Published:Updated:

பீட்ரூட் நிறத்தில் கேரட்; கடைவிரித்தும் கொள்வாரில்லை! - கண்ணீர்விட்ட விவசாயி

ரா.சதீஸ்குமார்
கே.அருண்

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் சோதனை முயற்சியாக பயிரிடப்பட்ட ஊதா நிற கேரட் நல்ல விளைச்சல் தந்தும், சந்தையில் இதை வாங்கி விற்பனை செய்ய வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சோதனை முயற்சியில் விளைவிக்கப்பட்ட ஊதா நிற கேரட்
சோதனை முயற்சியில் விளைவிக்கப்பட்ட ஊதா நிற கேரட் ( கே.அருண் )

தமிழக அளவில் மலைக் காய்கறி உற்பத்தியில் நீலகிரி மாவட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. நீலகிரியில் விளைவிக்கப்படும் மலைக் காய்கறிகள் தமிழகம் மட்டும் அல்லாது கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், சுற்று வட்டாரப் பகுதிகளில் 6 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மலைக் காய்கறி பயிரிடப்படுகிறது.

அறுவடை செய்யப்பட்ட ஊதா நிற கேரட்
அறுவடை செய்யப்பட்ட ஊதா நிற கேரட்

இதில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், டர்னிப், பட்டாணி, சைனிஸ் கேபேஜ், புருகோலி போன்ற காய்கறிகள் அதிகளவு பயிரிடப்பட்டாலும், 2800 ஹெக்டேர் பரப்பளவில் கேரட் விளைவிக்கப்படுகிறது. அதிக மகசூல், நல்ல லாபம் கிடைப்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீரியரக கேரட் விதைகளை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர். எப்1, எர்லி உள்ளிட்ட வீரியரக விதைகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இவ்வகை கேரட் பயிர்கள் 3 முதல் 4 மாத பயிராக உள்ளது.

இந்த நிலையில், தற்போது புது வரவாக ஊதா நிறத்தில் விளையக்கூடிய கேரட் விதைகள் சந்தைக்குப் புதிதாக வந்துள்ளது. பெரும்பாலான விவசாயிகள் இந்த வகை கேரட் விதைகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதைத் தொடர்ந்து விதை விற்பனையாளர்கள் சோதனை முயற்சியாக கேத்தி பாலாடா பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ஊதா நிற கேரட் விதைகளைக் கொடுத்து பயிரிடச் செய்துள்ளனர். 6 மாத காலம் பராமரித்து தற்போது அறுவடை செய்தார். ஆனால், இந்த வகை கேரட் மண்டிகளில் ஏலம் போகவில்லை. வியாபாரிகளும் வாங்க ஆர்வம் காட்டவில்லை.

சுத்திகரிக்கப்படும்ஊதா நிற கேரட்
சுத்திகரிக்கப்படும்ஊதா நிற கேரட்

இது குறித்து கேரட் விவசாயி கூறுகையில், `` 6 மாதப் பயிரான இந்த வகை கேரட்டுக்கு அதிகளவிலான தண்ணீர் தேவைப்பட்டது. நல்ல விளைச்சலைத் தந்த நிலையில், ஊதா நிறத்தில் விளைந்திருந்த கேரட்டை அறுவடை செய்து விற்பனைக்காக மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு அனுப்பினேன். ஆனால், ஒருவர் கூட ஊதா நிறக் கேரட்டை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இப்படி நடக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை'' என்று கண்ணீர் மல்க கூறினார்.

இதுகுறித்து வேளாண் ஆய்வாளர்கள் கூறுகையில், ``ஊதா நிற கேரட்கள் இந்தியாவில் குறைந்த அளவில் பயிரிடப்படுகின்றன. அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் அதிகளவில் விளைவிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை கேரட்களில் நோய் எதிர்ப்பு சத்துகள் உள்ளன. உடல் எடையை குறைப்பவர்கள் இவ்வகை கேரட்களைப் பயன்படுத்துகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கேரட் அதிக பரப்பளவில் பயிரிடப்படும் நிலையில், ஊதா நிற கேரட் குறித்தும் விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவற்றைச் சந்தைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

ஒருவர்கூட ஊதா நிறக் கேரட்டை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இப்படி நடக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை.
ஊட்டி விவசாயி

இது தொடர்பாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டபோது, ``இந்த வகை கேரட்களை இப்போதுதான் விவசாயிகள் பயிரிடத் தொடங்கியுள்ளனர். பலரும் பயிரிட ஆர்வம் காட்டினால் சந்தைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.