ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வெங்கலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகம், தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து நெல், மிளகாய் உள்ளிட்ட பயிர்களைப் பயிரிட்டு வந்துள்ளார்.

விவசாயி சண்முகம் விவசாயம் செய்வதற்காக இலவச மின் இணைப்பு பெற கடந்த 15.10.2020 அன்று புதிய மின் இணைப்பு கேட்டு மனு அளித்துள்ளார். இதையடுத்து 18.02.2021-ல் மின்சார அலுவலக அதிகாரிகள் ஊழியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.12,300-யை வங்கி டிடியாகப் பணம் செலுத்தி 3 ஏ1 மின் இணைப்பு கோரியுள்ளார்.
இது தொடர்பாகக் கடந்த 11 மாதங்களாகத் தினமும் மின்வாரிய அலுவலகத்துக்கு விவசாயி சண்முகம் நடையா நடந்தும் மின் இணைப்பு வழங்கபடாததால் ஆத்திரமடைந்த விவசாயி தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கும், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கும் பதிவு தபால் மூலமாகப் புகார் மனுக்களை அனுப்பியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த புகார் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் மின்வாரிய உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சண்முகத்துக்கு கடந்த 6.11.2021 மின் இணைப்பு வழங்கியுள்ளதாகவும், மின் இணைப்பு பெற்று மின்சாரத்தைப் பயன்படுத்தியதற்கான மின்கட்டணத்தைச் செலுத்தவில்லை எனவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்ததால் விவசாயி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கடந்த 06.11.2021 அன்று சண்முகத்துக்கு ஆன்லைனில் இணைப்பு வழங்கபட்டதாக அதிகாரிகள் கூறிய மீட்டர் எண் 1127892 எனவும், ஆனால், சண்முகத்தின் மின் இணைப்பு சர்வீஸ் எண் 352029461 எனவும் தெரியவந்துள்ளது. அமைக்கப்படாத மின் இணைப்புக்காக மின் வாரியத்துக்கு 25.01.2022 அன்று ரூபாய் 320-ஐ மின்கட்டணமாகச் செலுத்தியுள்ளார்.
மின் மீட்டருக்கு இணைப்பு வழங்காமலே மின்கட்டண அதிகாரிகளால் கட்டணம் வசூல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்டம் மின் கண்காணிப்பாளரை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மழுப்பலாகத் தெரிவித்தார்.