Published:Updated:

காடை வளர்ப்பு : மாதம் ரூ. 30,000 கலக்கல் வருமானம் கொடுக்கும் காடை முட்டை!

காடை வளர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
காடை வளர்ப்பு

பராமரிப்பு அதிகம் தேவைப்படாது. ஏன்னா, காடைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.

காடை வளர்ப்பு : மாதம் ரூ. 30,000 கலக்கல் வருமானம் கொடுக்கும் காடை முட்டை!

பராமரிப்பு அதிகம் தேவைப்படாது. ஏன்னா, காடைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.

Published:Updated:
காடை வளர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
காடை வளர்ப்பு
பிராய்லர் கோழி முட்டைகளுக்கு மாற்றாகப் பெரும்பாலான மக்கள் அதிகம் விரும்புவது நாட்டுக்கோழி முட்டைகளைத்தான். அதற்கு அடுத்தபடியாகக் காடை முட்டை உள்ளது.

தேனி நகரின் வால்கரடு பகுதியில் காடைப் பண்ணை அமைத்து முட்டைகள் உற்பத்தி செய்து வருகிறார் இளைஞர் அழகுராஜா அழகர்சாமி. அவரை நேரில் சந்திக்க அவரது காடைப் பண்ணைக்குச் சென்றோம்.

காடை
காடை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“என்னோட சொந்த ஊர் தேனி அன்னஞ்சி. எனக்கு 32 வயசாகுது. தனியார் டூவீலர் கம்பெனியில டெக்னிக்கல் மேனேஜராக 9 வருஷம் வேலை பார்த்தேன். விவசாயக் குடும்பத்துல பிறந்ததால சின்ன வயசுல இருந்தே விவசாயத்து மேல, ரொம்ப ஆர்வம். ஆடு, மாடு வாங்கி வளர்க்கலாம்னு நினைச்சேன். அப்போதான் யூடியூப்ல காடை வளர்ப்பு பத்திப் பார்த்தேன். நல்ல லாபம் கிடைக்கும்னு அதுல சொன்னாங்க. சரி, நம்மளும் முயற்சி செஞ்சிப் பார்க்கலாம்னு நினைச்சு, 2018-ம் வருஷம், வேலையை விட்டுட்டேன். காடைக் குஞ்சு எங்கே கிடைக்கும்னு தேடி அலைஞ்சேன். மதுரை சோழவந்தான்ல இருந்த ஒரு காடைப் பண்ணைக்குப் போய் 1,000 காடைக்குஞ்சுகளை வாங்கிட்டு வந்தேன். நான் வாங்கும்போது ஒரு குஞ்சின் விலை 5.50 ரூபாய். அதுக்குக் கூண்டுகள் தயாரிச்சு, தண்ணீர் கொடுக்க பீடிங் பைப்புகள், உணவு கொடுப்பதற்காகப் பீடர் எல்லாம் வாங்கினேன். ஆரம்பத்துல, கறிக்காகக் காடைகளை வளர்த்தேன். 30 நாள்கள்ல காடை, கறிக்குத் தயாராகிடும். அதாவது, 220 கிராம் எடையில இருக்கும். காடைக்குத் தனித் தீவனம் மார்க்கெட்டுல கிடைக்குது. 6 மாசம் கறிக் காடை மட்டுமே வளர்த்துக்கிட்டு வந்தேன். அப்போதான் மார்க்கெட்ல, காடை முட்டைக்கும் நல்ல வரவேற்பு இருப்பது தெரிஞ்சது. அதிலிருந்து இப்ப காடை முட்டை மட்டும் உற்பத்தி பண்ணிக்கிட்டு இருக்கேன்’’ என்றவர், கறிக்காடைக்கும், முட்டைக் காடைக்குமான வித்தியாசங்களைப் பகிர்ந்துகொண்டார்.

காடை முட்டைகளுடன் அழகுராஜா அழகர்சாமி
காடை முட்டைகளுடன் அழகுராஜா அழகர்சாமி

“கறிக்காடையைச் சாதாரணமா பண்ணைக் கோழிபோலத் தரையிலயே வளர்த்துடலாம். ஆனால், முட்டைக் காடையை ரொம்பக் கவனமா வளர்க்கணும். முட்டைக் காடையில ரெண்டு வகை இருக்குது. ஒண்ணு, சாப்பிடுற முட்டை உற்பத்தி. இன்னொன்னு குஞ்சு பொறிப்பதற்கான முட்டை உற்பத்தி. சாப்பிடுற முட்டைக்காக 500 காடைகள் வெச்சிருக்கேன். குஞ்சு பொறிப்பதற்காக 2,000 காடைகள் வெச்சிருக்கேன். சாப்பிடுற முட்டைக்கான காடை கூண்டுல பெண் காடைகள் மட்டும் இருந்தால் போதும். குஞ்சு பொறிப்பதற்கான முட்டை உற்பத்தி செய்யத்தான் ஆண் காடை வேணும். அதனால அந்தக் கூண்டுல 3 பெண் காடைக்கு ஒரு ஆண் காடை இருக்கணும். கூண்டுல அதிக காடைகளையும் போடக் கூடாது. ஒரு சதுர அடிக்கு 4 காடைகள் என்பதுதான் கணக்கு. பொதுவா, காடைகள் அனைத்து சூழலிலும் வளரும். வெயில், குளிர் எல்லாத்தையும் தாங்கி வளரும். கூண்டுல நெருக்கமா காடைகளை அடைச்சா, வெயில் காலத்தில இறந்து போக வாய்ப்புண்டு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காடைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். அதனால பராமரிப்பு அதிகம் தேவைப்படாது. எப்பவாவது சளிப்பிடிக்கும். நமக்குச் சளிபிடிச்சா மூக்குல சளி வடியுற மாதிரி, காடைக்கும் மூக்குல சளி வடியும். அப்போ அதுக்கான மருந்தை வாங்கிட்டு வந்து, தண்ணியில கலந்து ஸ்ப்ரே பண்ணுனா 4 நாள்ல சரியாகிடும். சளி சரியாகுற வரைக்கும் கம்மியாத்தான் முட்டை வைக்கும். எடையும் குறையும். 3 நாளைக்கு ஒருதடவை இடத்தைச் சுத்தம் பண்ணணும்.

கூண்டுகளில் இருந்தபடியே தீவனம் எடுக்கும் காடைகள்
கூண்டுகளில் இருந்தபடியே தீவனம் எடுக்கும் காடைகள்

நான் 5 சென்ட் நிலத்தில கிழக்கு மேற்காகப் பண்ணை அமைச்சிருக்கேன். கட்டடத்தைவிட 6 முதல் 7 அடி வரை உயரமாகக் கூரை இருக்கணும். அப்பத்தான் நல்ல காற்றோட்டம் இருக்கும். அதுதான் காடைகளுக்கு நல்லது. சிலர், முட்டைக் காடைகளைத் தரையில வளர்ப்பாங்க. அது சரியான முறை இல்லை. தரையில் இருக்கும்போது, முட்டைகள் உடைஞ்சுடும். அதனால, தேவையான வசதிகளோடு கூண்டுகளைச் செஞ்சு வளர்க்குறதுதான் சரியான முறை. கூண்டுகளை உள்ளூர் வெல்டிங் கடையிலேயே செய்யச் சொல்லலாம். நான் 10 அடி நீளம், 3 அடி அகலத்தில கூண்டுகளைச் செஞ்சிருக்கேன். பீடிங் பைப், உணவு பீடர் எல்லாம் நாமக்கல்ல கிடைக்குது. காடைக்குன்னு கேட்டால் போதும். கொடுப்பாங்க. நான், பீடர், பீடிங் பைப்புகளோட கூண்டுகள் அமைக்க ரூ.1.5 லட்சம் செலவாச்சு. நாம பாதுகாப்பா வெச்சிருக்கிறதைப் பொறுத்து, 6 வருஷம் வரைக்கும்கூட இதை வெச்சுக்கலாம். இது இல்லாம பண்ணைக்கான செலவுனு பார்த்தா தீவனம் மட்டும்தான். 50 கிலோ மூட்டையா தீவனம் கிடைக்கும். 2,000 காடைகளுக்கு ஒருநாளைக்கு 100 கிலோ தீவனம் தேவைப்படுது. காடைக்கு எப்பவும் தண்ணீரும், தீவனமும் இருந்துகிட்டே இருக்கணும். இரவு 9 மணிக்கு மேல விளக்கு எரியக் கூடாது. விளக்கு வெளிச்சம் இருந்தா, பகல் பொழுதுலதான் இருக்கோம்னு நினைச்சு, காடைகள் தீவனம் எடுத்துகிட்டே இருக்கும்” என்றவர் காடை வளர்ப்பில் உள்ள லாபம் பற்றிப் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காடை வளர்ப்பு : மாதம் ரூ. 30,000 கலக்கல் வருமானம் கொடுக்கும் காடை முட்டை!

“பெரும்பாலும் காடைக்கறியும், காடை முட்டையும் மக்கள் விரும்பிச் சாப்பிடுறாங்க. சாப்பிடுற ஒரு காடை முட்டையோட விலை 2.30 ரூபாய். குஞ்சு பொறிக்கிற முட்டையோட விலை 2.50 ரூபாய். என் பண்ணையில தினமும், சாப்பிடுற முட்டை 400, குஞ்சு பொறிக்கிற முட்டை 1,200-னு சராசரியா 1,500 முட்டைகளை உற்பத்தி செய்றேன். ஒரு வாரத்துல சராசரியா 10,000 முதல் 11,000 முட்டைகளை மதுரை, விருதுநகருக்கு அனுப்புறேன். ஒரு காடை பிறந்த 45 முதல் 50 நாள்கள்ல முட்டை வைக்க ஆரம்பிக்கும். தொடர்ந்து 10 மாசம் முட்டை வைக்கும். ஒரு காடையோட ஆயுட்காலம் 1 வருஷம்தான். பிறகு, அந்தக் காடைகளைக் கறிக்குக் கொடுத்துட்டு, மறுபடியும் குஞ்சு வாங்கி வளர்க்கலாம். அது 50 நாளுக்குள்ள முட்டை வைக்க ஆரம்பிச்சிடும்.

அடுக்கி வைக்கப்பட்டுள்ள 
காடை முட்டைகள்
அடுக்கி வைக்கப்பட்டுள்ள காடை முட்டைகள்

நான், முட்டை, குஞ்சு ரெண்டும் விற்பனை செய்றேன். மார்க்கெட் விலை ஒரு காடைக் குஞ்சு 8.50 ரூபாய். நான் 7 ரூபாய்க்குக் கொடுக்கிறேன். இப்படி, முட்டையாக இருந்தாலும் கறிக்காடையாக இருந்தாலும், காடைக் குஞ்சுகளாக இருந்தாலும் நல்ல விலை கிடைக்குது” என்றவர் நிறைவாக, “காடையில் நோய் பிரச்னைகள் இல்லை. இட வசதியும் பெருசாகத் தேவையில்லை. தீவனம், தண்ணீர் ரெண்டும் இருந்தால் போதும். நல்ல லாபம் எடுக்கலாம். கூண்டு, குஞ்சுகளுக்குச் செலவு செய்யுற பணத்தை 6 மாசத்துல எடுத்துடலாம். காடை வளர்ப்பை முறையா செஞ்சா நஷ்டம் இருக்காது” என்றார் அழுத்தமாக.

தொடர்புக்கு, அழகுராஜா, செல்போன்: 63808 93271

காடை வளர்க்க இங்கே பயிற்சி கிடைக்கும்!

காடை வளர்ப்பு குறித்துத் தேனி உழவர் பயிற்சி மையத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் செந்தில்குமாரிடம் பேசினோம். “தற்போது பலரும் காடை வளர்ப்பில் ஆர்வம் காட்டுகிறார்கள். சென்ற வருடம் காடை வளர்ப்புக் குறித்துத் தேனியில் இலவசப் பயிற்சி அளித்தோம். மாடு, ஆடு, கோழி போன்று காடை வளர்ப்புக்கு எனத் தனியாக எந்தத் திட்டமும் இல்லை. காடை வளர்ப்பில் ஆர்வம் உள்ள பலரும் இங்கே வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. அழகுராஜா, எங்கள் உதவியுடன்தான் மதுரையில் உள்ள காடைப் பண்ணையைப் பார்வையிட்டார். தற்போதுவரை அவருக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருது. பொதுவாகக் காடை வளர்ப்பில் நாம் கவனிக்க வேண்டியது, காடைகளுக்கு வரக்கூடிய நோய்கள்தான். தண்ணீர் சுத்தமாக இல்லையென்றால், சளிப்பிரச்னை ஏற்படும். அதுகூடப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. விரைவில் சரியாகிவிடும். ஆனால், கோழிகளுக்கு வருவதுபோல, வெள்ளைக்கழிச்சல் நோய் ஏற்படும். அதற்காக, வெள்ளைக் கழிச்சல் நோய்த் தடுப்பு மருந்து போடுவது அவசியம். கறிக்காடைகளின் எடையை இந்நோய்க் குறைத்துவிடும். கறிக்காடையாக இருந்தால், குஞ்சு பொறித்ததிலிருந்து 7-ம் நாள், 28-ம் நாள் தடுப்பு மருந்து போட வேண்டும். பிறகு விற்பனை செய்யலாம். அதே, முட்டையிடும் காடையாக இருந்தால், 7-ம் நாள், 28-ம் நாள், 56-ம் நாள் எனத் தொடர்ந்து 3 மாதத்துக்கு ஒருமுறை தடுப்பு மருந்து போட வேண்டும். இதற்கான செலவும் குறைவுதான். 500 டோஸ் வெறும் 150 ரூபாய் மட்டுமே. காடையில் வேறு எந்தப் பிரச்னையும் இருக்காது. காடை முட்டையில் கொழுப்புச்சத்துக் குறைவு. மற்றபடி, கோழி முட்டைகளில் இருக்கும் அதே சத்துகள் காடை முட்டையிலும் உள்ளன. பார்க்கக் கலராக இருக்கிறது; சுவையும் கூடுதலாக இருப்பதால், மக்கள் காடை முட்டையை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்” என்றார்.

தொடர்புக்கு, முனைவர் செந்தில்குமார், செல்போன் : 94431 08832

வெள்ளைக் கழிச்சலுக்கு இயற்கை மருத்துவம்!

காடைகளைத் தாக்கும் வெள்ளைக் கழிச்சலுக்கு இயற்கை வைத்தியம் செய்வது குறித்து பேசிய மரபுசார் கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி,

காடை வளர்ப்பு : மாதம் ரூ. 30,000 கலக்கல் வருமானம் கொடுக்கும் காடை முட்டை!

“காடைகளுக்கு இயல்பாகவே நோய்கள் ஏதும் தாக்குவது இல்லை. ஆனால், வெள்ளைக்கழிச்சல் நோய் வரும் பட்சத்தில், உணவு, தண்ணீர் எதுவும் எடுத்துக்கொள்ளாது. காடைகள் இறந்துகூட போகும். நோய் வந்துவிட்டது என்றால் 1 ஸ்பூன் சீரகத்தை ஊறவைத்து எடுத்துக்கொண்டு, அதில், 1 கைப்பிடி கீழாநெல்லி சேர்த்து அரைத்து, மிளகைவிட சிறியதாக உருட்டி, ஒவ்வொரு காடைக்கும் கொடுக்க வேண்டும். நோய் வருவதற்கு முன்னதாக, தற்காப்பு நடவடிக்கையாக, 1 லிட்டர் தண்ணீரில் நெல்லிக்காய் அளவு அதே சீரகம், கீழாநெல்லி உருண்டையைக் கரைத்து வாரம் ஒருமுறை கொடுக்க வேண்டும். இதைச் செய்துவந்தாலே காடைக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தாக்காது. சளிப்பிரச்னை பிரதானமாக காடைக்கு வரும். அப்போது, 5 கிராம் அளவிலான சீரகத்தை தட்டி 5 லிட்டர் தண்ணீர்ல் போட்டு காய்ச்சி, ஆற வைத்து காடைகளுக்குக் கொடுக்கலாம். அப்படி செய்யும்போது, சளித்தொல்லைகள் இருக்காது.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism