Published:Updated:

`ஏக்கருக்கு 15 மூட்டை கூட மகசூல் தேறாது!' - தொடர் மழையால் பரிதவிக்கும் நெல் விவசாயிகள்

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

நிவர், புரெவி புயல் தாக்கத்துனால பேஞ்ச தொடர் மழையால, ஏற்கெனவே பயிர்கள் கீழே சாஞ்சி கிடந்துச்சு. இப்ப மறுபடியும் தொடர்ச்சியா நாலு நாளா மழை பேஞ்சு, தண்ணீர் தேங்கினதால, நெல்மணிகள் கீழ கொட்டி, மண்ணோடு மண்ணா கிடக்குது.

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த நான்கு நாள்களாகத் தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருவதால், இப்பகுதி நெல் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளார்கள். சம்பா, தாளடி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால், மிகப்பெரிய அளவில் மகசூல் இழப்பு ஏற்படும் என வேதனை தெரிவிக்கிறார்கள். இந்த மூன்று மாவட்டங்களிலும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

புயலால் சேதமடைந்த பயிர்கள்
புயலால் சேதமடைந்த பயிர்கள்

நிவர் மற்றும் புரெவி புயலின் தாக்கத்தால், டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்ததால், கடந்த ஒரு மாதமாகவே இப்பகுதி விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார்கள். தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல், நன்னிலம், நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர், சீர்காழி, வேதாரண்யம், தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

தொடர்ச்சியாக தண்ணீர் தேங்கி நின்றால் இளம் பயிர்களின் வேர்கள் அழுகி, முதலுக்கே மோசம் வந்துவிடும். மழை நின்றுவிட்டால், வயலில் தேங்கியுள்ள தண்ணீரை வடிகட்டி, ஓரளக்காவது பயிரைக் காப்பாற்ற வாய்ப்புள்ளது என்ற பரிதவிப்பில் இருந்தார்கள். இது ஒருபுறமென்றால், ஆழ்துளைக் கிணறுகளை நம்பி முன்னதாகவே, பயிர் செய்யப்பட்டு, கதிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள், கீழே சாய்ந்தன. குறிப்பாக, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவோணம், பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் இத்தகைய பாதிப்புகள் அதிகம்.

புயலால் சேதமடைந்த பயிர்கள்
புயலால் சேதமடைந்த பயிர்கள்

அடுத்த நாள்களில் ஓரளவுக்கு மழை விட்டதால், இப்பகுதி விவசாயிகள் ஓரளவுக்கு மன நிம்மதி அடைந்தார்கள். கீழேயே சாய்ந்து கிடந்தாலும்கூட, அடுத்த சில நாள்களில் இயன்றவரை அறுவடை செய்து, ஓரளவுக்காவது நஷ்டத்தைக் குறைக்கலாம் என நம்பிக்கையோடு இருந்தார்கள். ஆனால், இங்கு மீண்டும் பெய்யத் தொடங்கிய கனமழை, இப்பகுதி விவசாயிகளை நிலைகுலைய வைத்துள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய இப்பகுதி விவசாயி கக்கரை சுகுமாறன், ``கல்லணைக் கால்வாய் பாசனத்தை நம்பி இருக்கக்கூடிய பகுதிகள் இது. ஒரு போக சம்பாவுக்கு மட்டும்தான் தண்ணீர் கிடைக்கும். அதனால, இந்தப் பகுதியில முன்கூட்டியே நெல் சாகுபடியைத் தொடங்கிடுவோம்.

மார்கழி முதல் வாரத்துலயே கதிர்கள் முற்றி, நெற்பயிர்கள் அறுவடைக்கு வந்துடும். நிவர், புரெவி புயல் தாக்கத்துனால பேஞ்ச தொடர் மழையினால, ஏற்கெனவே பயிர்கள் கீழே சாஞ்சிக்கிடந்துச்சு. ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகள்ல மட்டுமே 30,000 ஏக்கருக்கு மேல பாதிப்பு. இப்ப மறுபடியும் தொடர்ச்சியா நாலு நாளா மழை பேஞ்சு, தண்ணீர் தேங்கினதால, நெல்மணிகள் கீழ கொட்டி, மண்ணோடு மண்ணா கிடக்குது.

கக்கரை சுகுமாறன்
கக்கரை சுகுமாறன்

கதிர்கள்-ல ஒட்டியிருக்கக்கூடிய மிச்ச மீதி நெல்மணிகளும் சேறுக்குள்ளயே கிடந்து தரமில்லாமல் இருக்கு. ஏக்கருக்கு 15 மூட்டை மகசூல் கிடைக்குறதேகூட கஷ்டம்” என கவலையோடு பேசினார். மத்திய மாநில அரசுகள், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை எழுப்புகிறார்கள். ஆய்வுகள் வெறும் கண் துடைப்பாக முடிந்துவிடாக் கூடாது எனத் தெரிவிக்கிறார்கள். தொடர் மழையால், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விளைநிலங்களில் மழைநீர் தேங்கி அப்பகுதி விவசாயிகளையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு