்டுதோறும் ஏப்ரல் 13-ம் தேதியை அறுவடைத் திருநாளாகக் கொண்டாடுவார்கள். இந்த நிலையில், மார்ச் மாதக் கடைசியில் ஊரடங்கை அமல்படுத்தியது மத்திய அரசு. விளைந்து அறுவடைக்கு நிற்கும் கோதுமையைச் சிந்தாமல், சிதறாமல் சேமிப்புக் கிடங்குக்குக் கொண்டு வர நினைத்தது மாநில அரசு. இதற்காக பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். இதற்கெனச் சிறப்புத் திட்டங்கள் தீட்டப்பட்டன. ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரலும், மாநில முதலமைச்சரின் ஆலோசகருமான டி.எஸ்.ஷெர்கில் திட்டங்களை ஒருங்கிணைத்தார். மாநில அரசின் அனைத்துத் துறையினரும் இந்தப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டார்கள். அரசுச் செயலாளர், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயரதிகாரிகள், வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, ராணுவம் என அனைத்துத் துறையினரும் களத்தில் இறக்கிவிடப்பட்டார்கள். போர்க்கால நடவடிக்கையை மேற்கொண்ட அமரீந்தர் சிங் அரசியல் முரண்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மாநில நலனுக்காக, விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவசாயப் பணியில் ராணுவம்

மத்திய அரசும் உடனடியாக உதவிக்கரம் நீட்டியது. அதன் விளைவாக, ராணுவம், ரயில்வே, மத்திய, மாநில அரசுத்துறைகள் அனைத்தும் களத்தில் இறக்கிவிடப்பட்டன. சட்டம், ஒழுங்குப் பணிகளில் இருந்தவர்கள் முதன்முதலாக விவசாயப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அதன் விளைவாக, தனது விளைச்சலை வீடு கொண்டு வந்து (சேமிப்புக் கிடங்கு) சேர்த்துள்ளது பஞ்சாப்.

கோதுமை அறுவடை
கோதுமை அறுவடை

விடிய விடிய அறுவடை... பரபரப்பான பஞ்சாப்!

ஊரடங்கு நேரத்தில் அறுவடைக்கு ஆட்கள் இல்லை எனக் கவலைப்படவில்லை. போர்க்கால அடிப்படையில் அறுவடைப் பணிகள் நடைபெற்றன. அந்தந்தப் பகுதியிலிருந்த ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணியாளர்கள் ஒருங்கிணைக்கப்பட்டார்கள். துணை ராணுவப்படை, காவல்துறை வயலுக்குள் இறக்கிவிடப்பட்டன. லாரிகள், டிராக்டர்களை துணை ராணுவப் படையினர், போலீஸார் இயக்கினர். கோதுமை வயல்களில் 24 மணி நேரமும் அறுவடைப் பணி தொய்வில்லாமல் நடைபெற்றது. இதற்காக இரவைப் பகலாக்கும் வகையில் மின்னொளியில் மின்னின கோதுமை வயல்கள். ஒருபக்கம் அறுவடை, மறுபக்கம் தானியத்தைச் சேமிப்புக் கிடங்குகளுக்குக் கொண்டு செல்லும் பணி என பஞ்சாப் மாநிலமே பரபரப்பானது. நோய் பரவுவதைத் தடுப்பதற்காக அறுவடைப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக மின்னல் வேகத்தில் செயல்கள் நடந்தன. இத்தனை களேபரத்துக்கு இடையிலும் சமூக இடைவெளி முறையாகப் பின்பற்றப்பட்டது.

சாதனை மகசூல்

விளைவு, ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரையான ஒன்பது நாள்களில் மட்டும் 28 லட்சம் டன் (2.8 மில்லியன் டன்) கோதுமையை அறுவடை செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஞ்சாப் அறுவடை செய்த கோதுமையின் அளவு 13 லட்சம் டன்தான். இந்த ஆண்டு, இத்தனை சிக்கலான நேரத்தில் அதைவிட இன்னொரு மடங்கு அதிக மகசூலை எடுத்து சாதனை படைத்திருக்கிறது பஞ்சாப்.

கோதுமை அறுவடை
கோதுமை அறுவடை

2,000 கூடுதல் மண்டிகள்

அறுவடை செய்யப்பட்ட கோதுமை மூட்டைகள் ஆயிரக்கணக்கான லாரிகளில் ஏற்றப்பட்டு சேமிப்புக் கிடங்குகளுக்குக் கொண்டுவரப்பட்டன. லாரிகளை இயக்கியவர்கள் ராணுவத்தினரும் உள்ளூர் போலீஸாரும். சந்தையிலும் (மண்டிகள்) சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காக 2,000 மண்டிகள் கூடுதலாக உருவாக்கப் பட்டுள்ளன. ‘கையில காசு வாயில தோசை’ என்பதுபோல மண்டிகளில் உடனுக்குடன் விவசாயிகளுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது. விளைச்சல் அதிகமானதால் சேமிப்புக் கிடங்குகளில் வைக்க இடமில்லை. இதனால் மத்திய அரசின் உதவியோடு நாடு முழுவதுமுள்ள மத்திய சேமிப்புக் கிடங்குகளுக்குக் கோதுமை கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக இந்திய ரயில்வே ‘அன்னபூர்ணா’ என்ற பெயரில் சிறப்பு சரக்கு ரயில்களை இயக்குகிறது.

மத்திய, மாநில அரசின் சாதனை

காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் கருத்து வேறுபாடுகளை மறந்து, நாட்டுநலனை முன்னிறுத்தி மத்திய அரசு முன்னெடுத்த செயல்பாடு, கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவராலும் பாராட்டப்படுகிறது. இது இந்திய அரசியலில் புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது. மாநில அரசு, இக்கட்டான நேரத்தில் விவசாயிகளின் துயர் துடைப்பதற்காகக் காவல்துறை முதல் அனைத்து துறைகளையும் வேளாண் பணியில் ஈடுபடுத்திய விஷயம் பாராட்டைப் பெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் எதுவும் சாத்தியம் என்பதை நிரூபித்திருக்கிறது பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்திருக்கும் கோதுமை அறுவடை.

‘‘அந்தந்தப் பகுதியிலிருந்த ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணியாளர்கள் ஒருங்கிணைக்கப் பட்டார்கள். துணை ராணுவப்படை, காவல்துறை வயலுக்குள் இறக்கிவிடப்பட்டன.’’

உதவியாக இருந்த மத்திய உணவுத்துறை

இது குறித்துப் பேசிய பஞ்சாபிலுள்ள கிரிஷி விர்ஷாத் மிஷன் அமைப்பின் நிர்வாக இயக்குநர் உமேந்திரா தத், “பஞ்சாபில் எப்போதும் ஏப்ரல் மாதம்தான் கோதுமை அறுவடை மாதம். இதற்காக ஏப்ரல் 13-ம் தேதியை அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடிவருகிறோம். மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ஏப்ரல் மாதத்தில் எப்படி அறுவடை செய்யப்போகிறோம் என்ற நிலை இருந்தது. அதையும் மீறி லாரிகள், டிராக்டர்களைப் பயன்படுத்தி அரசின் மண்டிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது.

கொள்முதல் செய்யப்பட்ட தானியங்களை 88 பெட்டிகள் கொண்ட `அன்னபூர்ணா’ என்ற ரயில் மூலம் சுமார் 5,200 மெட்ரிக் டன் தானியம் பஞ்சாபிலிருந்து அஸ்ஸாம் மாநிலத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. தமிழகத்தைப் போல இங்கு எந்த இடத்திலும் நெல், கோதுமை வீணாகவில்லை. தானியங்களை ரயில் மூலம் கொண்டு செல்ல மத்திய உணவுத்துறை உதவியாக இருந்தது. கோதுமை, அரிசி சரியான முறையில் கொள்முதல் செய்யப்பட்டு, பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன” என்றார்.

“எல்லாம் அரசாங்கம் பார்த்துக்கிச்சு!”

பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் வசித்து வரும் சிவா என்பவரிடம் பேசியபோது, “இங்கே யாரும் காய்கறி மார்க்கெட்டுக்குச் செல்வதில்லை. காலை 7 மணி முதல் 11 மணிவரை அரை மணி நேரத்துக்கு ஒரு காய்கறி வண்டி வருகிறது. அதில் வீட்டுக்குத் தேவையான காய்கறி, பழங்களை வாங்கிக் கொள்கிறோம். இதனால் கொரோனா வைரஸின் தாக்கம் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது குறைவாகத்தான் இருக்கிறது. கிராமங்களில் அவ்வளவாக கொரோனா பாதிப்புகள் இல்லை. நகர்ப் பகுதிகளில்தான் கொரோனா தாக்குதல் இருக்கிறது. இருந்தும் மக்கள் பாதுகாப்பான முறையில் இருந்து கொண்டே, வீட்டுக்குத் தேவையான பொருள்களைத் தள்ளுவண்டிகள் மூலம் வாங்கிக்கொள்கிறோம்.

விவசாயிகளும் டிராக்டர்கள் மூலமாகக் கொண்டு வந்து விடுகின்றனர். இங்கே காய்கறி, பழங்களைத் தோட்டத்தில் விவசாயிகள் அழித்ததாகச் செய்திகள் இல்லை. கொள்முதல் செய்ய அரசு இயந்திரம் சரியாக ஒத்துழைக்கிறது” என்றார்.

எதிர்க்கட்சியாக இருந்தாலும், முறையான திட்டத்துடன், மத்திய அரசின் உதவியைப் பெற்று இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது பஞ்சாப் அரசு. அதே நேரத்தில், மத்திய அரசின் செல்லப்பிள்ளையாக இருக்கும் தமிழக அரசு, கொரோனா காலத்தில் விவசாய விளைபொருள்களைச் சேதாரம் இல்லாமல் சேமிக்க முயற்சி எடுக்கத் தவறிவிட்டது. திட்டமிட்டுச் செயல்படுத்தியிருந்தால் பஞ்சாப் விவசாயிகளைப்போல் தமிழக விவசாயிகளும் கொரோனா காலத்திலும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள்!

விளைபொருள் வீணாவதைத் தடுக்க ஆலோசனை!

மிழகத்தில் வேளாண் விளைபொருள்களைக் கொள்முதல் செய்யச் சில ஆலோசனைகளைச் சொல்கிறார் சந்தை ஆய்வில் அனுபவம் வாய்ந்த ஓய்வுபெற்ற தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் என்.ரவீந்திரன். “கொரோனா காலத்தில் வேளாண் விளைபொருள்களின் அவசியம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதனால், அதைச் சிதறவிடாமல் முழுமையாக அறுவடை, கொள்முதல் செய்ய வேண்டும். உடனடியாக அறுவடை செய்ய வேண்டிய பயிர்கள், விரைவில் அறுவடை செய்ய வேண்டிய பயிர்கள் என்று பிரித்துக்கொள்ள வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்திலுள்ள பயனாளிகளை அறுவடை பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும். அரசின் ஒத்துழைப்போடு லாரிகள், வண்டிகள் மூலம் காய்கறிகள், பழங்களைக் கொள்முதல் செய்து நுகர்வோரிடம் சேர்க்க வேண்டும். நகர்ப் பகுதிகளில் சிறு வியாபாரிகள் மூலம் வீடு வீடாக விற்கும் முறையை அமல்படுத்த வேண்டும். பொதுமக்களை மார்க்கெட்டுகளுக்குள் அனுமதிக்கக் கூடாது. அதேபோல அறுவடைப் பணிகளில் ஈடுபடும் பயனாளிகளுக்குக் கையுறை, சானிடைஸர் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

கொரோனா கொடுமையிலும் கோதுமை அறுவடையில் சாதித்த பஞ்சாப்!

தமிழ்நாட்டிலுள்ள கொள்முதல் நிலையங்கள், விற்பனைக் கூடங்கள், உழவர் சந்தைகள், மண்டிகள், பொதுச் சந்தைகள் அனைத்தும் திறக்கப்பட வேண்டும். கிராமப் பகுதிகளிலுள்ள அங்கன்வாடி மையங்கள், பள்ளிக்கூடங்களை இந்தச் சந்தைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். மக்களுக்குத் தடையற்ற உணவுப் பொருளைக் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைபொருள்களைத் தமிழ்நாட்டுக்குள் மட்டுமன்றி கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கு சப்ளை செய்வதற்கு ஏற்றவாறு போக்குவரத்துக்கான சாலைகள் திறக்கப்பட வேண்டும். மத்திய அரசு நெல் கொள்முதலை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். விவசாயப் பயிர்கள் சேதமடைந்தால் அவற்றுக்கான விலையை அரசு வழங்க வேண்டும். ஊரகப் பகுதிகளிலுள்ள நெல் அரவை ஆலைகள், எண்ணெய் எடுக்கும் ஆலைகள் அனைத்தும் உடனடியாகத் திறக்கப்பட வேண்டும். வேளாண் விளைபொருள்களை அறுவடை செய்ய முடியாத இடங்களில் முழு நிவாரணம் வழங்க வேண்டும். மேற்சொன்ன வழிகளைப் பின்பற்றினாலே விவசாய நிலங்களில் நெல், காய்கறிகள், பழங்கள் வீணாவதைத் தடுக்க முடியும். இவற்றில் ஏற்கெனவே அறிவித்த வழிமுறைகள் இருந்தாலும், அவற்றைத் திறம்படச் செயல்படுவதற்கான வழிகளை ஆராய வேண்டும்.”

ரயில்வே துறையின் அன்னபூர்ணா!

ஞ்சாப் மாநிலத்தில் அறுவடையான கோதுமையை இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறது ‘அன்னபூர்ணா சரக்கு ரயில்.’

அன்னபூர்ணா சரக்கு ரயில்
அன்னபூர்ணா சரக்கு ரயில்

88 பெட்டிகள்கொண்ட இந்த ரயில் 2.5 கிலோமீட்டர் நீளம் கொண்டது. பஞ்சாபின் தண்டரி கலனிலிருந்து மேற்கு வங்காளத்தின் புதிய ஜல்பைகுரி வரையுள்ள 1,634 கிலோமீட்டர் தூரத்தை 49 மணி 50 நிமிடங்களில் சென்றடைந்திருக்கிறது. வழக்கமாக இந்த தூரத்தைக் கடக்க 96 முதல் 100 மணி நேரம் ஆகும். இந்திய ரயில்வே துறை அதிக அளவில் உணவு தானியங்களைக் கொண்டு செல்வது இதுவே முதன்முறை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு