Published:Updated:

வறண்ட பகுதியில் ஆண்டுதோறும் சாகுபடி!சாத்தியமாக்கிய மழைநீர் சேகரிப்பு!

மழைநீர் சேகரிப்பு

பிரீமியம் ஸ்டோரி

"நஞ்சை பூமிதான். ஆனாலும், தண்ணீர் பற்றாக்குறையான பகுதி. கோடையில ரொம்ப வறண்டு போயிடும். விவசாயம் செய்ய முடியாது. இந்த நிலையிலதான், சில தொழில்நுட்பங் களைக் கடைப்பிடிச்சு, தண்ணிக்கு எப்பவும் பஞ்சமில்லாத நிலமா மாத்தி யிருக்கேன். இப்ப எல்லா வகையான பயிரையும் விளைய வைக்கிற மாதிரி மாத்தியிருக்கேன்” தன்னுடைய கடுமை யான உழைப்பை, மிக இயல்பாகச் சொல்கிறார் ஜெயலட்சுமி.

சிவகங்கை மாவட்டம், பனையூரில் 2 ஏக்கர் 65 சென்ட் நிலத்தில் நெல், காய்கறிகள், பழங்கள், பூக்கள், மூலிகை கள், சிறிய, பெரிய மரங்கள் என எதையும் விட்டு வைக்காமல் இயற்கை முறையில் விவசாயம் செய்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார் ஜெயலட்சுமி.

அதிலும் தோட்டத்தைச் சுற்றி உயிர்வேலியும், உழவு தேவைப்படாத நிலத்தையும் உருவாக்கியிருக்கிறார். எப்போதும் வற்றாத கிணறுமூலம் நீர் மேலாண்மை செய்து, இப்பகுதி விவசாயிகளுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார் ஜெயலட்சுமி.

ஜெயலட்சுமி
ஜெயலட்சுமி

மதுரை- சிவகங்கை நெடுஞ்சாலையில் பூவந்தியைத் தாண்டினால் பனையூர் ஊராட்சிக்குச் செல்லும் பாதை பிரிகிறது. அந்த வழியாக ஊருக்குள் செல்லச் செல்ல பச்சை பசேல் வயல்கள் வரவேற்கின்றன. அதில் தனித்துத் தெரிகிறது ஜெயலட்சுமியின் வயல்.

நாம் சென்ற நேரம் நாற்று நடவு செய்துகொண்டிருந்தனர். கிடைத்த இடைவெளியில் நம்மை வரவேற்று வயலைச் சுற்றிக்காட்டியபடியே பேசினார். ‘‘நாங்க பரம்பரை விவசாயி கிடையாது. ஆனா, விவசாயம் செய்யுறதை பெருமையா நினைக்கிற குடும்பம். நான் எம்.பில் முடிச்சுட்டு பல்வேறு அமைப்பு களுடன் சேர்ந்து கிராமங்கள்ல சமூகப் பணியில இருந்தேன். என் அம்மாவுக்கு உடம்புல சில பிரச்னைகள். நம் பாரம்பர்ய வைத்திய முறையில அதைக் குணப்படுத்தினோம். ‘இயற்கையான உணவுகளை எடுத்துக்கொண்டால் நோய் அண்டாமல் இருக்கலாம்’னு மருத்துவர்கள் சொன்னதால, ரசாயன கலப்பில்லாத இயற்கையான சத்தான உணவுக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சேன். அப்பதான், நாமளே இயற்கை விவசாயத்தில இறங்கலாம்னு முடிவு பண்ணிணேன்.

பச்சை பசேலான வயல்
பச்சை பசேலான வயல்

சின்ன வயசிலிருந்தே விவசாயம் செய்யணும்னு உந்துதல் இருந்தாலும், இயற்கை உணவை நாமே விளைவிக்கணும்ங்கிற எண்ணத்துலதான் இந்த ஊர்ல நிலத்தை வாங்கினேன். வாங்கும்போது இந்த நிலம் கரடுமுரடா இருந்துச்சு. சிவகங்கை மாவட்டத்துல பனையூர் வட்டாரம் நஞ்சை நிலங்கள்தான். நிலத்துக்கு அருகில் கண்மாய், குளம் இருந்தாலும் நிலத்தடி நீர் பற்றாக்குறை ரொம்பக் காலமா இருந்துச்சு. அதை மாத்த முடிவு பண்ணுனேன்.

என் நிலத்துல எப்பவும் தண்ணிப் பற்றாக்குறை வரக் கூடாது. அதுக்கு என்ன செய்யலாம்கிற தேடல்ல இறங்குனேன். திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரிட்டோராஜ் நீர் மேலாண்மை சம்பந்தமாக வழி காட்டுறார்னு கேள்விப்பட்டு அவர்கிட்ட பேசினேன். ‘மழை நீரைச் சேமிச்சாலே தண்ணிப் பற்றாக்குறை வராது’ன்னு சொன்ன வரு, அதுக்கான ஆலோசனை களையும் சொன்னார். அதை அப்படியே செயல்படுத்தினேன். எங்க தோட்டத்துக் கிணறு 18 அடி நீள, அகலம், 42 அடி ஆழம். அவர் சொன்ன முறையைப் பயன்படுத்துனதுனால இப்ப என் கிணத்துல வருஷம் முழுக்கத் தண்ணீர் நிரம்பி இருக்கு.

முன்னாடியெல்லாம் 15 நிமிஷம் தான் மோட்டார் ஓடும். இப்ப கோடைக்காலத்துலகூட குறைந்த பட்சம் 7 மணி நேரம் ஓடுது. மழைநீர் சேமிப்பை நான் செயல் படுத்தியதுனால என்னோட கிணறு மட்டுமல்லாம... அக்கம் பக்கத்துல இருக்கக் கிணறுகள்லயும் தண்ணி ஊறியிருக்கு. இப்ப, பல விவசாயிகள் என்கிட்ட ஆலோசனைக் கேக்குறாங்க. விவசாயக் கூட்டங்கள்லயும், என்னோட வெற்றிக் கதையை எடுத்துச் சொல்லிட்டு வர்றேன். மாவட்ட வேளாண்மைத்துறை எனக்குப் பலவகையில உதவியா இருக்காங்க’’ என்றவர், தனது விவசாய முறைகள் குறித்துப் பேசினார்.

இயற்கை உரம்
இயற்கை உரம்


‘‘இப்ப நான் ஐந்தடுக்கு முறை விவசாயம் பண்றேன்.சொட்டு நீர்ப் பாசனம்தான். மூடாக்கு முறையைப் பின்பற்றிட்டு வர்றேன். அதனால களை எடுக்குறதில்ல. பாரம்பர்ய நெல் ரகங்களான சீரகச் சம்பா, பூங்கார் நெல் ரகங்களைச் சாகுபடி செய்றேன். அத்தி, பலா, வாழை, நாட்டு கொய்யா, முலாம்பழம், நொச்சி, பப்பாளி, நாவல், மாதுளைனு பழ மரங்களும் முருங்கையும் அதிகம் வச்சிருக்கேன். சம்பங்கிப்பூ, ஆமணக்கு, காய்கறிகள் எல்லாமே இப்ப நான் சாகுபடி செய்யுறேன்.

செயற்கை விவசாயத்தை விட, இயற்கை விவசாயத்துல சம்பங்கி நல்லா வருது. நெல்லு போட்ட இடத்துலேயே சம்பங்கியும் போடுறேன். ஒரு பக்கம் கடலைப் போட்டுருக்கேன். பல வகையான மரங்கள் நட்டிருக்கேன். எல்லாத்துக்கும் தொழுஉரம், ஜீவாமிர்தம், இயற்கைப் பூச்சிவிரட்டிப் பயன்படுத்துறேன். நொச்சி, கற்றாழை உள்ளிட்ட மூலிகைத் தாவரங்கள்மூலம் வேலி அமைச்சிருக்கேன். இது பயிருக்கும் சூழலுக்கும் பலன் கொடுக்கும்’’ என்றவர் நிறைவாக,

‘‘விவசாய வேலைகளுக்குக் கூலியாள் கிடைக்கலன்னா எந்த வேலையையும் தள்ளிப் போட மாட்டேன். நானும் என் பிள்ளைகளும் களத்துல இறங்கி அந்த வேலையை முடிச்சிடுவோம். இயற்கை விவசாயம் செய்யுறது கஷ்டம்னு சிலபேரு சொல்றாங்க. நஞ்சில் லாத உணவை மட்டும்தான் உற்பத்தி பண்ணி சாப்பிடணும். மத்தவங்களுக்கும் கொடுக் கணும்னு முடிவெடுத்துட்டா எல்லாமே சுலபம்தான். அதுபோலத்தான் தண்ணீர் பிரச்னையும். சரியான நபர்கள்கிட்ட ஆலோசனைக் கேட்டு, அதை முறையா செய்து பார்த்தாலே விவசாயம் செய்யத் தண்ணீர் ஒரு பிரச்னையா இருக்காது’’ என்றார்.

கிணற்றில் மழைநீர் சேமிக்கும் முறை

கிணற்றிலிருந்து 12 அடி தொலைவில் 8 அடி நீள, அகலம், 6 அடி ஆழமான குழி எடுக்க வேண்டும். குழியின் தரையிலிருந்து அரையடி உயரத்தில் ஒரு துளை இட வேண்டும். அந்தத் துளை கிணறுவரை இருக்க வேண்டும். அந்தத் துளை வழியாக ஒரு பி.வி.சி குழாயைச் செலுத்த வேண்டும். இப்போது குழியில் விழும் மழைநீர் கிணற்றில் சென்று சேகரமாகும் வகையில் அமைப்பை உருவாக்கி விட வேண்டும். அதன் பிறகு, குழியில் துளை இருக்கும் இடத்தைச் சுற்றி கற்களை வைத்து, சிமென்ட் மூலம் பூசி சுவர் மாதிரி அமைக்க வேண்டும். குழியில் உள்ள குழாயில் ஒரு வளைவு (பென்ட்) குழாயைப் பொருத்த வேண்டும். 3 இன்ச் பி.வி.சி குழாயை எடுத்து, அதன் மேல் 30 முதல் 40 துளைகளை இட்டு, கொசுவலையால் சுற்றி, கட்டுக் கம்பி போட்டுக் கட்ட வேண்டும். அந்தக் குழாயைக் குழியில் உள்ள குழாயின் வளைவுப் பகுதியில் பொருத்த வேண்டும். இப்போது குழிக்குள் செங்குத்தாக அந்தக் குழாய் நிற்கும். அதன் மேல் பகுதியை மூடிக்கொண்டு மூடி விட வேண்டும்.

கிணறு
கிணறு

பிறகு, நிலத்தில் கிடைக்கும் கற்களைச் சேகரித்து, குழியின் சுவரைச் சுற்றிலும் பெரிய கற்களைப் போட வேண்டும். நடுப்பகுதியில் சிறிய கற்களைப் போட்டுக் குழியை மூட வேண்டும். தரைப்பகுதியிலிருந்து அரையடி ஆழம் மட்டும் இருப்பதுபோலக் குழியைக் கற்களால் மூட வேண்டும். அதற்கு மேல் ஹாலோ பிளாக் மூலம் தரைக்கு மேல் ஒன்றரையடி உயரம் இருப்பது போல் குழியைச் சுற்றி சுவர் எழுப்ப வேண்டும். அந்தச் சுவரில் கிணறு இருக்கும் திசையை விட்டு, மற்ற 3 திசைகளிலும் ‘ப’ வடிவில் வழி வைக்க வேண்டும். நிலத்தில் பெய்யும் மழைநீர் அந்த வழியில் குழியில் இறங்கும். கற்களில் இறங்கி, குழாய் வழியாகக் கிணற்றுக்குள் விழும். நிலத்தில் பெய்யும் மழைநீர் வேறு பக்கம் போவதுபோல இருந்தால் ஆங்காங்கே வரப்பு அமைத்து, அந்த நீரும் குழியில் சென்று சேருமாறு செய்ய வேண்டும். இதைச் செய்தால் மழைநீரை ஓரளவுக்கு அறுவடை செய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு