Published:Updated:

செர்ரி முதல் செண்பகம் வரை.. பசுமை சூழ்ந்த வீடு... முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ரவியின் இயற்கை நேசம்!

ரவி-தெய்வம் தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
ரவி-தெய்வம் தம்பதி

வீட்டுத்தோட்டம்

செர்ரி முதல் செண்பகம் வரை.. பசுமை சூழ்ந்த வீடு... முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ரவியின் இயற்கை நேசம்!

வீட்டுத்தோட்டம்

Published:Updated:
ரவி-தெய்வம் தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
ரவி-தெய்வம் தம்பதி

எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் பச்சைப்பசேலென்று காட்சி அளிக்கிறது, முன்னாள் காவல்துறை அதிகாரி ரவி ஐ.பி.எஸ்ஸின் வீடு. சென்னை நீலாங்கரை பகுதியில் கவனம் ஈர்க்கும் இந்த வீட்டுக்கு ஓர் அதிகாலை வேளையில் சென்றோம். வீட்டின் சுவரில் ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தன, மணி பிளான்ட் கொடிகள்.

ரவி-தெய்வம் தம்பதியோடு சேர்த்து வீட்டுக்கு முன் இருந்த அழகிய தாவரங்களும் மிகுந்த உற்சாகத்தோடு நம்மை வரவேற்றன. வீட்டின் வளாகத்தில் சுமார் 300 சதுர அடி பரப்பில் அமைந்துள்ள அழகிய தோட்டத்தில் ரசிப்பதற்கும் ருசிப்பதற்கும் ஏராளமான மரங்களும் செடி கொடிகளும் அணிவகுத்து நின்றிருந்தன.

பசுமை சூழ்ந்த வீட்டுக்குள்
பசுமை சூழ்ந்த வீட்டுக்குள்

தோட்டத்தின் முகப்பில் ஒரு குறு மரம். அதில் ஆங்காங்கே, இளஞ்சிவப்பு நிறத்தில் நான்கைந்து பூக்கள் ஒன்று சேர்ந்து ஆங்காங்கே கொத்து கொத்தாய் காட்சி அளிக்கின்றன. அதன் அருகில் பச்சை நிறத்தில் பளபளப்பான சின்னஞ்சிறு காய்கள்... இந்தக் காய்களை எங்கேயோ பார்த்ததுபோல இருக்கிறதே என்று அந்தக் குறு மரத்தின் கிளைகளை விலக்கிப் பார்த்தால்... சிவப்பு நிறத்தில் கண்களை கொள்ளையிடுகின்றன செர்ரி பழங்கள்... செர்ரி மரத்தையடுத்து, ஆளுயரத்தில் பன்னீர் ரோஜாச்செடி. அதையடுத்து மணத்தக்காளி மற்றும் தண்டுக் கீரையுடன் மகரந்தச்சேர்க்கைக் காக ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற பூக்களைக்கொண்ட உன்னிச் செடிகள் இருக்கின்றன. அடுத்தது, நந்தியாவட்டை மரம். பூக்களும் மொக்குகளும் இலைகளைவிட சற்றுக் கூடுதலாகவே இருந்தன. அடுத்து கொய்யா மரம். சிறிய நெல்லிக்காய் சைஸில் கொத்துக் கொத்தாக கொய்யா பிஞ்சுகள்... சில பிஞ்சுகள் மஞ்சள் நிறத்திலும் இருந்தன. ‘பிஞ்சிலேயே பழுத்துடுச்சோ’ என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு கொய்யா பிஞ்சை எட்டிப் பறித்த ரவி, ‘‘இந்தக் கொய்யா பார்க்க பிஞ்சு மாதிரிதான் இருக்கும். ஆனா, பழுத்திருக்கும். இதைக் கிரேஃப் கொய்யான்னு சொல்வாங்க. இனிப்பும் லேசான புளிப்பும் கலந்து நல்லா சுவையா இருக்கும்... சாப்பிட்டுப் பாருங்க’’ என்றபடி கொய்யா பிஞ்சுகளை நம் கையில் கொடுத்தார். இதைச் சுவைத்தபடியே நகர்ந்தோம்...

ரவி-தெய்வம் தம்பதி
ரவி-தெய்வம் தம்பதி

காபூல் மாதுளம் செடி, மஞ்சள் நிற செண்பகம், வெள்ளை நிற செண்பகம், பாகல், புடலை, சிறு தொட்டிகளில் தூதுவளை, அவரை, பிரண்டை, சிவப்பு பசலை, வெண் பசலை, கொத்த மல்லி, புதினா என இன்னும் ஏராளம்... நம் கண்கள் முழுவதும் பசுமை வியாபித்தது. வீட்டின் ஒருபக்க சுவர் முழுக்க வெற்றிலைக் கொடி படர்ந்து, இரண்டாவது மாடியிலிருக்கும் மழைநீர் சேகரிப்புத் தொட்டியை எட்டிப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்த காட்சி, இயற்கை யின் அழகிய விந்தை என்றே சொல்ல வேண்டும்.

நம் வியப்பைக் கலைத்து, பேச்சு கொடுத்த ரவி, “திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் பக்கத்துல உள்ள ‘வெரியப்பூர்’ங்கற கிராமம்தான் என்னோட பூர்வீகம். நாங்க விவசாயக் குடும்பம். ஆத்து தண்ணிக்கு வாய்ப்புக் கிடையாது. கிணற்றுப்பாசனம் தான். வருஷத்துக்கு ரெண்டு போகம் காய்கறிகள் விளைவிப்போம்.

உன்னிப்பூ
உன்னிப்பூ

சின்ன வயசுல ஏர் ஓட்டுறதுல ஆரம்பிச்சு, அறுவடை வரைக்கும் எல்லா விவசாயப் பணிகளையும் நான் செஞ்சிருக்கேன். என்னோட பெற்றோருக்கு நாங்க நாலு பிள்ளைங்க. ஆனாலும், அதுல என்னைத்தான் விவசாயியா ஆக்கிப் பார்க்கணும்னு அப்பா ஆசைப்பட்டார்.

எனக்கு விவசாயம் ரொம்ப பிடிக்கும். வேளாண்மை படிக்கவும் வாய்ப்பு கிடைச்சது. அதேசமயத்துல காவல் துறையில யும் எனக்கு ஈர்ப்பு இருந்துகிட்டு இருந்துச்சு. காவல்துறையில வேலை கிடைச்சு, ஐ.பி.எஸ் அதிகாரியா பல வருஷம் வேலை பார்த்து இப்ப பணி ஓய்வு பெற்றுட்டேன். இனிமேலா வது இயற்கை விவசாயத்துல தீவிரமா இறங்கணும்னு முடிவு பண்ணிட்டேன்’’ என்கிற ரவி, வேளாண்மையில் முனைவர் பட்டம் பெற்றவர்.

ரவி-தெய்வம் தம்பதி
ரவி-தெய்வம் தம்பதி

‘‘ஒரு வேளாண் பட்டதாரியாகச் சொல்கிறேன், மண் ஆரோக்கியமாக இருந்தாதான் மனிதர்கள் ஆரோக்கியமா இருக்க முடியும். ‘நம்ம நிலத்துல ரசாயன உரம் போட மாட்டோம்; பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த மாட்டோம்’னு நாம உறுதியா இருந்தா மட்டும் போதாது. அக்கம் பக்கத்து நிலங்கள்ல இருந்து ரசாயனத்தோட தாக்கம், நம்ம நிலத்துக்குப் பரவ வாய்ப்பு அதிகம். அதனால மத்த விவசாயிகளையும் விவசாய நிலங்களையும் ஒருங்கிணைச்சு இயற்கை விவசாயம் செய்யணும்னு ஆசைப்படுறேன்.

இதனால நம்ம கூட இருக்குற விவசாயி களோட உற்பத்தி செலவுகளையும் குறைக்க முடியும். லாபத்தையும் பெருக்க முடியும்..’’ எனப் பெரும் கனவுடன் பேசிய ரவியிடம், வீட்டுத் தோட்டப் பராமரிப்புக் குறித்துக் கேட்டோம். ‘‘இது என் மனைவிக்குதாங்க தெரியும்’’ என்றவர், சற்று திரும்பி ‘‘தெய்வம்’’ என்று குரல் கொடுத்தார்.

மழைநீரைச் சுத்திகரிக்கும் அமைப்பு
மழைநீரைச் சுத்திகரிக்கும் அமைப்பு

தொட்டியில் அல்லிக்குளம்...
இங்கு மீன்களும் இருக்கு


ஐந்து நாய்க்குட்டிகள் புடைசூழ நம் அருகில் வந்தார் தெய்வம் ரவி.

‘‘என்னோட மனைவி பறவைகளை ரொம்பவே நேசிக்கக்கூடியவங்க’’ என்று சிரிக்கிறார் ரவி. ஆமாம்... ஆமாம்... என்பது போல கூண்டுகளில் இருந்த காக்டெயில், வெள்ளை நிற ஜாவா பின்ச்சஸ் பறவைகளும் உற்சாகத்துடன் கீச்சிடுகின்றன.

“இந்த வீடு கட்டி 18 வருஷமாகுது. பக்கத்துலேயே கடல் இருக்கிறதால செர்ரி எல்லாம் இங்க வளருமான்னு பலர் கேட்டாங்க. ஆனா, எந்தளவுக்குச் செழிப்பா வளர்ந்திருக்கு பாருங்க. செம்மண், இயற்கை உரங்கள் போட்டு மண்ணை நல்லா வளப்படுத்திட்டுத் தோட்டம் அமைச்சோம். நாங்க சாப்பிடுற கீரைகள் எல்லாமே எங்க வீட்டுத் தோட்டத்துல விளைஞ்சதுதான். இங்க விதவிதமான காய்கறிகளும் பழங்களும் விளைஞ்சிக்கிட்டு இருக்கு. பசலைக்கீரைகளை எலிகள் கடிச்சிடுதுங்கிறதால இரும்பு வலைபோட்டு பாதுகாத்துட்டு வர்றேன். தொட்டியில நாங்க அமைச்சிருக்குற அல்லிக் குளத்துல கொஞ்சம் மீன்கள் இருக்கு. அதைக் கொத்துறதுக்காக மரங்கொத்தி பறவைகள் வந்துடுது. அதுக்கும் வலை போட்டுட்டேன். நாட்டு இஞ்சி நட்டு வெச்சிருக்கேன். அன்னன்னிக்கு தேவையானதை ஃபிரெஷ்ஷா ஒடிச்சு பயன்படுத்திக்குவோம்.

வீட்டைச் சுற்றி பூச்செடிகள்
வீட்டைச் சுற்றி பூச்செடிகள்

இங்க உள்ள தூதுவளை, அவரை, புடலை, பீர்க்கன்னு எல்லாமே விதைபோட்டு வளர்ந் ததுதான். விதையெல்லாம் எங்க ஊரு கோபிசெட்டிப் பாளையத்துல இருந்து கொண்டு வந்தது.

இது கம்மார் வெற்றிலைக்கொடி. இந்தளவுக்கு வெற்றிலைக்கொடி படருமான்னு எல்லாரும் ஆச்சர்யமா கேட்கிறாங்க...’’ என முகம் மலர தெரிவித்தார் தெய்வம்.

மழைநீர் சேகரிப்பு
மழைநீர் சேகரிப்பு

குடிநீராகும் மழைநீர்!

‘‘மழைநீர் சேகரிப்பு மூலமா தோட்டத்துக்கு கீழ 40,000 லிட்டர் தண்ணீரை சேமிச்சு பயன்படுத்துறோம். வருஷம் முழுக்க நாங்க குடிக்கிறது, சமைக்கிறது, குளிக்கிறது எல்லாமே இந்தத் தண்ணியிலதான். கான்கிரீட் ஒரு லேயர், தெர்மோ புரொக்லேய்ன் ஒரு லேயர், மறுபடியும் ஒரு கான்கிரீட் லேயர்னு பெரிய பிளாஸ்க் மாதிரி உருவாக்கியிருக்கோம். வெளியே இருக்கிற வெப்பம், இந்தத் தண்ணிக்குள்ள போகாது. அதனால, கிருமிகள் எதுவும் தண்ணிக்குள்ள வர்றதில்ல’’ என்கிறார் ரவி.