Published:Updated:

7 ஏக்கர், ஆண்டுக்கு 7,00,000 ரூபாய்! - இனிப்பான லாபம் தரும் சிவப்புக் கொய்யா!

மகசூல்

பிரீமியம் ஸ்டோரி

கொய்யாவில் பல்வேறு வகைகள் இருந்தாலும் அலகாபாத் சபேதா மற்றும் லக்னோ-49 ஆகிய இரண்டும் வணிக நோக்கில் பயிரிட மிகவும் ஏற்றவை. இப்போது சிவப்புக் கொய்யாவுக்கு நல்ல விலை கிடைப்பதால், லலித், அர்கா கிரண் மற்றும் அர்கா ரேஷ்மி ஆகிய ரகங்களை விவசாயிகள் விரும்பிப் பயிரிடுகிறார்கள்.

Red guava
Red guava

அவர்களில் ஒருவர், ஆற்காட்டைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஜெயமுருகன். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு-செய்யாறு சாலையில் இருக்கும் முப்பதுவெட்டி கிராமத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் இருக்கும் அத்திதாங்கல் கிராமத்தில் இருக்கிறது விவசாயி ஜெயமுருகனின் தோட்டம். ஒரு காலை வேளையில் கொய்யா பறித்துக்கொண்டிருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்.

ஜெயமுருகன்
ஜெயமுருகன்

“எனக்கு முப்பதுவெட்டி கிராமம்தான் சொந்த ஊர். விவசாயக் குடும்பம். இடையில விவசாயத்தை விட்டுட்டு சொந்தத் தொழில் செஞ்சுக்கிட்டிருந்தேன். கொஞ்சகாலமா அதுவும் பிடிக்கலை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விவசாயம் செய்யணும்னு தோணிச்சு. இந்த நிலத்தை வாங்கினேன். ஒருமுறை வெச்சா வருமானம் தந்துகிட்டே இருக்குற மாதிரியான பயிர்களைத் தேடிக்கிட்டிருந்தேன்.

அர்கா கிரண் சிவப்புக் கொய்யா ரகம்தான் இந்தப் பகுதியில அதிகமா சாகுபடி செய்யறாங்க. வேலூர் நெடுஞ்சாலையில கடை அமைச்சு, நேரடியாக விற்பனை செய்யறேன்.

அப்போதான் பக்கத்துல இருக்கும் இயற்கை விவசாயி உதயசங்கர், ‘கொய்யாச் செடிவெச்சா, வருஷம் முழுசும் காய்ச்சுகிட்டே இருக்கும்’னு சொன்னதோடு, இயற்கை விவசாயத்தைப் பத்தியும் சொன்னாரு. இந்த நிலம் பல வருஷமா தரிசாகக் கிடந்தது. அதைப் பக்குவப்படுத்தினேன். இப்போ கொய்யாச் செடிகள் வளர்ந்துகிட்டிருக்கு. கிணத்துப் பாசனத்துல சொட்டுநீர்ப் பாசனம் செய்யறேன்” என்றவர் தொடர்ந்தார்.

Red guava
Red guava

“எங்க பகுதியில இருக்கும் நர்சரியிலதான் செடி வாங்கினேன். போன வருஷம் செப்டம்பர் மாசம் கொய்யாச் செடிகளை நட்டேன். இது அர்கா கிரண் ரகச் சிவப்புக் கொய்யா. போன வருஷம் செப்டம்பர் மாசம் ஏழு ஏக்கர், இந்த வருஷம் நாலு ஏக்கர்னு ரெண்டு தவணையாகப் பிரிச்சு நடவு செஞ்சிருக்கேன். முதல்ல நடவு செஞ்ச ஏழு ஏக்கர் செடிகள்ல இருந்துதான் மகசூல் கிடைக்குது. நட்டதுல இருந்தே இயற்கை விவசாயம்தான். கொய்யாத் தோட்டத்தைச் சுற்றிலும் தேக்கு, தென்னை, மாஞ்செடிகள், சாத்துக்குடி, நெல்லி, நாவல் கன்றுகளை வெச்சிருக்கேன். எதிர்காலத்துல வளர்ந்து இதுவும் நல்ல வருமானம் கொடுக்கும். அர்கா கிரண் ரகச் சிவப்புக் கொய்யாவுல 14 மாசத்துல இருந்து பறிப்பு வந்துகிட்டிருக்கு.

கொய்யாப் பழங்கள்
கொய்யாப் பழங்கள்

இதுக்கு முன்னால ரெண்டு தடவை பூப்பூத்தப்போ அதைக் கிள்ளிவிட்டுட்டேன். அதனால இந்த தடவை நல்ல மகசூல் கிடைச்சிருக்கு. கொய்யாச் செடியோட உயரமே அதிகபட்சம் நாலடிதான். அதனால பறிக்கறதுக்கு எளிதா இருக்கு. இந்த ரகம் வருஷத்துல ரெண்டு மாசம்தான் காய்க்காம இருக்கும். மீதி பத்து மாசமும் காய்ப்புலதான் இருக்கும். மொத்தம் மூணு தடவை காய்க்கும்னு சொல்றாங்க.

தொழுவுரம், மீன் அமிலம், பஞ்சகவ்யானு எல்லாத்தையும் பாசனக் குழாய்கள்ல கலந்து விட்டுடுவேன். மாசம் ஒரு முறை தவறாம கொடுத்துடுவேன். இது தவிர, பூச்சித்தாக்குதல் இருக்கோ இல்லையோ மாசத்துக்கு ஒரு முறை பூச்சிவிரட்டி தெளிச்சிடுவேன். இரண்டு மாசத்துக்கு ஒரு முறை வேப்ப எண்ணெய்க் கரைசல் தெளிப்பேன். அதனால இப்போ பூச்சித் தாக்குதல் இல்லை. என்கிட்ட மாடுகள் இல்லாததால தொழுவுரத்தை வெளியில வாங்கிப் பயன்படுத்துறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்க பகுதியில பெரும்பாலும் நெல் சாகுபடிதான். இந்தப் பக்கத்துல இருக்கும் மண்வாகு, சீதோஷ்ண நிலைக்கு நெல் சாகுபடிதான் சரியாக இருக்கு. ஆனா, நெல் சாகுபடிக்கு வேலையாள் கிடைக்கிறது கஷ்டம். அதனாலதான் கொய்யாச் சாகுபடியைத் தேர்வு செஞ்சேன். இதுல அதிகமான ஆள் தேவையில்லை.

தொழுவுரம்
தொழுவுரம்

அர்கா கிரண் சிவப்புக் கொய்யா ரகம்தான் இந்தப் பகுதியில அதிகமா சாகுபடி செய்யறாங்க. இது சாப்பிடுறதுக்கு நல்லா இருக்கும். நாங்க இயற்கை முறையில விளையவெச்சாலும், சந்தைக்குத்தான் காயைக் கொண்டு போனோம். இப்போ வாட்ஸ்அப்லயும் விளம்பரம் செய்யறோம். அதனால மொத்தமாகவும் கேட்க ஆரம்பிச்சிருக்காங்க” என்ற ஜெயமுருகன், மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்லத் தொடங்கினார்.

‘‘இயற்கை முறையில விளைவிக்கப்பட்டாலும், சந்தையில குறைஞ்ச விலைக்குத்தான் வாங்கினாங்க. பிறகு, நேரடியாக விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். கிலோவுக்கு 50 ரூபாய்க்குக் குறையாம விற்பனையாகிட்டிருக்கு.’’

“இயற்கை முறையில விளைவிக்கப் பட்டாலும் இதுக்கு சந்தையில நல்ல விலை கிடைக்கலை. வியாபாரிகள் குறைஞ்ச விலைக்குத்தான் வாங்கினாங்க. பிறகு, வேலூர் நெடுஞ்சாலையில கடை அமைச்சு, நேரடியாக விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். கிலோவுக்கு 50 ரூபாய்க்குக் குறையாம விற்பனையாகிட்டிருக்கு. சராசரியா ஒரு செடியில இருந்து மூணு கிலோ மகசூல் கிடைச்சிருக்கு. ஏழு ஏக்கர்ல இருக்கிற 3,850 செடிகள் மூலமா 11,550 கிலோ மகசூல் கிடைச்சிருக்கு. கிலோவுக்கு 50 ரூபாய்னு வெச்சாலும் 5,77,500 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. இன்னும் செடிக்கு ரெண்டு கிலோ அளவில் மொத்தம் 7,700 கிலோ மகசூல் கிடைக்கும். இதன் மூலம் 3,85,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

மொத்தம் ஏழு ஏக்கருக்கு 9,62,500 ரூபாய் வருமானம் கிடைக்கும். வருஷத்துக்கு 30,000 ரூபாய் ஒரு ஏக்கருக்கு செலவாகுது. மொத்தமா ஏழு ஏக்கருக்கு 2,10,000 வரை செலவாகியிருக்கு. செலவு போக, ஏழு ஏக்கருக்கு சராசரியா 7,00,000 ரூபாய் லாபமா நிக்கும். கணக்கு பார்த்தா ஒரு ஏக்கருக்கு 1,00,000 ரூபாய் லாபம்” என்று சொல்லும்போதே ஜெயமுருகன் கண்கள் மகிழ்ச்சியால் மின்னுகின்றன..

தொடர்புக்கு, ஜெயமுருகன், செல்போன்: 94430 40781.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ரு ஏக்கரில் கொய்யாச் சாகுபடி குறித்து ஜெயமுருகன் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

வடிகால் வசதியுள்ள எல்லா மண் வகைகளிலும் கொய்யா வளரும். ஜூன், ஜூலை மாதங்கள் நடவுக்கு ஏற்றவை. நிலத்தை நன்றாக உழவு செய்து, வரிசைக்கு வரிசை 10 அடி, செடிக்குச் செடி எட்டடி இடைவெளியில் ஒன்றரை அடி நீள, அகலம் மற்றும் இரண்டடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். இந்த இடைவெளியில் குழியெடுத்தால், ஏக்கருக்கு 550 குழிகள்வரை எடுக்கலாம். ஒவ்வொரு குழியிலும் தலா ஒன்றரை கிலோ தொழுவுரம், கால் கிலோ வேப்பம்பிண்ணாக்கு கலந்து இட்டு, செடியை நடவு செய்ய வேண்டும்.

கொய்யாத் தோட்டம்
கொய்யாத் தோட்டம்

வேப்பம்பிண்ணாக்கு, வேர் தொடர்பான நோய்களை அண்டவிடாது. நடவு செய்ததிலிருந்து மூன்று மாதங்கள்வரை, மூன்று நாள்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். பிறகு மண்ணின் ஈரத்தைப் பொறுத்து 15 நாள்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதும். மழைக் காலங்களில் 20 நாள்களுக்கு ஒரு முறைகூடப் பாசனம் செய்யலாம்.

வாய்க்கால் பாசனத்தைவிடச் சொட்டுநீர்ப் பாசனம்தான் சிறந்தது. மரத்தில் பிஞ்சு, காய்கள் இருக்கும்போது, 15 நாள்களுக்கு ஒரு முறை கட்டாயம் பாசனம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பாசனத்தின்போதும் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை நீரில் கலந்துவிட வேண்டும். நடவு செய்த செடிகள் ஒன்றரை அடி உயரம் வந்தவுடன் முனையை வெட்டிவிட வேண்டும். இப்படிச் செய்தால், செடி அதிகமான கிளைகள் கொண்டதாகப் பிரிந்து வளரும்.

அடர் நடவு முறையில் அடிக்கடி கவாத்துச் செய்ய வேண்டும். கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதுபோல, குறிப்பிட்ட அளவு உயரத்துக்கு மேல் செடிகளை வளரவிடாமல் ஆண்டுக்கு இரண்டு முறை கவாத்துச் செய்ய வேண்டும். நடவு செய்த ஐந்தாம் மாதத்திலிருந்து பூக்கும். அந்தப் பூக்களை உதிர்த்துவிட வேண்டும். அப்போதுதான் தண்டுப்பகுதி தடிக்கும். குறைந்தபட்சம் இரண்டு முறை பூக்களை உதிர்த்துவிட வேண்டும். பூக்களை உதிர்ப்பதையும், கவாத்தையும் முறையாகச் செய்து வந்தால்தான் மரங்கள் நல்ல மகசூலைக் கொடுக்கும். 12-ம் மாதத்துக்கு மேல் வரும் பூக்களை விட்டுவிடலாம். காய்கள் அடர் பச்சை நிறத்திலிருந்து சற்று வெளுக்கத் தொடங்கியதும் அறுவடை செய்யலாம்.

பூச்சித் தாக்குதல்!

கொய்யா மரங்களை அதிகம் தாக்குவது மாவுப்பூச்சிகள்தான். 15 நாள்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மி.லி என்ற அளவில் மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும். மரங்கள் நனையும் அளவுக்கு தெளித்து வந்தால், மாவுப்பூச்சிகள் வராது. அப்படியும் மாவுப்பூச்சிகள் தாக்கினால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மி.லி வேப்ப எண்ணெயைக் கலந்து தெளிக்க வேண்டும்.

கொய்யாவில் நூற்புழுத் தாக்குதல் அதிக அளவில் இருக்கும். ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் செண்டுமல்லிச் செடிகளை நட்டு வைத்தாலே ஓரளவுக்கு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்திவிடலாம். பெரும்பாலும் இயற்கை முறைச் சாகுபடியில் நூற்புழுக்கள் தாக்குவதில்லை. அப்படியே நூற்புழுக்கள் தென்பட்டால், ஒவ்வொரு மரத்தின் தூருக்கு அருகிலும் சிறிய குழி எடுத்து, ஒரு கைப்பிடி அளவு நன்கு இடித்த வேப்பங்கொட்டை அல்லது வேப்பம் பிண்ணாக்கை வைத்து மூடிவிட வேண்டும். இப்படிச் செய்தால் நூற்புழு கட்டுப்படும்.

நல்ல மகசூல் கொடுக்கும் ரகம்!

ர்கா கிரண் கொய்யாவை உருவாக்கியது பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம். இந்த மையத்தின் பழப்பயிர்கள்துறை முதன்மை விஞ்ஞானி முனைவர் வாசுகியிடம் பேசினோம். “கடந்த சில ஆண்டுகளாகப் புதிய ரகக் கொய்யாவை உற்பத்தி செய்யும் முயற்சியில் நானும், எங்கள் மைய இயக்குநர் முனைவர் தினேஷும் இணைந்து புதிய ரகக் கொய்யாவை உற்பத்தி செய்தோம். அந்த ரகத்தின் பெயர் அர்கா கிரண். இது சிவப்புக் கொய்யா ரகத்தைச் சேர்ந்தது. இதில் லைகோபின் எனும் நோய் எதிர்ப்பு திறன்கொண்ட நிறமி அதிக அளவில் இருக்கிறது. ஒரு பழத்தின் எடை 180 கிராம் முதல் 200 கிராம் வரை இருக்கும். ரத்த அழுத்தம் உள்ளவர்களும், சர்க்கரை நோயாளிகளும் இதைச் சாப்பிடலாம். மதிப்புக்கூட்டிப் பயன்படுத்தவும் இந்த ரகம் ஏற்றது. வடிகால் வசதியுள்ள அனைத்து மண்ணிலும் வளரும். நல்ல மகசூல் கொடுக்கக்கூடிய ரகம். தமிழ்நாட்டில் விவசாயிகள் இதைப் பரவலாகச் சாகுபடி செய்து வருகிறார்கள். இதன் கன்றுகள் தமிழ்நாட்டில் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் கிடைக்கின்றன. கிடைக்காதவர்கள் எங்கள் மையத்தை அணுகலாம்” என்றார்.

7 ஏக்கர், ஆண்டுக்கு 7,00,000 ரூபாய்! - இனிப்பான லாபம் தரும் சிவப்புக் கொய்யா!

தொடர்புக்கு, பழப்பயிர்கள் துறை,

இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஹெசரகட்டா, பெங்களூரு-560 089.

தொலைபேசி: 080 28466420/23

இணையதளம்: www.iihr.res.in

தெம்பு தரும் கொய்யா!

கொய்யாவில் இருக்கும் சத்துகள் பற்றி விளக்குகிறார், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன்,

“ `ஏழைகளின் ஆப்பிள்’ என்று கொய்யாவைச் சொல்கிறார்கள். ஆப்பிளுக்கு நிகரான சத்துகளைக்கொண்ட கனியாகக் கொய்யா இருக்கிறது. ஆனாலும் ஆப்பிள் அளவுக்கு கொய்யா கொண்டாடப்படவில்லை என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

7 ஏக்கர், ஆண்டுக்கு 7,00,000 ரூபாய்! - இனிப்பான லாபம் தரும் சிவப்புக் கொய்யா!

ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் இந்த உண்மையை உலகுக்கு அறிவித்திருக்கிறது.

மனித உடலுக்குத் தேவையானது ஆன்டி-ஆக்ஸிடண்ட். இது நோய் எதிர்ப்பு சக்திக்காக தேவைப்படுகிறது.

அதனால்தான் இதைத் தேடி பழங்களுக்குப் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறது உலகம். இது, கொய்யாவில் கொட்டிக் கிடக்கிறது’’ என்றவர் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

100 கிராம் பழத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு...

கொய்யா 496 மில்லி கிராம்

பிளம்ஸ் 330 மி.கி

சீத்தா 202 மி.மி

மா 170 மி.கி

மாதுளை 135 மி.கி

ஆப்பிள் 123 மி.கி

திராட்சை 85 மி.கி

சப்போட்டா 55 மி.கி

பப்பாளி 50 மி.கி

வாழை 30 மி.கி

எலுமிச்சை 26 மி.கி

ஆரஞ்சு 24 மி.கி

தர்பூசணி 23 மி.கி

அன்னாசி 22 மி.கி

ஆதாரம்: தேசிய ஊட்டச்சத்து ஆராய்ச்சி நிறுவனம், ஹைதராபாத்.

அடர் நடவில் கவாத்து முக்கியம்!

கொய்யாவில் அடர் நடவு முறை நல்ல லாபத்தைத் தரும். குறிப்பாக உயரத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியம். தொடக்கத்திலேயே மேல் நோக்கி வளரும் கிளைகளை வெட்டி, உயரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அடர் நடவுக் கொய்யாவில் கவாத்து முக்கியமான செய்முறை. வருடத்துக்கு இரண்டு முறை களையெடுப்பதும் அவசியம். ஏனெனில், கொய்யாவைப் பொறுத்தவரை, புதிய கிளைகளில் மட்டுமே பூக்களும் பிஞ்சுகளும் பிடிக்கும்.

தரமான பழங்களை உருவாக்கும் உத்தி

அதிகமாகப் பூக்கும் காலத்தில், பூங்கொத்திலிருந்து நான்கில் இரண்டு பங்குப் பூக்களை நீக்கிவிட வேண்டும். இதேபோல் புதிய துளிர்கள் வரும்போது, அதிக துளிர்களை விடும் கிளைகளில், நான்கில் மூன்று பங்கு துளிர்களை நீக்கிவிட வேண்டும். இப்படிச் செய்தால் மழைக்காலத்தில் பிஞ்சு உருவாவது குறையும். மே மாதத்தில் மரத்தின் மொத்த உயரத்தில் பாதிக் கிளைகளை வெட்டி விட்டால், புதிய கிளைகளின் உயரம் குறைவாக இருக்கும். மேலும், மழைக்கால விளைச்சல் சிறப்பாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு