Published:Updated:

`மதுரை மல்லிக்கே தங்கச்சி மடம்தான் ஆதாரம்!' - ஊரடங்கால் கருகும் பதிகம்; கலங்கும் விவசாயிகள்

மல்லிகைச் செடிகள்
மல்லிகைச் செடிகள்

தாய்ச் செடியிலிருந்து பதிகம் செய்யப்படும் நிலைக்கு வந்த செடிகளை வெட்டி விற்பனை செய்யக் காத்திருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு போக்குவரத்து தடைபட்டு போனது.

மல்லிகை என்றால் அதில் மதுரை மல்லிகைக்கு எனத் தனி இடம் உண்டு. அத்தகைய பெயர் பெற்ற மல்லிகைப் பூக்கள் மதுரை மண்ணில் விளைவிக்க அடிவேராக இருந்து வரும் மல்லிகைப் பதிகங்களை வழங்குவது ராமேஸ்வரம் தீவில் உள்ள தங்கச்சிமடம் பகுதியாகும். பெண்களின் கூந்தல்களில் மணம் வீசி வரும் மல்லிகைப் பூக்களை விளைவித்து வரும் உற்பத்தியாளர்களின் வாழ்க்கை கொரோனா தடையுத்தரவினால் முடங்கிப் போயுள்ளது. பல ஆயிரம் ஏக்கரில் நடப்பட்டிருக்கும் செடிகளிலேயே மலர்ந்து உதிர்ந்து விழும்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்ச ரூபாய் இழப்பினைச் சந்தித்து வருகின்றனர் இப்பகுதி மல்லிகைச் செடி உற்பத்தியாளர்கள்.

மழையினால் பாதிப்படைந்த மல்லிகை விவசாயம்
மழையினால் பாதிப்படைந்த மல்லிகை விவசாயம்

இதுகுறித்து நம்மிடம் விவரித்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மல்லிகைச் செடி உற்பத்தியாளர் திவாகரன், ''ராமேஸ்வரம் தீவில் உள்ள தங்கச்சிமடம், நாலுபனை, பாம்பன் மற்றும் தீவுக்கு வெளியே உள்ள மண்டபம் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் என சுமார் ஆயிரம் ஏக்கரில் மல்லிகைச் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றை நம்பி 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தொடங்கி மார்கழி மாதம் வரை நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மல்லிகைப் பதிகங்களை உற்பத்தி செய்வோம். அதிக வெயில் மற்றும் பனியினால் மல்லிகைச் செடிகள் கருகிவிடும். இதனால் அவற்றைப் பாதுகாக்கப் பந்தல் அமைப்பது, காலை மாலை வேளைகளில் தண்ணீர் தெளிப்பது, உரம் மற்றும் பூச்சி மருந்து தெளிப்பது என ஒரு ஏக்கருக்கு 15 லட்ச ரூபாய் வரை செலவு பிடிக்கும். இவ்வாறு செலவு செய்துவிட்டு அதன் பலனைப் பெற ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.

அவ்வாறு காத்திருந்து செடிகளை வெட்டி விற்பனை செய்ய வேண்டிய நேரத்தில் இந்த ஆண்டு கடுமையான மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பள்ளமான பகுதிகளில் நடப்பட்டிருந்த சுமார் 200 ஏக்கர் அளவிலான செடிகள் மழைநீரில் மூழ்கி அழுகிப் போயின. மழை நின்ற நிலையில் எஞ்சியிருந்த செடிகளைக் காப்பாற்றிப் பராமரித்து வந்தோம்.

தாய்ச் செடியிலிருந்து பதிகம் செய்யப்படும் நிலைக்கு வந்த செடிகளை வெட்டி விற்பனை செய்யக் காத்திருந்த நிலையில் கொரோனா நோயினால் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு போக்குவரத்து தடைபட்டு போனது. இதனால் மதுரை, சேலம், நாமக்கல், கோவை, மற்றும் பெங்களூர் உள்ளிட்ட வெளிமாநிலப் பகுதிகளிலிருந்து செடிகளை வாங்குவதற்கு யாரும் வரலை. வெளியூர்களில் இருந்து கேட்கும் சிலருக்கும் செடிகளை அனுப்பி வைக்க வாகன வசதி இல்லை. இதனால எங்க பகுதியில மல்லிகைச் செடியை நம்பியிருந்த எல்லாக் குடும்பங்களும் வாங்கின கடனுக்கு வட்டி கட்ட வழியில்லாம தவிக்குதுக.

மல்லிகை விவசாயி திவாகரன்
மல்லிகை விவசாயி திவாகரன்
உ.பாண்டி

செடிகளை விற்க முடியாத நிலையில் அதில் பூக்களை நூறு, இருநூறு ரூபாய்க்கு விற்று அன்றாடக் குடும்பத் தேவைகளைச் சமாளிச்சு வந்தோம். இப்ப பூ விற்கவும் வழியில்லாமப் போயிடுச்சு. இந்த நிலை எப்ப சரியாகும்னு தெரியாத நிலைமையில எப்படி வாழப்போறோம்னு தெரியல. மல்லிகைச் செடி விவசாயம் பணப்பயிர் பட்டியலில் வருவதால் வங்கிகளில் கடனோ, அரசாங்க மானியமோ கிடைப்பதில்லை.

இதனால வெளியிடங்களில் வட்டிக்கு வாங்கித்தான் பொழப்பு நடத்தி வர்றோம். கொரோனா தாக்கத்தினால என்னோட 4 லட்சம் செடிகள் விற்க முடியாம கிடக்கு. இதனால ஏற்பட்டுள்ள நஷ்டத்தை எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியல. இதனால பாதிக்கப்பட்டிருப்பது நாங்க மட்டுமல்ல. எங்களிடம் செடி வாங்கிப் போய் பூ உற்பத்தி செய்து அதன் மூலம் வாழ்க்கை நடத்தி வரும் வெளியூரைச் சேர்ந்த பல நூறு குடும்பங்களும் பாதிக்கப்பட்டிருக்காங்க'' என்றார் வேதனையுடன்.

மல்லிகைச் செடி உற்பத்தியை முழு நேரத் தொழிலாகக் கொண்டுள்ள அகிலன், '' மீன்பிடித்தலையும் மல்லிகைச் செடி உற்பத்தியையும் நம்பி ஏராளமான குடும்பங்கள் தீவில் உள்ளன. மீன்பிடித் தொழிலைப் பொறுத்தமட்டில் லாபமோ, நட்டமோ முதலீடு செய்த மறுநாளே தெரிந்து விடும். ஆனால் எங்க நிலை அப்படி இல்ல. கடன உடன வாங்கி செடியை வளர்த்து அது பலன் தர்றதுக்கு ஒரு வருஷம் காத்திருக்கணும்.

பாதிக்கப்பட்ட மல்லிகை நாற்று
பாதிக்கப்பட்ட மல்லிகை நாற்று

இடைப்பட்ட காலங்களில் மழை, வெயில், பனி போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாம இருந்தாத்தான் அதுவும் நிச்சயம். கடந்த 2 வருடமா எங்க பகுதியில் வளர்க்கிற செடிகளின் இலைகளில் ஒருவித நோய்த் தாக்கம் ஏற்பட்டுருக்கு. அதனால பெரும்பாலான செடிகள் கருகியும் அழுகியும் போயிடுச்சு. இந்த நிலைமையில எஞ்சியிருக்கிற செடிகளைக் காப்பாற்றி விற்பனை செய்ய இருந்த நேரத்துல கொரோனா ஊரடங்குத் தடை வந்துடுச்சு. இதனால எங்க வாழ்க்கை சுத்தமா முடங்கிப் போய்க் கிடக்கு. எனவே தமிழக அரசு மல்லிகைச் செடி உற்பத்தியினைப் பணப்பயிர் பட்டியலிலிருந்து விடுவிக்கவேண்டும், எங்களோட நஷ்டத்தை ஈடுகட்ட இழப்பீடு கொடுத்து உதவணும். மீண்டும் இந்தத் தொழிலைத் தொடர வங்கிகள் மூலமா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கணும்'' என்றார் ஆதங்கத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு