Published:Updated:

காவல் நிலையத்தில் காய்கறித் தோட்டம்; வரவேற்பைப் பெறும் காவலரின் `பசுமை' முயற்சி!

தோட்டத்தில் வளர்ந்துள்ள வாழை மரங்கள்

``நான் வாங்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை இதற்காகச் செலவிட்டேன். மேலும் நான் தோட்டம் அமைப்பதைப் பார்த்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தானாக முன்வந்து தோட்டத்துக்கு வேலி அமைத்துக் கொடுத்து, சிறு சிறு உதவிகளைச் செய்தனர்."

காவல் நிலையத்தில் காய்கறித் தோட்டம்; வரவேற்பைப் பெறும் காவலரின் `பசுமை' முயற்சி!

``நான் வாங்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை இதற்காகச் செலவிட்டேன். மேலும் நான் தோட்டம் அமைப்பதைப் பார்த்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தானாக முன்வந்து தோட்டத்துக்கு வேலி அமைத்துக் கொடுத்து, சிறு சிறு உதவிகளைச் செய்தனர்."

Published:Updated:
தோட்டத்தில் வளர்ந்துள்ள வாழை மரங்கள்

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி காவல் நிலையத்தைச் சுற்றிலும் காய்கறித் தோட்டம் இருக்கிறது. இந்த விஷயம் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. காய்கறித் தோட்டத்தைக் காண ஆவலோடு திருப்புல்லாணி காவல் நிலையத்துக்குச் சென்றோம்.

காவல் நிலையம் என்றாலே குற்றவாளிகள், புகார்தாரர்கள் என ஏதாவது ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால், திருப்புல்லாணி காவல் நிலையம் அப்படி இல்லை. கண்ணைக் கவரும் வகையில் சுற்றுச்சுவர் வர்ணம் பூசப்பட்டும், காவல் நிலையத்தைச் சுற்றி வேம்பு, புங்கை, மா மரங்கள் சூழ்ந்தும் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் காணப்பட்டது.

காவல் நிலையத்துக்கு முன்பே இப்படி பசுமையாக இருக்கிறது என்றால், தோட்டம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிறைந்த மன ஓட்டத்தோடு காவல் நிலையத்துக்குள் சென்றோம். அங்கு பரபரப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்த உதவி ஆய்வாளர் கார்த்திக் ராஜாவைச் சந்தித்தோம். சிறு புன்னகையுடன் எங்களை வரவேற்றார். அவரிடம், ``உங்கள் காவல் நிலையத்தில் காய்கறித் தோட்டம் இருப்பதாகப் பேசப்பட்டு வருகிறது. அந்தத் தோட்டம் எங்கு உள்ளது, அதை உருவாக்கிய காவலர் யார்" எனக் கேட்டோம்.

திருப்புல்லாணி காவல் நிலையம்
திருப்புல்லாணி காவல் நிலையம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதற்குச் சிரித்தபடி, ``அந்தத் தோட்டம் வேறு எங்கும் இல்லை. காவல் நிலையத்தின் பின்புறம்தான் உள்ளது. அதை உருவாக்கியவர் கலைமன்னன் என்ற தனிப்பிரிவு காவலர்தான். தற்போது அவர் இங்கே இல்லை. உத்தரகோசமங்கை காவல் நிலையத்துக்கு மாற்றலாகிச் சென்றுவிட்டார்" என்று கூறியது எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது.

சரி, வந்ததுக்கு கலைமன்னன் உருவாக்கிய தோட்டத்தைப் பார்த்துவிட்டுச் செல்வோம் எனக் காவல் நிலையத்துக்குப் பின்புறம் சென்றோம். அங்கு கொத்து கொத்தாய் சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய் காய்த்துக் கிடப்பதைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவர் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார். அவரிடம் சென்று விசாரித்தபோது, தனி ஆளாக, தன் சொந்த செலவில் கடும் பணி நெருக்கடிகளுக்கிடையே கலைமன்னன் இந்தத் தோட்டத்தை உருவாக்கிச் சென்றுள்ளதாகக் கூறினார்.

பின்னர் கலைமன்னனிடம் தொடர்புகொண்டு தோட்டத்தைப் பற்றி பேச கேட்டுக்கொண்டோம். பணி முடிந்தபிறகு, அவரே வந்து தோட்டத்துக்குள் அழைத்துச் சென்று பேசினார்.

கலைமன்னன்
கலைமன்னன்

``கடந்த 2018-19-ல் நான் திருப்புல்லாணி காவல் நிலையத்தில் பணியாற்றினேன். அப்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் உள்ளிட்டவை கொண்டு செல்லப்பட்டன. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த என்னிடம் இரண்டு தென்னங்கன்றுகளைக் கொடுத்துச் சென்றனர். அதை எங்கு நடுவது எனத் தெரியாமல் காவல் நிலையத்தின் பின்புறம் நட்டு வைத்தேன். அதற்குத் தினமும் தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தேன். அந்த தென்னங்கன்றுகள் வளர்வதைப் பார்க்க ஆசையாக இருந்தது. அதன் பின்னர் காவல் நிலையம் பின்புறம் 20 சென்ட் இடத்தில் அடர்ந்து கிடந்த கருவேல மரங்களை அகற்றி காய்கறிகள் மற்றும் மரங்கள் நட முடிவு செய்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்படி காடுபோல் கிடந்த கருவேலமரங்களை வெட்டி அப்புறப்படுத்தினேன். பின்னர் அங்கு பழுதடைந்து கிடந்த மின்மோட்டாரை சரி செய்து, ஆட்டுப்புழுக்கை, சாணம், பஞ்சகவ்யா உள்ளிட்ட இயற்கை உரங்களை இட்டு மரம் மற்றும் செடிகளைப் பயிரிடுவதற்கு ஏற்றாற்போல் நிலத்தைத் தயார் செய்தேன்.

நான் வாங்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை இதற்காகச் செலவிட்டேன். மேலும், நான் தோட்டம் அமைப்பதைப் பார்த்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தானாக முன்வந்து தோட்டத்துக்கு வேலி அமைத்துக் கொடுத்து, சிறு சிறு உதவிகளைச் செய்தனர். அதேபோல் காவல் நிலையத்தில் பணியாற்றும் சக காவலர்களும் தங்கள் பணி இடைவேளையின்போது தோட்டத்தைப் பராமரிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கினர்.

தோட்டத்தில் வளர்ந்துள்ள வாழை மரங்கள்
தோட்டத்தில் வளர்ந்துள்ள வாழை மரங்கள்

ஒருவழியாக நிலத்தைத் தோட்டம் அமைப்பதற்கு ஏற்றாற்போல் மாற்றி அமைத்தேன். ஆனால், காய்கறிகளைப் பயிரிடுவதற்குள் ராமநாதபுரம் குற்றப் பிரிவுக்கு மாற்றலாகிச் சென்றுவிட்டேன். அந்த இடைப்பட்ட காலத்தில் அவ்வப்போது வந்து மரங்களை மட்டும் நட்டுவைத்துப் பராமரித்து வந்தேன்.

இந்நிலையில், மீண்டும் கடந்த ஆண்டு 2021 மார்ச் மாதம் திருப்புல்லாணி காவல் நிலையத்துக்கு மாற்றலாகி வந்தேன். இந்த முறை தோட்டத்தை உருவாக்கியே ஆக வேண்டும் என்று முழுவீச்சில் ஈடுபட்டேன். பணி முடிந்தவுடன் தோட்ட பராமரிப்பு வேலைகளைச் செய்யத் தொடங்கிவிடுவேன்.

முழுமூச்சாய் விவசாயப் பணிகளை முன்னெடுத்ததில் சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் உள்ளிட்ட காய்கறிகளைச் சாகுபடி செய்தேன். அதைத்தொடர்ந்து 21 வகையான மாங்கன்றுகள், ரஸ்தாலி, கற்பூரவள்ளி, பச்சைவாழை, செவ்வாழை, நாட்டு வாழை என ஐந்து வகையான வாழைகளையும் நட்டு வைத்தேன். மேலும் கடலை, சோளம், மாதுளை, சீத்தாப்பழம், நெல்லிக்காய், நாவல்மரம், ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, பசலைக்கீரை உள்ளிட்டவற்றையும் பயிரிட்டேன். அந்தந்த மரங்கள், செடிகளுக்குத் தேவையான உரங்களை வாங்கி உயிரூட்டினேன்.

அதேபோல் காவல் நிலைய வளாகத்தைச் சுற்றிலும் நிழலுக்காக வேம்பு, புங்கை, மா உள்ளிட்ட மரங்களை நட்டு வைத்தேன். இவை அனைத்தும் தற்போது செழிப்பாக வளர்ந்து, காவல் நிலையத்தைச் சுற்றிலும் பசுமையாக இருப்பதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

காய்கறிகளான புடலங்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய் ஆகியவை கொத்துக்கொத்தாக காய்க்கின்றன. இங்கு விளையும் காய்கறிகள் அனைத்தையும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இலவசமாகக் கொடுத்து விடுகிறோம்.

அதுமட்டுமன்றி காவல் நிலையத்தைச் சுற்றி இருக்கும் சுற்றுச்சுவரையும் அழகாக மாற்ற வேண்டும் என்பதற்காக எனது சொந்த செலவில் வர்ணமடித்துக் கொடுத்தேன்.

தோட்டத்தில் விளைந்த சுரைக்காயுடன் திருப்புல்லாணி காவலர்
தோட்டத்தில் விளைந்த சுரைக்காயுடன் திருப்புல்லாணி காவலர்

திருப்புல்லாணி காவல் நிலையத்தைச் சுற்றி தோட்டம் அமைத்திருந்தது குறித்து அறிந்த ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி கார்த்தி நேரில் வந்து பார்வையிட்டார். பார்வையிட்ட பிறகு அவர், காவலர்கள் அனைவரையும் வெகுவாகப் பாராட்டினார்.

இந்தத் தோட்டம் அமைய நான் மட்டும்தான் காரணம் என்று கூறினால் அது நியாயமாக இருக்காது. இந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைத்து காவலர்களின் பராமரிப்பில்தான் இந்தத் தோட்டம் உருவாகியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. தற்போது நான் உத்திரகோசமங்கை போலீஸ் நிலையத்துக்கு மாற்றலாகிச் சென்றுள்ளேன். அங்கும் இதே போல் தோட்டம் அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட உள்ளேன்" என்று பெருமையோடு சொல்லி முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism