பிரீமியம் ஸ்டோரி
நிவர் மற்றும் புரெவி புயலின் தாக்கத்தால் பெய்த தொடர் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்தது ஒருபுறம் என்றாலும் மறுபுறம் பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள். நெல், வாழை, காய்கறிகள் உள்ளிட்ட பல பயிர்கள் மழைநீரில் மூழ்கிவிட்டன. இதனால் வேர்கள் அழுகி பயிர்கள் கைவிட்டுப் போய்விடுமோ என மிகுந்த பதைபதைப்பில் இருக்கிறார்கள்.
வரதராஜன்
வரதராஜன்

2018-ம் ஆண்டு கஜா புயல் நடத்திய கோரத்தாண்டவத்தால், தமிழக விவசாயிகள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நின்றார்கள். தற்போது தமிழகத்தில் நிலை கொண்ட நிவர் மற்றும் புரெவி புயலினால், பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லையென்றாலும் கூட, இதன் தாக்கத்தினால் பல லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. குறிப்பாக, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட வட மாவட்டங்களும், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் விளைநிலங்களில் மழைநீர் சூழ்ந்தது. இதைத்தவிர புதுச்சேரி, காரைக்காலிலும் புயல் பாதிப்பு அதிகமாக இருந்தது.

மழைநீரில் மூழ்கிய பயிர்கள்... பதைபதைக்கும் விவசாயிகள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், கயத்தார் ஆகிய தாலூகாக்களில் சுமார் 1,70,000 ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரி விவசாயம் நடந்து வருகிறது. தீவனச்சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, குதிரைவாலி, பருத்தி, சின்னவெங்காயம், கொத்தமல்லி, பாசிப்பயறு, உளுந்து ஆகியவற்றைச் சாகுபடி செய்திருந்தனர். புரெவி புயல் காரணமாக 6 நாள்களாகப் பெய்த மழையால் பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பி, மழைநீர் வெளியேறியது. ஓடைகளிலும் அதிகளவு நீர் வெளியேறி விளைநிலங்களில் புகுந்து கடல்போலத் தேங்கி நிற்கிறது. சுமார் 80,000 ஏக்கரில் வளர்ந்த நிலையிலிருந்த பயிர்கள் மழைநீரில் மூழ்கி முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

இதுகுறித்துக் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜனிடம் பேசினோம், ‘‘புரட்டாசி மாசம் பெய்ஞ்ச மழையை நம்பி மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், உளுந்து, பாசி, கம்பு, சின்ன வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, குதிரைவாலி, நெல், கொண்டைக்கடலைனு பயிரிட்டோம். ஒரளவு ஈரப்பதத்துல விதைகள் நல்லா முளைச்சுது. விதைப்பு செஞ்ச நாள்ல இருந்து ஐப்பசி 22-ந் தேதி வரைக்கும் மழையே இல்லை. இதனால பயிர்கள் வாடிப்போச்சு. ரெண்டு தடவை அழிச்சிட்டு விதைச்சோம். ஐப்பசி மாசக் கடைசி வாரத்துல பெய்ஞ்ச மழையால பயிர்கள் நல்லா வளர்ந்துச்சு. ரெண்டு தடவை உரமும் தூவினோம். பூப்பூத்த நிலையில இருந்த 25,000 ஏக்கர் பாசி, உளுந்துல மஞ்சள் தேமல்நோய் தாக்கிச்சு. 15,000 ஏக்கர் மக்காச்சோளம் கதிர் பிடிச்ச நிலையில ஒரு அடி உயரத்துல தண்ணித் தேங்கி நிக்குது. 40,000 ஏக்கர் சின்ன வெங்காயத்துல நண்டுக்கால் நோய் தாக்கியிருக்குது. இதுல ஊடுபயிராப் போட்ட மிளகாய் செடிக அழுகி மிதக்குது. இது முழுக்கக் கரிசல் மண் பகுதிங்கிறதால தண்ணியை அதிகமா உறிஞ்சாது. இப்ப தேங்கியிருக்க மழைநீர் வடிய ஒரு மாசம் ஆகும். சில தினங்கள்ல எல்லாப் பயிர்களும் சுத்தமா அழுகிடும். இந்த வருஷம் உழக்கு அளவு விளைச்சல்கூட வீடு வந்து சேராது. பாதித்த பயிர்களைக் கணக்கெடுத்து, புயல் வெள்ள நிதியில விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கொடுக்கணும்’’ என்று கோரிக்கை வைத்தார்.

மக்காச்சோளம்
மக்காச்சோளம்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்களில் பயிர் செய்யப்பட்டிருந்த சம்பா, தாளடி நெற்பயிர்களும் மழைநீரில் மூழ்கின. தஞ்சை மாவட்டம் பூதராயநல்லூரில் உள்ள ஏரி நிரம்பி, இதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பல நூறு ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. பட்டுக்கோட்டை அருகே கண்ணனாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக, ஆற்றின் கரை 90 அடி நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டு, வயல்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

மழைநீரில் மூழ்கிய பயிர்கள்... பதைபதைக்கும் விவசாயிகள்!

திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல், நீடாமங்கலம், கோயில்வெண்ணி, நன்னிலம், முத்துப்பேட்டை பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் மழைநீர் தேங்கியது. செருமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி மாயவநாதனிடம் பேசினோம். மிகுந்த பதைபதைப்போடு பேசியவர், ‘‘நான் 15 ஏக்கர்ல நெல் சாகுபடி செஞ்சிருந்தேன். இதோ பாருங்க. இது 90 நாள் வயசுள்ள பயிர். இது ஓரளவுக்கு மேடான பகுதி. இங்கயே மூணடி உயரத்துக்குத் தண்ணீர் நிக்கிது. இது கதிர் வர்ற நேரம். மழையில, பயிர் முழுமையாக மூழ்கிடுச்சி. இதே நிலைமை நீடிச்சிதுனா, வேர் அழுக ஆரம்பிச்சிடும். முதலுக்கே மோசம் வந்துடுமோனு மனசு பதைபதைப்பா இருக்கு. நாற்று உற்பத்தி, நடவு, களையெடுப்பு, உரம் போட்டதுனு இதுவரைக்குமே ஏகப்பட்ட செலவு செஞ்சிருக்கோம். என்ன ஆகுமோ தெரியலை பயமா இருக்கு. எங்க ஊர்ல மட்டுமே சுமார் 200 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் மூழ்கிக் கிடக்கு. காஞ்சிக்குடிக்காடு, அப்பரசன் பேட்டை, தாராக்கோட்டை, பேரையூர், கட்டக்குடினு இன்னும் பல கிராமங்கள்லயும் இதே நிலைமைதான். எங்க பகுதியில ஓடக்கூடிய வாய்க்காலை இந்த ஆண்டு முறையாகத் தூர்வாரி இருந்தால், இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது. தூர்வாரினதா கணக்கு காட்டினாங்க. ஆனால் தூர்வாரவே இல்லை. வாய்க்காலை ஒழுங்கா தூர்வாரி இருந்தால், தண்ணீர் வடிஞ்சிருக்கும்” என்றார் ஆதங்கத்தோடு.

மழைநீரில் மூழ்கிய பயிர்கள்... பதைபதைக்கும் விவசாயிகள்!

இப்பிரச்னை சம்பந்தமாக வேளாண்துறை அமைச்சர்(பொறுப்பு) கே.பி.அன்பழகன் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். “ஏற்கெனவே பயிர்களுக்குக் காப்பீடு செய்திருக்கும் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வேளாண்துறை வருவாய்த் துறை அதிகாரிகள் மழைநீரில் மூழ்கிய பயிர்கள் குறித்து கணக்கு எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதன் விவரம் வந்தவுடன் அதற்கேற்ப நிவாரணம் வழங்கப்படும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு