லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

ஊருக்குப் போகும்போது தண்ணீர் இன்றி தவிக்கும் செடிகள்... வாட்டம் போக்க வழிகள் உண்டா?

வாட்டம் போக்க வழிகள் உண்டா?
பிரீமியம் ஸ்டோரி
News
வாட்டம் போக்க வழிகள் உண்டா?

#Utility

நோய் மற்றும் பூச்சித்தாக்குதலைத் தடுக்க என்ன வழி? இரண்டு மூன்று நாள்களுக்கு ஊருக்குப் போனால் தண்ணீர் ஊற்றுவது யார்? படுத்தியெடுக்கும் எறும்புகளை என்னதான் செய்வது? வீட்டுத்தோட்டம் - மாடித்தோட்டம் போடும் அனைவருக்குமே இதுபோன்ற கேள்விகள் சர்வ சாதாரணம். இதனாலேயே ‘தோட்டமே வேணாம்’ என்று திரும்பியே பார்க்காதவர்களும் உண்டு. ஆனால், இவற்றுக்கெல்லாம் நம் கைவசமே எளிமையான தீர்வுகள் இருக்கின்றன என்பதுதான் உண்மை. அந்தத் தீர்வுகள், கேள்வி - பதில்களாக இங்கே...

வீட்டில் இருக்கும் தனியா விதைகளை விதைத் தால் மல்லித்தழை வளரும் என்கிறார்கள். ஆனால், நான் பலமுறை விதைத்தும் வளரவில்லை. என்ன காரணம்?

தற்போது கடைகளில் அவித்த தனியா (மல்லி) விதைகளையும் விற்பனை செய்கிறார்கள். அவற்றைத் தூவினால் முளைக்காது. நமது வீட்டில் இருக்கும் தனியா முளைக்குமா, முளைக்காதா என நாமே சோதனை செய்து பார்க்கலாம். சமையலறையிலிருந்து கொஞ்சம் மல்லி (தனியா) விதைகளை எடுத்து, இரண்டாக உடைக்க வேண்டும். பழைய காட்டன் துணியில் கொஞ்சம் மண்புழு உரத்தைப் பரப்பி, அதில் மல்லி விதையைத் தூவி பரப்ப வேண்டும். மண்புழு உரத்தையும் மல்லி விதைகளையும் நன்றாகக் கலந்து துணியைத் தளர்வாகப் பொட்டலம் கட்ட வேண்டும். பிறகு, பொட்டலம் முழுதாக நனையும் அளவுக்குத் தண்ணீரில் முக்கி எடுக்க வேண்டும். ஈரம் காய்ந்துவிடாதபடி அதை நிழலான இடத்தில் வைக்க வேண்டும். மூன்றாவது நாள் பொட்டலத்தை அவிழ்த்துப் பார்க்க வேண்டும். மல்லியில் முளைப்புத்திறன் இருந்தால், முளைத்திருக்கும். முளைப்புத் திறன் இல்லையென்றால் முளை விட்டிருக்காது. நாம் எப்படிப் போட்டோமோ அப்படியே இருக்கும். இதை வைத்து முடிவு செய்துகொள்ளலாம். நம்மிடம் இருக்கும் மல்லி விதையில் முளைப்புத்திறன் இருந்தால் பயன்படுத்தலாம். இல்லை என்றால் கடையில் விதை வாங்கிதான் பயன்படுத்த வேண்டும்.

ஊருக்குப் போகும்போது தண்ணீர் இன்றி தவிக்கும் செடிகள்... வாட்டம் போக்க வழிகள் உண்டா?

வீட்டுத்தோட்ட செடிகளில் எறும்புத் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் கரைசல் போட்டும் பயனில்லை... வேறு வழி சொல்லவும்...

