Published:Updated:

வறண்ட ராமநாதபுரத்திலும் பொங்கும் பசுமை! 'பல்லே பல்லே' பஞ்சாப் விவசாயிகள்!

பஞ்சாப் விவசாயிகள்
பிரீமியம் ஸ்டோரி
பஞ்சாப் விவசாயிகள்

சாதனை

வறண்ட ராமநாதபுரத்திலும் பொங்கும் பசுமை! 'பல்லே பல்லே' பஞ்சாப் விவசாயிகள்!

சாதனை

Published:Updated:
பஞ்சாப் விவசாயிகள்
பிரீமியம் ஸ்டோரி
பஞ்சாப் விவசாயிகள்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அமைந்துள்ளது வல்லந்தை ஊராட்சி. இங்கு 350 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து பிரமாண்ட மாகக் காட்சி அளிக்கும் அகல் இயற்கை வேளாண் தோட்டத்தில் மா, பலா, கொய்யா, நெல்லி, சப்போட்டா, தென்னை, முந்திரி, சீத்தா, மாதுளை, எலுமிச்சை, ஈச்சம், பப்பாளி உட்பட ஆயிரக்கணக்கான மரங்கள் செழிப்பாக விளைந்து கவனம் ஈர்க்கின்றன. கடும் வறட்சி நிலவும் பகுதியான வல்லந்தையில் இப்படி ஒரு பசுமையான தோட்டத்தை உருவாக்கியிருப்பது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் என்பதுதான் கூடுதல் ஆச்சர்யம்.

சொட்டுநீர்ப் பாசனம், இயற்கை விவசாயம், பலருடைய கடும் உழைப்பு, விடா முயற்சி... இந்த நான்கும் சேர்ந்ததால்தான் இவ்வளவு பெரிய பரப்பில் இப்படி ஒரு செழிப்பான தோட்டம் சாத்தியமாகி இருக்கிறது. இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படுவதால், இங்கு உற்பத்தி செய்யப்படும் மா, கொய்யா, நெல்லி கூடுதல் சுவையுடன் இருப்பதாக இப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். இதனால் ராமநாதபுரம் பகுதி வியாபாரிகள் மத்தியில் இங்கு உற்பத்தியாகும் விளைபொருள்களுக்கு வரவேற்பு அதிகம். குறிப்பாக, ‘சிங் மாம்பழம்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் மாம்பழங்களுக்கு இப்பகுதி மக்களிடம் மவுசு அதிகம்.

பஞ்சாபியரின் மாந்தோட்டம்
பஞ்சாபியரின் மாந்தோட்டம்

இத்தோட்டத்தைப் பார்வையிட ஒரு பகல் பொழுதில் வல்லந்தைக்குப் பயணம் மேற்கொண்டோம். கருவேலங்காடுகள், வறண்ட குளம்–குட்டைகள், அனல் காற்று... இதற்கிடையில்தான் பசுமை படர்ந்த சோலைவனமாகக் காட்சி அளித்துக்கொண் டிருக்கிறது, பஞ்சாப் விவசாயிகளின் பழத்தோட்டம்.

இங்கு நாம் சென்றபோது, கொய்யா மரங்களுக்குக் கவாத்து செய்துகொண்டிருந்த பஞ்சாப் விவசாயிகள், இன்முகத்தோடு நம்மை வரவேற்றார்கள். இவர்களுக்குத் தமிழ் சரளமாகத் தெரியாது. இதனால் இத்தோட்டத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் நம்மூர்க்காரரான பழனிசாமி மொழிப்பெயர்ப்பாளராகச் செயல்பட்டார். நம்முடைய கேள்விகளுக்கு இத்தோட்டத்தின் நிர்வாகப் பணியாளர்களான மன்மோகன் சிங் மற்றும் தர்ஷன் சிங் ஆகிய இருவரும் மகிழ்ச்சியுடன் விளக்கம் அளித்தனர்.

தர்ஷன் சிங், மன்மோகன் சிங்
தர்ஷன் சிங், மன்மோகன் சிங்

நம்மிடம் முதலில் பேசிய விவசாயி மன்மோகன் சிங், ‘‘விவசாயம், கல்வி, மருத்துவம் ஆகியவற்றின் மேம்பாட்டை முதன்மை நோக்கமாகக் கொண்டு பஞ்சாபில் செயல்படும் அகல் (akal) அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் இது. தமிழகம் மட்டு மன்றிப் பல்வேறு மாநிலங்களில் வறட்சியான பகுதிகளில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகிறோம். இந்த அறக்கட்டளை மூலம் பஞ்சாபில் உள்ள ஆயிரக்கணக்கான ஏழை எளிய குடும்பத்தினர் பயன்பெற்று வருகின்றனர். இந்தத் தோட்டத்தில் கிடைக்கும் வருமானத்தில் 75 சதவிகிதத்தை அறக்கட்டளை நிர்வாகத்துக்கு அனுப்பி விடுவோம். மீதமுள்ள 25 சதவிகிதத்தில் தோட்டத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

2007-ம் ஆண்டு இங்கு 350 ஏக்கர் நிலம் வாங்கினோம். முதல்கட்டமாக 50 ஏக்கர்ல விவசாயப் பணிகளைத் தொடங்கினோம். இதற்காக எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இங்கு வந்து தங்கினோம். ‘கருவேலங் காட்டுக்குள் சிங்குகள் எப்படி விவசாயம் செய்யப் போகிறார்கள்’ என்று எங்களைப் பலரும் கிண்டல் செய்தனர். இன்று நாங்கள் உருவாக்கியிருக்கும் இந்தப் பழத்தோட்டத் தைப் பிரமித்துப் பார்க்கிறார்கள். 16 ஆண்டுகளுக்கு முன்பு 50 ஏக்கரில் தொடங்கப்பட்ட இந்தத் தோட்டம் நாளடைவில் படிப்படியாக வளர்த்தெடுக்கப் பட்டு, தற்போது 350 ஏக்கரில் விரிவடைந்து செழிப்பாகக் காட்சி அளிக்கிறது’’ என்று சொன்னவர், இத்தோட்டத்தின் உருவாக்கப் பணிகளைப் பற்றி விவரித்தார்.

கவாத்து பணியில்
கவாத்து பணியில்

‘‘இந்த நிலத்தை வாங்கும்போது 350 ஏக்கர்லயுமே சீமைக்கருவேல மரங்கள் மண்டிக்கிடந்துச்சு. முதல் கட்டமாக 50 ஏக்கரிலிருந்த சீமைக் கருவேலமரங்களை வெட்டி அப்புறப்படுத்தினோம். அப்போது இந்த நிலம் கரடுமுரடாக, இறுகிய கட்டாந் தரைப்போல் இருந்ததால், மண்ணைப் பொலபொலப்பாக மாற்றுவதற்காகப் பல முறை நிலத்தை உழுது, அதன் பிறகு பசுந்தாள் உரத்துக்காக நவதானியங்கள் தெளித்தோம். அது நன்கு வளர்ந்த பிறகு, அதை மடக்கி உழவு ஓட்டினோம். மேலும், மண்ணை வளப்படுத்த அடியுரமாக மாட்டு எரு, இலைதழைகளைப் போட்டும் உழவு ஓட்டினோம். விவசாயத்துக்கு ஏற்ற வகையில் மண்ணைச் சீர்படுத்தி மாற்றுவதற்கே எங்களுக்கு 6 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டன. அதன் பிறகுதான் விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலமாக மாறியது. இதில் மா, பலா, கொய்யா, நெல்லி, சப்போட்டா, தென்னை, முந்திரி, சீத்தா, மாதுளை, எலுமிச்சைக் கன்றுகளை நடவு செய்தோம். அதைத் தொடர்ந்து படிப்படியாக விரிவாக்கம் செய்துகொண்டே இருந்தோம். 2013-ம் ஆண்டிலிருந்து ஓரளவுக்குப் பலன் கிடைக்கத் தொடங்கியது. அதிக நிழல் விழாத பகுதிகளில் தர்பூசணி, வெள்ளரி எனப் பருவத்துக்கேற்ற தோட்டப் பயிர் களையும் சாகுபடி செய்து வருகிறோம்.

எந்த வகையான நிலமாக இருந்தாலும், அதில் வறட்சி என்பது நிரந்தரம் கிடையாது. காலச் சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். நம்மாலும் மாற்ற முடியும். அதைத்தான் செய்து காட்டியிருக்கிறோம். எங்களைப் பார்த்து உள்ளூர் மக்களும் உளுந்து, மிளகாய், கடலை ஆகியவற்றை நம்பிக்கையோடு விவசாயம் செய்கிறார்கள்’’ எனத் தெரிவித்தார்.

தோட்டத்தில் தமிழ்நாட்டு விவசாயிளும் பஞ்சாப் விவசாயிகளும்
தோட்டத்தில் தமிழ்நாட்டு விவசாயிளும் பஞ்சாப் விவசாயிகளும்

அவரைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய தர்ஷன் சிங், ‘‘இங்க கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு. 3 திறந்தவெளி கிணறுகளும், 4 ஆழ்த்துளைக் கிணறுகளும் உள்ளன. இதில் சிலவற்றில்தான் தண்ணீர் ஊறும். இதனால் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க, சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துள்ளோம். மிகவும் சிக்கனமாகத் தண்ணீரை பயன் படுத்தியும்கூட பல சமயங்களில் பற்றாக் குறையாக உள்ளது. அது போன்ற சமயங்களில் டேங்கர் லாரிகளில் தண்ணீர் விலைக்கு வாங்கிக்கொள்கிறோம்.

பல உதவிகள் செய்த பழைய கலெக்டர் நந்தகுமார்

முன்பு இங்கு மாவட்ட ஆட்சியராக இருந்த நந்தகுமார் வாரம் ஒருமுறையாவது எங்கள் தோட்டத்துக்கு வந்துவிடுவார். அவர்தான் கே.வி.கே மற்றும் தோட்டக் கலைத்துறை மூலம் பல்வேறு உதவிகளைச் செய்து கொடுத்தார். குறிப்பாக, இங்கு சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க ஏற்பாடு செய்து கொடுத்தார். மானிய விலையில் இயற்கை இடுபொருள்கள் கிடைக்கவும் உறுதுணையாக இருந்தார். அவர் மாற்றலாகிப் போன பின்பும்கூட கே.வி.கே மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் எங்கள் தோட்டத்துக்கு வந்து ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

வருமானம்

எங்கள் தோட்டத்தில் பங்கனப்பள்ளி, இமாம் பசந்த், அல்போன்சா, மல்கோவா, ரத்தினா ஆகிய 5 வகையான மாம்பழங்கள் விளைகின்றன. இப்பகுதியில் உள்ள மொத்த வியாபாரிகள் ஒரு கிலோவுக்கு 55 ரூபாய் முதல் அதிகபட்சம் 70 ரூபாய் வரைதான் விலை கொடுக்கிறார்கள். ஆனால், பழக்கடைக்காரர்களிடம் நாங்கள் நேரடியாக விற்பனை செய்யும் போது, இன்னும் கூடுதல் விலை கிடைக்கிறது. சூழலுக்கு ஏற்ப விற்பனை செய்வோம்.

ராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள மொத்த பழமண்டிகளில் சிங் தோட்டத்துப் பழங்கள் என்று இவற்றைத் தனி பிராண்டாகவே அடையாளப்படுத்திச் செய் கிறார்கள். மாம்பழத்துக்கு அடுத்தபடியாகக் கொய்யா மற்றும் நெல்லியிலும் நிறைவான மகசூல் கிடைக்கிறது. மாம்பழத்தில் கிடைக்கும் லாபத்தைக் காட்டிலும் கொய்யா மற்றும் நெல்லியில்தான் அதிக லாபம் ஈட்ட முடிகிறது. காரணம் ஆண்டுக்கு ஒருமுறை தான் மாம்பழ சீஸன். ஆனால் கொய்யா, நெல்லி அப்படிக் கிடையாது. ஆண்டுக்கு இரண்டு முறைக்கு மேல் அறுவடை செய்து வருமானம் பார்க்க முடிகிறது.

பராமரிப்பு

ஒவ்வொரு முறை அறுவடை முடிந்ததும் மரங்களில் கவாத்து செய்வதை வழக்கமாக வைத்துள்ளோம். இதனால் புதிய கிளைகள் அதிக எண்ணிக்கையில் காய்கள் உருவாகி மகசூல் கிடைக்கிறது. கவாத்துச் செய்து முடித்ததும், மரத்தைச் சுற்றி 1 அடி ஆழத்துக்கு குழி தோண்டி, எரு மற்றும் இலைதழைகள் போடுவோம். சொட்டுநீர்ப் பாசனம் மூலம் வாரம் ஒரு முறை மரங்களுக்குத் தண்ணீர் கொடுப்போம். கடுமையான வெயில் காலமாக இருந்தால் வாரத்துக்கு இரண்டு முறை தண்ணீர் கொடுப்போம்.

பழனிசாமி
பழனிசாமி

மாடு வளர்ப்பு

எங்கள் தோட்டத்திலேயே 10 மாடுகள் வளர்த்து வருகிறோம். இவற்றின் மூலம் கிடைக்கும் சாணம், சிறுநீரைப் பயன்படுத்திப் பஞ்சகவ்யா தயார் செய்கிறோம், மரங்களின் செழிப்புத்தன்மையில் சுணக்கம் தெரிந்தால், சொட்டுநீர்ப் பாசனம் மூலம் பஞ்சகவ்யா கொடுப்போம். மேலும் ஆறு மாதத்துக்கு ஒரு முறை ஏக்கருக்கு ஒரு டன் வீதம் மண்புழு உரம் கொடுப்போம். பூச்சித்தாக்குதல் தென்பட்டால், அவ்வப்போது வேப்ப எண்ணெய் கரைசல் அல்லது வேப்பம் பிண்ணாக்கு கரைசல் தெளிப்போம். இந்த 350 ஏக்கர் தோட்டத்திலிருந்து ஆண்டுக்கு சுமார் 75 - 85 லட்சம் ரூபாய் லாபம் கிடைக் கிறது. இது சற்றுக் குறைவான லாபம்தான். ஆனால், வறட்சியான நிலத்தைப் பசுமையாக மாற்றியுள்ளோம் என்பதைத்தான் நாங்கள் வெற்றியாகக் கருதுகிறோம்’’ மன நிறைவுடன் சொல்லி முடித்தார்.தொடர்புக்கு,

மன்மோகன் சிங், செல்போன்: 93451 82540

பழனிசாமி, செல்போன்: 91596 78770

என்னுடைய மகன் ஐ.ஏ.எஸ் அதிகாரி

“இந்தத் தோட்டத்தில் பஞ்சாபைச் சேர்ந்த 20 விவசாயிகள் இங்கயே நிரந்தரமாகத் தங்கி இருந்து வேலை செய்கிறார்கள். இப்பகுதியில் உள்ள விவசாயப் பெண் தொழிலாளர்களையும் எங்களது தோட்டத்தின் பராமரிப்புப் பணிகளுக்கு அவ்வப்போது பயன் படுத்திக்கொள்கிறோம். நான் பி.இ. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்து விட்டு, சிறிது காலம் தனியார் நிறுவனங் களில் பணியாற்றினேன். என்னுடைய மகன் வட மாநிலம் ஒன்றில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். என்னுடைய மகள் மருத்துவர். விவசாயத்தை உயரிய சேவையாகக் கருதி, இங்கு பணியாற்றி வருகிறேன்’’ எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார் மன்மோகன் சிங்.

மதிப்புக் கூட்டுவதற்கு அரசு உதவ வேண்டும்

‘‘விற்பனை செய்தது போக, மிஞ்சக்கூடிய மா, கொய்யா, நெல்லி உள்ளிட்டவற்றைக் கூழாக்கி மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாகத் தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, தமிழக அரசு உதவி செய்தால் உறுதுணையாக இருக்கும்’’ என்கிறார் தர்ஷன் சிங்.