Published:Updated:

வருமானம் இரண்டுமடங்காக மதிப்புக்கூட்டுதல் ஒன்றே வழி!

ஞானசூரிய பகவான்
பிரீமியம் ஸ்டோரி
ஞானசூரிய பகவான்

மலரும் நினைவுகள்

வருமானம் இரண்டுமடங்காக மதிப்புக்கூட்டுதல் ஒன்றே வழி!

மலரும் நினைவுகள்

Published:Updated:
ஞானசூரிய பகவான்
பிரீமியம் ஸ்டோரி
ஞானசூரிய பகவான்

ன்றைக்கு உள்ளங்கையில் உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இந்த நவீன வசதிகள் இல்லாத காலத்தில் வெகுஜன மக்களின் முக்கிய ஊடகக் களஞ்சியமாகத் திகழ்ந்தது வானொலிதான். விவசாயச் செய்திகள் தொடங்கிக் கலைத்துறையை வளர்த்தது வரை சமூக மேம்பாட்டுக்காக எவ்வளவோ சேவையாற்றியது அகில இந்திய வானொலி.

வேளாண் செய்திகளை வழங்கியவர்களில் பிரபலமானவர் ஞானசூரிய பகவான். 18 ஆண்டுகள் அகில இந்திய வானொலியில் பணியாற்றி அரசுக்கும், வேளாண்குடி மக்களுக்கும் பாலமாகத் திகழ்ந்தவர். தற்போது இயற்கை வளங்களைப் பாதுகாத்து, அதன்மூலம் வேளாண் உற்பத்தி, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த விவசாயிகளுக்குப் பயிற்சிக் கொடுத்து வருகிறார். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகேயுள்ள தெக்குப்பட்டுக் கிராமத்தில், பூமி இயற்கை வளங்கள் பாதுகாப்பு மையத்தை நிறுவி, வேளாண்மைத் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வரும் ஞானசூரிய பகவானைப் பசுமை விகடன் ஆண்டு மலருக்காகச் சந்தித்தோம். வானொலியில் பணியாற்றிய அனுபவங்களைப் பற்றிக் கேட்டபோது, மலரும் நினைவுகளில் மூழ்கியவர் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘எனக்கு 73 வயதாகிறது.1968-1972 காலகட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி விவசாயப் படிப்பை முடித்துவிட்டு, வேளாண்மைத் துறையில் 6 ஆண்டுகள் பணிபுரிந்தேன். ‘மீடியா’ மீதான ஆர்வம் காரணமாக, அரசு அதிகாரியாக இருந்த நான், 1978-ல் வானொலியில் வேளாண்மை நிருபராக வேலைக்குச் சேர்ந்தேன். தொடர்ந்து, 18 ஆண்டுகள் வானொலியில் வேளாண் (பண்ணை இல்ல ஒலிபரப்பு) மற்றும் கிராமப்புற ஒலிபரப்பு பொறுப்பாளராக இருந்தேன். சென்னை மாதிரியான இடங்களில் வேளாண்மை ஒலிபரப்பு வருமா, வராதா என்ற சூழலில், சென்னையில் வேளாண் ஒலிபரப்பு வந்தபோது தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நான்தான் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தேன்.

ஞானசூரிய பகவான்
ஞானசூரிய பகவான்

நான் பணியிலிருந்தது பசுமைப் புரட்சி காலகட்டம். புதுப்புது நெல் ரகங்கள் வந்தன. பசுமைப் புரட்சி ஏற்பட்ட பிறகுதான் நிறைய ரசாயன உரங்களைப் போட்டு மண்ணைக் கெடுத்துவிட்டதாகப் பலரும் சொல்கிறார்கள். நான்கூடச் சொல்லியிருக்கிறேன். ஆனால், அப்போது, உணவுத்தேவை அதிகமாக இருந்தது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதியைத் தவிர்த்து, நாமே உற்பத்தி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.

அப்போது நம்மிடம் இருந்த நெல் ரகங்களை விளைய வைத்து அறுவடை செய்ய 6 மாதங்கள் ஆகும். உணவுத்தேவையைச் சமாளிக்க 90 நாள்கள், நான்கு மாத பயிர் ரகங்கள் எனக் குறுகிய கால ரகங்கள் அறிமுகமாகின. அதிலும், ரசாயன உரங்களை ஏற்று அதிக மகசூல் தரக்கூடிய ரகங்களை அறிமுகம் செய்தார்கள். பயிர் நன்றாக வளர்கிறது என்றால் பூச்சிகள் நிறைய வரும். அதைக் கட்டுப்படுத்தப் பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லி மருந்துகள் நிறைய பயன்படுத்தப்பட்ட சூழல். வேறு வழியில்லை. இந்தியா மட்டுமின்றி அனைத்து நாடுகளுமே இதைக் கடந்துதான் வந்திருக்கின்றன. தற்போது தேவை பூர்த்தியாகிவிட்டது. இனிமேல், அந்த நிலங்களைப் பயன்படுத்த முடியாது என்ற நிலை இல்லை. இயற்கை உரங்களைப் பயன்படுத்தி மேலே கொண்டு வர முடியும்’’ என்று நீண்ட பெருமூச்சு விட்டவர், தொடர்ந்தார்.

“எனக்கு விவசாயத்தைச் சொல்லிக்கொடுத்தது வேளாண்மைப் பல்கலைக்கழகம் என்றால்... அடுத்த பல்கலைக்கழகம் வானொலி. அந்தச் சமயம் அறிமுகமான ‘ஆடுதுறை 27’ நெல் ரகம்குறித்த விவரங்கள் வானொலி மூலம்தான் விவசாயிகளைச் சென்றடைந்தது. இதனால், விவசாயிகள் அந்த ரகத்தை ‘ரேடியோ நெல்’ என்றே அழைத்தனர். அந்தக் காலத்தில், செய்திகளை மக்களிடம் சேர்ப்பதில் வானொலிக்குப் பெரிய பங்கு இருந்தது. அதிகமாக வேளாண்மை பற்றிய செய்திகளை வானொலியில்தான் கேட்க வேண்டும்.

கேள்வி-பதில், ஒலிச்சித்திரம், கணவன்-மனைவி பேசிக்கொள்வதைப் போன்ற உரையாடல், நாடகங்கள் என வேளாண்மை நிகழ்ச்சியைப் பலவித வடிவங்களில் கொடுத்தோம். மதுரை வானொலி நிலையத்தில் நான் பணிபுரிந்தபோது, ‘நல்லகாலம் பொறக்குது; நல்லகாலம் பொறக்குது; நல்ல சேதி சொல்லப் போறோம்’ என்று சாமக்கோடாங்கி பாணியில் விவசாயிகளுக்குச் செய்திகளை வழங்கியதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏழு ஆண்டுகள் மதுரையில் நடத்திய சாமக்கோடாங்கி நிகழ்ச்சியைப் பிறகு சென்னையிலும் நடத்தினேன்.

ஞானசூரிய பகவான்
ஞானசூரிய பகவான்

ஒரு பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருந்த கேள்வி, பதில் பகுதியில், ‘தினசரி, விவசாயத்துல குறிசொல்லுற கோடாங்கி அரசியலுக்கு வந்தா நீங்கள் ஏத்துப்பிங்களா? என வாசகர் ஒருவர் எழுப்பியிருந்த கேள்விக்கு, பதில் அளித்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர். ‘இந்த விவசாயிகளுக்குச் சாமக்கோடாங்கி சங்கரலிங்கத்தைவிட்டா வேற ஆள் இல்ல; அவர் அங்கேயே இருக்கட்டும். விரயப்படுத்தக் கூடாது’ என்று பதில் சொல்லியிருந்தார் கலைஞர். அந்த அளவுக்குச் சாமக்கோடாங்கி நிகழ்ச்சி பிரபலமாக இருந்தது. திருச்சி, திருநெல்வேலி, மதுரை, நாகர்கோவில், கோயம்புத்தூர், சென்னை என அனைத்து வானொலி நிலையங்களிலும் என்னைப் போன்ற வேளாண் பட்டதாரிகள் வானொலியில் வேளாண் நிகழ்ச்சியை நடத்தக்கூடியவர்களாக இருந்தார்கள்.

‘உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற பாட்டுக்கேட்கும். கிராம வானொலி மன்றங்கள் இருந்தன. வானொலியில் வரும் நிகழ்ச்சிகளைக் கேட்டு விவசாயிகளிடம் கொண்டு செல்வதுதான் அவர்களின் பணி. சந்தேகம் என்றால் விவசாய அலுவலர்களுக்குக் கேள்வி அனுப்புவார்கள். அதுகுறித்து வானொலியில் பதில் வரும். ‘நெல்லுக்கான வயசு, எப்போது நடணும், எப்போது நிவர்த்திச் செய்யணும், எவ்வளவு இடைவெளி விட்டு நடவு செய்யணும், எவ்வளவு தண்ணி கட்டணும், எந்தப் பருவத்தில் தண்ணிக் கட்டணும், எந்தப் பருவத்தில் தண்ணிக் கட்டக் கூடாது?’ போன்ற தொழில்நுட்ப தகவல்களை விவசாயிகள் வானொலியில் கேட்டுதான் தெரிந்துகொண்டார்கள்’’ என்றவர் இன்றைய நிலையைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“இன்றைக்குத் தொலைக்காட்சிகள் வந்ததாலும் வானொலி சென்றடைந்த தூரம் அதிகம். இன்னும்கூட அதிகமான நேயர்களை, அதிகமான இடத்தில் போய்ச் சேர்வது வானொலியாகத்தான் இருக்கிறது. என்னதான், விவசாயம் முன்னேறி இருந்தாலும், விவசாயிகள் முன்னேறவில்லை. கொரோனா சமயத்தில் பல்வேறு துறைகளின் உற்பத்தி குறைந்துவிட்டது. வேளாண்மையில் மட்டும் உற்பத்தி குறையவில்லை. சொல்ல வேண்டிய செய்திகளும், செய்ய வேண்டியவையும் நிறைய இருக்கின்றன. 50 வருடங்களாக விவசாயிகள் மத்தியில் இருக்கிறேன். விவசாயம் மேம்பட வேண்டும். விவசாயிகள் வசதியாக வாழ வேண்டும். அதற்கான செயல்திட்டங்கள் வேண்டும். நாட்டின் பொருளாதாரம் மேம்பட ஒரே வழி, விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய வேண்டும். கிராமப்புறங்களிலேயே, அதற்கான தொழிலகங்களையும் ஏற்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மதிப்புக்கூட்டிய பொருள்களை வாங்குவதற்கான அமைப்புகளை அரசு ஏற்படுத்த வேண்டும்.

உழவர் உற்பத்தி நிறுவனங்களைத் தொடங்குமாறு மத்திய, மாநில அரசுகள் கூறுகின்றன. ஆனால், சாதாரண விவசாயிகளால் சுலபமாக ஆரம்பிக்க முடியாது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். நடைமுறையில் பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் சந்தித்து வருகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் மதிப்புக்கூட்டிய பொருள்களை வாங்குவதற்கான அமைப்புகளை அரசு ஏற்படுத்த வேண்டும். இந்தியாதான் அதிக நிலப்பரப்பில் விவசாயம் செய்யக்கூடிய நாடு. மாம்பழ உற்பத்தியில் நாம்தான் மேலோங்கி இருக்கிறோம். ஆனால், ஏற்றுமதியில் பின்தங்கியிருக்கிறோம். பப்பாளி உற்பத்தியிலும் நாம்தான் முன்னிலை. ஆனால், ஏற்றுமதியில் கவனம் செலுத்தவில்லை.

பாகிஸ்தானில் நம்மைவிட மாம்பழ உற்பத்தி குறைவு. ஆனால், மாம்பழ உற்பத்திக்கென்றே ஏற்றுமதியில் தனிக்கவனம் செலுத்துகிறது அந்நாட்டு அரசாங்கம். நம் நாடும் இது போன்ற விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’’ என்று சொல்லிமுடித்தார்.

தொடர்புக்கு, செல்போன்: 85261 95370.

‘ரிலே நிலையங்களாக மாற்றக் கூடாது!’

‘‘வானொலியில், வேளாண்மைக்கான பிரிவு முடங்கிப் போய்விட்டது. சென்னை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில் என அந்தந்தப் பகுதியில் வெவ்வேறு விவசாய முறைகள் இருக்கின்றன. அவர்களுக்கு ஏற்ப விவசாயச் செய்திகளை வழங்க வேண்டும். அரசு அமைப்புகள்தான் தினசரி செய்திகளைத் தர முடியும். அப்படியிருக்கையில், வேளாண்மைப் பிரிவு அலுவலர்களைப் பணியிலிருந்து எடுப்பதாகவும், ஓய்வுபெற்ற அலுவலர்கள் இடத்துக்கு வேறு யாரையும் நியமனம் செய்வதில்லை என்றும் தகவல்கள் வருகின்றன. சென்னையிலிருந்தே நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்யும் ‘ரிலே ஸ்டேஷன்’களாக மற்ற நிலையங்கள் மாற்றப்பட்டுவரும் தகவலும் வருத்தமளிக்கின்றன. இது ஒரு மோசமான நடவடிக்கை. வானொலி வேளாண்மைப் பிரிவில் வேளாண் பட்டதாரிகளை நியமனம் செய்து, அந்தந்த நிலையங்களிலிருந்தே நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலிபரப்புச் செய்ய மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்’’ என்கிறார் ஞானசூரியபகவான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism