Published:Updated:

`நீரில் மூழ்கிய 150 ஏக்கர் மல்லிகைச் செடிகள்!' - கலங்கும் தங்கச்சிமடம் விவசாயிகள்

மல்லிகைச் செடி பதியன் போடப்பட்டுள்ள பல ஏக்கர் நிலப்பரப்புகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் இங்கு பதியன் இடப்பட்டிருக்கும் ஒட்டு மொத்த மல்லிகைச் செடிகளும் அழுகி வீணாகும் நிலை உருவாகியுள்ளது.

தண்ணீரில் மிதக்கும் மல்லிகைப் பதியன்கள்.
தண்ணீரில் மிதக்கும் மல்லிகைப் பதியன்கள். ( உ.பாண்டி )

மதுரை மல்லிக்கு பெருமை சேர்ப்பது போல் தங்கச்சிமடம் மல்லிகை நாற்றுகளுக்குப் பெயர் பெற்றதாகும். தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படும் மல்லிகை பதியச் செடிகள் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் மழையினால் பெரும் அழிவினைச் சந்தித்துள்ளன.

மழை நீரில் அழுகி போன மல்லிகைச் செடி.
மழை நீரில் அழுகி போன மல்லிகைச் செடி.
உ.பாண்டி

பூக்கள் இனத்தில் எத்தனையோ பூக்கள் இருந்தாலும் பூவையர் இடையே மல்லிகைப் பூவுக்கென தனி இடம் உண்டு. இதில், மதுரை மல்லி என்றால் தனி மணம்தான். இதைப் போன்றே தங்கச்சிமடம் பகுதியில் பதியம் போடப்படும் மல்லிகைச் செடிகளுக்கு மல்லிகை விவசாயிகளிடையே தனி இடம் உண்டு. இதற்காகவே தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் சுமார் 400 ஏக்கரில் மல்லிகைச் செடி பதியம் போடப்பட்டு வருகிறது.

இங்கு பதியம் போடப்படும் மல்லிகைச் செடிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமன்றி கர்நாடாகா, ஆந்திரா, கேரளா மற்றும் மகராஷ்டிரா மாநிலங்களுக்கும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தங்கச்சிமடத்திலிருந்து தனி வாகனங்கள், அரசு பேருந்துகள் மூலம் நாள்தோறும் இவை வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. எனவே, இப்பகுதியில் மல்லிகைச் செடி பதியம் போடும் தொழிலில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன.

மழை நீர் சூழ்ந்து நிற்கும் மல்லிகைச் செடிகள்
மழை நீர் சூழ்ந்து நிற்கும் மல்லிகைச் செடிகள்

இந்நிலையில் ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் கடந்த சில நாள்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இம்முறை மழை அதிகளவு பெய்து வருகிறது. இதனால் தீவுப்பகுதியில் உள்ள குளங்கள், நீர்பிடிப்புப் பகுதிகள், தாழ்வான பகுதிகள் மட்டுமன்றி சமதளப் பகுதிகளிலும் மழை நீர் தேங்கி உள்ளது.

இதைப் போலவே மல்லிகைச் செடி பதியன் போடப்பட்டுள்ள பல ஏக்கர் நிலப்பரப்புகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் இங்கு பதியம் இடப்பட்டிருக்கும் மல்லிகைச் செடிகளும் அழுகி வீணாகும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே மல்லிகைப் பதியம் போடப்பட்டுள்ள செடிகளில் காணப்படும் வைரஸ் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள மல்லிகை விவசாயிகள் தொடர்ந்து பெய்து வரும் மழையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மல்லிகை பதியத்தை சூழ்ந்துள்ள மழை நீர்
மல்லிகை பதியத்தை சூழ்ந்துள்ள மழை நீர்
உ.பாண்டி

இதனால் தங்கச்சிமடம், பேக்கரும்பு, வில்லூண்டி தீர்த்தம், அய்யன் தோப்பு, சிங்கம் காடு, நாலுபனை, அக்காள்மடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 150 ஏக்கரில் பதியமிடப்பட்டுள்ள மல்லிகைச் செடிகள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சுமார் 10 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்படும் எனவும் மல்லிகை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே, பாதிப்படைந்துள்ள மல்லிகை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.