Published:Updated:

40 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய கடன், 4 தலைமுறை ஆண் வாரிசுகள் தற்கொலை! -பஞ்சாப்பில் நடந்த துயரம்

எம்.குமரேசன்

ஜோகிந்தர் சிங் வாங்கிய கடன் நான்காம் தலைமுறையையும் பிடித்து ஆட்டி வருகிறது.

தற்கொலை செய்துகொண்ட லவ்ப்ரீத் சிங்
தற்கொலை செய்துகொண்ட லவ்ப்ரீத் சிங்

விவசாயக் கடன்களை அடைக்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் குறைந்தபாடில்லை. இந்தியாவிலேயே பணக்கார மாநிலமான பஞ்சாப்பில் கடனால் நான்கு தலைமுறை ஆண்களும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பர்னாலா மாவட்டத்தில் உள்ள போத்னா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜோகிந்தர் சிங். இவர், 40 ஆண்டுகளுக்கு முன், விவசாயம் செய்வதற்காகத் தனியார்கள் மற்றும் வங்கிகளிடம் வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார். விவசாயத்தில் நஷ்டம் ஏற்படவே, கடனை அடைக்க முடியாத நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டார். தந்தை வாங்கிய கடன் மகன் பகவான் சிங்கை துரத்தியது. இதனால், 25 ஆண்டுகளுக்கு முன், பகவான் சிங்கும் தற்கொலை செய்துகொண்டார். பகவான் சிங் மகன் குல்வந்த் சிங்குக்குக் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதனால், கடனை அடைக்க முடியாமல் குல்வந்த் சிங்கும் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

கருகிப் போன விவசாய நிலம்
கருகிப் போன விவசாய நிலம்

ஜோகிந்தர் சிங் வாங்கிய கடன் நான்காம் தலைமுறை வாரிசையும் பிடித்து ஆட்டியது. அதாவது குல்வந்த் சிங்கின் மகன் லவ்ப்ரித்தை கடன் கட்டுமாறு கடன் கொடுத்தவர்கள் நெருக்கினர். என்னதான் முயன்றாலும், லவ்ப்ரீத்தாலும் கடனை அடைக்க முடியவில்லை. இதனால், மனஅழுத்தத்தில் இருந்த 22 வயது லவ்ப்ரீத் சிங் நேற்று தற்கொலை செய்துகொண்டார். 40 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய கடன் ஒரு குடும்பத்தின் ஆண் வாரிசுகளை முற்றிலும் அழித்த இந்தச் சம்பவம் போத்னா கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட லவ்ப்ரீத் சிங்கின் தாயார் ஹெர்பல் கூறுகையில், ``கணவர் இறந்த பிறகு பெரிய அளவில் விவசாயம் செய்து கடன்களை அடைக்க என் மகன் முயன்றான். எதுவுமே சரிப்பட்டு வரவில்லை. கணவர் உயிருடன் இருந்தபோது, அவன் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இரவு நேரத்தில் கார் ஓட்டி குடும்பத்துக்கு உதவியாக இருந்தான். கடனை அடைக்க முடியாத சோகம் அவனை வாட்டியது. தன் சகோதரிக்குத் திருமணம் செய்துவைக்க முடியாத வேதனையும் அவனிடத்தில் இருந்தது. இப்போது, எங்கள் குடும்பத்தின் கடைசி ஆண் வாரிசையும் இழந்துவிட்டோம். இன்னும் கடனாக 7 லட்சம் ரூபாய் வரை உள்ளது'' என்று கதறுகிறார்.

கணவர் இறந்த பிறகு என் மகன்தான் கடைசி நம்பிக்கையாக இருந்தான். இப்போது, நானும் என் மகளும் ஆதரவற்றவர்களாகிவிட்டோம்.
லவ்ப்ரீத் சிங்கின் தாயார்

முதன்முதலாக, கடன் வாங்கிய ஜோகிந்தர் சிங்கின் மற்றொரு மகன் குணால் சிங், அதாவது லவ்ப்ரீத் சிங்கின் தாத்தா பகவான் சிங்கின் சகோதரர். இவரும், தந்தை வாங்கிய கடன் காரணமாக தற்கொலை செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.