Published:Updated:

சாகித்ய அகாடமி விருது பெற்ற மானாவாரி விவசாயி!

 சோ.தர்மன்
பிரீமியம் ஸ்டோரி
News
சோ.தர்மன்

மரியாதை

மிழக விவசாயத்தின் ஆணிவேராக இருப்பவை கண்மாய்கள். ஒரு காலத்தில் நெல், வாழை, கரும்பு என்று விளைந்த விவசாய நிலங்கள் இன்று வறண்டுகிடக்கின்றன. குறிப்பாகக் கரிசல் பூமி. இதற்குக் காரணம் கண்மாய் மீதான அக்கறை இன்மைதான். கண்மாய்கள் வறண்டுபோய்க் கிடப்பதைக் காணும் போதெல்லாம் அவற்றை வளமாகப் பார்த்திருந்த விவசாயிகளின் கண்கள் கண்மாய்களாக மாறிவிடும். நெஞ்சு வெடிக்க, கண்கள் வெறிக்க எங்கோ பார்த்துச் செல்லும் அந்தப் பார்வைக்குப் பின்னால் நூற்றாண்டுச் சோகம் அப்பிக்கிடக்கும். அப்படிப்பட்ட சோகம் சூழ்ந்த ஒரு மானாவாரி விவசாயியின் ஆதங்கம்தான் ‘சூல்’ நாவல். அந்த நாவலை எழுதிய சோ.தர்மனுக்கு இலக்கியத்தின் மிக உயரிய விருதைக் கொடுத்து அங்கீகரித்திருக்கிறது சாகித்ய அகாடமி.

‘சூல்’ நாவல்
‘சூல்’ நாவல்

சோ.தர்மன் எழுதிய ‘சூல்’ நாவலுக்கு 2019-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியிலுள்ள இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். விருதுபெற்ற எழுத்தாளர்கள் காட்டும் எந்த மிகைத்தனமும் இல்லாமல் இயல்பாகப் பேசினார் தர்மன். “நான் அடிப்படையில் விவசாயி. ‘பாட்டன், முப்பாட்டன் காலத்தில் இல்லாத தண்ணீர்ப் பற்றாக்குறை இப்போது ஏன் ஏற்பட்டது’ என்று ஆய்வு செய்தேன். எல்லா நீர்நிலைகளும் தூர்வாராமல், ஆக்கிரமிக்கப்பட்டு, வறண்டிருப்பதைப் பார்க்க ஆதங்கமாக இருந்தது. எட்டயபுரம், எட்டப்ப மன்னரின் அரண்மனையிலுள்ள பழைய ஆவணங்களைப் புரட்டிப் பார்த்தேன். எட்டயபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள அனைத்துக் கண்மாய்களும் அம்மன்னரின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டவை. கண்மாய்களை ‘மராமத்து’ செய்ய ஆண்டுதோறும் மானியம் கொடுத்த குறிப்புகள் இருந்தன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஜமீன்தார்கள் அதை ’குடிமராமத்து’ என அறிமுகப்படுத்தினார்கள். அந்தந்தக் கண்மாயின் கரைகளை பலப்படுத்தி, அந்தந்த கிராம மக்களே தூர்வாரினார்கள். ‘கண்மாயைப் பார்க்கும்போது விளக்கிவெச்ச வெண்கலக் கும்பா மாதிரி பளபளனு இருக்கணும்டா. அப்பத்தான் ஊரு உருப்படும்’ என்றும், ‘ஒவ்வொரு வருஷமும் தூத்தல் (மழைத்தூறல்) விழுந்துச்சுன்னா ரெண்டு கையால கும்பிட்டு, கையேந்தி வாங்கணும்டா’ என்றும் நாவலில் சொலவடைகளாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

 சோ.தர்மன்
சோ.தர்மன்

பிரிட்டிஷ்காரர்களின் காலத்தில் நீர்ப்பாய்ச்சி, மதகடக்கி, மடைக்குடும்பன், மடையன் (மடையை ஆள்பவன்), நீர்க்கட்டி எனப் பல பெயர்களில் கண்மாயைப் பராமரிக்கப் பணியாளர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்கள் கையில் செப்பு வளையக் காப்பு அணிந்து அதிகாரத்துடன் இருப்பார்கள். இவர்களின் அனுமதி இல்லாமல் ஒருசொட்டுத் தண்ணீரைக்கூட வெளியே எடுத்துச் செல்ல முடியாது. எல்லா விவசாயிகளுக்கும் தண்ணீரைச் சமமாகப் பாய்ச்சி விடுவார்களாம்.

இவர்களுக்கு நிலத்தில் விளைவதில் குறிப்பிட்ட அளவு கூலியாகக் கொடுப்பார்கள் விவசாயிகள். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபோது தமிழகத்திலிருந்த கண்மாய்களின் எண்ணிக்கை 39,640. இவை தவிர ஊருணிகள், கிணறுகள், தெப்பம், நீராவிகளும் இருந்தன. இவற்றை அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இப்போது ஒவ்வொரு கண்மாயையும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, கனிமவளத்துறை, வனத்துறை ஆகிய நான்கு பூதங்கள் காத்துக்கிடக்கின்றன. தற்போதைய அ.தி.மு.க அரசு குடிமராமத்துத் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்திருக்கிறது.

 சோ.தர்மன்
சோ.தர்மன்

எங்கள் ஊர் உருளைகுடி கண்மாய்த் தண்ணீர் மூலம், வெற்றிலை கொடிக்கால், கரும்பு, வாழை, நெல் பயிரிட்டோம். அப்படியென்றால் கண்மாயின் நீர்வளம் எப்படி இருந்திருக்கும்... இன்றும் `கொடிக்கால் கண்மாய்’, `கொடிக்கால் கிணறு’ என்றுதான் சொல்வார்கள். நிறைமாத கர்ப்பிணியைச் ‘சூலி’ என்பார்கள். இந்த உலகத்துக்குப் புதிய உயிரைப் பிறப்பிப்பவள் என்பதால்தான் அப்பெயர். அதேபோல மீன், மரம், செடி, கொடிகள் அத்தனைக்கும் கண்மாய் நீரே தாயாக இருப்பதால்தான் நாவலுக்கு ‘சூல்’ எனப் பெயரிட்டேன்” என நாவல் பிறந்த கதையைப் பகிர்ந்துகொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்து பேசத் தொடங்கினார். “மழையை மட்டுமே நம்பியுள்ள இந்த மானாவாரி பூமிக்குத் தனிச் சிறப்பு இருக்கிறது. தண்ணீரைச் சேமித்துவைக்கும் இந்த மண்ணின் தன்மை வேறெந்த மண்ணுக்கும் கிடையாது. கட்டபொம்மன், ஊமைத்துரை படைகளுடன் போர் புரிந்த பிரிட்டிஷ் மேஜர் வேல்ஸ், இந்தக் கரிசல் மண்ணைப் பற்றி ஒரு பதிவை எழுதிவைத்திருக்கிறார். அதில், ‘பசுவந்தனைக்கும் ஒட்டுரம்பட்டிக்கும் இடையில் எனது படைகளை வழிநடத்தினேன். இரவில் பெய்த கனமழையை நான் கணக்கில் எடுக்கத் தவறிவிட்டேன். அதனால், அன்றையபொழுது பாதகமாக விடிந்தது. இரவு பெய்த கனமழையில், அக்கரிசல் மண் நன்றாக ஊறி பஞ்சுபோலத் தண்ணீரை உறிஞ்சி வைத்துக்கொண்டது. என்னுடைய படை வீரர்களின் பூட்ஸ் கால்கள் முட்டு வரை பதிந்தன. ஆனால், ஊமைத்துரையின் படை வீரர்கள் வெறுங் கால்களுடன் எங்கள் படையைத் தாக்கினார்கள். இது போன்று தண்ணீரைச் சேமித்து வைக்கக்கூடிய வளமான மண்ணை நான் வேறெங்கும் கண்டதில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இம்மானாவாரிப் பகுதியில் நவதானியங்கள் என்றால் கம்பு, சோளம், காடைக்கண்ணி, செந்தினை, வெண்தினை, குதிரைவாலி, சாமை, வரகு, கேழ்வரகு, பயறு வகைகளில் பாசி, தட்டை, உளுந்து, மொச்சை, எள், கொள்ளு, துவரையும் விதைப்போம். நெல், மிளகாய் வற்றலும் இவற்றில் அடங்கும். மானாவாரி வெள்ளாமை என்றாலும் மழைக்குப் பஞ்சமில்லை. ‘விதைச்சுட்டாலே வெள்ளாமை வீட்டுக்கு வந்துடும்’ என நம்பிக்கையுடன் விதைப்போம்.

தண்ணீர் மட்டும் இருந்தால், சென்னையிலிருக்கும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஜனத்தொகை பாதி குறைந்துவிடும்.

சித்திரை மாதம் பொன்னேர் உழவன்று மாடுகளை அலங்கரித்து, கலப்பைகள், விதைகளைக் கோயிலில்வைத்து வழிபாடு செய்வோம். கோயிலுக்குச் சொந்தமான நிலத்திலோ, ஏதாவது ஓர் விவசாயியின் நிலத்திலோ முதலில் உழவு ஓட்டிவிட்டுத்தான் பிறகு அவரவர் நிலங்களில் உழவு செய்வோம். அது, விதைக்கும் விதைகள் நல்ல விளைச்சலைத் தர வேண்டும், நிறைவான மழைப்பொழிவு வேண்டும் என்பதற்கான கூட்டு வழிபாடு.

விவசாயத்தின் மூலதனமே விதைதான். விதைக் கருவூலங்களாக இருந்தவை கிராமங்கள்தான். நெல், கத்திரி, முருங்கை, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அந்தந்த ஊரின் மண்ணைப் பொறுத்து தனிச்சுவையுடன் வேறுபட்டிருந்தன. அதனாலேயே அந்தந்த ரகங்களுடன் ஊர்ப்பெயரும் இணைந்தது. `பசுமைப்புரட்சி’ என்ற பெயரில் வீரிய ரகங்கள் பரவத் தொடங்கின.

பருத்தியில் கருங்கண்ணி, குப்பான் ஆகிய ரகங்கள்தான் சிறப்பானவை. இந்த ரகப் பருத்திச் செடியின் வளர்ச்சி எவ்வளவு உயரமோ, அதே ஆழத்துக்கு வேரும் மண்ணில் ஊடுருவிச் செல்லும். இச்செடிகளைப் பிடுங்க முடியாது. அறுத்துத்தான் எடுக்க வேண்டும். வறட்சியைக்கூடத் தாங்கி வளரும். இந்தப் பருத்திச்சுளையின் நூற்புத்திறன் அதிகமாக இருக்கும். நோய்த் தாக்குதலும் கிடையாது. இவை அழிக்கப்பட்டு, புதிய வெளிநாட்டுப் பருத்தி ரகம் அறிமுகமானது. அது, சூரியகாந்திபோலக் காய்க்கும் தன்மையுடையது. கருங்கண்ணியின் 10 சுளையின் அளவு அதில் ஒரே சுளையில் விளையும். ஆனால், அதற்கு ஆணி வேர் கிடையாது. சல்லி வேர் மட்டும்தான். எவ்வளவு பூ எடுத்தாலும், உதிர்ந்துவிடும். நோய்த் தாக்குதலும் அதிகம். இதேபோலச் சிறுதானியம், காய்கறி விதைகளிலும் வீரிய ரகம் அறிமுகமானது. வாழ்வியல் முறையாக இருந்த விவசாயம், தற்போது தொழிலாக மாறிவிட்டது.

‘‘கொத்தித் தின்ன தானியங்கள் இல்லாததால் படைக்குருவி, கரிச்சான், கழுகு, பனங்காடை, வாலாட்டி, கல்பொறுக்கி, கவுதாரி போன்ற காட்டுப் பறவைகள் காணாமல் போய்விட்டன.’’

கண்மாயில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும்போது, ஒருவருக்கும் மீன் மாட்டவில்லையென்றால் மூன்று நாள்களுக்குள் மழை வரப்போகிறது எனத் தெரிந்து கொள்ளலாம். மேயும் ஆடுகள் ஐந்து ஆடுகள், பத்து ஆடுகள் ஒன்றுகூடித் தலைகளை ஒட்டிவைத்தபடி நிற்கும், நிலாவைச் சுற்றி வட்டம் தெரியும். இதை ‘நிலாக் கோட்டை போடுதல்’ என்போம். தூக்கணாங்குருவிக் கூடுகளின் அதிகமான கூடுகளில் ஓரப் பகுதிகளின் வாசல் தெற்கு நோக்கி இருந்தால் வடகிழக்குப் பருவமழை அதிகம் என்றும், வடக்கு நோக்கி இருந்தால் தென்மேற்குப் பருவமழை அதிகம் என்றும் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு மழைப் பொழிவைக்கூடச் சில அறிகுறிகளால் அறிந்து விவசாயம் பார்த்தோம்.

தண்ணீர் இல்லாததால் விவசாயம் இல்லாமல் போனது. கால்நடை எண்ணிக்கை குறைந்தது. தொழுவுரம் கிடைக்கவில்லை. ரசாயன உரம் எளிதாக உள்ளே புகுந்துவிட்டது. முன்பு பிரதான தொழிலாக விவசாயமும், கூடுதல் தொழிலாகக் கால்நடை வளர்ப்பும் இருந்தன. தற்போது கால்நடை வளர்ப்பு முக்கியத் தொழிலாகவும், விவசாயம் கூடுதல் தொழிலாகவும் மாறிவிட்டது. கொத்தித் தின்ன தானியங்கள் இல்லாததால் படைக்குருவி, கரிச்சான், கழுகு, பனங்காடை, வாலாட்டி, கல்பொறுக்கி, கவுதாரி போன்ற காட்டுப் பறவைகள் காணாமல் போய்விட்டன. கிராமங்கள் தற்போது வயதானவர்கள் மட்டும் வாழும் இடங்களாகிவிட்டன. தண்ணீர் மட்டும் இருந்தால், சென்னையிலிருக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஜனத்தொகையில் பாதி குறைந்துவிடும்.

ஒருவருக்கும் மீன் மாட்டவில்லை என்றால் மூன்று நாள்களுக்குள் மழை வரப்போகிறது எனத் தெரிந்துகொள்ளலாம்.

ஒரு கண்மாய்க்கும் அடுத்த கண்மாய்க்கும் நீர்ப்பாதைகள் உள்ளன. அவற்றைத் தூர்வாரினாலே பெய்யும் மழைநீரால் அவை நிரம்பிவிடும். ஆனால், அந்தப் பாதையில் ஆக்கிரமிப்புகளும் வீடுகளும் இருக்கின்றன. ‘இன்னும் இரண்டு ஆண்டுகளில் உலகின் மொத்த மக்கள்தொகையில் 18 முதல்

28 சதவிகித மக்கள் தண்ணீருக்காக இடம்பெயர்வார்கள்’ என ஐ.நா சமீபத்தில் ஓர் அபாய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. என்ன செய்யப் போகிறோம் நாம்?” என்ற கேள்வியுடன் முடித்தார் எழுத்தாளர் சோ.தர்மன்.