Published:Updated:

65 சென்ட்.... ரூ.2.95 லட்சம் செவ்வாழையில் செழிக்கும் லாபம்!

செவ்வாழைத் தார்களுடன் இளம் விவசாயி விஜய்
பிரீமியம் ஸ்டோரி
செவ்வாழைத் தார்களுடன் இளம் விவசாயி விஜய்

மகசூல்

65 சென்ட்.... ரூ.2.95 லட்சம் செவ்வாழையில் செழிக்கும் லாபம்!

மகசூல்

Published:Updated:
செவ்வாழைத் தார்களுடன் இளம் விவசாயி விஜய்
பிரீமியம் ஸ்டோரி
செவ்வாழைத் தார்களுடன் இளம் விவசாயி விஜய்

தற்போது கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் தாங்களே நிலத்தில் இறங்கி இயற்கை விவசாயத்தில் வெற்றி நடை போடுகிறார்கள். இவர்களில் ஒருவர்தான் தஞ்சை - புதுக்கோட்டை எல்லையோர கிராமமான தெத்துவாசல்பட்டியில் வசிக்கும் இளம் விவசாயி விஜய்.

பொறியியல் பட்டதாரியான இவர், தன்னுடைய குடும்பத்துக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தில் கடந்த 3 ஆண்டு களாக இயற்கை விவசாயத்தில் செவ்வாழை, வெண்பூசணி, வெண்டைக்காய், நிலக்கடலை, உளுந்து, எள் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். அரை ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள செவ்வாழையில் தார்கள் செழிப்பாக விளைந்து, தற்போது அறுவடைக்கு வரத் தொடங்கியுள்ளன.

செழிப்பான விளைச்சல்... தரமான தார்கள்

ஒரு காலைப்பொழுதில் இவரைச் சந்திக்கச் சென்றோம். செழிப்பாகக் காட்சி அளித்த செவ்வாழையும், இங்கு வீசிய குளிர்ந்த காற்றும் நம்மை உற்சாகத்தில் ஆழ்த்தியது. முதிர்ச்சி அடைந்த தார்களை அடையாளம் கண்டு அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த விஜய், நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்றார். ‘‘இப்பகுதியில நிறைய விவசாயிங்க ரசாயன முறையில செவ்வாழை சாகுபடி செஞ்சுகிட்டு இருக்காங்க. அவங்க என்னோட வாழைத்தோட்டத்தைப் பார்த்து ஆச்சர்யப்படுறாங்க. என்னதான் வெயில் கடுமையா இருந்தாலும், என் தோட்டத்துல செவ்வாழைங்க எப்பவும் பசுமையாவே இருக்கும்.

செவ்வாழைத் தார்களுடன் இளம் விவசாயி விஜய்
செவ்வாழைத் தார்களுடன் இளம் விவசாயி விஜய்

இது வறட்சியான ஊர். நிலத்தடிநீர் பற்றாக்குறையான பகுதி. 10 நாளைக்கு ஒரு தடவைதான் என்னோட தோட்டத்துக்குத் தண்ணி பாய்ச்சுவேன். ஆனாலும், மண்ணுல ஈரப்பதம் இருந்துகிட்டே இருக்கு. பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், கடலைப்புண்ணாக்கு, மீன் அமிலம், பழகாடி, தேமோர் கரைசல்னு நிறைய இயற்கை இடுபொருள்கள் கொடுக் குறதுனால, என்னோட செவ்வாழை நல்லா செழிப்பா விளைஞ்சு, தரமான தார்களைக் கொடுக்குது. ஒவ்வொரு தாரும் 10 - 12 கிலோ எடை இருக்கு. அந்தளவுக்குக் காய்கள் திரட்சியா இருக்கு. புள்ளிகள் இல்லாம, நல்லா தெளிவா, பார்வையாவும் இருக்கு.

வெப்பாலை போட்டு இயற்கை முறையில பழுக்க வைக்கிறோம்

பழம் தனிச்சுவையோடு இருக்கு. இயற்கை விவசாயத்துல விளைவிக்குறதோட மட்டுமல்லாமல், தாரை இயற்கை முறையில பழுக்க வைக்குறதுனாலயும் சுவை அதிகமா இருக்கு. சீக்கிரத்துல கெட்டுப் போகாது. முதிர்ச்சி அடைந்த தார்களை அறுவடை செஞ்சு, வெப்பாலை இலையைப் போட்டு மூடி மூட்டம் போட்டு வச்சிட்டா, அடுத்த நாலஞ்சு நாள்கள்ல பழுத்துடுது’’ என்று சொன்னவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

வாழைத்தோட்டம்
வாழைத்தோட்டம்

‘‘நாங்க விவசாயக் குடும்பம். நான் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சிருக்கேன். பள்ளி மாணவனா இருக்குறப்பவே எனக்கு விவசாயத்துல ஆர்வம் அதிகம். விடுமுறை நாள்கள்ல தோட்டத்துக்கு வந்துடுவேன். நான் எட்டாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்த சமயம்னு நினைக் குறேன்... அப்ப ஒரு சம்பவம் நடந்துச்சு. என்னோட அப்பா, ரசாயன உரங்களை ஒண்ணா கலந்து குவிச்சு வச்சிருந்தார். அதை நான் கையில எடுத்து விளையாடிக்கிட்டு இருந்தேன். அதைப் பார்த்ததும் என் அப்பா பதறிப்போய் ‘வாயில வச்சிடாத, அது விஷம்டா’னு கத்தினாரு. விஷம்னு சொல்றீங்க. இதைச் செடிங்களுக்குக் கொடுத்தா, பாதிக்காதானு கேட்டேன். அந்தச் சின்ன வயசுல இயற்கை விவசாயத்தைப் பத்தியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. அப்ப யதார்த்தமா தோணின கேள்வி அது.

கல்லூரி மாணவனா ஆன பிறகு, இயற்கை விவசாயம் தொடர்பான வீடியோக்கள் பார்த்து எனக்கு இதுல ஈர்ப்பு ஏற்பட்டுச்சு. என்னோட அப்பாகிட்ட வலியுறுத்தினேன். இதெல்லாம் நமக்கு சரியா வராதுனு ஆரம்பத்துல மறுத்துட்டாரு. நான் ரொம்பப் பிடிவாதம் பிடிச்சதுனால, 10 சென்ட் நிலத்தை மட்டும் எனக்கு ஒதுக்கிக் கொடுத்து, ரசாயன உரங்கள் போடாம, ஏதாவது ஒரு பயிரை விளைவிச்சு காட்டுனு சவால் விட்டாரு. மாட்டு எருவை மட்டும் அடியுரமா போட்டு, காய்கறிகள் சாகுபடி செஞ்சேன். அருமையான விளைச்சல். எங்க அப்பா அசந்து போயிட்டாரு. அடுத்தகட்டமா, கூடுதலா அரை ஏக்கர் நிலம் கொடுத்தார். 18 வகையான காய்கறி சாகுபடி செஞ்சேன். இதுக்கிடையில இயற்கை விவசாயப் பயிற்சிகள்ல கலந்துகிட்டு, இதைப் பத்தி நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். இயற்கை விவசாயத்து மேல என்னோட அப்பாவுக்கு முழு நம்பிக்கை வந்ததுனால, எங்க குடும்பத்துக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்துலயுமே முழுமையா இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சோம். முதல்கட்டமா, பசுந்தாள் விதைப்பு செஞ்சு மடக்கி உழுதுட்டு, ஏக்கருக்கு 5 டன் வீதம் எரு போட்டு நிலத்தை வளப்படுத்தினோம். கடந்த மூணு வருஷமா செவ்வாழை, காய் கறிகள், நிலக்கடலை, உளுந்துனு பலவிதமான பயிர்களையும் இயற்கை முறையில சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கோம். கல்லூரி முடிச்ச பிறகு, முழுநேர விவசாயியா மாறிட்டேன். வேற வேலைக்குப் போகணும்ங்கற எண்ணம் இல்லை’’ என்று சொன்னவர், செவ்வாழை சாகுபடி குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.

செவ்வாழை தார்கள்
செவ்வாழை தார்கள்

செவ்வாழையின் சிறப்புகள்

‘‘மத்த வாழை ரகங்களைவிட, செவ்வாழை பழங்களுக்குக் கூடுதலா விலை கிடைக்கும். இது வறட்சியைத் தாங்கி வளரும். செவ்வாழையில வேர் பிடிப்புத்தன்மை அதிகமா இருக்குறதுனால, அதிக காத்தடிச் சாலும் சீக்கிரத்துல சாஞ்சிடாது. இதனால முட்டுக் கொடுக்குற செலவு மிச்சம்.

65 சென்ட் பரப்பில் 650 வாழை மரங்கள்

வரிசைக்கு வரிசை 7 அடி, மரத்துக்கு மரம் 6 அடி இடைவெளி விட்டு, மொத்தம் 650 வாழை மரங்கள பயிர் பண்ணியிருக்கேன். 600 வாழை மரங்கள் நல்லா தரமானதா தேறி வந்திருக்கு. இந்த வாழைகளுக்கு இப்ப 13 மாசமாகுது. இப்பதான் தார்கள் முதிர்ச்சி அடைஞ்சு அறுவடைக்கு வந்துகிட்டு இருக்கு. இது வரைக்கும் 100 தார்கள் அறுவடை பண்ணி விற்பனை செய்திருக்கேன். இன்னும் 2 மாசத்துல மற்ற தார்கள் எல்லாம் முதிர்ச்சி அடைஞ்சு அறுவடைக்கு வந்துடும்’’ என்று சொன்னவர், வருமானம் குறித்துப் பேசினார்.

ஊடுபயிர் வருமானம்

வாழைக் கன்றுகளை நடவு செஞ்சவுடனே இதுல ஊடுபயிரா வெண்பூசணி பயிர் பண்ணினேன். இது வாழையோட வளர்ச்சிக்கு கைகொடுத்துச்சு. நாலு மாசம் வரைக்கும் உயிர் மூடாக்கா இருந்து, மண்ணுல ஈரப்பதத்தைப் பாதுகாத்ததோடு களைகளையும் கட்டுப்படுத்திச்சு. விதைப்பு செஞ்சா 4-ம் மாசம் வெண்பூசணி அறுவடைக்கு வந்துச்சு. இந்த 65 சென்ட் பரப்புல 5,000 கிலோ காய்கள் மகசூல் கிடைச்சது. ஒரு கிலோ 10 ரூபாய்னு விற்பனை செஞ்சது மூலமா 50,000 ரூபாய் வருமான கிடைச்சது. காய்கள் அறுவடை செஞ்ச பிறகு, வெண்பூசணிக் கொடிகளை இந்த வாழைத் தோட்டத்துலயே போட்டு, அதுமேல மண்ணை வெட்டிப் போட்டு மூடினேன். அது ரொம்ப சீக்கிரத்துலயே மட்கி, மண்ணுக்கு உரமாகிடுச்சு.

அட்டவணை
அட்டவணை

வருமானம்

இங்க விளையுற வாழைத்தார்களை, பழுக்க வச்சு மூணு விதமா விற்பனை செய்றேன். சந்தைகள்ல கடை போட்டு, நானே விற்பனை செய்வேன்... ஒரு கிலோவுக்கு 60 ரூபாய் வீதம் விலை கிடைக்கும். என்னோட தோட்டத்துக்கே தேடி வந்து வாங்கிட்டுப் போற வாடிக்கை யாளருங்களுக்கு ஒரு கிலோ 55 ரூபாய் விற்பனை செய்றேன். பெரும்பாலும் இந்த இரண்டு முறைகளைத்தான் கடைப் பிடிப்பேன். இதுக்கிடையில சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி கடைகளுக்கும் விற்பனை செய்வேன். அதுமாதிரி விற்பனை செய்யும் போது ஒரு கிலோவுக்குக் குறைந்தபட்சம் 45 ரூபாய் விலை கிடைக்கும். இப்படிப் பல வழிகள்லயும் விற்பனை செய்றது மூலமா, ஒரு கிலோவுக்குச் சராசரியா 50 ரூபாய் வீதம், ஒரு தாருக்கு 500 ரூபாய் விலை கிடைக்குது. 600 வாழைத்தார்கள் விற்பனை மூலம் 3,00,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஊடுபயிர் வருமானத்தையும் சேர்த்து கணக்கு பண்ணினா, இந்த 65 சென்ட்ல இருந்து மொத்தம் 3,50,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல சாகுபடி செலவு, அறுவடைக் கூலி, போக்குவரத்துச் செலவு எல்லாம் போக, 2,95,000 ரூபாய் நிகர லாபமா கிடைக்கும்.

இது எனக்கு ரொம்பவே நிறைவான லாபம். நாமும் இயற்கை விவசாயம் செய்றோம்னு நினைக்கும்போது, மனசுக்கு ஆத்ம திருப்தியாவும், பெருமையாவும் இருக்கு.

ரசாயனம் போடாம, இயற்கையில விளைஞ்ச செவ்வாழைங்கற வார்த்தையை உச்சரிக்கும்போதே, மக்கள் லயிச்சுப் போயிடுறாங்க. பெரும்பாலும் பேரம் பேசமா, நாம சொல்ற விலைக்கு வாங்கிக் கிட்டு போறாங்க. இது எனக்குக் கிடைச்ச பாக்கியமா நினைக்குறேன். படிச்ச படிப்புக்கு ஏத்தபடி வேலைக்குப் போகலையேங்கற எண்ணம் துளி கூட இல்லை. எதிர்காலத்துலயும் கூட அந்த எண்ணம் எனக்கு வராது. இந்தச் சின்ன வயசுல, இயற்கை விவசாயம் எங்க ஊர் மக்கள் மத்தியில எனக்கு மிகப் பெரிய மரியாதையைக் கொடுத்திருக்கு’’ என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.தொடர்புக்கு, விஜய்,

செல்போன்: 63749 43575

இப்படித்தான் செவ்வாழை சாகுபடி செய்யணும்

ஒரு ஏக்கரில் செவ்வாழை சாகுபடி செய்ய விஜய் சொல்லும் செயல்முறை.... இங்கே பாடமாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் ஒரு சால் உழவு ஓட்டி, 5 டன் எருவுடன் 50 கிலோ வேப்பம்பிண்ணாக்கு கலந்து அடியுரமாக இட்டு, மீண்டும் ஒரு சால் உழவு ஓட்ட வேண்டும். வரிசைக்கு வரிசை 7 அடி, மரத்துக்கு மரம் 6 அடி இடைவெளிவிட்டு... முக்கால் அடி ஆழம், முக்கால் அடி சுற்றளவு கொண்ட குழி அமைக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து கரைசல் தயார் செய்து, அதில் வாழைக்கன்றுகளை நனைத்து எடுத்து விதைநேர்த்திச் செய்து, குழியில் ஊன்ற வேண்டும்.

வாழை சாகுபடி
வாழை சாகுபடி

இதனால் நூற்புழுக்கள், வேர்ப்புழுக்கள், வைரஸ்கள் போன்றவற்றின் தாக்குதல்கள் தடுக்கப்படும். வாழைக் கன்றுகளின் வளர்ச்சியும் வேகமாக இருக்கும். வாழைகன்றுகளை ஊன்றி முடித்தவுடன், ஊடுபயிராக வெண்பூசணி விதைப்புச் செய்ய வேண்டும். இரண்டு வாழைக்கு இடையே ஒரு தொகுப்பாக.. ‘ஃ’ வடிவில் மூன்று விதைகள் ஊன்ற வேண்டும். வெண்பூசணி விதைகள் ஊன்றிய அடுத்த 6 நாள்களில் அவற்றில் முளைப்பு வரும். கொடி வளரத் தொடங்கியதும், சிவப்பு வண்டு தாக்குதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதைத் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 16-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் வீதம் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து வெண்பூசணி கொடிகள் மீது தெளிக்க வேண்டும். 30-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து வாழைக்கன்றுகள் மற்றும் வெண்பூசணி கொடிகள் மீது தெளிக்க வேண்டும். 45-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் தேமோர் கரைசல் கலந்நு வெண்பூசணி கொடிகள் மீது மட்டும் தெளிக்க வேண்டும். 50-ம் நாள் 200 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா, 1 லிட்டர் பழகாடி இவற்றைக் கலந்து பாசனநீரில் விட வேண்டும்.

வெண்டைக்காய் சாகுபடி
வெண்டைக்காய் சாகுபடி

55-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மி.லி பழகாடி கலந்து வெண்பூசணி கொடிகள் மீது தெளிக்க வேண்டும்... பிஞ்சுகள் வைக்கும் தருணம் அது. பிஞ்சுகள் உதிராமல் இருக்கவும், திரட்சியான காய்கள் கிடைப்பதற்கும், பூச்சி, நோய் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் பழகாடி உறுதுணையாக இருக்கும். 60-ம் நாள் 200 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் மீன் அமிலம் கலந்து பாசனநீரில் விட வேண்டும். 75-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மி.லி மீன் அமிலம் கலந்து வெண்பூசணி கொடிகள் மீது தெளிக்க வேண்டும். வெண்பூசணி காய்கள் முதிர்ச்சி அடைந்து 80-ம் நாள் பறிப்புக்கு வரும். வெண்பூசணி அறுவடை செய்து முடித்ததும், இதன் கொடிகளைத் தோட்டத்திலேயே போட்டு, இதன் மீது மண்ணைப் போட்டு மூடினால், மட்கி உரமாகும். 200 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் அமுதக்கரைசல் கலந்து, மாதம் ஒரு முறை ஒவ்வொரு வாழைக் கன்றுக்கும் ஒரு லிட்டர் வீதம் வேர் பகுதியில் ஊற்ற வேண்டும். தார் ஈனும் தருணத்தில் 200 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து பாசனநீரில் விட வேண்டும். 10 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 5 கிலோ எள்ளு பிண்ணாக்கு... இவற்றைத் தண்ணீரில் நன்கு ஊற வைத்து கரைசல் தயார் செய்ய வேண்டும். இதை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து வாழையின் பகுதிகளில் ஊற்ற வேண்டும். 12 - 14 மாதங்களில் தார்கள் அறுவடைக்கு வரும்.

இடுபொருள்கள்
இடுபொருள்கள்

ஈரப்பதம் காக்கும் சருகு!

பொதுவாக வாழைச் சருகுகளை அகற்றுவதுதான் வழக்கம். ஆனால், விஜய் அப்படி அகற்றுவதில்லை. அதற்குக் காரணம்? ‘‘வாழை மரங்கள்ல உள்ள காய்ஞ்சுப்போன சருகுகளை, நான் அப்புறப்படுதுறதில்லை. இதனால் வாழையோட பசுமைத் தன்மை பாதுகாக்கப்படுது. தண்டுப் பகுதியில நேரடியா சூரிய ஒளி படுறது தடுக்கப்படுது. அடித் தண்டு வரைக்குமே சருகுகள் இருக்குறதுனால, வேர்பகுதியில மண்ணோட ஈரப்பதம் தக்க வைக்கப்படுது. இந்த நன்மை எல்லாம் ஒருபக்கம் இருக்க, சருகு களை அப்புறப்படுத்துறதா இருந்தா, அதுக்குனு ஒரு கணிசமான தொகையைச் செலவு பண்ண வேண்டியதிருக்கும்’’ என்கிறார் விஜய்.

சொட்டுநீர்ப் பாசனம்

தண்ணீர் மேலாண்மையில் கூடுதல் கவனத்தைச் செலுத்துகிறார் விஜய். அதைப் பற்றி அவர் சொன்னது- “ஆழ்துளைக் கிணறு இருக்கு. நிலத்தடிநீர் பற்றாக்குறையா இருக்குறதுனால நாம நினைச்ச நேரத்துல தோட்டம் முழுக்கத் தண்ணி பாய்ச்ச முடியாது. இதனால, ஆழ்துளைக் கிணத்துல இருந்து தண்ணீர் எடுத்து எங்க தோட்டத்துல உள்ள திறந்தவெளி கிணத்துல விட்டு சேகரிச்சிக்கிட்டே இருப்போம். மோட்டார் மூலம் தண்ணி இறைச்சு பாசனத்துக்குப் பயன் படுத்திக்குறோம். வாழைக்குச் சொட்டுநீர் பாசனம் அமைச்சிருக்கோம். இதனால் தண்ணி பற்றாக்குறையை எளிதா சமாளிக்க முடியுது.’’

வெண்பூசணி
வெண்பூசணி

வேலியில் தீவனப்புல்!

மாடுகளுக்கான பசுந்தீவனத்தை தோட்டத்திலேயே வளர்க்கும் விஜய், ‘‘இரண்டு மாடுகள் வளர்க் குறேன். அதுங்களுக்குத் தேவையான பசுந்தீவனத்துக்காக, வாழைத் தோட்டத் துலயே வேலிப் பகுதியில சுமார் 5 சென்ட் பரப்புல கோ-4 தீவனப்புல் சாகுபடி செஞ்சிருக்கேன். இதனால் வாழைக்கு எந்தத் தொந்தரவும் கிடையாது’’ என்கிறார்.

தனிப்பயிராக வெண்பூசணி

‘‘40 சென்ட் பரப்புல தனிப்பயிராவும் வெண்பூசணி சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கேன். இப்ப காய்ப்புல இருக்கு. 10 சென்ட் பரப்புல வெண்டி (வெண்டை) பயிர் பண்ணியிருக்கேன்’’ என்கிறார் விஜய்.