வேப்ப எண்ணெயைத் தண்ணீரில் கலந்து 15 நாள்களுக்கு ஒருமுறை செடிகள்மீது தெளித்தால் எறும்பு வராது. எறும்புகளுக்கு ஒரு குணம் உண்டு. ஒரு வட்டம் இருந்தால் அதை விட்டு வெளியே வராது. அதனால் செடிக்கு வெளியே தொட்டியைச் சுற்றி எறும்பு சாக்பீஸ் மூலம் வட்டம் போட்டு வைக்கலாம். தொட்டிக்கு உள்ளே மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் கலந்து தூவி விடலாம். மரமாக இருந்தால் தண்டுப் பகுதியில் கொஞ்சம் கிரீஸ் தடவி வைக்கலாம். இவற்றையெல்லாம் செய்தால் போதும். எறும்பு பிரச்னையைச் சமாளிக்கலாம். கொஞ்சம் வேப்பம் பிண்ணாக்கை எடுத்து அதில் 5 மில்லி வேப்ப எண்ணெயைக் கலந்து செடியின் அடிப்பகுதியில் வைக்கலாம்.

காய்கறிப் பயிர்களில் வெள்ளைப் பூச்சி (மாவுப்பூச்சி) தாக்குதலை எப்படித் தடுப்பது?

மழைக்காலத்தில் இதன் தொல்லை அதிகம் இருக்காது. வெயில் காலத்தில்தான் அதிகமாக இருக்கும். 15 நாள்களுக்கு ஒருமுறை வேப்ப எண்ணெய் கரைசல் தெளித்து வந்தால் பெரும்பாலும் மாவுப்பூச்சி தாக்குதல் இருக்காது. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு பூச்சிகள் இருந்தால் தண்ணீரை வேகமாகத் தெளித்தாலே சரியாகிவிடும். தாக்குதல் அதிகமாக இருந்தால், ஒரு பக்கெட்டில் 10 லிட்டர் தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் இரண்டு ஷாம்பூ பாக்கெட்டுகளில் இருக்கும் ஷாம்பூவை ஊற்றிக் கரைக்க வேண்டும். அந்தக் கரைசலை ஸ்பிரேயரில் ஊற்றி, மாவுப் பூச்சி இருக்கும் இடங்களில் தெளிக்க வேண்டும். இப்படிச் செய்தாலே மாவுப்பூச்சி கட்டுப்படும். இது அவசர சிகிச்சை மட்டும்தான். வேப்ப எண்ணெய் கரைசல்தான் நிரந்தர தீர்வு.

காய்கறி பயிர்களுக்குத் தெளிப்பதுபோல் கீரைகளுக்கு வேப்ப எண்ணெய் கரைசல் தெளித்தால், அறுவடை செய்து சமைத்துச் சாப்பிடும்போது கசக்கிறதே...

கீரைகளில் வேப்ப எண்ணெய் கரைசலைத் தெளிக்கக் கூடாது. அதை முதல்நாள் தெளித்துவிட்டு அடுத்த இரண்டு நாள்களில் கீரையை அறுவடை செய்கிறார்கள். அப்படிச் செய்யும்போது கீரையில் கசப்புச் சுவை இருக்கும். அதனால் மற்ற பயிர்களுக்கு வேப்ப எண்ணெய் கரைசல் பயன்படுத்துங்கள். கீரைகளுக்கு மட்டும் வேப்பம் கொட்டையை அரைத்து, காடாத்துணியில் கட்டி ஒரு நாள் முழுக்க தண்ணீரில் ஊற வைத்து, அடுத்த நாள் காலையில் அந்தக் கரைசலைத் தெளிக்கலாம். அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள், வேப்பம் பிண்ணாக்கு வாங்கி அதைத் தண்ணீரில் கரைத்து அந்தக் கரைசலைத் தெளிக்கலாம்.

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் பிண்ணாக்கு போட்டால் போதும். அது நன்றாகக் கரைந்த பிறகு, அதிலிருந்து கரைசல் எடுத்து 10 மடங்கு தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். அதைச் செய்தால் போதும். பூச்சி, நோய் பற்றி பயப்பட வேண்டியதே இல்லை. கடையில் போய் அதை வாங்கி வர முடியாதவர்கள், வீட்டில் இருக்கும் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் அரைத்து அந்தக் கரைசலைத் தெளிக்கலாம். தலா 10 கிராம் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, 2 கிராம் மஞ்சள்தூள் எடுத்துக்கொண்டு... அவற்றை நன்றாக அரைத்து, 5 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

மாடித்தோட்ட பயிர்களில் அசுவினி பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்கிறது? அதைத் தடுக்க என்ன செய்யலாம்?

புங்கன் எண்ணெய், வேப்ப எண்ணெய் இரண்டையும் 5 மில்லி எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் காதி சோப்பையும் கலந்துகொள்ளுங்கள். அதை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, செடிகளுக்குத் தெளித்தால் போதும். அசுவினி மட்டுமல்ல... பூச்சித் தொல்லையே இருக்காது. ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம், அசுவினியோ மற்ற பூச்சிகளோ செடிகளில் வந்த பிறகுதான் இதைத் தெளிக்க வேண்டும் என அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது. பூச்சிகள் வருகின்றனவோ இல்லையோ வாரம் ஒரு தடவை இதைத் தெளித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதைச் செய்தால் போதும்.

அதையும் மீறிப் பூச்சித் தாக்குதல் இருந்தால் 3ஜி கரைசல் (Garlic + Ginger + Green Chilli) என்ற பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் கரைசல் தெளித்தால் போதும். பூச்சி பிரச்னையே இருக்காது. பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக தலா 50 கிராம் எடுத்துக்கொண்டு, அரைத்து, 5 லிட்டர் தண்ணீரில் கலந்துகொள்ள வேண்டும். அதைச் செடிகளுக்குத் தெளித்தால் போதும்.

ஊருக்குப் போகும்போது தண்ணீர் இன்றி தவிக்கும் செடிகள்... வாட்டம் போக்க வழிகள் உண்டா?

வீட்டுத்தோட்டம் அமைப்பதில் பிரச்னை இல்லை. ஆனால், நான்கு நாள்கள் ஊருக்குப் போய்விட்டால், செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற ஆள் இல்லை. இதை எப்படிச் சமாளிப்பது?

மாடித்தோட்டம் அமைக்கும்போது, பையில் மண் அதிகமாகச் சேர்த்தால்தான் இந்தப் பிரச்னை. அதற்குப் பதிலாகத் தென்னைநார் கழிவு உரத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்தக் `காயர் கம்போஸ்ட்’ ஒட்டகம் மாதிரி. தண்ணீர் கிடைக்கும்போது உறிஞ்சிக்கொண்டே இருக்கும். பயிர்களுக்கு நாம் கொடுக்கும் தண்ணீரை உறிஞ்சிவைத்துக்கொள்ளும். நான்கு நாள்கள் தண்ணீர் கிடைக்காதபோது, உறிஞ்சிவைத்துள்ள தண்ணீரைப் பயிர்கள் எடுத்துக்கொள்ளும். அதனால் வீட்டுத் தோட்டம் அமைக்கும்போதே, `காயர் கம்போஸ்ட்’ மூலமாக அமைத்தால் போதும். நான்கு நாள்கள் ஊருக்குப் போனாலும் கவலையே வேண்டாம்.

ஊரிலிருந்து திரும்ப வந்த பிறகு, செடிகளைப் பாருங்கள். நன்றாகத்தான் இருக்கும். அதையும் மீறிச் செடிகள் வாடி இருந்தால், கவலைப்படாதீர்கள். 10 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் இளநீரைக் கலந்து கொள்ள வேண்டும். அதை மதிய நேரத்தில் வாடி நிற்கும் செடிகள்மீது தெளித்து விட்டால் போதும். இரண்டு மணி நேரத்தில் பயிர்கள் புத்துணர்வு பெற்று, பளபளவென இருக்கும். இதனால் செடிகளின் வாட்டம் போவது மட்டுமல்ல. மகசூலும் அதிகமாகும். அதிலும் கோடைக்காலத்தில் இந்த வைத்தியம் நிச்சயம் தேவைப்படும்.